Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பிரஸர்’ Category

“சொன்ன சொல் மாறிவிட்டீர்கள்” என முகத்தில் அறையுமாப் போல அவர் குற்றம் சாட்டவில்லைத்தான். “நீங்கள் முந்திச் சொன்னது ஒன்று இன்று சொல்வது மற்றொன்று. படிச்ச நீங்களே இப்படி மாற்றிப் பேசலாமா” என்றும் கேட்கவில்லைத்தான்.

ஆனால் இது நீதி அநீதி, சரி பிழை போன்றவை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அறிவியல். அதிலும் முக்கியமாக வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல், அது சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, துறை சார்ந்த நிபுணர் குழவினர் எட்டிய முடிவுகளை ஒட்டிய விடயம்.

வீட்டில் எலக்ரோனிக் கருவியில் பார்த்தபோது பிரஷர் சற்று அதிகம் என்பதால் பதற்றத்துடன் என்னிடம் வந்திருந்தார் நான் பார்த்தபோதும் கிட்டத்தட்ட அதே அளவுதான். 148/90 இருந்தது.

hypertension

“பரவாயில்லை உங்கடை வயதிற்கு அவ்வளவு இருக்கலாம்” என்று சொன்னதின் பிரதிபரிப்பு இது. அவரது வயது 63 ஆகும்.

அவர் பயப்பட்டதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. நாம் மருத்துவத் தொழில் ஆரம்பித்த காலங்களில் வயதுடன் 100 க் கூட்டினால் வரும் எண்ணிக்கையின் அளவிற்கு இரத்த அழுத்தம் இருக்கலாம் என்றோம்.

பின்னர் எந்த வயதானாலும் 130/90 யைத் தாண்டக் கூடாது என்ற வரையறை வந்தது. இதையே அவர் ஞாபகத்தில் வைத்திருந்தார்.

jnc-8-dr-mansij-biswas-34-638

இப்பொழுது புதிதான வழிகாட்டல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 150/90 இருக்கலாம் என்கிறது.

உண்மைதான் மருத்துவ அறிவியல் கருத்துக்கள் கால ஓட்டத்தில் மாறுகின்றன. புதிய ஆய்வு முடிவுகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்குமாறு சிகிச்சை முறைகள் மாறவேண்டியது அவசியமாகிறது.

பிரஸர் பற்றிய Eighth Joint National Committee (JNC 8) யின் புதிய வழிகாட்டல்கள் என்ன கூறுகின்றன?

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில்

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களது பிரஷர் ஆனது 150/90 மேல் இருந்தால் மட்டுமே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். அதாவது மேலே உள்ள சுருக்கழுத்தம் (Systolic blood pressure – SBP )150ற்கு மேல் இருந்தால் அல்லது கீழே உள்ள விரிவழுத்தம் (Diastolic blood pressure – DBP ) 90 ற்குக் மேல் இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கபட வேண்டும்.

jnc-8-dr-mansij-biswas-29-638

சரி புதிதாகச் சிகிச்சை அளிக்கும்போது பிரஷர் குறைந்தால் அல்லது ஏற்கனவே அவர்களது பிரசரானது சிகிச்சை காரணமாக 140/90 ற்கு கீழ் குறைந்திருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இல்லை உட்கொள்ளும் மருந்தின் அளவானது அவர்களுக்கு எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது ஒத்துக்கொள்ளும் விதமாக இருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை.

அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களில்

அதேநேரம் அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது விரிவழுத்தம் ஆனது 90 ற்கு மேல் இருந்தால் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சிகிச்சை மூலம் இதை 90 அல்லது 90ற்குக் கீழ் கொண்டு வருவது அவசியமாகும்.

அதே போல அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களின் சுருக்கழுத்தமானது 140 ற்கு மேல் இருந்தால் சிகிச்சையை ஆரம்பித்து அதனை 140 அல்லது அதற்குக் கீழ் குறைக்க வேண்டும்.

நீரிழிவு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களில்

18 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கும் இதே 140/90 ற்கு மேல் இருந்தால் பிரஷருக்கான சிகிச்சை அவசியமாகும்.

new-hypertension-guidelines-40-638

நீரிழிவு நோய் உள்ளவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் 18 வயதிற்கு மேல் எந்த வயதானவராக இருந்தாலும் அவர்களது இரத்த அழுத்தமானது 140/90 ற்கு மேல் இருந்தால் சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சுருக்கழுத்தமானது 140 அல்லது அதற்குக் கீழும் விரிவழுத்தமானது 90 அல்லது அதற்குக் கீழ் குறையுமாறு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நாட்பட்ட சிறுநீரக நோயுள்ளவர்களுக்கும் (Chronic kidney disease) நீரிழிவு உள்ளவர்களது அளவுகளே பரிந்துரைக்கப்படுகிறது.

இது வரை காலமும் நீரிழிவு உள்ளவர்களது பிரஷரை 130/80 ற்கு குறைக்க வேண்டும் என்றே பெரும்பாலும் சிபார்சு செய்யப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு குறைப்பதால, பக்கவாதம், இருதய நோய்கள், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் கிடைத்ததாக ஆய்வுகள் உறுதிப்படுத்தாத காரணத்தால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கும் அதே 140/90 ல் கட்டுப்படுத்துவது போதுமானது என்று சொல்கிறார்கள்.

சிகிச்சை முறை

நான்கு வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன ((thiazide-type diuretic, CCB, ACEI, or ARB)  இவற்றில் கறுப்பு இன மக்களுக்கு முதல் இரண்டில் ஒன்றை ஆரம்ப நிலையில் உபயோகிக்கச் சிபார்சு செய்திருக்கிறார்கள்.

முதல் முதலாக ஒருவருக்கு பிரஷர் உள்ளது என கண்டறியப்பட்டதும் மருத்துவர் மேற் கூறியவற்றில் ஏதாவது ஒரு பொருத்தமான மருந்தைத் சிபார்சு செய்வார். அதை உபயோகித்து வருகையில் ஒரு மாதத்தின் பின்னர் பிரசரை மீண்டும் அளவிட்டு மருத்தின் அளவை மறு பரிசீலனை செய்வார்கள். பிரஷரானது சொல்லப்பட்ட அளவிற்கு அல்லது அதனிலும் சற்று அதிகமாகக் குறைந்திருந்தால் அதே அளவில் தொடர வேண்டும். மருந்தின் அளவைக் குறைக்கக் கூடாது.

ஆனால் பிரசரின் அளவானது விரும்பப்பட்ட அளவிற்கு ஒரு மாதத்தில் குறையவில்லை எனில் மருத்துவர் ஏற்கனவே கொடுத்த மருந்தின் அளவை அதிகரிப்பார் அல்லது இரண்டாவதாக மற்றொரு மருந்தைச் சேர்த்தும் தரக் கூடும்.

பிரஷரானது விரும்பிய அளவை எட்டும் வரை மருத்துவர் தொடர்ச்சியான கண்காணிப்பை வைத்திருப்பார். இரண்டு வகையான மருந்துகளைக் கொடுத்தும் பிரஷர் குறையவில்லை எனில் மூன்றாவது மருந்தையும் சேர்த்து உபயோகிக்கவும் நேரலாம்.

இவ்வளவையும் உங்கள் அருகில் உள்ள அரச மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் கண்காணித்து மருத்துவம் செய்வார். மூன்று மருந்துகளாலும் பிரஷரைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது போனால் மாத்திரம் ஒரு விசேட மருத்துவரை அணுகுவது உசிதமானது என சிபார்சு செய்கிறார்கள்.

சாதாரண இரத்த அழுத்தத்தை 120/80 என்பார்கள். இது 140/90 ற்கு மேலே சென்றால்தான் அதை உயர் இரத்த அழுத்தம் என்கிறோம். இதில் எந்த மாற்றத்தையும் புதிய வழிகாட்டல் செய்யவில்லை. வயதானவர்கள் மற்றும் நீரிழிவு உள்ளவர்களில் இதை எந்த அளவிற்குக் குறைக்க வேண்டும் என்பதையே புதிய வழிகாட்டல் சொல்கிறது.

மருந்துகளைப் பற்றிச் சொன்னபோதும் பிரஷரைக் குறைப்பதில் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும் என்பதை மநுப்பதற்கில்லை. ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி, எடையைச் சரியான அளவில் பேணுதல் போன்றவற்றை கடைப்பிடிப்பது அவசியம் என்பதை புதிய வழிகாட்டல்கள் உறுதிப்படுத்தவே செய்கிறது.

எனவே மருந்தைப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும்.

bp-home-remedies

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது எப்போதும் அவசியமானதே. இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் பொதுவான உடல்நலம் மேம்படுவது மாத்திரமின்றி மருந்துகளின் அளiவுகளையும் குறைக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

“மீண்டும் சொன்ன சொல் இன்னும் சில வருடங்களில் மாறலாம். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் பயனாக நோயாளிகளுக்கு நன்மை அதிகம் கிடைக்கும் பட்சத்தில்” என விடைபெறு அவர் எழுந்தபோது நான் கூறியதை ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டி மனத் தெளிவோடு அவர் புன்னகைத்தார்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

 

Read Full Post »

வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது வெள்ளைக் கோட் போடும் மருத்துவர்களுக்கு வரும் பிரஸர் வருத்தம் அல்ல. பிரஸர் எல்லோருக்கும்தான் வருகிறது. மருத்துவர்கள் என்ன விதிவிலக்கா? அவர்களுக்கும் வரலாம்தானே!

24well_whitecoat-tmagArticle மருத்துவர்கள் முக்கியமாக மேலைத் தேய மருத்துவர்கள் தங்கள் கடமை நேரத்தின் போது பாரம்பரியமாக வெள்ளைக் கோட் அணிவார்கள். அது அவர்களது தொழில் சார்ந்த அடையாளமாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. குட்டைப் பாவாடையுடனும், கட்டைக் காற்சட்டையுடனும் மருத்துவர்களை காணும் காலமாகிவிட்டது.

வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்

‘நீங்கள் என்ன கூடச் சொல்லுறீங்கள். இப்ப வரக்கு முதல்தான் வீட்டிலை டிஜிஜட்ல் மீ;ற்றரில் பார்த்தநான் 130/80 தான் இருந்தது.’ என்பார்கள்.

இது சந்தையில் பேரம் பேசும் விடயமா? மருத்துதுவர் பார்க்கும்போது 140/90 இருந்திருக்கும். அளவிடும்போது மீற்றரில் காட்டுவதைத்தானே கூற முடியும். யார் பிழையாகச் சொல்கிறார்கள். அவர் சொன்னதும் சரிதான். மருத்துவர் சொன்னதும் சரிதான். ஒருவரது பிரஸர் அல்லது இரத்த அழுத்தம் என்பது எந்த நேரமும் ஒரு அளவில் இருக்கும் என்பதில்லை. வேலை, காலநேரம், சிந்தனை, மனஉழைச்சல், தூக்கம் போன்ற பல்வேறு நிலைகளின் போது அதில் சிறிய சிறிய மாற்றஙகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். வீட்டிலிருந்து நடந்து வந்ததில் சற்று அதிகரித்திருக்கும். White_Coat_Symptom-300x277

ஆனால் சிலருக்கு மருத்துவரிடம் செல்லும் போது அதிகரிப்பதுண்டு வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது மருத்துவர்களிடம் செல்லும் போது சில நோயாளிகளுக்கு பிரஸர் அதிகரிப்பதையே குறிப்பிடுகிறது.

ஆனால் வெள்ளைக் கோட்டு அணிந்த மருத்துவர்களிடம் மட்டுமல்லாது, எந்த மருத்துவரிடம் செல்லும் போதும் இத்தகைய நிலை சிலருக்கு தோன்றுகிறது.

மருத்துவர்கள் மட்டுமின்றி மருத்துவ மாதுக்கள், தாதிகள் போன்றோர் அளவிடும்போதும் இது நிகழலாம். அதாவது தமக்கு இயல்பான, தங்களுக்கு இணக்கமான சூழலாக அல்லாத மருத்துமனைச் சூழலில் அளவிடும்போது இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படுவதையே அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

பிரஸரை இரண்டு அலகுகளில் குறிப்படுவார்கள் என்பதை அறிவீர்கள். சாதாரண பிரஸர் என்பதை 120ஃ80 என்பார்கள்.

 • இதில் மேலே உள்ளதை சிஸ்டலிக் (systolic) என்றும்
 • கீழே உள்ளதை டயஸ்டலிக் (diastolic) என்றும் சொல்வார்கள்.

Diapositive3 பொதுவாக வீட்டில் அளக்கும்போது மருத்துவரிடம் அளவிடுவதை விட சிஸ்டலிக் 10 குறைவாகவும் டயஸ்டலிக குறைவாகவும் இருப்பதைக் காண முடியும். இன்னும் சிலரில் வித்தியாசம் சற்று அதிகமாகவும் இருக்கலாம். fear of hospital ஆனால் இந்த அளவு வித்தியாசமானது சில தருணங்களில் 30 வரை அதிகரிக்கக் கூடும்.

இதற்குக் காரணம் என்ன?

‘டொக்டர் எனக்கு படபடப்பாகக் கிடக்கு. பிரஸர் கூடக் காட்டப் போகுது’ என்று சொன்னபடியே அமர்ந்தார் ஒருவர். சாதாரண மனிதன் அல்ல. கற்றிந்தவர், மற்றவர்களால் மதிக்கப்படும் ஒருவர். மாணவர்கள் அவர்முன் அடக்க ஒடுக்கமாக நிற்பார்கள். அவருக்கு மருத்துவர் முன் நிற்கும்போது நெஞ்சு படபடக்கிறது. அதனால் தனது பிரஸர் அதிகரிக்கப் போகிறது என்பதும் புரிந்திருக்கிறது.

ஆம் மனப்பதற்றம்தான் படபடப்பிற்கும் மருத்துவர் முன் பிரஸர் அதிகரிக்கப் போவதற்கும் காரணம் என்பதையும் அவர் அறிந்திருக்ககிறார். இருந்தபோதும் அதிலிருந்து மீளும் வழி புரியவில்லை.

ஒருவரது பிரஸரானது எப்பொழுது மருத்துவரிடம் அளவிட்டாலும் அது 140/90mmHg ற்கு மேலிருந்து அதே நேரம் வீட்டில் அளவிடும் போது குறைவாக இருந்தால் மட்டுமே வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது.

இது எவரையும் பாதிக்கக் கூடிய விடயம்தான். இருந்தபோதும் அதிகம் காணப்படும் பிரச்சனை அல்ல. எனவே கட்டுரையைப் படித்தவுடன் எனக்கும் இதே பிரச்சனைதான் என எண்ணி உடனடியாக மருத்துவரிடம் ஓடாதீர்கள். அந்த நோய் பற்றிய எண்ணமும் அதனால் ஏற்படக் கூடிய மனஉளைச்சலும் உங்கள் பிரசரை சற்று அதிகரிக்கச் செய்துவிடலாம்.

பல தருணங்களில் ஒருவது பிரஸரானது உண்மையிலேயே அதிகரித்து இருக்கிறதா அல்லது அது வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்தானா எனத் தீர்மானிப்பது மருத்துவர்களுக்கு சவாலான விடயமான இருப்பதுண்டு.

மருத்துவர்கள் இதை தங்களுக்குரிய பல்வேறு வழிகளைக் கையாண்டு தீர்மானிப்பதுண்டு.

ஒருவரது பிரஸரைப் அளவிடும்போது சற்று அதிகமாக இருந்தால், நோயாளியின் சிந்தனையை திசைதிருப்புவதற்காக வேறு விடயங்கள் பற்றி உரையாடலைத் திருப்புவார். அவர் மனப்பதற்றம் தணிந்திருக்கும் அந்நேரத்தில் கதையோடு கதையாக மீண்டும் பிரஸரை அளந்து சரி பிழையைக் கணிப்பார்கள்.

நிச்சமாகக் கண்டறிய வேறு இரண்டு முறைகளைப் பயன்படுத்தலாம்.

வீட்டில் அளத்தல்

ஒருவர் தனது இரத்த அழுத்தத்தை கிரமமான முறையில் வீட்டில் அளவிட்டு பார்ப்பது ஒரு முறை. காலை மாலை இரவு என வேறு வேறு நேரங்களில் அளவிட்டு அவற்றை திகதி மற்றும் நேரவாரியாக குறித்து வைகக்க வேண்டும்.

பின்னர் மருத்துவரிடம் செல்லும்போது அக்குறிப்பைக் காட்டினால் வெளியிடங்களில் பிரஸர் எவ்வாறு இருந்தது என்பதை மருத்துவர் விளங்கிக் கொள்ள உதவும்.

வீட்டில் பாரக்கும்போதும் பிரஸர் எப்படி இருக்குமோ என்ற பதற்றமின்றி இயல்பாக இருக்க வேண்டும்.

தனது பிரஸர் அளவுகளை ஒரு பதிவேடாகப் personal blood pressure record பேணுவது மிகவும் நல்லது. வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் இருக்குமா என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கு இது அவசியம்.

1002320i1

ஆனால் பிரஸர் மிக அதிகமாக உள்ளவர்களுக்கும், அதில் அடிக்கடி ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுபவர்களுக்கும் இத்தகைய பதிவேடு உதவும். இருந்தபோதும் அதீத மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு இத்தகைய செயற்பாடே மனஅழுத்தத்தை அதிகரித்து பிரஸரைக் கூடுதலாகக் காட்டக் கூடிய அபாயம் உள்ளதையும் மறுப்பதற்கில்லை.

24 மணிநேர கண்காணிப்பு (24-hour blood pressure monitoring)

ஒரு சிறிய டிஜிட்டல் முறை கருவியை தொடர்ந்து 24 மணிநேரம் அணிந்து கொள்ள வேண்டும். அது தொடர்ந்து உங்கள் பிரஸர் அளவுகளை தனது மெமரியில் பதிவு செய்து வைத்திருக்கும்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

 • நீங்களாக உங்களுக்கு வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகத் தீர்மானிக்க வேண்டாம். மருத்துவர் தெளிவாகக் கூறினால் அதற்கு அடிப்படைக் காரணம் மனப் பதற்றமே ஆகும். எனவே அதைத் தணிக்க முயல வேண்டும்.
 • பிரஸர் நோய் பற்றிய அர்த்தமற்ற மனக்கலக்கத்தை கைவிட வேண்டும். ‘இன்று பலருக்கும் இந்நோய் உள்ளது. இதற்கான நல்ல மருந்துகள் உள்ளன. அதைத் தவிர எடையை சரியான அளவில் பேணுதல், தினசரி உடற்பயிற்சி செய்தல், உணவில் உப்பைக் குறைதல், அமைதியான வாழ்க்கை முறை போன்றவற்றால் அதைக் குறைக்க உங்களாலும் முடியும்’ என்பதை உணர்ந்து கொள்ளுவதால் பதற்றம் நீங்கும்.
 • யோகசனம், தியானம், உடல் மனத் தளர்ச்சிப் பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள். இவை யாவும் உங்களது மனதைத் திடமாக்க உதவும்.
 • மருத்துவரிடம் செல்லும்போது தெளிந்த அமையான சிந்தையுடன் செல்லுங்கள்.
 • மருத்துவனைக்கு சென்றவுடன் அவசர அவசரமாக மருத்துவரின் அறைக்குள் நுழையாதீர்கள் சற்று ஆறி இருங்கள். காத்திருக்கும் அறையில் ரீவி இருந்தால் அதில் சற்று மனத்தைதச் செலுத்துங்கள்.

இறுதியாக hypertension-fig1_large வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது பிரச்சனை அற்றது எனப் பொதுவாக நம்பப்பட்டாலும், கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட எனப் பல மருத்துவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் உண்மையான உயர் இரத்தம் எதிர்காலத்தில் வருவதற்கான முதல் சமிக்கையாக இது இருக்கலாம் என்பதே ஆகும்.

வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது மறைந்திருக்கும் உயர் இரத்த அழுத்தமாக (masked hypertension) இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதாவது பிரஸரானது சில தருணங்களில் சரியான அளவிலும் வேறு சில தருணங்களில் அதிகரித்தும் இருக்கலாம். இவ்வாறு இடையிடையே அதிகரித்துக் குறைவதும் காலகதியில் பின்விளைவுகளைக் கொண்டு வரலாம். எனவே எதற்கும் உங்கள் வாழ்க்கை முறைகளை ஆரோக்கியமானதாகக் கடைப்பிடிப்பது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா (16 Aug 2014) புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0.0.0

Read Full Post »

‘பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். இதனால் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்’ என சில வாரங்களுக்கு முன் சொன்னேன்.

hypertension_1

எனவே பிரஷர் இருக்கிறதா என்பதை அறிய அதை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி. நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போது அவர் அளவிடுவார். இப்பொழுது பலரும் பிரஸர்மானிகளை வாங்கி வைத்து தாங்களாகவே தங்கள் வீடுகளில் அளந்து பார்க்கிறார்கள்.

மருத்துவர்கள் அளவிடுவது

பிரஸரை பிரஸர்மானி கொண்டு அளவிடுவார்கள். பொதுவாக மருத்துவக் கிளினிக்குகளில் மெர்குரி (Mercury) கொண்ட பிரஸர்மானியை உபயோகிப்பார்கள்.

நோயாளியின் கையின் முழங்கைக்கு மேற்பட்ட பகுதியில் துணியினால் மூடப்பட்ட ரப்பர் பை (cuff) போன்ற ஒன்றை இறுக்கமாகச் சுற்றுவார்கள். பின்பு தனது கையிலுள்ள பம்பினால் காற்றை அடிப்பார்கள். இதன்போது உங்கள் கை இறுகுவது போல உணர்வீர்கள்.

அந்நேரத்தில் காற்றின் அமுக்கத்தால் கைநாடியின் இரத்த ஓட்டம் தடைப்படும். பின் காற்றின் அமுக்கத்தை குறைக்க இரத்த ஓட்டம் வழமையாகும்.

இதன்போது அவர் உங்கள் நாடித்துடிப்பை தனது விரல்களால் நாடிபிடித்துப் பாரப்பார். இப்படிப் பார்ப்பது இரண்டு காரணங்களுக்காகவாகும்.

pulse
முதலாவதாக, நாடித்துடிப்பின் வேகம், அளவு, அதன் ஒழுங்குமுறை போன்றவற்றை அவதானிப்பார். இரண்டாவதாக அதில் இரத்த ஓட்டம் தடைப்படுவதையும், மீண்டும் வருவதையும் அவதானிப்பதன் மூலம் உங்கள் பிரசரின் உயர்அளவு (Systalic pressure) பற்றிய மதிப்பீட்டைச் செய்வார்.

பின் ஸ்டெதஸ்கோப்பை உங்கள் முழங்கையின் உட்பகுதியில் வைப்பார்கள்.

bloodpressure measurement
நாடித்துடிப்பு தடைப்படுவதையும் அது மீள வருவதையும் ஸ்டெதஸ்கோப் ஊடாகக் கேட்டு அறிவதன் மூலம் பிரஸரின் உயர்அளவு (Systalic pressure), மற்றும் தாழ்அளவு (Diastolic pressure) இரண்டையும் துலக்கமாக அளந்து அறிவார்கள்.

நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

உங்கள் பிரஸர் அளவிடப்படுவதற்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

 • உங்கள் மேலாடை நீளக்கையுடனாக அல்லாமல் அரைக்கையுடன் இருந்தால் Cuff யை சுற்றுவதும், ஸ்டெதஸ்கோப்பால் நாடித்துடிப்பின் ஒலிகளை துல்லியமாகக் கேட்டு பிரஷரை அளவிடுவதும் சுலபமாக இருக்கும்.
 • பிரஸர் அளவிடுவதற்கு முன் குறைந்தது 30 நிமிட நேரத்தினுள் கோப்பி அருந்துவதையும், புகைத்தலையும் தவிருங்கள்.
 • பிரஸர் பார்ப்பதற்கு முன் குறைந்தது 10 நிமிடங்களுக்காவது ஓடியாடித் திரியாது அமைதியாக உட்கார்ந்திருங்கள். முதுகு கதிரையில் சாய்ந்திருக்கும் வண்ணம் வசதியாக உட்காரவேண்டும்.
 • சிறுநீர் நிறைந்திருக்கும் வண்ணம் பிரஸர் பார்க்க வேண்டாம். சற்று நேரம் முன்னரே கழித்து சிறுநீர்ப்பையைக் காலியாக வைத்திருங்கள்.
 • பதற்றமின்றி மனஅமைதியுடன் இருப்பதும் அவசியமாகும்.
 • காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு இருக்கவும் கூடாது(AHA and JNC-7 guidelines) என அமெரிக்க இருதய சங்கம் அறிவித்திருக்கிறது.
 • அளவிடும்போது டொக்டருடனோ அன்றி மற்றவர்களுடனோ உரையாடுவதைத் தவிருங்கள்.

நிற்பதும் இருப்பதுவும் படுப்பதுவும்

பிரஸர் பார்க்கும்போது உட்கார்ந்திருப்பது அவசியம்.
சில வேளைகளில் மருத்துவர் உங்களைப் படுக்க வைத்தும், நிற்க வைத்தும் பிஸைர் பார்ப்பதுண்டு. இது Postural Hypotension இருக்கிறதா என அறிவதற்காக ஆகும்.

நீங்கள் படுத்திருக்கும்போது சாதாரணமாக இருக்கும் இரத்த அழுத்தமானது எழுந்திருக்கும் போது வீழ்ச்சியடைகிறதா என்பதை அறியவே இவ்வாறு அளவிடுவார்கள்.

86543321_XS

பீற்றா புளக்கர் (Beta blockers), அல்பா புளக்கர் (Alpha blockers) போன்ற பிரஷர் மருந்துகளால் மட்டுமின்றி, பார்க்கின்சன் நோய், மனவிரக்தி ஆகியவற்றிற்கு கொடுக்கும் சில மருந்துகளாலும் இது ஏற்படலாம்.

வயதான காலங்களிலும், நீரிழிவு போன்ற நோய்களாலும் ஏற்படலாம். கர்ப்பமாயிருக்கும் பெண்களிலும் வருவதுண்டு.

படுக்கையிலிருந்து எழும்போது மயக்கம் போல வருவது இதன் அறிகுறியாகும்.

ஒரு முறை பார்த்தால் போதுமா?

ஒரு முறை பார்த்து உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் உங்களை பிரஸர் நோயாளி எனத் தீர்மானத்திற்கு வர மாட்டார்கள்.

ஏனெனில் நேரத்திற்கு நேரம் எங்கள் பிரஸரில் மாற்றங்கள் ஏற்படும். மனப்பதற்றம், மனஅழுத்தம், உணவுவேளை போன்றவற்றாலும் மாறுபடலாம். எனவே சந்தேகம் இருந்தால் உங்களை ஒரு முறையோ பல முறைகளோ மீண்டும் வரச் சொல்லி அளவிட்ட பின்னரே இறுதித் தீர்மானத்திற்கு வருவார்.

ஒருவருக்கு பிரஸர் இருக்கிறது என முடிவானால் பொதுவாக மாதம் ஒரு முறை உங்களை பரிசோதனைக்காக அழைப்பார்கள். அது நல்ல கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டால் மூன்று மாதமொரு முறை பரிசோதிக்கக் கூடும்.

இப்பொழுது இலக்ரோனிக் பிரஸர்மானிகளையும் சில மருத்துவர்கள் உபயோகிக்கிறார்கள்.

வீட்டில் அளவிடுதல்

வீட்டுப் பாவனைக்கான அத்தகைய கருவிகள் இப்பொழுது கிடைக்கின்றன. பரவலாக விற்பனையாகிறது. சரியான முறையில் உபயோகித்தால் அவையும் நல்ல பயனுள்ளவையாகும்.

Blood-Pressure-at-Home

ஆயினும் அதனை நீங்கள் முதல் முதலாக உபயோகிக்க முன்னர் அதனைச் சரியான முறையில் இயக்குவது எப்படி என்பதை உங்கள் மருத்துவரிடம், தாதியிடம், அல்லது விற்பனையாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் அளவிடப்படுவதற்கு முன் அவதானிக்க வேண்டியவை

 • அமைதியாக நாற்காலியில் உட்காருங்கள். முதுகு கதிரையில் வசதியாகச் சாய்ந்திருக்க, கால்கள் இரண்டும் நிலத்தில் பதிந்திருக்குமாறு சௌகரியமாக உட்காருங்கள்.
 • இருதயத்தின் உயரத்தில் இருக்குமாறு அருகில் உள்ள மேசையில் உங்கள் கையை வையுங்கள்.
 • பிரஸர்மானியை இயக்கி அது காட்டும் அளவைக் குறித்துக் கொள்ளுங்கள். சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் அவ்வாறு அளவிடுங்கள்.
 • இரண்டிலும் வேறுபாடு இருந்தால் சராசரியை அந் நேரப் பிரஸராகக் கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்
0.0..0.0.00.

Read Full Post »

>

‘பிரஸரா? உணவில் உப்பைக் குறை.’ ஆம் பிரஸருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.
உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?
உப்பில் உள்ள சோடியம் (Sodium- Na) தனிமம் பிரஸரை உயர்த்துகிறது. ஆனால் அதே நேரத்தில் உணவில் பொட்டாசியம் சத்தை (Potassium-K)அதிகமாக எடுப்பதால் பிரஸர் குறைகிறது என்பது பலருக்கும் தெரியாது.
இந்த விடயம் மருத்து உலகத்திற்கு நீண்ட காலமாகத் தெரிந்திருந்த போதும் அது பொது மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெறவில்லை.

அண்மையில் University of Texas Southwestern Medical Center, Dallas, Texasஒரு ஆய்வுசெய்யப்பட்டது. 3300 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. பிரஸர், பொட்டாசியம் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பு பற்றிய இந்த ஆய்வில் சிறுநீரில் இருந்த பொட்டாசியமே கணக்கிடப்பட்டது. இது உணவுப் பொட்hசியத்தின் அளவிற்கு சமாந்திரமானது. உணவில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் பிரஸர் அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறது.
பிரஸரை அதிகரிப்பவை
பிரஸரை அதிகரிக்கக் கூடிய ஏனைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பிரஸருக்கும் பொட்டாசியத்திற்கும் இடையேயான தொடர்பு தெளிவாக இருந்தது. அதாவது வயது, இனம், புகைத்தல், நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற பிரஸருடன் தொடர்புடைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பொட்டாசியக் குறைவது பிரஸரை அதிகரிக்கும் என்பது தெரிந்தது. இந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள ஆப்பிரிக்கர்களை அதிகமாகக் கொண்ட போதும் ஏனையவர்களுக்கும் பொருந்துகிறது.

பொட்டாசியத்தின் முக்கியத்துவம்

பொட்டாசியம் சத்தானது பிரஸரைக் குறைப்பதற்கு மாத்திரமின்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயற்பாட்டிற்கும் அவசியமானது. பிரஸரைக் குறைப்பதற்கான உணவு முறையானது (Dietary Approaches to Stop Hypertension – DASH) உணவில் பொட்டாசியம், மக்னீசியம், கல்சியம் ஆகியன கூடியளவு இருக்க வேண்டும் எனச் சிபார்சு செய்கிறது. அதே நேரம் உணவில் கொழுப்பும் (அதிலும் முக்கியமான நிறைந்த கொழுப்பு) உப்பும் குறைவாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

அப்படியாயின் பிரஸர் நோயாளிகள் பொட்டாசியம் மாத்திரைகளை மேலதிகமாக எடுக்க வேண்டுமா?

பொட்டசியம் அதிகமுள்ள உணவுகள்

நிச்சயமாக இல்லை.

ஆனால் பொட்டாசியம் செறிவாக உள்ள உணவுகளை தினமும் எடுப்பது நல்லது. இறைச்சி, மீன், பால், பாற் பொருட்கள், காய்கறிகள், பழவகைகள், தீட்டாத தானியங்கள் போன்றவற்றில் அதிகம் உண்டு. தக்காளி, உருளைக் கிழங்கு, வாழைக்காய், வாழைப்பழம், சோயா, இளநீர் போன்றவை சில உதாரணங்கள். பொதுவாக பலவகையான காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிகளவு சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அளவு பொட்டாசியம் சுலபமாகக் கிடைத்துவிடும்.

ஒருவருக்கு தினமும் 4.7 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆயினும் கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இதனைவிட அதிகம் தேவைப்படும்.
பொட்டாசியம் குறைந்தால்
கடுமையாக வேலை செய்யும் தசைகளில் அதிகமாகவும், வியர்வையில் மேலும் சிறிதளவும் பொட்டாசியம் இழக்கப்படுகிறது. இதனால் உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவடைந்து தசைப் பிடிப்பு (Muscle Cramps) ஏற்படலாம். சிலவேளை இருதயத் துடிப்பு ஒழுங்கீனமாகவும் கூடும். பொதுவாக கடுமையான உடற் பயிற்சியின் பின் ஒரு கப் ஆரன்ஜ் ஜீஸ் அருந்தினால் அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது அவித்த உருளைக்கிழங்கு உண்பதினால் இதனைத் தவிர்க்க முடியும்.

கடுமையான வயிறோட்டம், கட்டுபாட்டில் இல்லாத நீரிழிவு நோய், அதீத மதுப் பாவனை, குறைந்த கலோரிச் செறிவுள்ள உணவு, போன்றவை உடலில் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்க் கூடும். சில மலம் இளக்கி மருந்துகளும், சிறுநீரை அதிகளவு வெளியேறச் செய்யும் மருந்துகளும் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.

மீண்டும் பிரஸருக்கு வருவோம். பிரஸர் உள்ளவர்களே! உங்கள் உணவில் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை சற்று அதிகமாகவும், உப்பை சற்றுக் குறைவாகவும் உட்கொள்ளுங்கள். அது நன்மை பயக்கும். பிரஸர் வரக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல். 18.11.2008.

Read Full Post »

>
உங்கள் வயது என்ன? உங்களது இரத்த அழுத்தம் எவ்வளவு? அது எவ்வளவாக இருக்க வேண்டும்?

இரத்த அழுத்தத்தில் இரண்டு அலகுகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். சாதாரண இரத்த அழுத்தம் 120/80 எனக் குறிக்கப்படுகிறது. மேலுள்ளது சுருக்கழுத்தம் Systolic blood pressure (SBP), கீழுள்ளது விரிவழுத்தம் Diastolic blood pressure (DBP) என அவை இருவகைப்படும். இதில் எதைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது?

ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் சுருக்கழுத்தத்தை (SBP) கட்டுப்பாட்டில் கொண்டு வருவதையே மருத்துவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என The Lancet என்ற சஞ்சிகையில் ஜீன் 18ல் இணையத்தில் வெளியான கட்டுரை ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

இதற்குக் காரணம் என்ன? இப்பொழுது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் 50 வயதிற்கு பின்னர் பெரும்பாலானவர்களின் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவதும் தெரிந்ததே. அவர்களில் விரிவழுத்தத்தை (DBP) விட சுருக்கழுத்தமே (SBP) பெரும்பாலும் அதிகரிக்கின்றது. வயது கூடக் கூட சுருக்கழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் விரிவழுத்தம் பொதுவாக 50 வயது வரையே அதிகரிக்கிறது. அதற்கு மேல் அதிகரிப்பது குறைவு. அது மட்டுமல்ல பல தருணங்களில் அது குறையவும் செய்கிறது.

இன்னொரு விதமாகப் பார்த்தால் இரத்த அழுத்த நோயுள்ளவர்களில் 75% சதவிகிதத்திற்கு மேலானவர்கள் 50வயது அல்லது அதற்கு மேலான வயதுள்ளவர்களே. இவர்களுக்குதான் மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதன் காரணமாக இத்தகையவர்களது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மிக முக்கியமானதாகும்.

முன்னைய காலங்களில் விரிவழுத்தம் (DBP) தான் முக்கியமானது என மருத்துவ உலகில் ஒரு கருத்து நிலவியது. அதைக் கட்டுப்படுத்துவதே சிகிச்சையின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் மேற் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் பாரக்கும் போது இக்கருத்து தவறானது, சுருக்கழுத்தமே முக்கியம் என்பது வெளிப்படை. மேற் கூறிய கட்டுரையாளர்கள் ஒரு படி மேலே போய் 50வயதிற்கு மேலானவர்களுக்கு சுருக்கழுத்தத்தை மட்டுமே அளவிட்டால் போதுமானது என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் நான்கு காரணங்களைக் கூறுகிறார்கள்.

முதலாவது காரணம். சுருக்கழுத்தமானது மிகவும் சுலபமாகவும் தெளிவாகவும் அதிக தவறின்றியும் அளவிடக் கூடியது. அத்துடன் அதுவே மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமும் ஆகிறது.

பிரஸர் மானியுடன், ஸ்டெதஸ்கோப் கிடைக்காத நிலையில் நாடித்துடிப்பை தொட்டுப் பார்பதன் மூலம் கூட சுருக்கழுத்தத்தை அண்ணளவாக அளவிட முடியும். அதனால் மருத்துவர்கள் இல்லாதபோது, மருத்தவ தாதி அல்லது மருத்துவ உதவியாளர் கூட இவ்வாறு சுலபமாக அளவிட முடியும். நோயாளிகளுக்கு கூட சிறு பயிற்சி மூலம் சுருக்கழுத்தத்தை அளவிடுவதற்கு பழக்கிவிடலாம். எனவே அளவிடுவதும், கட்டுப்படுத்துவதும் இலேசானது.

ஆனால் இப்பொழுது சுலபமாக வாங்கக் கூடிய இலக்ரோனிக் பிரஸர் மானிகளை எந்த
மருத்துவ அறிவு இல்லாதவரும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் இயக்கி, பிரஸரை உடனடியாக அறிய முடியும் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இரண்டாவது காரணமாவது, தனது பிரஸர் என்ன, அது எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு அலகுகளை வைத்துக் கொண்டு நோயாளிகள் குழம்ப வேண்டியதில்லை. மேலும் அந்த இரண்டில் எது முக்கியம் என்ற கேள்வியும் அவர்களுக்கு எழாது.

மருத்துவர்களும் கூட அதுவா இதுவா முக்கியம் என அல்லாட வேண்டியதில்லை என்பது மூன்றாவது காரணமாகும். நான்காவதாக, பிரஸர் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரைகளை சுகாதார இலாகாவினர் பொது மக்களிடையே எடுத்துச் செல்வதற்கும் திட்டமிடுவதற்கும் கூட ஒரு இலக்கமென்பது சுலபமாயிருக்கும்.

சரி இப்பொழுது உங்களது பிரஸருக்கு வருவோம். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட உங்கள் பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும். 140/90 க்கு மேற்படாது இருக்க வேண்டும். நீரிழிவும் சேர்ந்திருந்தால் 130/80 க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்றே இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் மேற் குறிப்பிட்ட புதிய முறையில் கூறுவதாயின் இவற்றை முறையே 140, 130 என்று நீங்கள் குறிப்பிட்டால் போதுமல்லவா?

ஆம் எவ்வளவு சுலபம் நினைவில் வைத்திருக்க?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »