‘என்ன செய்யிறது என்றே புரியவில்லை. எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. வயது 40ஆகுதென்று சும்மா ஒரு மெடிக்கல் செக்கப் செய்து பாப்பம் என்று போனன். அவையள் எனக்கு பித்த பையில் கல்லு எண்டு சொல்லுகினம்’ என்று சொன்னார்.
‘ஓண்டும் செய்ய வேண்டாம். போசாமல் இருங்கோ’ என்று நான் சொன்னதும் ஆச்சரியரியப்ட்டார்.
பித்தப் பை என்பது எமது ஈரலுக்கு சற்றுக் கீழே வலது புறமாக இருக்கும் பியர்ஸ் பழம் போன்ற தோற்றத்தை உடைய ஒரு சிறிய பையாகும். இது ஈரலில் சுரக்கும் பித்த நீரை சேமித்து வைத்திருந்து சமிபாட்டு வேளைகளில் உணவுக் கால்வாயிற்குள் செலுத்தும் பணியை ஆற்றுகிறது.
பித்தக் கற்கள்
இந்தப் பித்தப் பையிற்குள் உள்ள திரவமான பித்த நீரில் கல்லுப் போல படிவுகளாக உருவாவதுதான் பித்தக் கற்களாகும்.
சிறுமணல் அளவிலிருந்து பெரிய பந்து வரையாக இதன் அளவு வேறுபடலாம். சிலருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டதாக பல கற்கள் உருவாகும். இருந்தபோதும் பித்தக் கற்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் வாளாதிருக்கும். வேறு தேவைகளுக்காக ஸ்கான் பரிசோதனை அல்லது சிடி ஸ்கான் போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்போதே பெரும்பாலும் இவை இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறன.
மேற் கூறிய நபர் சாதாரண செக்அப்பிற்கு சென்ற போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதை ஏற்கனவே சொல்லியிருந்ததை நினைவுபடுத்துங்கள்.
அறிகுறிகள்
அவ்வாறானால் பித்தப்பையில் கல்லிருந்தாலும் வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இருக்காதா, பிரச்சனைகள் ஏதும் ஏற்படாதா என்று கேட்பீர்கள். சாதாரணமாக எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது பேசாமல் கிடக்கும். ஆனால் அவற்றால் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் மட்டுமே அறிகுறிகள் தோன்றும்
அந்தக் கற்கள் பித்தப் பையிலிருந்து வழுவி பித்தக் குழாய்களுக்குள் சென்று அதை அடைத்து நின்றால் அல்லது பித்தப்பையில் கிருமித் தொற்று ஏற்பட்டால் வலி ஏற்படும்.
இருந்தபோதும் வயிற்றில் தோன்றும் வலிகள் எல்லாமே பித்தக் கற்காளால் ஏற்படுபவை அல்ல என்பது தெரிந்ததுதானே. இதன் வலி பிரத்தியேகமானது. திடீரென ஏற்பட்டு மிகக் கடுமையாக வேதனை ஏறிச் செல்லும். இவ் வலியானது பொதுவாக வயிற்றறையில் வலது புறமாகத் தோன்றும்.
சில வேளை நடுவயிற்றிலும் நெஞ்செலும்புக் கூட்டின் அருகாகவும் அத்தகைய கடும் வலி தோன்றுவதுண்டு. இன்னும் சிலருக்கு வயிற்றில் வலிக்காது ஆனால் பிற்புறமாக தோள்மூட்டு சீப்புகளுக்கு இடையில் வலிக்கலாம். வலது தோள் மூட்டில் வலியெடுப்பதும் மட்டும் உண்டு. நோய் ஓரிடத்தில் இருக்க வலி வேறு இடத்தில் பிரதிபலிப்பதை தொலைவிட வலி (Referred pain) எனச் சொல்வார்கள்.
வலியானது பொறுக்க முடியாததாக இருப்பது மட்டுமின்றி நடந்து திரிவதாலோ வயிற்றை அழுத்திப் பிடிப்பதாலோ, படுக்கையில் கிடப்பதாலோ தணிவதில்லை. ஒரு சில நிமிடங்கள் முதல் ஒரு சில மணிநேரம் வரை இந்த வலியானது நீடிக்கக் கூடும். சிலருக்கு வலியுடன் வாந்தியும் சேர்ந்து வருவதுண்டு.
பித்தப்பையில் கல்லிருப்பதுடன், கிருமித் தொற்றும் ஏற்பட்டிருந்தால் கடுமையான காய்ச்சல் நடுக்கத்துடன் வருவதுண்டு. ஒரு சிலருக்கு சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் கழிவதுடன், கண்களிலும் மஞ்சள் நிறம் படரலாம்.
பித்தக் கற்கள் தோன்றக் காரணம் என்ன?
பித்தக் கற்கள் ஏன் தோன்றுகின்றன என்பதற்கு சரியான காரணங்கள் தெரியாது. ஆயினும் பல விடயங்களைச் சந்தேகிக்கிறார்கள்.
ஒருவரது பித்த நீரில் கொலஸ்டரோல் அளவானது வழமையை விட அதிகம் இருந்தால் பித்தக் கற்கள் தோன்றலாம். பொதுவாக ஈரலானது எமது குருதியில் உள்ள கொலஸ்டரோலை உறிஞ்சி பித்த நீர் ஊடாக வெளியேற்றுகிறது. அவ்வாறு பித்தத்தில் கலக்கும் கொலஸ்டரோலின் அளவு வழமைபோலிருந்தால் அது பித்த நீரில் கரைந்து சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் அதன் செறிவு அதிகமாக இருந்தால் கட்டிபட்டு கற்களாக மாறுகிறது என்கிறார்கள்.
அதேபோல நாளந்தம் சிதைவடையும் செங்குருதிக் கலங்களை ஈரல் பிரித்து பிலிரூபின் (டீடைசைரடிin) ஆக வெளியேற்றுகிறது. சில நோய்கள் காரணமாக (ஈரல்சிதைவு, குருதி நோய்கள், பித்க்குழாயில் கிருமித் தொற்று) செங்குருதிக் கலங்கள் அதிகளவில் சிதைந்தால் அதன் செறிவு பித்த நீரில் அதிகரிக்கும். அதனாலும் கற்கள் தோன்றலாம்.
அதேபோல பித்தப் பையால் இருக்கும் பித்த நீரை உணவுக் கால்வாயிற்குள் வெளியேற்றும் பொறிமுறையில் (கல் கட்டி போன்றவற்றால்) தடங்களல் ஏற்பட்டாலும் பித்தக் கற்கள் தோன்றும் வாய்ப்புண்டு.
கொலஸ்டரோலால் அதிகரிப்பால் தோன்றும் பித்தக் கற்கள் மஞ்சள் நிறமாகவும், பிலிருபின் அதிகரிப்பதால் உண்டாகும் கற்கள் கருமையாகவோ கடும் பிரவுண் நிறமாகவோ இருப்பதை இவ்விடத்தில் சொல்லது பொருத்தமாக இருக்கும்.
யாருக்கு வரும்
பித்தக் கற்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி துல்லியமாகக் கூறமுடியாத போதும் யார் யாருக்கு வரக் கூடும் என்பதையிட்டு கள ஆய்வுகள் சில காரணங்களைத் தெரியப்படுத்துகின்றன.
பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகப் பாதிப்படைகிறார்கள். வயதில் மூத்தவர்கள் அதாவது 60 வயதைத் தாண்டியவர்களில் அதிகம் ஏற்படுகிறது என சொல்லப்பட்ட போதும் குறைந்த வயதினரிடையேயும் தோன்றலாம்.
உணவு முறையைப் பொறுத்த வரையில் நார்ப்பொருள் குறைந்த, கொழும்பும் கொலஸ்டரோலும் அதிகமுள்ள உணவு வகைகளை உண்பவர்களிடையே தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களிடையேயும் அதிகமாகக் காண்கிறோம். அதே போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையேயும் அதிகம் காணப்படுகிறது. கரப்காலத்திலும் சாத்தியம் அதிகமாகும். நோய்கள் காரணமாகவோ அல்லது எடை குறைப்பு முயற்சியின் போது திடீரென அதிகளவு எடையைக் குறையும் போதும் தோன்றலாம்.
சிகிச்சை
‘ஓண்டும் செய்ய வேண்டாம். போசாமல் இருங்கோ’ என்று ஆரம்பத்தில் சொன்னது வேறு எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் தற்செயலாக பரிசோதனைகளின் போது கண்டுபிடிக்கபட்ட பித்தப்பை கற்கள் உள்ளவர்களுக்கு பொருந்தும். பெரும்பாலனவர்கள் அத்தகையவர்களே. ஆயினும் கடும் வலி அல்லது கிருமித் தொற்று போன்றவை ஏற்பட்டால் மேலதிக சிகிச்சை தேவைப்படும்.
பித்தப் பையை அகற்றல்
கற்களால் பிரச்சனை ஏற்படகிறது எனில் அதற்கான சிகிச்சை
பித்தப்பை அகற்றல்தான்.
‘ஏன் சலக் குழாய் கற்களை உடைத்து வெளியேற்றுவதுபோல இதையும் அகற்ற முடியாதா’ என ஓரளவு விடயம் புரிந்தவர் என்னிடம் கேள்வி எழுப்பினார். உடைத்து வெளியேற்றினாலும் இவை மீண்டும் மீண்டும் வரக் கூடியவை. என்பதால் அகற்றுவதே உசிதமானது.
அத்துடன் பித்தப் பை என்பது ஒரு அத்தியாவசிய உறுப்பு அல்ல. அது அகற்றப்பட்டாலும் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வாழ முடியும். வழமையாக பித்த நீரானது பித்தப் பையில் சேகரித்து வைக்கப்பட்டு உணவுக் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. ஆனால் பித்தப்பையை அகற்றியவர்களில் அது ஈரலிலிருந்து நேரடியாக உணவுக் கால்வாயை அடைகிறது. இதனால் சிக்கல்கள் எதுவும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் பித்தப் பையை அகற்றிய சில காலத்திற்கு மலம் சற்று இளக்கமாக வெளியேறும். அப் பிரச்சனையும் சிலகாலத்தில் தானாகவே மாறிவிடும்.
மருந்துகள் உதவுமா?
‘பித்தக் கற்களை கரைக்க முடியும்’ எனப் பத்திரிகைகளில் இயற்கை வைத்தியர்கள் விளம்பரம் போடுகிறார்களே. ..’ என ஆரம்பி;த்தார். ‘ஆங்கில மருத்துவத்திலும் கரைக்க வழி இருக்கு. ஆனால் அதன் மூலம் கரைக்க மாதக்கணக்கில் காலம் செலவாகும். உணவுக் கட்டுப்பாடுகளும் அதிகம். மருந்துகளால் கரையாத கற்களும் உண்டு. எனவேதான் சத்திரசிகிச்சையை சிபார்ச்சு செய்கிறார்கள். அதுவும் கட்டாயம் தேவையானவர்களுக்கு மாத்திரம்’ என விளக்கினேன்.
பித்தக் கற்கள் தோன்றாமல் தடுக்க முடியுமா?
பித்தக் கற்கள் ஏன் வருகின்றன என்பது பற்றி தெளிவான முடிவுகள் இல்லை. இருந்தபோதும் சில நாளாந்த வாழ்க்கை முறை நடவடிக்கைக் கடைப்பிடிப்பதால் இத்தகைய கற்கள் தோன்றுவதற்கான சாத்தியத்தைக் குறைக்க முடியும்.
உணவுகளை வேளை தவறாமல் உண்ணுங்கள். நீண்ட நேரம் பட்டினி கிடப்பதும், உணவுகளை சில வேளைகளில் தவிர்ப்பதும் உபவாசம் இருப்பதும் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
எடை குறைக்கும் முயற்சியில் இறங்கினால் அதைப் படிப்படியாகச் செய்யுங்கள். வாரத்தில் ஒரு கிலோவிற்கு அதிகம் குறைப்பது கூடாது.
உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையைப் பேணுங்கள். கலோரி அளவு குறைந்த, நார்ப்பொருள் அதிகமான போசாக்கான உணவு முறையும், தினசரி உடற் பயிற்சியும் எடையைப் பேண உதவும்.
‘என்ன நோயைச் சொன்னாலும் இந்த டொக்டர்மார் உடற் பயிற்சி செய்யுங்கள், எடையைக் குறையுங்கள், கொழுப்பைக் குறையுங்கள் என்றுதான் சொல்லுகினம்’ எனப் புறுபுறுக்கிறீர்களா? என்ன செய்வது உடல் ஆரோக்கியத்தைப் பேண இவற்றைத் தவிர வேறு நல்ல வழிகள் கிடையாதுதான்.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.00.0.0