Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்’ Category

வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது வெள்ளைக் கோட் போடும் மருத்துவர்களுக்கு வரும் பிரஸர் வருத்தம் அல்ல. பிரஸர் எல்லோருக்கும்தான் வருகிறது. மருத்துவர்கள் என்ன விதிவிலக்கா? அவர்களுக்கும் வரலாம்தானே!

24well_whitecoat-tmagArticle மருத்துவர்கள் முக்கியமாக மேலைத் தேய மருத்துவர்கள் தங்கள் கடமை நேரத்தின் போது பாரம்பரியமாக வெள்ளைக் கோட் அணிவார்கள். அது அவர்களது தொழில் சார்ந்த அடையாளமாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. குட்டைப் பாவாடையுடனும், கட்டைக் காற்சட்டையுடனும் மருத்துவர்களை காணும் காலமாகிவிட்டது.

வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்

‘நீங்கள் என்ன கூடச் சொல்லுறீங்கள். இப்ப வரக்கு முதல்தான் வீட்டிலை டிஜிஜட்ல் மீ;ற்றரில் பார்த்தநான் 130/80 தான் இருந்தது.’ என்பார்கள்.

இது சந்தையில் பேரம் பேசும் விடயமா? மருத்துதுவர் பார்க்கும்போது 140/90 இருந்திருக்கும். அளவிடும்போது மீற்றரில் காட்டுவதைத்தானே கூற முடியும். யார் பிழையாகச் சொல்கிறார்கள். அவர் சொன்னதும் சரிதான். மருத்துவர் சொன்னதும் சரிதான். ஒருவரது பிரஸர் அல்லது இரத்த அழுத்தம் என்பது எந்த நேரமும் ஒரு அளவில் இருக்கும் என்பதில்லை. வேலை, காலநேரம், சிந்தனை, மனஉழைச்சல், தூக்கம் போன்ற பல்வேறு நிலைகளின் போது அதில் சிறிய சிறிய மாற்றஙகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். வீட்டிலிருந்து நடந்து வந்ததில் சற்று அதிகரித்திருக்கும். White_Coat_Symptom-300x277

ஆனால் சிலருக்கு மருத்துவரிடம் செல்லும் போது அதிகரிப்பதுண்டு வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது மருத்துவர்களிடம் செல்லும் போது சில நோயாளிகளுக்கு பிரஸர் அதிகரிப்பதையே குறிப்பிடுகிறது.

ஆனால் வெள்ளைக் கோட்டு அணிந்த மருத்துவர்களிடம் மட்டுமல்லாது, எந்த மருத்துவரிடம் செல்லும் போதும் இத்தகைய நிலை சிலருக்கு தோன்றுகிறது.

மருத்துவர்கள் மட்டுமின்றி மருத்துவ மாதுக்கள், தாதிகள் போன்றோர் அளவிடும்போதும் இது நிகழலாம். அதாவது தமக்கு இயல்பான, தங்களுக்கு இணக்கமான சூழலாக அல்லாத மருத்துமனைச் சூழலில் அளவிடும்போது இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படுவதையே அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

பிரஸரை இரண்டு அலகுகளில் குறிப்படுவார்கள் என்பதை அறிவீர்கள். சாதாரண பிரஸர் என்பதை 120ஃ80 என்பார்கள்.

  • இதில் மேலே உள்ளதை சிஸ்டலிக் (systolic) என்றும்
  • கீழே உள்ளதை டயஸ்டலிக் (diastolic) என்றும் சொல்வார்கள்.

Diapositive3 பொதுவாக வீட்டில் அளக்கும்போது மருத்துவரிடம் அளவிடுவதை விட சிஸ்டலிக் 10 குறைவாகவும் டயஸ்டலிக குறைவாகவும் இருப்பதைக் காண முடியும். இன்னும் சிலரில் வித்தியாசம் சற்று அதிகமாகவும் இருக்கலாம். fear of hospital ஆனால் இந்த அளவு வித்தியாசமானது சில தருணங்களில் 30 வரை அதிகரிக்கக் கூடும்.

இதற்குக் காரணம் என்ன?

‘டொக்டர் எனக்கு படபடப்பாகக் கிடக்கு. பிரஸர் கூடக் காட்டப் போகுது’ என்று சொன்னபடியே அமர்ந்தார் ஒருவர். சாதாரண மனிதன் அல்ல. கற்றிந்தவர், மற்றவர்களால் மதிக்கப்படும் ஒருவர். மாணவர்கள் அவர்முன் அடக்க ஒடுக்கமாக நிற்பார்கள். அவருக்கு மருத்துவர் முன் நிற்கும்போது நெஞ்சு படபடக்கிறது. அதனால் தனது பிரஸர் அதிகரிக்கப் போகிறது என்பதும் புரிந்திருக்கிறது.

ஆம் மனப்பதற்றம்தான் படபடப்பிற்கும் மருத்துவர் முன் பிரஸர் அதிகரிக்கப் போவதற்கும் காரணம் என்பதையும் அவர் அறிந்திருக்ககிறார். இருந்தபோதும் அதிலிருந்து மீளும் வழி புரியவில்லை.

ஒருவரது பிரஸரானது எப்பொழுது மருத்துவரிடம் அளவிட்டாலும் அது 140/90mmHg ற்கு மேலிருந்து அதே நேரம் வீட்டில் அளவிடும் போது குறைவாக இருந்தால் மட்டுமே வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது.

இது எவரையும் பாதிக்கக் கூடிய விடயம்தான். இருந்தபோதும் அதிகம் காணப்படும் பிரச்சனை அல்ல. எனவே கட்டுரையைப் படித்தவுடன் எனக்கும் இதே பிரச்சனைதான் என எண்ணி உடனடியாக மருத்துவரிடம் ஓடாதீர்கள். அந்த நோய் பற்றிய எண்ணமும் அதனால் ஏற்படக் கூடிய மனஉளைச்சலும் உங்கள் பிரசரை சற்று அதிகரிக்கச் செய்துவிடலாம்.

பல தருணங்களில் ஒருவது பிரஸரானது உண்மையிலேயே அதிகரித்து இருக்கிறதா அல்லது அது வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்தானா எனத் தீர்மானிப்பது மருத்துவர்களுக்கு சவாலான விடயமான இருப்பதுண்டு.

மருத்துவர்கள் இதை தங்களுக்குரிய பல்வேறு வழிகளைக் கையாண்டு தீர்மானிப்பதுண்டு.

ஒருவரது பிரஸரைப் அளவிடும்போது சற்று அதிகமாக இருந்தால், நோயாளியின் சிந்தனையை திசைதிருப்புவதற்காக வேறு விடயங்கள் பற்றி உரையாடலைத் திருப்புவார். அவர் மனப்பதற்றம் தணிந்திருக்கும் அந்நேரத்தில் கதையோடு கதையாக மீண்டும் பிரஸரை அளந்து சரி பிழையைக் கணிப்பார்கள்.

நிச்சமாகக் கண்டறிய வேறு இரண்டு முறைகளைப் பயன்படுத்தலாம்.

வீட்டில் அளத்தல்

ஒருவர் தனது இரத்த அழுத்தத்தை கிரமமான முறையில் வீட்டில் அளவிட்டு பார்ப்பது ஒரு முறை. காலை மாலை இரவு என வேறு வேறு நேரங்களில் அளவிட்டு அவற்றை திகதி மற்றும் நேரவாரியாக குறித்து வைகக்க வேண்டும்.

பின்னர் மருத்துவரிடம் செல்லும்போது அக்குறிப்பைக் காட்டினால் வெளியிடங்களில் பிரஸர் எவ்வாறு இருந்தது என்பதை மருத்துவர் விளங்கிக் கொள்ள உதவும்.

வீட்டில் பாரக்கும்போதும் பிரஸர் எப்படி இருக்குமோ என்ற பதற்றமின்றி இயல்பாக இருக்க வேண்டும்.

தனது பிரஸர் அளவுகளை ஒரு பதிவேடாகப் personal blood pressure record பேணுவது மிகவும் நல்லது. வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் இருக்குமா என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கு இது அவசியம்.

1002320i1

ஆனால் பிரஸர் மிக அதிகமாக உள்ளவர்களுக்கும், அதில் அடிக்கடி ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுபவர்களுக்கும் இத்தகைய பதிவேடு உதவும். இருந்தபோதும் அதீத மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு இத்தகைய செயற்பாடே மனஅழுத்தத்தை அதிகரித்து பிரஸரைக் கூடுதலாகக் காட்டக் கூடிய அபாயம் உள்ளதையும் மறுப்பதற்கில்லை.

24 மணிநேர கண்காணிப்பு (24-hour blood pressure monitoring)

ஒரு சிறிய டிஜிட்டல் முறை கருவியை தொடர்ந்து 24 மணிநேரம் அணிந்து கொள்ள வேண்டும். அது தொடர்ந்து உங்கள் பிரஸர் அளவுகளை தனது மெமரியில் பதிவு செய்து வைத்திருக்கும்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

  • நீங்களாக உங்களுக்கு வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகத் தீர்மானிக்க வேண்டாம். மருத்துவர் தெளிவாகக் கூறினால் அதற்கு அடிப்படைக் காரணம் மனப் பதற்றமே ஆகும். எனவே அதைத் தணிக்க முயல வேண்டும்.
  • பிரஸர் நோய் பற்றிய அர்த்தமற்ற மனக்கலக்கத்தை கைவிட வேண்டும். ‘இன்று பலருக்கும் இந்நோய் உள்ளது. இதற்கான நல்ல மருந்துகள் உள்ளன. அதைத் தவிர எடையை சரியான அளவில் பேணுதல், தினசரி உடற்பயிற்சி செய்தல், உணவில் உப்பைக் குறைதல், அமைதியான வாழ்க்கை முறை போன்றவற்றால் அதைக் குறைக்க உங்களாலும் முடியும்’ என்பதை உணர்ந்து கொள்ளுவதால் பதற்றம் நீங்கும்.
  • யோகசனம், தியானம், உடல் மனத் தளர்ச்சிப் பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள். இவை யாவும் உங்களது மனதைத் திடமாக்க உதவும்.
  • மருத்துவரிடம் செல்லும்போது தெளிந்த அமையான சிந்தையுடன் செல்லுங்கள்.
  • மருத்துவனைக்கு சென்றவுடன் அவசர அவசரமாக மருத்துவரின் அறைக்குள் நுழையாதீர்கள் சற்று ஆறி இருங்கள். காத்திருக்கும் அறையில் ரீவி இருந்தால் அதில் சற்று மனத்தைதச் செலுத்துங்கள்.

இறுதியாக hypertension-fig1_large வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது பிரச்சனை அற்றது எனப் பொதுவாக நம்பப்பட்டாலும், கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட எனப் பல மருத்துவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் உண்மையான உயர் இரத்தம் எதிர்காலத்தில் வருவதற்கான முதல் சமிக்கையாக இது இருக்கலாம் என்பதே ஆகும்.

வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது மறைந்திருக்கும் உயர் இரத்த அழுத்தமாக (masked hypertension) இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதாவது பிரஸரானது சில தருணங்களில் சரியான அளவிலும் வேறு சில தருணங்களில் அதிகரித்தும் இருக்கலாம். இவ்வாறு இடையிடையே அதிகரித்துக் குறைவதும் காலகதியில் பின்விளைவுகளைக் கொண்டு வரலாம். எனவே எதற்கும் உங்கள் வாழ்க்கை முறைகளை ஆரோக்கியமானதாகக் கடைப்பிடிப்பது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா (16 Aug 2014) புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0.0.0

Read Full Post »