Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புதிய தகவல்கள்’ Category

“சொன்ன சொல் மாறிவிட்டீர்கள்” என முகத்தில் அறையுமாப் போல அவர் குற்றம் சாட்டவில்லைத்தான். “நீங்கள் முந்திச் சொன்னது ஒன்று இன்று சொல்வது மற்றொன்று. படிச்ச நீங்களே இப்படி மாற்றிப் பேசலாமா” என்றும் கேட்கவில்லைத்தான்.

ஆனால் இது நீதி அநீதி, சரி பிழை போன்றவை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அறிவியல். அதிலும் முக்கியமாக வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல், அது சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, துறை சார்ந்த நிபுணர் குழவினர் எட்டிய முடிவுகளை ஒட்டிய விடயம்.

வீட்டில் எலக்ரோனிக் கருவியில் பார்த்தபோது பிரஷர் சற்று அதிகம் என்பதால் பதற்றத்துடன் என்னிடம் வந்திருந்தார் நான் பார்த்தபோதும் கிட்டத்தட்ட அதே அளவுதான். 148/90 இருந்தது.

hypertension

“பரவாயில்லை உங்கடை வயதிற்கு அவ்வளவு இருக்கலாம்” என்று சொன்னதின் பிரதிபரிப்பு இது. அவரது வயது 63 ஆகும்.

அவர் பயப்பட்டதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. நாம் மருத்துவத் தொழில் ஆரம்பித்த காலங்களில் வயதுடன் 100 க் கூட்டினால் வரும் எண்ணிக்கையின் அளவிற்கு இரத்த அழுத்தம் இருக்கலாம் என்றோம்.

பின்னர் எந்த வயதானாலும் 130/90 யைத் தாண்டக் கூடாது என்ற வரையறை வந்தது. இதையே அவர் ஞாபகத்தில் வைத்திருந்தார்.

jnc-8-dr-mansij-biswas-34-638

இப்பொழுது புதிதான வழிகாட்டல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 150/90 இருக்கலாம் என்கிறது.

உண்மைதான் மருத்துவ அறிவியல் கருத்துக்கள் கால ஓட்டத்தில் மாறுகின்றன. புதிய ஆய்வு முடிவுகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்குமாறு சிகிச்சை முறைகள் மாறவேண்டியது அவசியமாகிறது.

பிரஸர் பற்றிய Eighth Joint National Committee (JNC 8) யின் புதிய வழிகாட்டல்கள் என்ன கூறுகின்றன?

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில்

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களது பிரஷர் ஆனது 150/90 மேல் இருந்தால் மட்டுமே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். அதாவது மேலே உள்ள சுருக்கழுத்தம் (Systolic blood pressure – SBP )150ற்கு மேல் இருந்தால் அல்லது கீழே உள்ள விரிவழுத்தம் (Diastolic blood pressure – DBP ) 90 ற்குக் மேல் இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கபட வேண்டும்.

jnc-8-dr-mansij-biswas-29-638

சரி புதிதாகச் சிகிச்சை அளிக்கும்போது பிரஷர் குறைந்தால் அல்லது ஏற்கனவே அவர்களது பிரசரானது சிகிச்சை காரணமாக 140/90 ற்கு கீழ் குறைந்திருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இல்லை உட்கொள்ளும் மருந்தின் அளவானது அவர்களுக்கு எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது ஒத்துக்கொள்ளும் விதமாக இருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை.

அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களில்

அதேநேரம் அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது விரிவழுத்தம் ஆனது 90 ற்கு மேல் இருந்தால் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சிகிச்சை மூலம் இதை 90 அல்லது 90ற்குக் கீழ் கொண்டு வருவது அவசியமாகும்.

அதே போல அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களின் சுருக்கழுத்தமானது 140 ற்கு மேல் இருந்தால் சிகிச்சையை ஆரம்பித்து அதனை 140 அல்லது அதற்குக் கீழ் குறைக்க வேண்டும்.

நீரிழிவு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களில்

18 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கும் இதே 140/90 ற்கு மேல் இருந்தால் பிரஷருக்கான சிகிச்சை அவசியமாகும்.

new-hypertension-guidelines-40-638

நீரிழிவு நோய் உள்ளவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் 18 வயதிற்கு மேல் எந்த வயதானவராக இருந்தாலும் அவர்களது இரத்த அழுத்தமானது 140/90 ற்கு மேல் இருந்தால் சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சுருக்கழுத்தமானது 140 அல்லது அதற்குக் கீழும் விரிவழுத்தமானது 90 அல்லது அதற்குக் கீழ் குறையுமாறு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நாட்பட்ட சிறுநீரக நோயுள்ளவர்களுக்கும் (Chronic kidney disease) நீரிழிவு உள்ளவர்களது அளவுகளே பரிந்துரைக்கப்படுகிறது.

இது வரை காலமும் நீரிழிவு உள்ளவர்களது பிரஷரை 130/80 ற்கு குறைக்க வேண்டும் என்றே பெரும்பாலும் சிபார்சு செய்யப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு குறைப்பதால, பக்கவாதம், இருதய நோய்கள், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் கிடைத்ததாக ஆய்வுகள் உறுதிப்படுத்தாத காரணத்தால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கும் அதே 140/90 ல் கட்டுப்படுத்துவது போதுமானது என்று சொல்கிறார்கள்.

சிகிச்சை முறை

நான்கு வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன ((thiazide-type diuretic, CCB, ACEI, or ARB)  இவற்றில் கறுப்பு இன மக்களுக்கு முதல் இரண்டில் ஒன்றை ஆரம்ப நிலையில் உபயோகிக்கச் சிபார்சு செய்திருக்கிறார்கள்.

முதல் முதலாக ஒருவருக்கு பிரஷர் உள்ளது என கண்டறியப்பட்டதும் மருத்துவர் மேற் கூறியவற்றில் ஏதாவது ஒரு பொருத்தமான மருந்தைத் சிபார்சு செய்வார். அதை உபயோகித்து வருகையில் ஒரு மாதத்தின் பின்னர் பிரசரை மீண்டும் அளவிட்டு மருத்தின் அளவை மறு பரிசீலனை செய்வார்கள். பிரஷரானது சொல்லப்பட்ட அளவிற்கு அல்லது அதனிலும் சற்று அதிகமாகக் குறைந்திருந்தால் அதே அளவில் தொடர வேண்டும். மருந்தின் அளவைக் குறைக்கக் கூடாது.

ஆனால் பிரசரின் அளவானது விரும்பப்பட்ட அளவிற்கு ஒரு மாதத்தில் குறையவில்லை எனில் மருத்துவர் ஏற்கனவே கொடுத்த மருந்தின் அளவை அதிகரிப்பார் அல்லது இரண்டாவதாக மற்றொரு மருந்தைச் சேர்த்தும் தரக் கூடும்.

பிரஷரானது விரும்பிய அளவை எட்டும் வரை மருத்துவர் தொடர்ச்சியான கண்காணிப்பை வைத்திருப்பார். இரண்டு வகையான மருந்துகளைக் கொடுத்தும் பிரஷர் குறையவில்லை எனில் மூன்றாவது மருந்தையும் சேர்த்து உபயோகிக்கவும் நேரலாம்.

இவ்வளவையும் உங்கள் அருகில் உள்ள அரச மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் கண்காணித்து மருத்துவம் செய்வார். மூன்று மருந்துகளாலும் பிரஷரைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது போனால் மாத்திரம் ஒரு விசேட மருத்துவரை அணுகுவது உசிதமானது என சிபார்சு செய்கிறார்கள்.

சாதாரண இரத்த அழுத்தத்தை 120/80 என்பார்கள். இது 140/90 ற்கு மேலே சென்றால்தான் அதை உயர் இரத்த அழுத்தம் என்கிறோம். இதில் எந்த மாற்றத்தையும் புதிய வழிகாட்டல் செய்யவில்லை. வயதானவர்கள் மற்றும் நீரிழிவு உள்ளவர்களில் இதை எந்த அளவிற்குக் குறைக்க வேண்டும் என்பதையே புதிய வழிகாட்டல் சொல்கிறது.

மருந்துகளைப் பற்றிச் சொன்னபோதும் பிரஷரைக் குறைப்பதில் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும் என்பதை மநுப்பதற்கில்லை. ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி, எடையைச் சரியான அளவில் பேணுதல் போன்றவற்றை கடைப்பிடிப்பது அவசியம் என்பதை புதிய வழிகாட்டல்கள் உறுதிப்படுத்தவே செய்கிறது.

எனவே மருந்தைப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும்.

bp-home-remedies

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது எப்போதும் அவசியமானதே. இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் பொதுவான உடல்நலம் மேம்படுவது மாத்திரமின்றி மருந்துகளின் அளiவுகளையும் குறைக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

“மீண்டும் சொன்ன சொல் இன்னும் சில வருடங்களில் மாறலாம். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் பயனாக நோயாளிகளுக்கு நன்மை அதிகம் கிடைக்கும் பட்சத்தில்” என விடைபெறு அவர் எழுந்தபோது நான் கூறியதை ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டி மனத் தெளிவோடு அவர் புன்னகைத்தார்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

 

Read Full Post »