>


Posted in பாலகர்களின் உணவு, மருத்துவம் on 31/10/2008| Leave a Comment »
>
Posted in பாலகர்களின் உணவு on 13/08/2008| 2 Comments »
>
உணவு ஒவ்வாமை என்பது பாலகர்கள் சிலருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.தாய்ப் பாலுடன் மட்டும் இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை Allergy ஏற்படுவது குறைவு.தாய்ப்பாலுடன் அல்லது தாய்பாலை முற்றாக நிறுத்திய பின் மாப்பால் அல்லது முட்டை, Cereals போன்ற திட உணவுகளை ஆரம்பிக்கும் போதே பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் தலை காட்ட ஆரம்பிக்கின்றன.
முட்டை,பசுப்பால்,கோதுமை,சோயா,கச்சான், ஏனைய விதைகள், சில வகை மீன்கள்,நண்டு,இறால் போன்ற கோதுள்ள கடலுணவுகள் ஒவ்வாமையை அதிகளவு ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.இவை குழந்தைகளிடம் மட்டுமல்லாது வளர்ந்த சிலரிடமும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய ஒவ்வாமை என்பது தோல் சிவந்து தடிப்பது, அரிப்பு எடுப்பது போன்றே பெரும்பாலும் வெளிப்படும்.ஆயினும் எப்பொழுதுமே அவ்வாறு என்றில்லை.
நாம் கிரந்தி என்று பொதுவாக சொல்லும் பாலகர்களின் எக்ஸிமா என்பது இத்தகைய உணவு ஒவ்வாமையின் வெளிப்பாடுதான். அதேபோல சில உணவுகளை உண்டால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதுண்டு. வயிற்று முறுக்கு,வயிற்றுப் பொருமல், வாய்வு,வாந்தி,வயிற்றால் இளக்கமாகப் போதல் போன்றவையும் கூட உணவு ஒவ்வாமையின் வெளிப்பாடுதான்.
பாலகர்களில் அதாவது ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் தோன்றும் இத்தகைய ஒவ்வாமைகள் அவர்கள் வளரவளர படிப்படியாக மறைந்து விடுவதுண்டு. இதற்கு வெளிப்படையான காரணம் சொல்ல முடியாதபோதும்,ஒவ்வாமைப் பொருளைக் குறைந்த அளவில் சிறிதுசிறிதாக குழந்தைக்குத் தெரிந்தோ தெரியாமலே கொடுக்கும்போது அவர்கள் அதிலிருந்து விடுபடுகிறார்கள் எனலாம்.
எனவே முட்டை ஒவ்வாமை பற்றிய ஆய்வு ஒன்று செய்யப்பட்டது.முட்டை ஒவ்வாமை உள்ள 94 பிள்ளைகளை 6 மாதங்களுக்கு ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவர்களுக்கு முட்டை சேர்க்கப்பட்ட கேக்கை தொடர்ச்சியாகவும் மிகக் குறைந்த அளவிலும் 6 மாதங்களுக்கு கொடுத்தார்கள்.படிப்படியாக கொடுக்கப்பட்ட கேக்கின் அளவானது அதிகரிக்கப்பட்டது.6 மாதங்களுக்குப் பின்னர் அவர்களுக்கு கேக்கில் உள்ள அளவிற்கு அதேயளவு பதப்படுத்தாத முட்டை கொடுக்கப்பட்டது.ஆச்சரியம்! அவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு எந்தவித ஒவ்வாமையும் எற்படவில்லை.
முட்டை அலர்ஜி எந்த முயற்சியும் இன்றித் தானாகவே அற்றுப்போவது புதினமல்ல.பெரும்பாலான பிள்ளைகள் பாடசாலை செல்லும் வயதை எட்டும்போது மறைந்து விடுவதை அக்கறையுள்ள பெற்றோர்கள் அவதானித்திருப்பார்கள். ஆனால் இந்த ஆய்வு சொல்வது என்னவென்றால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு நன்கு பதப்படுத்தப்பட்ட முட்டையை சிறிது சிறிதாகக் கொடுத்தால் அவர்கள் முட்டைக்கு மிக விரைவிலேயே இசைவடைந்து விடுவார்கள் என்பதுதான்.
சரி முட்டையை அவித்தோ அரை அவியலாகவோ கொடுக்கலாம்தானே? ஏன் கேக்கில் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கக் கூடும்.கேக் என்றல்ல வேறு முறைகளிலும் கொடுக்கலாம்.முட்டையை அதிகம் சூடாக்கி மிகவும் பதப்படுத்தப்பட்ட நிலையில் குழந்தைக்கு ஆரம்பத்தில் கொடுக்க வேண்டும் என்பதே முக்கியமாகும். அவிக்கும் போது நீரின் கொதிநிலையளவு அதாவது 100 C அளவிற்கே செல்கிறது. இந்தளவு பதப்படுத்தல் போதாது.அவனில்(Oven)அல்லது போறணையில் வைத்து வேக வைக்கும்போது மிக அதிக வெட்பத்தில் பதப்படுத்தப்படுகிறது.எனவே முட்டையில் உள்ள புரதங்கள் நன்கு பதமாகி ஒவ்வாமை ஏற்படுவதைக் குறைக்கின்றன.
ஆய்வு முட்டை பற்றியதுதான். ஆயினும் அது சொல்லும் கருத்தை ஏனைய உணவுகளுக்கும் பொருத்திப் பார்ப்பது தவறில்லை என நம்புகிறேன்.அதாவது ஒவ்வாமை உள்ள உணவு வகைகளை மிக அதிகளவு வெட்பத்தில் பதப்படுத்தி,சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தினால் ஒவ்வாமை விரைவில் மறையக் கூடும்.
அத்தோடு குழந்தைக்கு திட உணவுகளை ஆரம்பிக்கும்போது முதலில் அரிசி சார்ந்த உணவுகளை (உதாகஞ்சி) முதலில் கொடுங்கள்.ஏனெனில் அரிசியில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் புரதங்கள் இல்லை.மாறாக சீரியல்ஸ் கொடுக்கும் போது அவற்றில் கோதுமை மற்றும் சோளம் சேர்த்திருந்தால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகும்.
ஆதாரம்: American Academy of Allergy, Asthma & Immunology
டாக்டர் எம்.கே. முருகானந்தன்