>எமது பாடசாலை பல பெரியார்களுக்கு ஆரம்பக் கல்வியை அளித்த பாடசாலையாக இருந்திருக்கிறது. அவர்களில் பலர் செய்த சமூக, பாடசாலைத் தொண்டுகள் மறக்கவெண்ணாதவை.
அத்தகையவர்கள் பற்றிய புகைப்படங்களையும் தகவல்களையும் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவற்றை நினை கூர்வது எமக்கும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.
தம்மிடம் இருக்கும் தகவல்களையும் புகைப்படங்களையும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் பகிர்ந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.
எமது பாடசாலையின் முகாமையாளராக (மனேஜர்) ஆக இருந்த திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை அவர்களது புகைப்படம். அதற்கு முன்னர் அவரது தகப்பனாரான திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை அவர்களது பராபரிப்பில் 1884ம் ஆண்டு முதல் இயங்கியதாக ஆவணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
இப் புகைப்படத்தை ஜெனி (Geni) ஊடாகப் பகிர்ந்து கொண்ட டொக்டர்.பா.கனகசபை அவர்களுக்கு நன்றி.
![]() |
திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை (மனேஜர்) |
மேலைப்புலோலி சைவ பாலிகா பாடசாலை 1893ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது.
திருமதி பாக்கியம் முருகேசு அப்பாடசாலையின் ஆசிரியராகவும் பின்னர் அதன் அதிபராகவும் 1965ம் ஆண்டு வரை திறமையோடு பணியாற்றினார்.
![]() |
திருமதி.முருகேசு பாக்கியம் (முன்னைநாள் அதிபர்) |
நான் முதல் முதலாக பாடசாலைக்குச் சென்ற போது அவர்தான் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரின் கீழ் கற்கும் பாக்கியம் எனக்கும் கிட்டியது.
அவரது புகைப்படத்தை அளித்த பாக்கியக்காவின் மகளான ஜெயகெளரி அவரது கணவன் ராஜா முருகதாஸ் ஆகியோருக்கு நன்றி.
பொன்னம்மா அக்கா (ரீச்சர்)
![]() |
திருமதி.பொன்னம்மா (முன்னைநாள் ஆசிரியர்) |
எமது பாடசாலையின் பெண்கள் பிரிவாக இருந்த பாலிகா பாடசாலையில் ஆசிரியராக இருந்த பொன்னம்மா ரீச்சரை அண்மையில் ஊருக்கு சென்ற போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அன்று போவே இன்றும் அதே தோற்றத்தில் இருக்கும் அவர் என்னைக் கண்டதும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். நான் முருகன் வேடம் இட்டு நடித்ததாகச் சொன்னார். ஆயினும் எனக்கு ஞாபகம் இல்லை.
அவர் பாதம் பணிந்து ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் கிடைத்தது.
திரு.வே.சிவக்கொழுந்து (கவிஞர் யாழ்ப்பாணன்)
அடுத்து வருவது எமது பாடசாலையின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவரான திரு.வே.சிவக்கொழுந்து. கவிஞர் யாழ்ப்பாணன் என்ற பெயரில் இவரது புகழ் தமிழ் கூறும் உலகெங்கும் பரவியிருந்தது.
![]() |
திரு.வே.சிவக்கொழுந்து (யாழ்ப்பாணன்) |