Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பால்வெல்லம் இணங்காமை’ Category

மகிழ்ச்சி பொங்கிவழிந்தது. நீண்ட காலத்தின் பின்னர் கிட்டிய ஆனந்தத்தில் திளைத்தார்.

புதுப் பிறவி எடுத்தது போன்ற புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது.

எதுவித உபத்திரமும் தராமல் பேரமைதி குடிகொள்ள கம்மென்று அடங்கிக் கிடந்தது வயிறு. எத்தனை துன்பங்களை அனுபவித்துவிட்டார். அவமானங்கள் சொல்லியடங்காது.

Passing_Gas

கடாமுடா என்ற சத்தம் அவரது வயிற்றில் திடீரென எழும்பும். பல தருணங்களில் அருகில் இருப்பவர் இவரை புதினமாகப் பார்க்கும் அளவிற்கு அது பலமாக ஒலிக்கும். வேளை கெட்ட தருணங்களில் பறபற வென மலவாயிலால் வாய்வு ஆரவாரமாக வெளியேறும்.

வயிறு முட்டுமாப்போல அந்தரம் கொடுக்க சற்றே பிட்டத்தை ஒரு புறம் உயர்த்தி வாய்வைத் தானாகவே வெளியேற்ற நேர்வதும் உண்டு. தலைகுனிந்து சத்தம் எழுப்பாது சிரிப்பார்கள் அருகில் இருப்பவர்கள்.

farting-man

“விருந்தினர்கள் வந்திருக்கும் போது டொயிலற்றுக்குப் பேகக் கூடாது” இது மனைவியின் கண்டிப்பான உத்தரவு. புறபற சத்தம் அருகில் உள்ள வரவேற்பரை சத்தம் கேட்குமே என்ற வெக்கையீனம் அவளுக்கு.

இவை எல்லாம் பயிற்றங்காய், உருளைக் கிழங்கு, பருப்பு போன்ற வாய்வு பண்டங்களைச் சாப்பிட்டதால் என எண்ணியிருந்தார். அவை காரணமல்ல என்பது இப்பொழுதுதான் புரிகிறது.

ஆபீசில் கூட வேலை செய்பவர்கள் கணக்கு வைப்பார்கள் இவர் எத்தனை தடவைகள் மலம் கழிக்கச் செல்கிறார் என்று. காலையில் வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் கட்டாயம் ஒரு தடவை. முதிய உணவிற்கு சற்று முன்னர் மற்றொரு தடவை தப்பாது.

இந்த ஒரு வாரமாக இவை எதுவுமே அவருக்கு இல்லை.

டொக்டரின் அறிவுரைப்படி பால் குடிப்பதை நிறுத்திய பின்னர்தான் அவருக்கு இந்த நிம்மதி கிடைத்தது. வழமையாகப் பால் குடிப்பது நல்லது என்று சொல்கிற மருத்துவர்தான் இவரை மட்டும் பால் குடியாதே என அறிவுறுத்தி இருந்தார். காரணம் அவரது உணவுத் தொகுதியால் பாலை சமிபாடடையச் செய்ய முடிவதில்லை.

lactose-intolerance-breakfast-lactose-intolerant-620x476-620x476

பால்வெல்லம் இணங்காமை  Lactose intolerance

பால் சமிபாடடைவதில் சிக்கல் இருப்பதை மருத்துவத்தில் லக்டோஸ் இன்ரொலரன்ஸ் என்பார்கள். லக்டோஸ் lactose என்பது பாலில் உள்ள சீனிப் பதார்த்தமாகும்.  லக்டோசில் இரண்டு வகையான இனிப்புகள் இணைந்துள்ளன. glucose and galactose  என்பனவே அவை. அவற்றை ஒன்றிருந்து மற்றதைப் பிரித்து உணவுக் குழாயால் உறிஞ்சப்படுவதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கு லக்டேஸ் (Lactase)  என்ற நொதியம் தேவை.

இந்த நொதியம் ஒருவரது உணவுக் கால்வாயால் முற்று முழுதாகச் சுரக்கப்படாமல் இருந்தாலோ அல்லது போதியளவு சுரக்காமல் இருப்பதால்தான் இக் குறைபாடு ஏற்படுகிறது.

lactose-intolerance1-624x468

இதன் காரணமாக சிலரால் பால் கலந்த எந்த உணவை உண்டாலும் பிரச்சனை ஏற்படலாம். உதாரணமாக சிறிதளவே பால் கலந்த கேக் பிஸ்கட் போன்றவற்றை உண்டால் கூட ஒரு சிலரில் செமிபாடடையாது. மாறாக பலருக்கு பால் அருந்தினால் மட்டுமே பிரச்சனையாக இருக்கும். எதை உண்பது எதைத் தவிர்ப்பது என்பதைக் கண்டறிந்து நலமாக வாழ்வதே இவர்கள் முன் இருக்கும் முக்கிய சவாலாகும்.

பலருக்கு இப் பிரச்சனை இருந்த போதும் அது பாலினால்தான் என்பதை பலர் உணர்ந்து கொள்வதில்லை. இனங்களைப் பொறுத்த வரையில் ஆசியா ஆபிரிக்கா தென் அமெரிக்கா போன்ற பகுதி மக்களுக்கு அதிகமாகவும் ஐரோப்பியர்களிடையே குறைவாகவும் இருக்கிறது.

சில குடும்பங்களின் வளர்ந்தவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலும் கட்டிளம் பருவத்தில் அல்லது வளர்;ந்த பின்னரே அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஒரு சிலரில் வாழ்நாள் முழவதும் பாலினால் எந்தவித பிரச்சனையும் இருக்காது. இருந்தாலும் திடீரென ஆரம்பிக்கலாம். இதற்குக் காரணம் முதுமையடைவதால் ஆக இருக்கலாம்.

இருந்தபோதும் பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு இப் பிரச்சனை இருப்பதுண்டு. இவர்கள் பால் அருந்தினால் வயிற்றோட்டம் ஏற்படும். இது அவர்களது குழந்தைப் பருவ உணவூட்டலில் பெரும் பிரச்சனையாக இருக்கும். இதனால் சோயாப் பாலை கொடுக்க நேர்கிறது. ஆயினும் இது ஒரு சில குழந்தைகளையே தாக்குகிறது.

இதைத் தவிர குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இதேபோல பால்வெல்லம் இணங்காமைக் குறைபாடு இருப்பதற்கான சாத்தியம் அதிகம். இது தற்காலிகமானதே, குறைமாதமாகப் பிறக்கும் அக் குழந்தையின் உணவுத் தொகுதியானது லக்டேஸ் நொதியத்தை உற்பத்தி செய்வதற்கு தயாராகாததே காரணம் ஆகும். சிறிது காலத்தில் அந்நொதியம் உற்பத்தியாக ஆரம்பித்ததும் தானாகவே குணமாகிவிடும்.

அறிகுறிகள்

பால் அல்லது பாற் பொருட்களை உட்கொண்ட 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் தோன்றும். ஆரம்பத்தில் சொன்ன நோயாளிக்கு ஏற்பட்டவை போலவே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக,

  • வயிற்றுப் பொருமல்
  • வயிற்று வலி அல்லது வயிற்று முறுக்கு
  • வயிற்றறையில் வாய்வு கடா முடா என ஓடுவது போன்ற சப்தங்கள்
  • மலவாயிலால் வாய்வு வெளியேறுதல்
  • வயிற்றோட்டம் அல்லது மலம் இளக்கமாக வெளியேறல்
  • ஒரு சிலரில் ஓங்காளம், வாந்தி ஏற்படலாம்

இருந்தபோதும் வயிற்றில் வாய்வுத் தொல்லை உள்ள அனைவரும் தமக்கு பால் வெல்ல இணங்காமை பிரச்சனைதான் உள்ளது என்ற முடிவிற்கு வரக் கூடாது. வேறு பல உணவுகளாலும் வயிற்றில் வாய்வுத் தொல்லை ஏற்படலாம்.

மறுதலையாக, பால் குடித்த பின்னர் ஒரு தடவை உங்களுக்கு பிரச்சனைகள் தோன்றினால் பால் வெல்லம் இணங்காமைதான் என முடிவு கட்ட வேண்டாம். ஒவ்வொரு முறை பால் குடித்த பின்னரும் அல்லது ஒவ்வொரு முறையும் பாற் பொருட்களை உட்கொண்ட பின்னரும் வயிற்றில் பிரச்சனை தோன்றுகிறது எனில் அது பாலால் ஏற்பட்டதாக இருக்கலாம்.

எவ்வாறு கண்டறிவது

சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவருடன் பேசுங்கள்.

பாலையும் பாற் பொருட்களையும் சில தினங்களுக்கு முற்றாகத் தவிர்ப்பதன் மூலம் ஒரு இப் பிரச்சனை இருக்கிறதா இல்லையா என தீர்மானிக்க முடியும். ஆனால் இதில் ஒரு பிரச்சனை உண்டு. பாலை ஒருவர் பாலாகக் குடிக்காவிட்டால் கூட வேறு உணவுப் பண்டங்களில் அவை மறைவாகக் கலந்திருப்பதால் அறிகுறிகள் தோன்றலாம்.

உதாரணமாக கேக், பிஸ்கற், பான்கேக், குக்கீஸ் போன்றவற்றில் கலந்திருக்கலாம். காலையில் பலர் உட்கொள்ளும் Cereal உணவுகளில் கலந்திருக்கும்.

Lactose5

சொக்ளட், சலட் (salad dressings)  போன்றவற்றிலும் இருக்கக் கூடும். இவ்வாறு பல உணவுகளிலும் பால் அல்லது பாற்பொருட்கள் கலந்திருப்பதால் பாலைத் தவிர்க்கும் உணவுமுறை (elimination diet) சில வேளைகளில் தவறான முடிவைக் கொடுக்கக் கூடும்.

milk challenge   என்ற முறையிலும் பரிசோதித்து அறியலாம். இரவுணவிற்குப் பின்னர் வேறெதுவும் உட்கொளள்ளாது காலையில் ஒரு கப் பாலை மட்டும் அருந்த வேண்டும். வேறு எதுவும் உண்ணக் கூடாது. பால் வெல்லம் இணங்காமை உள்ளவராயின் 3 முதல் 5 மணிநேரத்திற்குள் வயிற்றுப் பொருமல் வயிற்று வலி வயிற்றோட்டம் போன்ற வழமையான அறிகுறிகள் தோன்றும்.

இவற்றைத் தவிர சுவாசக் காற்றில் ஹைதரஜன் வாய்வின் அளவை கண்டறிவதன் மூலம் நோயை இனங்காணும் பரிசோதனை breath test    மேலை நாடுகளில் செய்யப்படுகிறது. ஆயினும் இலங்கையில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

மலப் பரிசோதனை, பால் அருந்திய பின்னர் குருதி குளுக்கோஸ் பரிசோதனை, சிறுகுடலில் இருந்து திசுக்களை வெட்டி எடுத்து பரிசோதிக்கும் முறை ஆகியனவும் சொல்லப்படுகின்றன. ஆயினும் பெருமளவு உதவுவதில்லை.

சிகிச்சை என்ன?

இப் பிரச்சனைக்கான முக்கிய தீர்வு ஒருவர் தனது உணவில் சேரக்கும் பால் மற்றும் பாற் பொருட்களைக் குறைத்துக் கொள்வதாகும். இதற்குக் காரணம் லக்டோஸ் இன்ரொலரன்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஓரளவு பாலுணவை உட்கொள்ளும் போது பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. சிலருக்கு பாலை அருந்துவதை மட்டும் தவிர்த்தாலே போதும். சுகம் கிடைக்கும்.

ஐஸ்கிறீம், சீஸ், தயிர், யோகட் போன்றவையும் அதிகளவு பாற்பொருளை கொண்ட உணவுகளாகும். இவற்றையும் சிலர் தவிர்க்க வேண்டியிருக்கும்.

இருந்தபோதும் தயிர், யோகட் ஆகியவை பெரும்பாலன லக்டோஸ் இன்ரொலரன்ஸ் உள்ளவர்களுக்கு எந்தவித பிரச்சனையையும் கொடுப்பதில்லை.

இதற்குக் காரணம் என்ன. யோகட் தயிர் போன்றவற்றில் ஒரு பக்றீரியாக் கிருமியில் இயல்பாக உள்ள லக்டேஸ்  (lactase)  நொதியம் நீங்கள் உட்கொண்ட பாலிலுள்ள வெல்லமான (lactose)  யை ஓரளவு சமிபாடடையச் செய்துவிடுவதாகும்.

அத்துடன் யோகட் ஆனது இரைப்பையிலிருந்து பால் போல வேகமாக வெளியேறுவதில்லை. சற்று வேகங் குறைவாக உணவுக் குழாயின் ஊடாக யோகட் செல்லும்போது எமது உணவுக் குழாயில் இயல்பாக உள்ள பக்றீரியா கிருமிகள் அவற்றை உடைத்து சமிபாடடையச் செய்துவிடுகின்றன.

வேறு உணவுகளுடன் சேர்த்து பாற்பொருட்களை உட்கொள்வதாலும் பலருக்கு இணங்காமை அறிகுறிகள் ஏற்படுவதில்லை. முக்கியமாக கொழுப்பும் கலந்த உணவுகளை உட்கொள்ளும் போது பாற்பொருள் இரைப்பையிலிருந்து வெளியேறுவது அதிக நேரம் எடுக்கிறது. இதன் காரணமாக அவை ஆறுதலாக சிறுகுடலின் ஊடாகப் பயணிக்கும்போது அதிலுள்ள பக்றீரியா கிருமிகளிலுள்ள லக்டேஸ் நொதியம் பாலை சம்பாடடையச் செய்துவிடுகிறது.

பாலைச் சமிபாடடையச் செய்யும் லக்டேஸ் நொதியம் சில நாடுகளில் மாத்திரைகளாகக் கிடைக்கிறது. பாலுணவு உண்ணும் இதையும் சேர்த்து உண்டால் வயிற்றுப் பிரச்சனை ஏற்படாது. ஆயினும் இலங்கையில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

பாலில் அதிகளவு கல்சியம் கிடைக்கிறது. அது நல்ல தரத்தினாலான கல்சியம் ஆகும். எனவே பாலலுணவு இணங்காதவர்களுக்கு கல்சியம் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். விற்றமின் டி கலந்த கல்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.

ஒரு புதிய தகவல். மரபணுப் பரிசோதனைகள் மூலம் பால்வெல்லம் இணங்காமைப் பிரச்சனையை இப்பொழுது இனங்காண முடியும். இத்தகைய நவீன விலையுர்ந்த பரிசோதனை முறைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை. அதே போல லக்டேஸ் இல்லாத எலிகளில் அதை உற்பத்தி செய்ய உதவும் மரமணுவை மாற்றீடு செய்யும் மரபணு சிகிச்சை முறையும் பரீட்சார்த்தமாக வெற்றி ஈட்டியது. ஆனாலும் இது மனிதர்களில் செய்து பார்க்கப்படவில்லை. எதிர்காலத்தில் கூட வழமையான சிகச்சையாக இது வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவே.

பால் வெல்லம் இணங்காமை, பால் ஒவ்வாமை அல்ல (Milk allergy) என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். முற்றிலும் வேறானவை. பால் ஒவ்வாமை பெரும்பாலும் குழந்தைகளிலேயே ஏற்படும். அது பற்றி வேறு ஒரு பதிவு பின்னர் போடலாம்.

“ஏன் ஐயா நீங்கள் கட்டுரையில் குறிப்பட்ட நபர் குறைந்தது இரண்டு தரமாவது ஆபிசில் மலங் கழிக்கச் செல்கிறார்” என அடுத்த வாரம் ஓரிருவராவது என்னிடம் கேட்காமல் விடமாட்டார்கள்.

அவர் காலையில் சாப்பிடுவதில்லை. தடித்த பால் கோப்பி அல்லது தேநீர் அருந்துவார். ஆபீஸ் சென்ற சிறிது நேரத்தில் அது அவரது வயிற்றைக் கலக்கியடிக்கும். முற்பகல் 10 மணியளவில் ஆபிசியில் ஒரு பால் தேநீர் அருந்துவார். அதுவும் சற்று நேரத்தில் மலசல கூடத்திற்கு விரட்டும்.

பாலில்லாத தேநீர் அருந்துவதால் இப்பொழுது கூட வேலை செய்பவர்கள் கணக்கெடுக்கும் வேலை நின்று போயிற்று.

எனது ஹாய்நலமா புளக்கில் (12.12.2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

 

Read Full Post »