Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பிரன்சுத் திரைப்படம்’ Category

>

 சோகத்தில் உழலும் வாழ்வுதான் இல்லத் தலைவியெனப் போற்றப்படும் பெண்களுக்கு சபிக்கப்பட்டதா?
இல்லக் கடமைகள் அனைத்தும் அவள் தலையில்தானா?

பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, அவர்களை வளர்ப்பது, சமைப்பது, துணிகள் துவைப்பது, கூட்டுவது துப்பரவு செய்வது என, என்றுமே மீளமுடியாத சுழல் சக்கரத்தில் மாட்டியிருக்கிறாளா?

கணவனை மகிழ்ச்சிப்படுத்துவதும்
அவன் விரும்பும்போது அவனோடு படுத்தெழும்புவதும் அவளது மற்றொரு கடமை என்று சொல்லலாமா?
இவை யாவற்றையும் அவள் மனம் கோணமால் செய்தபோதும், கர்ப்பமாயிருக்கும் காலத்திலும்
பாலூட்டும் நேரத்திலும் உறவு கொள்வதில் சிரமங்களும் தடங்கல்களும் ஏற்படும்போது என்னவாகிறது?
தனது இச்சைகளைத் தணித்துக் கொள்ள வேறு பெண்ணை அவன் நாடுவது என்ன நியாயம்?

இவற்றை அவள் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதானா?

தனது மனஉணர்வுகளை வெளிப்படுத்தாது, பரத்தையிடம் கணவனைச் சுமந்து சென்ற சங்ககாலப் பெண்போல அடங்கிக் கிடப்பதுதான் குடும்பப் பொறுப்புள்ள பெண்ணின் தலைவிதியா?

இது போன்ற பல கேள்விகள் என் மனத்தில் எழுந்தன. கில்லீசின் மனைவி என்ற பிரஞ்சுத் திரைப்படத்தைப் பார்த்த போது ஏற்பட்டது.

நம்பிக்கைத் துரோகங்களும், துன்பங்களும் அவளைத் துரத்திய போது அவள் பொங்கி எழவில்லை. வார்த்தைகளை அள்ளி வீசவில்லை. கண்ணீர் விட்டுக் கலங்கவும் இல்லை.
மாறாத புன்னகை அவள் முகத்தை எப்பொழுதும் அலங்கரித்தது.
மோனா லிசாவின் புன்னகை போன்றதே எலிசாவின் புன்னகையும். மௌனமாக பொதிந்தும் ஆயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தியது.

அந்தப் புன்னகை ஒரு புதிராக திரைப்படம் முழுவதும் எம்முடன் பயணித்துக் கொண்டேயிருந்தது.

எலிசாவாக நடிப்பவர் திறமையான நடிகையான Emmanuelle Devos ஆகும். The beat that my heat skipped, Read my Lips  மற்றும் Kings and Queen போன்ற படங்கள் ஊடாகப் பரிச்சமானவர்.

துயரங்களை அடக்கிக் கட்டுப்படுத்தி, புன்னகை முலாம் பூசிய அவளது உளநெருக்கீடும் மனத்துயரும் ஒரு சில தடவைகள் கட்டு மீறி வெடித்துச் சிதறி வெளிப்படவே செய்கிறது. மிக நுட்பமாக அவளது உணர்வை காட்சிப்படுத்த நெறியாளர் எடுத்த யுக்தி மிகவும் வித்தியாசமானது.

அமைதியும் மென்பனியும் பூத்துக்கிடங்கும் ஒரு காலை நேரம். அவள் தனது காய்கறித் தோட்டத்தில் வேலை செய்கிறாள்.
வழமையான அமைதியுள்ளவளாக இன்றி அவசரமாகவும் ஒருவித முரட்டுத்தனத்துடனும் செயற்படுகிறாள்.
களைகளைப் பிடுங்கி அதன் வேர்களில் ஒட்டிக் கிடக்கும் மண்ணை ஆவேசமாகத் தட்டி உதறி வீசுகிறாள்.

காய்கறி செடிகளின் சொந்த மண்ணில் அதற்கே உரித்தான போஷாக்கை கள்ளமாக மறைந்து நின்று வேர்பரப்பி நின்று உறிஞ்சும் களைகளைத்தான் அவ்வாறு ஆவேசமாக பிடுங்கி அகற்றுகிறாள். மற்றொரு தடவை போட்டோ பிறேம், கோப்பை ஆகியவற்றை உடைப்பதின் ஊடாகப் புலனாகிறது.

தனக்கே சொந்தமான தனது கணவன் கில்லியை, தனது சொந்த இரத்தத்தில் பிறந்த தனது சொந்தத் தங்கையே அபகரித்துக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத ஒரு சாதுவான மனைவியால் அதைத்தான் செய்ய முடிந்தது.

கில்லிசின் மனைவி எலிஸா பொறுப்புள்ள மனைவி. அவளது கணவன் சுரங்கத் தொழிலின் கடும் வெப்பத்தில் வேலை பார்த்தபோதும் பொறுப்புள்ளவன். தனது மனைவியில் ஆறாத அன்பு கொண்டவன். வீட்டு பணிகளிலும் அவளுக்கு உதவுபவன்.

கில்லிஸ் Colvis Cornillac தனது வேலைத்தளத்திலிருந்து இரவு திரும்பும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது.
வீடு திரும்பிய அவன் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை அணைத்து, முத்தமிட்டு மெதுவாகத் துயிலெழுப்பி உறவு கொள்கிறான்.
உறவின் பின் ‘நான் உனக்கு வலியைத் தந்துவிட்டேனா?’ என்று கேட்குமளவிற்கு அவளில் அன்பும் அக்கறையும் கொண்டவனாயிருக்கிறான்.

மிகக் குறைவான வசனங்களே பேசப்படுகின்றன. பேசப்படும் ஒவ்வொன்றும் மிகவும் அத்தியாவசியமானதாகவும், கருத்தாளம் மிக்கவையாகவும் இருக்கின்றன.

உடலுறவு இப்படத்தில் குறியீடு போல மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படுகிறது.
ஆனால் அவை கிளர்ச்சி ஊட்டுவதற்காக அங்கங்கள் அனைத்தையும் புட்டுக்காட்டும் காட்சிகள் அல்ல.
பெரும்பாலும் முகங்களும் கைகளுமே வெளியே தெரிகின்றன.
தடித்த போர்வையுள் மூடுண்டு கிடக்கும் உடல்களின் அசைவு அவ்வப்போது தெரிகிறது.

மூன்று தடவைகள் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் அத் தம்பதிகளிடையே வெவ்வேறு நேரங்களில் நிலவும் உறவின் பரிணாமத்தை தராசுபோல அளந்து உணர்த்துபவையாக இருக்கின்றன. அன்பின் அன்னியோன்யம், நெருடல், விரிசல்  ஆகியன தெளிவாக தெரிகின்றன.

சதா புன்முறுவல் மாறாத முகத்துடன் இருந்தாலும் மனதிற்குள் பொங்கியெழும் மாறுபட்ட உணர்வுகளை டிவோசின் (எலிசா) முகபாவங்கள் அற்புதமாகக் வெளிப்படுத்துகின்றன.

உறவு மிக நெருக்கமாக இருந்தபோது காட்டப்படும் முதலாவது காட்சியின், அக முக நிறைவு இரண்டாவதில் இருக்கவில்லை.
மூன்றாவதில் அவனது சற்று முரட்டுத்தனமான குதப்புணர்ச்சி அவளுக்கு வேதனையளித்தாலும் மாறாத புன்னகையுடன் சகிப்பது புரிகிறது.

உடல் உறவால் மட்டுமின்றி சாதாரணமாகக் கட்டியணைக்கும்போது கைகளின் நிலை, முத்தமிடும் போது உற்சாகமாக முத்தமிடுவது, அன்றி கடமைபோல ஏனோதானோ என முத்தமிடுவது, வீட்டை விட்டு வெளியேறும் போது கதவை மூடுவதில் உள்ள வேறுபாடுகள் ஊடாகவும் அவர்கள் குடும்ப உறவின் அன்னியோன்யமும் விரிசலும் எமக்கு தெளிவாகின்றன.

நாலாவது தடவை படுக்கையில் இருக்கும்போது, எலிசா அவனை அணைத்து உறவுக்கான சமிக்கையை விடுத்தபோது அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்துவிடுகிறான்.
அவளது வசீகரமும், அணைப்பும் இப்பொழுது அவனது மனத்திலில்லை. அவனது மனத்தில் இப்பொழுது வேறு யாரோ குடிபுகுந்து இருக்கிறாள் அல்லது புதியவள் பற்றிய நினைவுகளால் அலைக்கழிந்து கொண்டிருக்கிறான் என்பதுதானே காரணமாக இருக்க முடியும்.

மன உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைத் தேடாது, நெகிழ்ச்சியான சம்பவங்கள் ஊடாக மனதில் அப்பிப் பிடிக்கச் செய்யும் வண்ணம், நுட்பமாக படத்தை நெறியாள்கை செய்திருப்பவர் Frederic Fonteyne திறமான நெறியாள்கை. ‘A Poronograpic Affair’  என்ற படத்தை நெறியாள்கை செய்திருக்கிறார் என அறிகிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை.

அவசியத்திற்கு அப்பால் சிறு உரையாடல்கள் கூட இல்லை.
ஆனால் மௌனம் மொழியாகி எம்மோடு பேசுகிறது.
உணர்வுகளில் ஊடுறுவி அலைக்கழிக்கிறது.
அவளது மௌனம் பேசாப் பொருளெல்லாம் பேசுகின்றன.

உண்மையில் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருப்பது எலிசா என்ற அவளது பாத்திரம்.
ஆனால் அதற்கு அப்பால் அப் பாத்திரம் எம் மனத்தைவிட்டு அகலாதிருப்பதற்குக் காரணம் இம்மானுவல் டிவோஸ் என்ற அந்த நடிகையின் அபாரமான நடிப்பு.
அவளது நடிப்பின் வெற்றிக்கு முக்கிய பலமாக இருப்பது அவளது மர்மம் பொதிந்த புன்னகையும், விழியை மொழியாக்கிய அகன்ற விழிகளும்தான்.

கதை பிரான்சு தேசத்தின் குடியிருப்பு ஒன்றில் 1930 நடப்பதாக இருக்கிறது. 1937ல் பெல்ஜியம் நாட்டின் Madeleine Bourdouxhe எழுதிய நாவலான La Femme de Gilles தழுவியது. உலக மகா யுத்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முந்திய காலம். திரைப்படத்தின் ஒரு கட்டத்தின் பின்னணியில், பயிற்சிக்காக நகர்ந்து செல்லும் சிறு இராணுவ அணியால் இச் செய்தி புலப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் அவ்வாறு இருக்க முடியாது.

தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் தாரைவார்த்து  மனைவியாக நீடிக்க வேண்டும், தன்னை விட்டு தள்ளிச் செல்லும் அவனை மீட்டெடுக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்து செயற்படுவது, ஏற்க முடியாத பத்தாம் பசலிக் கொள்கையாக தெரியலாம்.

அவனது இன்றைய காதலியும் தனது தங்கையுமான விக்டோரியா வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருக்கிறாளா என்பதை அறிய அவனுக்காக வேவு பார்க்கச் செல்வதும் நம்ப முடியாத கற்பனைச் சம்பவமாக தெரியலாம்.

அவற்றை இன்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். ஆயினும் இக்கதை கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் நடக்கிறது. அத்துடன் அது பிரான்சின் ஒரு கிராமப் பகுதியாகவும் இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண்ணால் அவ்வாறுதான் வாழ முடிந்தது. அவளுக்கான சுதந்திரம் அந்தளவுதான் இருந்தது.
அது அவர்களின் சின்ன உலகம். அதற்கு அப்பால் அவர்களது பார்வை நீண்டிருக்கவில்லை.
அது பற்றிச் சிந்திக்கவும் தெரியாது.
அவற்றைத் தாண்டி சாகசப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய துணிச்சலும் அப் பெண்களுக்கு இருக்கவில்லை.

தனக்காக தனது மகிழ்ச்சிக்காக அவள் வேவு பார்க்க முன்வரும்போது, அவள் எவ்வளவு தூரம் தன்வாழ்வை விட்டுக் கொடுக்கிறாள், தன் வாழ்வையும் உணர்வுகளையும் தியாகம் பண்ணுகிறாள் என்பதைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவனாக அந்த ஆண்மகன் இருக்கிறான்.
சபல புத்தியும் சுயநலமனப்பாங்கும் மேலோங்கும் போது பகுத்தறிவு குழிதோண்டிப் புதையலுறுகிறது.

அவன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்கிறான் என்பதை உணர்ந்தவுடன் அவளுக்கு கலந்தாலோசிக்க யாரும் இருக்கவில்லை. ஆறுதல் சொல்லவும் நாதியில்லை. மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்தி தனது குடும்ப கௌரவத்தை இழக்கவும் முடியாது.

இந்த நிலையில் அவளுக்கு ஆலோசனை வழங்க, நெறிப்படுத்த இருந்தது ஒரே ஒரு இடம்தான். அதுதான் தேவாலயம். அங்கு பிரார்தனை செய்து மனமாற நினைக்கிறாள். சந்தடி மிகுந்த சூழலில் அவளால் முடியவில்லை.

பாதிரியாரிடம் செல்கிறாள். பாவமன்னிப்பு கேட்க.

தான் செய்யாத தவறுக்காக பாவமன்னிப்பு கேட்கிறாள். அபத்தமாகத் தெரிகிறதா. ஆனால் அதுதான் அவர்களின் நிஜ வாழ்வு.

தட்டுத் தடுமாறி வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுகிறாள்.

“எனது கணவன் எனது தங்கையுடன் தொடர்பு வைத்திருக்கிறான். ஆனால்… என்னால் எதிர்த்துப் பேச முடியவில்லை, அப்படிப் பேசினால் அவர் என்னை விட்டுப் போய்விடுவார். எனவே என்னால் எதுவுமே…”

அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. எதைக் கோருவது என்ற தெளிவும் இல்லை. சற்றுத் தாமதித்து வார்த்தைகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து “எனக்கு உதவி வேண்டும்… என்ன செய்வதென்று தெரியவில்லை” என்கிறாள்.

பாதிரியாரை நாம் காணவில்லை. அவரது குரல் மட்டுமே கேட்கிறது. ஆனால் அது அவளது துன்பத்தைக் கேட்டு இரங்கும் குரல் அல்ல. ஆதரவு தரும் தொனியும் இல்லை. பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாத ஒரு ஆணின் உணர்ச்சியற்ற சடக் குரலாக ஒலிக்கிறது.

“இறைவனால் உனக்கு அளிக்கபட்ட சோதனை அது. இறைவனுக்கு எதிராக எதுவும் செய்வதைத் தவிர்த்துக் கொள்.” என்று சொல்லிய அவர் தொடர்ந்து,

“உனக்கான தண்டனையைப் பொறுத்தவரை நீ பத்துத் தடவைகள் ஜெபம் செய்வாயாக” என நிறைவு செய்கிறார்.

அவள் செய்த பாவத்திற்குத் தண்டனை ஜபம். அதன் மூலம் நிலமை மாறிவிடும் என்று சொல்கிறார் என்றே நாம் புரிந்த கொள்ள வேண்டியிருக்கிறது.

பெண்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு ஆண்தானே  அந்தப் பாதிரியாரும்.
அவருக்கும் தேர்வு இல்லை.
தான் கற்றதை, தனக்குப் போதிக்கப்பட்டதை, புத்தகத்தில் உள்ளதைச் சொல்லிப் போகிறார்.

ஆனால் அவள் செய்த பாவம் என்ன என்று அவளுக்கும் புரியவில்லை. எங்களுக்கும் தெளிவில்லை.

அதன் பின் அவள் மனதைத் திடமாக்கிக் கொள்கிறாள். இயலாமை மேவ, அந்த வாழ்வுக்குள் சங்கமிக்க முயல்கிறாள். தான், தனது உணர்வு, தன்மானம் இவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டி முதுகில் போட்டுவிடுகிறாள்.

எலிசாவாக என்றுமே அவள் வாழ முடியாது.
அவளுக்கு மட்டுமல்ல!

அப்படி வாழ்வதற்கான சாத்தியம் எந்த ஒரு பெண்ணுக்கும் அந்தச் சமூகத்தில் கிடையாது.
அவள் எலிசா அல்ல.
அவளுக்கென்று எந்தவொரு தனி அடையாளமும் கிடையாது.
அவள் கில்லீசின் மனைவி.
அவ்வளவுதான்.

அதைத்தானே படத்தின் பெயரான Gille’s Wife சொல்கிறது.

முடிவு இன்னும் சோகமானது. அதைச் சொல்வதற்கான வார்த்தைகளைக் கோர்க்க முடியாது மனது சோர்ந்து தவிக்கிறது. படம் முடிந்த பின்னும் BMICH  இன் தியேட்டரிலிருந்து எழ முடியவில்லை. கனத்த மனது கதிரைக்குள் முடங்கிக் கிடந்து சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருக்கவே தூண்டியது.

பிரஞ்சுத் தூதுவராலயம் சார்பில் நடந்த Bonjour Cinema திரைப்பட விழாவில் பார்த்த படம். நல்ல படத்தைக் காட்சிப்படுத்திய அவர்களுக்கு நன்றி.

அந்த முடிவுக் காட்சி துயரம் மிகுந்ததாக இருந்தபோதும் கலைநேர்த்தியில் மிகவும் அற்புதமாக இருந்தது.
மிக வித்தியாசமான கோணத்தில் படமாக்கியுள்ளார்.

தோய்த்த துணிகள் உலருவதற்காக மாடிவீட்டில் கட்டப்பட்ட கொடிகள். கள்ளம் கபடமற்ற வெள்ளை மனம் போன்று அதில் அவள் விரித்த துணிகள். தேவதைகளின் சிறகுகள் போல காற்றில் அவை அசைந்தாடும் லாவண்யம். திறந்து கிடக்கும் ஜன்னல்.
அதற்கு அப்பால் எல்லையற்று விரிந்து கிடக்கும் நீலவானம்.
தேவ லோகத்திற்கான பயணத்திற்கு வா வா என அழைப்பது போலிருந்தது.

துயர் சுமந்த அந்தப் பெண்ணின் மௌன மொழியிலான மர்மப் புன்னகையின் புதிர் எங்களையும் சூழ்ந்து கொள்கிறது.

இலங்கையில் திடையிடப்பட்டதாகத் தெரியவில்லை. டிவிடியில் கிடைத்தால் உங்களுக்கும் பார்க்கக் கிடைக்கும்.

எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி வீரகேசரி வாரவெளியீடு 18.04.2010 லும் பதிவுகள் இணைய இதழிலும் வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்.
0.0.0.0.0.0

Read Full Post »

>அண்மையில் ஒரு வித்தியாசமான திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. ஞாயிறு 22.3.2009ல் கொழும்பு பண்டாரநாயக நினைவு சர்வதேச மண்டபத்தின் தியேட்டரில், பிரன்சுத் திரைப்பட விழாவிற்காகக் காட்டப்பட்ட Sans Maison .. படமே பார்க்கக் கிடைத்தது. இளம் கலைஞரான Maryanne Zehil நெறிப்படுத்திய திரைப்படம். கனடாவில் தயாரிக்கப்பட்ட பிரென்சு மொழித் திடைப்படம் இது. ஆங்கிலத் தலைப்புகள் இடப்பட்டிருந்தது.போரில் சிக்கியிருந்த நாடான லெபனானைச் சார்ந்த பெண் சனா. இவள் கனடாவின் மொன்றியலுக்கு புலம் பெயர்கிறாள். தான் பிறந்த தாய் நாட்டை விட்டு, தனது சொந்த பந்தங்களைத் துறந்து, தாய் என்ற கடமையையும் புறக்கணித்து, விட்டுச் செல்கிறாள். தனது 4 வயதுக் குழந்தையை தனது தாயுடன் விட்டு விட்டுச் செல்கிறாள்.

சனா ஏன் புலம் பெயர்கிறாள். போரின் அச்சுறதலா? உயிரின் மீதான ஆசையா? இல்லை!

நெருக்கடிகள் நிறைந்த வாழ்விலிருந்து விடுபட வேண்டும் என்பதே அவளது நோக்கம். ஆனால் இது வேறு வகையான விடுபடுதல். குண்டு வீச்சுகள், துப்பாக்கிச் சூடுகள், ஆகாயத் தாக்குதல்கள், கடத்தல், கொலை இவற்றிலிருந்து தப்புவது அல்ல அவளது குறிக்கோள். லெபனானின் நீண்ட பாரம்பரியம் மிக்க இறுக்கமான கலாசாரம், பெண்கள் மீதான ஒடுக்குமுறை, சமூகக் கட்டுப்பாடுகள் இவற்றிலிருந்து தப்ப வேண்டும் என்பதே அவளது ஒரே நோக்கம்.

கனடாவில் அவளுக்கு எந்தவித தடைகளும் கிடையாது. விரும்பிய தொழிலைத் தேர்ந்து கொள்ளலாம்.(புலம்பெயர்தல் விடயம் சார்ந்த புகழ் பெற்ற சட்டத்தரணி ஆகிறாள்.) புதிய பூமியில் தனது நண்பர்களையும் உறவுகளையும் தானே நிர்ணயிக்கும் உரிமை அவளுக்கு இப்பொழுது கிட்டுகிறது. மகிழ்ச்சியோடு திருப்தியாக வாழ்கிறாள். ஆனால் குற்ற உணர்வு, மனதை உறுத்திக் கொண்டிருக்கும் வலி ஆகியவை இடையிடையே தலைதூக்க, அவற்றிலிருந்து விடுபட தனது பழைய வாழ்வின் நினைவுகளை அடியோடு எரித்துவிட முயல்கிறாள்.

ஆனாலும் ஏதோ ஒரு உந்துதலில் 17 வருடங்களுக்குப் பின்னர் தனது மகளை தன்னிடம் கனடாவிற்கு அழைக்கிறாள். இதன் பின்னர்தான் முக்கியமான கதை நகர்கிறது.

கட்டுபாடுகளிலிருந்து விடுபட்டு எல்லையற்ற சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தாய்க்கும், லெபனானில் பிறந்து அங்கேயே வாழ்ந்து, அதன் பாரம்பரிய கலாசார, பழக்கவழக்கங்களை மட்டுமே அறிந்து அதிலேயே முழ்கியிருக்கும் மகளான துனியாவிற்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள், வேறுபாடான உணர்வுகள், மன உரசல்கள் எனக் காட்சிகள் நகர்கின்றன.

தாய் வீட்டிற்கு வந்த தானியா தனது பயணப் பைகளை வைத்துவிட்டு உடை மாற்றுகிறாள். அவளது வாளிப்பான தொடைகளை, நேர்த்தியான உடல் வளைவுகள் என ஒவ்வொன்றாக ரசனையோடு பார்க்கிறாள். மகளின் கழுத்தின் இடது பக்கத்தில் ஒரு தழும்பு இருக்கிறது. அதைப் பற்றி விசாரிக்கிறாள். குண்டு வெடிப்பின் போது பட்ட காயத்தின் தழும்பு என மகள் சொல்கிறாள். “அது கூட ஏதோ ஒரு விதத்தில் உன் உடலுக்கு கவர்ச்சியைக் கொடுக்கிறது” என்கிறாள் சனா.

குண்டு வெடிப்பு, காயம் என்பன போர் நடக்கும் நாட்டிலிருப்பவர்கள் நிதம் காண்பது, அதனால் பயமும் ஊட்டக் கூடியது. சிலருக்கு நாளாந்தம் பார்த்து மனம் மரத்துவிடுவதும் உண்டு. ஆனால் இவற்றிலிருந்து விடுபட்ட சனாவிற்கு அந்தத் தழும்பிலும் அழகுதான் தெரிகிறது. ஆம் அவளது வாழ்வு ரசனையும் இன்பமும் மட்டுமே கொண்டது.

அவள் எவ்வளவு பாக்கியம் செய்தவள். இதனைப் பார்த்தபோது எனக்கு ஏக்கம்தான் வந்தது. போரற்ற அமைதியான வாழ்வு எமக்கு எப்போதாவது கிடைக்குமா. இழப்புகளையும், மரணங்களையும் பார்க்காது, கேட்காது, பேசாதிருக்கும் வாழ்வு என்றாவது சாத்தியமா?

இது என் மன உழைச்சல். படம் அதைப்பற்றிப் பேசவே இல்லை.

இன்னொரு காட்சி. துனியா நீர்த்தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது சோப் நுரைகளுடாத் தெரியும் மகளது குவிந்த மார்புகளையும் பார்த்துப் பூரிக்கிறாள். தனது மகளின் அழகில் பெருமையுறுகிறாள். இவற்றையெல்லாம் தனது தாயே பார்த்துக் கொண்டிருப்பது மகளுக்கு இக்கட்டாக இருக்கிறது. அவள் வளர்ந்த சூழலில் இது கேவலமானது, அசிங்கமானது.

ஆனால் தாயின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. அழகு, கேளிக்கை. பொழுதுபோக்கு, உல்லாசம், ஆட்டம், பாட்டம் என நகர்வது. சிந்தனைச் சுதந்திரம் கொண்டது. ஒழுக்கம் பற்றிய அளவுகோல்கள் விரிவானது. எனவே தாய் இன்னும் ஒரு படி மேலே சென்று “உனது போய் பிரண்ட் உன் அழகு பற்றி என்ன சொன்னான்” எனச் வெகு சாதரணமாகக் கேட்கிறாள்.

இத்தகைய பேச்சால் திடுக்கிட்ட மகள்

“எனக்கு போய் பிரண்ட் கிடையாது” என சினத்தோடு வெடுக்கெனச் சொல்கிறாள்.

“ஓகோ! அப்படியானால் உனக்கு பெண்கள் மேல்தான் பிடித்தமா” எனக் கேட்கிறாள்.

ஓரினப் புணர்ச்சி பற்றிய நாசூக்கான கேள்வி. தாயைப் பொறுத்தவரையில் அது கூடத் தவறானது அல்ல. இது மகளை மேலும் அதிர்சிக்குள்ளாக்குகிறது. சினமூட்டுகிறது.

வேறொரு சம்பவம். ஒரு பார்ட்டி நடக்கிறது. தாயின் ஆண், பெண் நண்பர்களுடன். மகளும் கலந்து கொள்கிறாள். அவர்களது வெளிப்படையான பாலியல் பேச்சுக்களும் செய்கைகளும் மகளுக்கு பிடிக்கவில்லை. மற்றவர்கள் மனம் புண்படும்படியாக வார்தைகளை உதிர்த்து விடுகிறாள். மற்றவர்களுடன் பண்பாக நடக்கவில்லை எனத் தாய் கண்டித்தபோது

“நாளுக்கு ஒருவனைக் கட்டிப்பிடிப்பதும், குலாவுவதும், கூடப் படுத்து எழும்புவதும்தான் நாகரீகமா”

என வெடுக்கெனக் கேட்கிறாள்.

அம்மா முகமும் கூட இருந்தவர்கள் முகமும் கறுத்துவிடுகிறது. நறுக்கெனத் தெறிக்கும் உரையாடல்கள் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

ஆம் தாய்க்கும் மகளுக்கும் இடையே ஒரு இணைக்க முடியாத பாரிய இடைவெளி இருக்கிறது. நிரப்பவே முடியாத இடைவெளி. பொறுக்க முடியாத துனியா தனது ஊருக்கு திரும்பிவிடுகிறாள்.

ஆனாலும் கனடா வாழ்க்கை அவளிலும் சில சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. அவள் அங்கு பாட்டியுடன் மீண்டும் வாழும்போது ஒரு முரண்பாடு. பாட்டியுடன் காரமான வார்த்தையாடல் வெடிக்கிறது. இவளின் பேச்சைப் பொறுக்க முடியாத பாட்டி சட்டென முகத்தில் அறைந்துவிடுகிறாள். பின் மனம் நொந்து அரவணைக்கிறாள். ஆனால் தான் வாழும் கலாசரத்தின் இறுங்குப் பிடியை துனியாவும் சற்று உணர்ந்து கொள்வதை இக் காட்சி மிக நாசூக்கக் காட்டுகிறது.

இதற்கு முன்பே கனடாவில் இருக்கும் போது தாயிடமிருந்து மனதால் விலகும் நேரத்தில் அங்கு கிட்டும் ஒரு நண்பி. அவள் வீட்டில் ஒரு சந்திப்பில் கலந்து கொள்கிறாள். மதுவும் அருந்துகிறாள். நடனமும் ஆடுகிறாள். சற்று அதிகமாக மது அருந்திய நிலையில் தனது மேல் சட்டையைக் கழற்றி எறிகிறாள். சற்று போதை ஏற தனது மார்புக் கச்சையையும் கழற்ற முற்படுகிறாள். நண்பி தடுத்து விடுகிறாள்.

எத்தகைய கட்டுப்பாடான பண்பாட்டுக் கோலத்திலிருந்து வந்தாலும் மனித மனத்தின் அடி மூலையில் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சுதந்திரமாக மிருகங்கள் போல வாழும் இச்சை ஒளிந்திருப்பதை இக் காட்சி காட்ட முயல்கிறதா?

பாட்டி இறந்துவிட லெபனானக்கு சனா வருகிறாள். மறந்துபோன தனது பழைய வாழ்வின் பக்கங்களைப் புரட்ட முடிகிறது. அவளது கணவன் பற்றியும் மேலோட்டமாக அறிய முடிகிறது. ஞாபகங்கள் வருகின்றன. அதற்கு மேலாக அங்கு தாய்க்கு தினமும் பழம் கொண்டு வரும் தோட்டக்காரனை சந்திக்க நேர்கிறது.

அத் தேசத்தினது கலாசாரத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காதலால் தனது தாயின் உணர்வுகளும் அடக்கப்பட்டு திணறடிக்கப்பட்டதை இத் தருணத்தில் சனாவினால் உணர முடிகிறது. பெண்களின் உணர்வுகள் எப்பொழுதுமே ஆண் மேலாதிக்க சமுதாயத்தால் அடக்கப்படவே செய்கிறது.

சனா, அவளது தாய், மகளான துனியா ஆகிய மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்வு பற்றிய படமாயினும் இது தலைமுறை இடைவெளி பற்றியது அல்ல. பெண் சாரந்த கலாசார, பண்பாட்டு முரண்பாடுகள் பற்றியது.

இந்தப் பெண்கள் மூவருமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். துனியாவும், பாட்டியும் கட்டுப்பாடுகளை ஏற்று வாழ்கிறார்கள். அடங்கிப் போகிறார்கள். அதற்குள்ளேயே நிறைவு காணவும் முணல்கிறார்கள்.

தாய் சனா அடங்க மறுக்கிறாள். அவ்வாழ்வைப் புறக்கணித்து விடுபட ஓடுகிறாள். மற்றவர் பார்வையில் புரட்சி செய்கிறாள. அதனால் துடுக்குத்தனமானவள் எனப் பெயர் பெறுகிறாள். ஆனால் குற்ற உணர்வினால் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முயல்கிறாள். முடியவில்லை. மகளை அவளது போக்கில் விட்டுவிட்டு தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு மீளுகிறாள்.

அவர்களது உணர்வுகளை விமர்சனம் செய்யாது, நிகழ்வுகளை மட்டும் வெளிப்டையாகக் காட்டி எம்மைச் சிந்திக்க வைக்கிறது திரைப்படம்.

எமது தமிழ்ச் சூழலில், கற்பு, தாய்மை, தெய்வாம்சம் போன்ற துதி வார்த்தைகளால் பெண்கள் நயமாக அடக்கப்படுகிறார்கள். மாசத்துடக்கு, மாதவிலக்கு, பேற்றுத் தீட்டு போன்ற வார்தைகளால் இழிமைப்படுகிறாள். ஒதுக்கி வைக்கப்படுகிறாள். வாழ்வின் இயற்கை அம்சமான மாதக் குருதிப் போக்கு நேரத்தில் கோவிலுக்குள் போகக் கூடாது, சமய மற்றும் புனித நிகழ்வுகளில் பங்கு பற்றக் கூடாது என்பது எவ்வளவு பாரபட்சம். அப்படியானால் ஆணுக்கு லிகிதம் வெளியேறுவதும் துடக்கு அல்லவா?

இன்னும் நாளாந்தம் சில்லறைத் தேவைகளுக்கும் சுதந்திரம் இன்றி கலாசாரச் சிறைக்குள் திணறலுக்கு ஆளாகிறார்கள் என்பதை யோசிக்க வைக்கிறது. பெண்களுக்கான பொருளாதார சுதந்திரமும் ஏட்டில் மட்டுமே உள்ளது. “உங்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது ஸ்கான் பண்ண வேண்டும்” என மருத்துவ நிலையத்தில் ஒரு பெண்ணிடம் சொன்னால் அவளிடமிருந்து உடனடியாக மறுமொழி வராது. கணவன் முகத்தைப் பார்ப்பாள். அவளது தேவைக்கும் அவனின் அனுமதி தேவையாக இருக்கிறது. எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. இவ்வளவுதான் அவளுக்கு எமது சமூகத்தில் உள்ள சுதந்திரம். ஆனால் மறுபறத்தில் பத்தினித் தெய்வம் எனப் பூசிப்போம்.

வாய்ப் புணர்தல் (Oral Sex) காட்டப்படுவதால் சிறுவர்களுக்கு ஏற்றது அல்ல.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தேசத்திலிருந்து புலம் பெயர்தல் இலங்கைத் தமிழர்களுக்கு புதியதல்ல. கடந்த 2-3 தசாப்தங்களாக இது நிதமும் நடைபெறுகிறது. புலம் பெயர்தலால் கிடைக்கும் உயிர்ப் பாதுகாப்பு, அதனால் கிடைக்கும் நிம்மதி, பொருளாதார நன்மைகள் யாவும் அறிந்ததே. நெருக்கடிகள் நிறைந்த வாழ்விலிருந்து நிம்மதியான சூழலுக்கு நகர்வது எத்தகைய ஆறுதலைத் தரும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆயினும் புலம்பெயர்தலின் மற்றொரு பக்கமும் உண்டென்பதை இப்படம் உணர்த்துகிறது.

உண்மையில் இந்த திரைப்படத்தை நீங்கள் எதற்காகப் பார்க்க வேண்டும்?

அதில் கிடைக்கும் அழகான கட்புலக் காட்சிகளுக்கு மேலாக அது எமது மனத்தில் எழுப்பும் சலனங்களுக்காகப் பார்க்க வேண்டிய படம். கலை, கலாசாரம், பண்பாடு பற்றிய எமது நிலைப்பாடுகளை மீள்பார்வை செய்யத் தூண்டுகிறது. அந்த விதத்தில் மிகவும் நிறைவான படம்.

துனியாவாக நடிக்கும் ரெனி தோமஸின் Renée Thomas கடுப்பான முகமும், சுட்டெரிக்கும், வார்தைகளும் பல இடங்களில் பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றன. அதுவே அவரது வெற்றியாகும்.

தாய் சனாவாக Louise Portal வருகிறார். மிகவும் பண்பட்ட நடிப்பு

ஆழ்துயரம் கொண்ட, சிந்தனைகளை விதைக்கும் கதையை நம்பத்தக்க வகையில் மனத்தைத் தொடும் வண்ணம் படமாக்கிய நெறியாளர் பாராட்டுக்குரியவர். கனடாவில் வாழும் லெபெனிய பெண் என்பதால்தான் இத்தகைய உயிரோட்டம் கொண்ட படைப்பைத் தர முடிந்திருக்கிறது.

இப் படத்தின கதையைப் பற்றிச் சொல்வதாயின் “இப் படத்துடன் நான் முழுமையாக ஒன்றிவிட்டேன். ஏனெனில் அது ஒரு உணர்ச்சிகரமான அற்புதமான கதை. ஒரு கணம் அது என் கதையோ எனவும் எண்ணினேன். ஆயினும் இது என் கதை மட்டுமல்ல ஒவ்வொரு அரபுப் பெண்ணின் கதையும் கூட என்பதை உணர்ந்தேன்.” ‘ (“Then I have realized that this film was not only the story of my life, but as well the story of each and every Arab woman…”) என்கிறார் ஒரு பெண்மணி இணையத்தில் ( http://www.imdb.com/title/tt0810822/usercomments).

அரபுப் பெண்களின் கதை மட்டுமல்ல ஒடுக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் கதையும் கூட என்பேன்.

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »