Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பாரம்பரியம்’ Category

‘இரண்டாயிரம் ஆண்டுச் சுமை எமக்கு’ எனப் பாடினார் எமது மூத்த கவிஞர்.

Murugaiyan

இரண்டாயிரம் ஆண்டுகள் என்ன அதற்கும் மேலான காலாச்சார பாரம்பரியம் எமக்கு உண்டு. இன்றும் எங்கள் கலாசாரம் செழுமையாக இருப்பதற்கு அதுவே முக்கிய காரணமாகும்.

ஆனால் சில தடவைகளில் அது சுமையாகவும் இருக்கும் என்பதையே அவர் அவ்வாறு பாடினார்.

இரண்டாயிரம் என்ன, ஐயாயிரம் ஆண்டுப் பெருமையைப் பறையடித்து சங்கு ஊதி மேலும் சுமை ஏற்றத் தயங்காதவர்கள் நாம்.

எமது சுமை கலாசாரத்தில் மட்டுமல்ல. விஞ்ஞானம் சுகாதாரம் என மேலும் பல துறைகளுக்கும் விஸ்தரிக்கிறது.

இல்லாத சுமைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து எம்மினத்தின் முதுகெலும்பை ஒடிக்க எம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளவையார் காலத்திலேயே

‘அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தியவர்கள்’

நாம் எனப் பெருமையடித்துக் கொள்கிறோம்.

avvai

ஆனால் அவர் பாடிய காலத்தில்
அணு என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
இன்று அதன் புதிய அர்த்தம்
என்னவெனச் சிந்திக்கிறோமா?

அப்படியான நாம் சுகாதாரத் துறையை மட்டும் விட்டு வைப்போமா?

தமிழர்களாகிய நாம் சங்க காலத்திலேயே சுத்தத்தைக் கடைப்பிடித்தவர்கள், சுகாதாரத்தைப் பேணியவர்கள் என்று பெருமை அடித்துக் கொள்வோம்.

‘அன்றே ஆசாரக்கோவை எழுதப்பட்டுள்ளமை அதற்குச் சான்று’ எனப் பழம் பண்டிதர்கள் ஆதாரம் தேடுவார்கள்.

‘அதிகாலை நித்திரை விட்டெழுந்து கடற்கரை ஓரமாக அல்லது நீர் நிலையை அண்மித்த இடங்களில் தெற்குத் திசையை நோக்கி மூக்கு நுனியைப் பார்த்தபடி மலசலம் கழிக்கவேண்டும் என்று எமக்குச் சைவ வினாவிடையில் போதிக்கப்பட்டுள்ளது.

arumuganavalar

ஆனால் நாம் வடலிகளுக்கும், ஈச்சம் பற்றைகளுக்கும், வயல்களுக்கும் மனித எருக்களைப் பசளையிட்டு காடு வளர்த்துச் சூழலைப் பாதுகாக்க அவ்வாறு செய்தோமா?

அதன்பின் குளக்கரையில் அடிக்கழுவி, அதே நீரால் வாய் கொப்பளித்து, முகம் கழுவி, தலைக்கு நீராடி, ஆடை துவைத்துச் சுத்தமாக ஆலயம் சென்று தரிசனம் செய்த எமது கலாசாரப் பாரம்பரியம் போற்றுதற்குரியது!

புண்ணிய ஸ்தலம் ஒன்றைத் தரிசிக்கும் வாய்ப்பு பல வருடங்களுக்கு முன் கிடைத்தது. அதிகாலையி லேயே பொழுது புலருமுன் அரையிருட்டில் எம்மை புண்ணிய தீர்த்தத் திற்கு அழைத்துச் சென்றார் எமது கைட்.

கடற்கரையில் நாற்றம் தாங்க முடியவில்லை. சேற்று நாற்றமாக்கும் என மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரினுள் தலையை மூழ்கிவிட்டுத் தலையை வெளியே எடுத்தேன்.

லேசான வெளிச்சத்தில் லட்டு மாதிரி ஏதோ மிதந்து வருகிறது.
கடவுளின் அருட்பிரசாதமாக்கும் எனப் பக்தி யோடு அள்ளியெடுக்கக் கையை நீட்டினால் அருகிலிருந்தவர்
நமுட்டுச் சிரிப்போடு எழுகிறார்.

bath

லுங்கியை உயர்த்திக் கொண்டு ‘பாரம் கழிந்து’ விட்ட திருப்தியோடு காலை அகட்டி வைத்து நடந்து செல்கிறார்.

சிறுவயது ஞாபகம் வருகிறது. எனது மாமாவிற்கு என்னிலும் ஒருசில வயதுகளே அதிகம். அதனால் அவர் எனது விளையாட்டுத் தோழனும் கூட.

அவருக்குக் ‘கிரந்தி’ உடம்பு என்று பாட்டி அடிக்கடி சொல்லுவா.

சிறு காயமானாலும் புண் அவியத் தொடங்கிவிடும்.
அவரின் ஐயா, எனது பாட்டானாருக்கு பட்டணத்தில் வேலை. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வீட்டுக்கு வருவார்.

வந்ததும் இவரது புண் அவரது கண்ணைக் குத்தும்.
உடனடியாகவே அதனைச் சுத்தம் செய்யச் சித்தமாவார்.

மாட்டுக் கொட்டிலுக்குப் போய் புதுச்சாணமாக எடுத்து,
ஒரு உருண்டை உருட்டி ஆடுகால் மரத்தடி ஈரலிப்பு மண்ணில்
ஒளித்து வைப்பார்.

பின்புதான் மாமனை கிணத்தடிக்கு இழுத்துக் கொண்டு போய் சோப் போட்டுக் குளிக்க வார்க்கும் சடங்கு தொடங்கும்.

அதனைத் தொடர்வதுதான் உச்சக்கட்டம்.

கண்ணுக்குப் சோப் போட்டுவிட்டு பொடிப்பிள்ளை கண் திறக்க முடியாது அந்தரித்து நிற்கும் நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த சாணிக்கட்டியை எடுக்க மெல்ல நழுவுவார்.

புண்ணில் தேய்த்துச் சுத்தப் படுத்துவதற்காக.

மாமனுக்குத் தெரியாதா இவர் செய்யப் போவது.
கண்ணைத் துடைத்துவிட்டுப் பிடிப்பார் ஓட்டம்.
இவர் விட்டுக் கலைப்பார்.
அவர் தப்பியோடுவார்.

கிணற்றுக்கட்டைச் சுற்றி,
வீட்டைச் சுற்றி,
பாட்டியைச் சுற்றி
என ஓட்டப்போட்டி தொடரும்.

ஓடிக் களைத்துப்போன பாட்டா, தப்பிப் போட்டாய் என்ன, அடுத்த கிழமை பார்க்கிறேன் என பல்லில்லாத வாயால் கறுவுவார்.

அன்று ஓடித் தப்பியதால்தான் ஏற்புவலியால் (Tetanus) சாகாமல் இன்று தலைநரைத்தும், இறைசேவை செய்து கொண்டு உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாமா.

பசுவின் சாணியில் ஏற்புவலிக் கிருமிகள் நிறைய இருப்பது
இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே.
அவரது காலத்திலும் தெரிந்து தான் இருந்தது.
ஆயினும் பாட்டா மூதறிஞர் ராஜாஜியின் விசிறி.
கசத் தடுப்பு (TB) ஊசியான பி.சி.ஜி. போடக்கூடாது எனப் போராட்டம் நடத்தியவரல்லவா அந்த மூதறிஞர்.

தினமும் கைராட்ணம் சுத்துமளவிற்கு அவர் சொற்கேட்டு நடந்த சீடப்பிள்ளையான பாட்டா சாணியைத் தேடாமல் வேறு என்ன செய்திருப்பார்.

படித்தவர்கள் கூட அறிவியலை விட
வாழையடி வாழையாக வந்த
பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும்
நம்பிக் கடைப்பிடித்து வந்த காலம் அது.

பாட்டாவும் எப்படி விதிவிலக்காக முடியும்.

முன்பெல்லாம் பிறந்த சில நாட்களுக்குள்ளேயே குழந்தைகள் ஏற்புவலியால் துடித்துச் சாவது சர்வசாதாரணம்.

Neonatal tetanus

பிறந்தவுடன் பொக்குள் புண்ணுக்குச் சாணி வைத்து மருந்து கட்டும் வழக்கம் அப்போதிருந்தது தான் காரணம்.

இன்றும்கூட சாணியால் குழந்தைகளின் உயிர் குடிக்கும் கைங்கரியம் உலகின் சில பகுதிகளில் நடக்கிறதோ நான் அறியேன்.

உலகெங்கும் இன்னும் குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் ஏற்பு நோயால் இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. 2008ற்கான அறிக்கைப்படி  6658 இவ்வாறு இறந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் 2000-2003 காலப்பகுதியில் 257,000 அவ்வாறான சிசு இறப்புகள் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி விபரமாக அறிய உலக சுகாதார ஸ்தாபனத்தின அறிக்கையைப் படிக்க கிளிக் பண்ணுங்கள் 

பிறப்புக் கால சிசு ஏற்பு வலி நோயின் (Neonatal Tetanus) அறிகுறிகளாக

  • தசைஇறுக்கம்
  • சினப்பு
  • தாய்ப்பாலை உறிஞ்ச முடியாமை
  • விழுங்கவும்  முடியாமை
  • தொட்டவுடன் தசைகள் இறுகி வலிப்பு போல ஏற்படல் எனப் பலவாகும்.

ஆனாலும் இன்னமும் பசும்சாணி எமக்குப் புனிதமானதாகத்தான் இருக்கிறது.

வீட்டைப் பசுஞ்சாணியால் மெழுகித் தான் புனிதப்படுத்துவோம்.

பிள்ளையார் பிடிப்பதும் சாணியால்தான்.

சுளகைச் சாணியால் மெழுகி அதில் உணவு தயாரித்து உண்ட மலந்தின்னிகள் நாம்.

Cow_Dung.
மனித மலத்தைக் கண்டாலே மூக்கைப் பொத்தி மறுபக்கம் திரும்பும் நாம் மாட்டின் மலத்தைப் புனிதமாக, பெருமையாக கையால் தொட்டு அளையவும் தயங்காத ‘புதுமை’ மனிதர்களாக இருக்கிறோம்.

Sulaku

கைப்புண்ணோடு சாணியைக் கையளைந்து கதிமோட்சம் அடைந்த கோடானுகோடி முன்னோர்கள் இறந்தும் பிறவா வரம் பெற்றனரோ?

இவ்வளவு செய்தும் எமது முன்னோர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக திடகாத்திரமாக நீண்ட நாள் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு ‘கடவுள் அருளன்றி’ வேறு காரணம் எதுவும் இருக்க முடியுமா?

ஆசாரக்கோவைகளும் சைவவினாவிடைகளும் பாரம்பரியமாக நாம் பேணி வந்தமை எமது சுகாதாரப் பண்புகளைக் காட்டுகிறதா
அல்லது கேடு கெட்ட சனங்கள் இவற்றைப் படித்தாவது திருந்தாதா என்ற தமிழறிஞர்களின் அங்கலாய்ப்பைக் காட்டுகிறதா?

எனது பாட்டியும் சுத்தத்தில் சற்றும் குறைந்தவரல்ல.
அவ எப்பவாவது ஆஸ்பத்திரிக்குப் போய் வந்தாவென்றால்
பெரும் எடுப்புகள் எடுக்க வேண்டியிருக்கும்.

தலைவாசலிலேயே வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
வந்ததும் அவ கூப்பாடு போடுவா.
அம்மா வாசலுக்கு ஓடிப்போய் தலையில் நீரூற்றுவா.

பிள்ளைகளாகிய நாங்கள் முன்னே போனால் செப்பல் பேச்சுத்தான் கிடைக்கும். உடுப்பையும் கழற்றி வாளியில் போட்டுவிட்டு கிணத்தடியில் போய் முழுகிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலடி வைப்பா.

செத்த வீட்டுக்குப் போய்வந்தால் சொல்லவே தேவையில்லை. இரண்டும் தீட்டுத்தான் அவவுக்கு.
‘கண்ட கண்ட சனங்களெல்லாம்’ பிளங்கிற இடத்துக்குப் போட்டு வந்த அசூசைக்காகக் குளிப்பாவோ அல்லது
ஆஸ்பத்திரி அசுத்தம், கிருமிகள் தொற்றுமிடம் என்று உணர்ந்துதான் குளிப்பாவோ எனக்குத் தெரியாது.

எப்படியிருந்த போதும் அது எமது மூதாதையரின்
நல்ல புத்திசாலித்தன மான பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆஸ்பத்திரிகளுக்குப் பல்வேறு விதமான நோய்களுடன் பலரும் வருவார்கள். அவற்றில் பல தொற்று நோய்களாக இருக்கும். காய்ச்சல், இருமல், வயிற்றோட்டம், நெருப்புக்காச்சல், செங்கண்மாரி என இப்படி எத்தனையோ இலகுவில் தொற்றக்கூடியன.

அதுவும் ஹொஸ்பிட்டல் இன்பெக்சன் (Hospital acquired infecions) என்பது அதி தீவிரமானது. கடுமையாகத் தாக்கக்கூடியதாகும்.
எனவே வைத்திய சாலைக்குப் போய்வந்தால் குளிப்பது மிக நல்ல பழக்கம்தான்.

டொக்டருடைய கைபட்டாலும் கிருமி பரவிவிடும் எனக் கையைக் கொடுக்கப் பயப்படுகிற அதிதீவிர சுகாதாரச் சிந்தனையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

‘டொக்டர்களே கேடுகெட்டவர்கள்’ அருவருப்பு என்பதே கிடையாது.
பார்த்தாலே சத்தி எடுக்க வரும் அசிங்கங்களுக்குள் எல்லாம் கையை அசூசையின்றி நுழைப்பார்கள்.

அழுகிச் சீழ் வடியும் புண்களை மூக்குச் சுழிக்காமல் சுத்தம் செய்வார்கள்.

Infected wound

குருதி சிந்தும் உறுப்புகளுக்குள் கையை நுழைப் பார்கள்.
நாற்றமடிக்கும் வாய்களுக்குள் விரலைச் சொருகுவார்கள்.
பிறகு நாடியைப் பார்க்கிறோம் என்று எமது கையையும் பிடிப்பார்கள்

என்பது பலரின் அங்கலாய்ப்பு.

நாங்கள் கையுறைகள் உபயோகிப்பதும், அது இல்லாவிடில் ஒவ்வொரு தடவையும் கைகழுவியே எமது கைகள் சுருங்கிவிட்டதும் ஒருவர் கண்களிலும்படுவதில்லை.

  
மல்லிகை சஞ்சிகையில் நான் பல வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை சில மாற்றங்களுடன் மீள் பிரசுரமாகிறது.

Read Full Post »

>

பழந்தமிழரின் அளவை முறைகள்

Sithi Samira Begam அவர்கள் தனது முகப் புத்தகத்தில் பதிந்த பதிவு. 

முக்கியத்துவம் கருதி இங்கு பகிர்கிறேன். எனது மனமர்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமான பதிவு இது. தொடர்ந்து படித்து வரும்
நண்பர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களின்
பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம்
இருக்கிறது.

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய
அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கிறது.

எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும்
இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்…

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

அறுபது விநாடி = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை… எனவே
இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்…

Read Full Post »

>எங்களுடைய பாரம்பரியத்தில் வந்த
இன்னுமொரு அரிய பழக்கத்தையும்
இங்கு ஞாபகப்படுத்தலாம்.
அது இளகிய மனம் பற்றியதும்கூட.

நாங்கள் மனிதர்களில் மாத்திரம் அன்பு கொண்டவர்களல்ல.

விலங்குகளுக்கும், மரஞ்செடி கொடிகளுக்கும் எமது அன்பு வட்டம் விரிகிறது.

தெருவோரம் வேலிகளுக்கு ஊன்று கோலாக நாட்டப்பட்டுள்ள பூவரசு, கிளிசெறியா, கிளுவைக் கதியால்களும் எமது அன்பைப் பெறத் தயங்குவதில்லை.

அதுவும் எமது வீட்டுக் கதியால்களுக்கு என்றில்லை. அக்கம்பக்கத்து வீட்டுக்காரரின் கதியால்களுக்கும், நாம் நடந்து செல்லும் வீதிகளின் முகமறியாதவர்களின் வீட்டுக் கதியால்களுக்கும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்கிறது.

ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தால் தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை அச்சொட்டாகக் கடைப்பிடிப்பவர்களல்லவா நாம்?

கதியால்கள் நீரின்றி வாடியும்
போஷாக்கின்றி வெளிறியும்
கிடப்பதைக் கண்டால்
எம் மனது தாங்கவே தாங்காது.


உடனடியாகவே யூறியா கலந்த நீரூற்றி உதவிடுவோம்.
இதற்காக நாலு பேர் பார்க்கும் வீதியில் நின்று
கோவணத்தைக் கழற்றக்கூட
நாங்கள் தயங்குவதில்லை.

இயற்கை நமக்கு எவ்வளவோ கற்றுக் கொடுத்திருக்கிறது. நாய்களும்தான்.

லைட் போஸ்டைக் கண்டதும் அவை மூன்று காலில் நின்று மோனத் தவம் செய்து தீர்த்தம் தெளிப்பது எம் சிந்தையைக் கவர்ந்ததால்தான் நாமும் கதியால்களைக் குளிர்விக்கிறோம் போலும்.

இரண்டாயிரம் ஆண்டு காலமாயிருந்தாலும் எங்களை நவீன காலத் திற்கும் நாகரீகத்திற்கும் ஏற்ப மாறாத பழமை விரும்பிகள் என எவரும் எம்மைக் குறைகூறவும் நாம் இடமளிப்பதில்லை.

கொழும்பில் கதியாலைக் காணமுடியாது என்பதால் துவண்டுவிடுவ தில்லை.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப எம்மை மாற்றிக் கொள்ளும் மனவிரிவு கொண்டவர்கள்.


இதனால் லைட் போஸ்டுகளையும் மதில் களையும் சிறுநீர் கொண்டு அடியோடு பிரட்டி வீழ்த்த முக்கி முயல்வோம்.

இதைப் பார்த்து சகோதர இனத்தவர்கள் மூக்கில் கைவைத்து ஆச்சரியப் படுவதுண்டு.

சிலவேளை அவர்களும் எங்களோடு சேர்ந்து முயற்சிப்பதும் உண்டு.

மரங்களையும் மதில்களையும் குளிர்விக்கும் ஆர்வத்தில் அந்த வீட்டில் வதிபவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வீதியைப் பயன்படுத்து பவர்களுக்கும் நோய்களைப் பரப்புகின்றோமே என்ற கவலை கிஞ்சித்தும் எமக்குக் கிடையாது.


தீர்த்தம் என்றதும் இன்னுமொரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
அன்று ஒரு குழந்தையை அதன் அம்மம்மா தூக்கிக் கொண்டு வந்திருந்தா.

கூட குழந்தையின் அம்மா. அவள் கைகள் இரண்டும் போதாத அளவிற்கு கூடைகள், பைகள். அவற்றில் குழந்தையின் பொருட்கள் நிறைத்திருந்தன. அவசரத் தேவைக்கானதாம்.

பாவம்! தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். போத்தல், பிளாஸ்க், சீனி, கரண்டி, பிரஸ் இத்தியாதி. பாரத்தை அருகிலிருந்த மேசையில் பொத்தென இறக்கினாள்.

நல்ல வேளையாக காஸ் குக்கரைக் காணாதது நிம்மதியளித்தது. அதுவும் இருந்திருந்தால் அதிலேயே அடுப்பை மூட்டி தண்ணியைக் கொதிக்க வைத்துப் புட்டிப்பால் தயாரித்திருப்பாள்!

குழந்தைக்கு இரண்டு நாட்களாக வயிற்றோட்டமாம். குழந்தை அம்மம்மாவின் மடியில் வாடிக்கிடந்தது.

நோயின் விபரத்தை அவர்களிடம் கேட்டுக் கொண்டே குழந்தையைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். மேலோட்டமான பரிசோதனையை முடித்துக் கொண்டு வயிற்றுப் பக்கம் மெதுவாகக் கையை வைத்தேன்.

திடீரென முகத்தில் இளஞ்சூட்டு நீரினால் அபிஷேகம். என்ன எது என்று நிதானிப்பதற்கிடையில் அம்மம்மாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“பிள்ளை டொக்டருக்குத் தீர்த்தம் கொடுத்துவிட்டது” என மனம் நிறைந்து முறுவலித்தாள்.


நல்லகாலம் ‘சந்தனமும்’ சேர்த்துத் தரவில்லை.

தீர்த்தத்தால் புனிதம் பெற்ற முகத்தைக் கழுவ நான் வாஷ் பேசினை நோக்கி ஓடினேன்.

இப்பொழுதெல்லாம் யாராவது குழந்தையைக் கொண்டுவந்தால் நான் முதலில் அதன் முகத்தைப் பார்ப்பது கிடையாது.

கண்கள் தன்னையறியாமல் கீழேதான் போகும். ஆணா? பெண்ணா? எனப் பார்க்கிறார் எனத்தான் பெற்றோர்கள் நினைப்பார்கள்.

நப்பின் துணி கட்டிக் கொண்டு வராவிட்டால் ஒரு சிறு முன்னேற்பாடு.

குழந்தையின் தலையை எனது பக்கமும் காலை கூட வந்தவரின் பக்கமும் இருக்குமாறு கிடத்திய பின்னர்தான் எந்தக் கதை காரியமும் நடக்கும்.

தீர்த்தம் வந்தால் கூட கொண்டு வந்தவருக்குக் கிடைக்கட்டுமே!

பல ஆண்டுகளுக்கு முன் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி

Read Full Post »