Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புகைப்படங்கள்’ Category

காத்திருக்கிறார்

மிகிந்தலை ஏறும்

படியோர மரம் மீது.
ஆவல் மிக…

 

மர அணில் என்கிறார்கள்

சரியான பெயரை

கூறுவீரோ.

 

தலை ஆட்டுகிறார்

மேல் கீழாய்

தா தா தின்பதற்கு

என்னுமாப் போல.

 

கனிகள் பிடிக்க வில்லையோ !!

தேனும் சுவைக்கவில்லையோ!!!

 

முறுக்கி நொறுக்கி

வதக்கி பொரித்து

இனிப்பில் மூழ்கி

நோயுறும் மனிதரின்

நொறுக்கு தீனியை தான்

நாடுகிறாயோ.

 

கவனம்

நீரிழிவு கொலஸ்டரோல்

பிரஷர் வாதம்

மாரடைப்பு

புற்று நோய் யாவும்

உன்னை யும் தீண்டும்.

 

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

நன்னாரி- Indian Sarsaparilla(Hemidesmus indicus)- iramusu in Sinhala

இன்று தேநீர் வெறும் தேநீர் ஆகவா கிடைக்கிறது.

இங்கு பலருக்கு தேநீர் என்றால் பால் ரீ என்றுதான் அர்த்தம்.

பால் ரீயில் பாலின் சுவைதான் இருக்கும். தேயிலையின் சுவை அடங்கிவிடும்.

பிளேன் ரீ மீது எனக்கு தனிப் பிரியம். அதன் சுவையே அலாதியானது. ஒவ்வொரு பிரதேச தேயிலைக்கும் பிரத்யேக சுவை உண்டு.

22275110270_e28ffe8e60_q

 

 

மறைந்த எழுத்தாளர் புலோலியூர் சதாசிவம் பண்டாரவளை யில் வேலை பார்த்தவர். அங்கிருந்து அவர் கொண்டு வந்து தரும் தேயிலை யின் சுவையை என்றும் மறக்க முடியாது.

இன்று தேயிலைக்கு வெவ்வேறு சுவை ஊட்டுகிறார்கள். பல்வேறு flavors சில் வாங்க முடியும்.

முன்பு எனது மனைவி ஏலம், கராம்பு, கறுவா, தேசிப் பழம் என சுவை ஊட்டி தரும் பிளேன் ரீகளின் சுவையை மறக்க முடியாது.

ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இத்தகைய ரீக்கள் கிடைப்பதில்லை.

நன்னாரி தேநீர் தயாரிப்பார்கள்.

படத்தில் உள்ளது தான் நன்னாரி செடி. இன்றும் எனது வீட்டில் இருக்கிறது. ஆனால் நன்னாரி தேநீர் தயாரிக்கத் தான் நேரமில்லை.

நன்னாரி சர்பத் தும் பேர் போனதுதான்.

நன்னாரி பற்றி தமிழ் விக்கிபீடியா சொல்வது கீழே

 நன்னாரி அல்லது கிருஸ்ணவல்லி அல்லது நறு நெட்டி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்:Indian Sarsaparilla) என்பது தென்னாசியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது. இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.

நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர்அனாதமூலா (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.”

இருந்தபோதும் இந்த மருத்துவ குணங்கள் இருப்பதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்து இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே நான் அவற்றை சிபார்சு செய்ய முடியாது. தகவலுக்காகச் சொன்னேன்.

0.00.0

Read Full Post »

என்ன சொல்ல என்ன சொல்ல
இந்தப் புத்தாண்டில்
வருடா வருடம்
சொல்லி சொல்லி
கேட்டு கேட்டு
அலுத்தே போனது
இன்னும் என்ன
சொல்ல இருக்கு
சொல்லாததையா
சொல்லப் போறன்.

 

DSC05675-001 

கற்பனைக் கோட்டைகள்
கனவுகள் புலரும் வரை
புலர்ந்த பின்
வாழ்க்கை ஓடும்
வழமைபோல
சிரிப்புகள் அழுகைகள்
சீண்டல்கள் சினப்புகள்
நம்பிக்கைகள் அவலங்கள்
வெற்றிகள் தோல்விகள்
பெருமைகள் பொறாமைகள்
புதிதாக என்ன இருக்கிறது
எல்லாமே தொடரத்தான் போகிறது

 DSC05651-001

இருந்தும் ஒரு நம்பிக்கை
நாளை மறுநாள்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வருடமும்
புலர்வதும் பொலிவதும்
எமது கைகளில்தான்
எதிர்கொள்வோம் நம்பிக்கையுடன்
இந்த 2014 லையும்

SDC12511-001

எம்.கே.முருகானந்தன்

00.0.0.0.00

Read Full Post »

சுடுவெயில் எரித்தழிக்க
கதிர் நீட்டும்.
மறுத்துரைத்து
நிழல் பரப்பி
களியாடும்
தாவரங்கள் கரையோரம்.
கட்டங்கள் இணை சேரும்
தம் நிழல் சேர்க்க.

சிறு குழாயால்
சிதறடித்துச் சீறி வந்து
பெரும் ஓடையில்
சங்கமிக்கும்
நீரிது.
சிறுநீரல்ல..

பற்றற்ற ஞானி
பற்றுடன் பற்ற நாடும்
பரமோன நிலை
சித்தமுடன் பற்றி வர
சத்தமின்றி சலனமின்றி
இசைந்தோடும்
கழித்த நீர்.

கழிவகற்றும் கால்வாயின்
நீரடியில் மறைந்திருக்கும்
கரும் சேற்றின் துர்நாற்றம்,
உள்ளுறையும்
வஞ்சனையை மறைத்தொழுகும்
கயமை நெஞ்சினும்
மேலானது.

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

கூடிக் களிப்பதில்

குழந்தையர்க்கின்பம்

நடன மாடிப் பரவலில்

நர்தனியர்க்கு இன்பம்

பாடிப் பரவசமாதலில்

பாவலர்க்கின்பம்- வெயிலில்

ஆடிக்களிப்பதில்

அணிதுணிகளுக்கு

அளவிலா ஆனந்தம்

கூடவே பசுங்கொடி தழுவலில்

தாண்டவமாடும்

ஆனந்தம் பேரானந்தம்.

ஆட்சியிலிருப்பது அரசியலர்க்கின்பம்

எதோட்சிகாரம் செய்தல்

அதிலும் இன்பம்.

எதிரணியர் சிறையடை படல்

கடையணித் தொண்டனுக்கும்

பரவச இன்பமாகும்.

மறுகுழு எழுத்தனைத்தும்

பழிப்பதில் இன்பம்.

கவைக்குதவாது

காலவதியாகிடுமென

இழித்துரைத்தல்

அதனிலும் இன்பம்.

ஒட்டக் கூத்தன் பரம்பரையின்

இன்பம் இனியொறொன்றிலும்

கிட்டவே கிட்டாது.

படைப்புலகில்

மற்றெல்லாம்

துச்சம் துச்சமே!

0.0.0.0.0.0.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் தினசரி காலை வழிபாட்டின்போது வணங்குவதற்கான சிலை இல்லாததை உணர்ந்திருந்தார் அதிபர்.திரு.மு.கனகலிங்கம். அவர்களின் முன் முயற்சியால் இப்பொழுது சிலைகள் பாடசாலையின் இரு வளாகங்களிலும் அமைக்கப்பட்ட செய்தியை தந்திருந்தோம்.

பாடசாலையின் பிரதான வளாகத்தின் தெற்குப் புறமாக இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில்  சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் காலையில் சிலையைப் பார்த்தபடி காலைத் துதி செய்யும்போது முற்றுக் கொற்றாவத்தை பிள்ளையார் கோவில் ஆலயமும் அத் திசையிலேயே பார்வைக்கு எட்டிய தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் நினைவாக இச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினர்அதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர்.

அதிபர்.திரு.மு.கனகலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இச் சிலை திறப்பு விழாவின்போது பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் மகளான திருமதி.மீனலோசனி  மற்றும் மருமகன் திரு. தம்பிராசா ஆகியோர் கலந்து சிறப்பித்து, திரை நீக்கம் செய்து  வைத்தனர்.


இச் சிலையை தம்பசிட்டியைச் சார்ந்த கலாபூசணம்.கோ.வேலுப்பிள்ளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

மற்றச் சரஸ்வதி சிலையானது பாடசாலையின் சிறிய வளாகத்தின் மேற்குப் புறமாக கிணற்றடிக்கு அருகில் இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில்   அமைக்கப்பட்டுள்ளது.

எமது பாடசாலையின் புகழ்பூத்த மாணவர்களில் ஒருவரான அமரர்.வை.கா.சிவப்பிரகாசம் (முன்னாள் அதிபர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) அவர்களது ஞாபகார்த்தமாக அவரது மகன் திரு.வை.கா.சி.முகுந்தன் அவர்களது நிதியுதவில் அமைக்கப்பட்டுள்ளது.  இது பாடசாலை உபஅதிபர் கணநாதன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலையை அமரர் வை.கா.சிவப்பிரகாசம்அவர்களது இளைய சகோதரரான திரு.வை.கா.இராமச்சந்திரன் அவர்கள் தமது குடும்பத்தினர் சார்பாக திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.

பாலர் வளாகத்தில் உள்ள சிலையை தென்னிந்தியாவைச் சார்ந்த சிற்பக் கலைஞர்கள் வடிவமைத்துக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு சிலைகளுமே மிக அழகாக கலைஅம்சம் நிறைந்தனவாக அமைந்தமை மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகிறது. அவற்றில் உள்ள தெய்வீகக் களை மாணவர்கள் தம் மனத்தை ஒருமனப்படுத்தி, கற்கைச் செயற்பாட்டில் ஈடுபட வைக்கும் என நம்பலாம்.

இரண்டு சரஸ்வதி சிலைகளையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போது பிரதான வளாகத்து சிலையானது எமது பாரம்பரிய சிற்பக் கலையை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாக என் மனத்தில் பட்டது.

பாலர் வளாகத்துச் சிலை அழகில் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல. இது நவீன சிறப்பக்கலையி்ன் நுணுக்கங்களை உள்வாங்கிப் படைக்கப்பட்டதாக மனதில் படுகிறது.


எவ்வாறாயினும் எமது பாடசாலை மாணவர்களின் நீண்ட காலத் தேவை பூர்த்தி செய்யப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது.

இச்சிலை நிறுவுவதற்கான முயற்சிகளை எடுத்த அதிபர்.திரு.மு.கனகலிங்கம், முழு ஒத்துழைப்பு வழங்கிய உப அதிபர் திரு கணநாதன், மற்றும் ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்கான நிதியுதவையை அளித்து, எமது பாடசாலை மாணவர்களின் கனவை நனவாக்கிய அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் குடும்பத்தினருக்கும், அமரர்.வை.கா.சிவப்பிரகாசம்குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் சிலைகளை வடிவமைத்த சிற்பிகள், விழாவில் கலந்து கொண்ட பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


0.0.0.0.0.0.0

Read Full Post »

>

அனல் காற்றில் விசவாயு
கலந்தெரித்த பூமி
அதில் விளைந்த இளந்துளிர்கள்
தீய்ந்தழிந்து
கனகாலம் ஆகவில்லை.

முதுமரங்கள் விழிவரளச்
சுரசரக்கும் காவோலையாகும்.
துயர்வாய்வில்
மணல் கூடத்
தீய்ந்தெரிந்து
கரியாகச் சாகும்.

பிணம் தின்னிக் கரும்பறவை
கரைந்தழுது
தேனொழுகப் பேசும்.
பொய்யான உறுதி பலவுதிர்த்து
உள்ளரங்கில்
தலை நுளைக்கப் பார்க்கும்.
தரை தின்ன கறையானாய்
அரித்தரித்துப் பரவும்.
பிறர் மண்ணை ஏப்பமிடும்
வழியனைத்தும் நாடும்.

துயர் சிந்தி வாழ்வொடுங்கி
தலை சாய்க்கும்
சேற்றெருமை அல்ல.
துளிநீரும் கடலாகப்
பரந்தெழுப் படகாகி மிதப்பர்.

பனங்கொட்டை முளைவிட்டு
வடலியென வளரும்.
இவர் வாழ்வு கருகாது
வளவெங்கும் நிமிரும்.

ஜீவநதி இதழ் 33 (ஆனி 2011) இதழில் வெளியான என் கவிதை

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

மலை நகரின் சிறுகுன்றில்
தனிமரமொன்று வான் முட்ட
கால் உன்னி கிளர்ந்தெழுந்து
பாய்ந்தெழத் துடிக்கிறதோ!

கால்கட்டு விட்டொழித்து
கட்டற்ற சுதந்திரத்தை
நெஞ்சாழச் சுவாசிக்கும்
பெருவாழ்வு எட்டிடவா?

இல்லை!

காலடி பின்வைத்து
கண்சுருக்கி, தலை சரித்து
விழி கூர்த்துப் பாருங்கள்.
பெண் துணையை கைநீட்டி
அருகணைத்து முத்தமிட
முகம் நெருங்கி வருகிறதா?.

கண்மூடிக் கற்பனையை
சிறகடித்துப் பறக்கவிடுங்கள்.
சில் மனத்தில்
பொல்லாத காட்சிகள்
பொச்சடித்து விரிந்து வரும்.
நிறைவாழ்வு அதுவல்ல.

தன் சுகம் இழப்பதும்
தன் வலி மறப்பதும்
தாராள மனதுடன்
தயங்காது விட்டொழித்து
துணைக்காக வாழ்வதும்
தன்னைத் தொலைத்ததில்
மகிழ்வதும்  இழப்பல்ல.

அது சுதந்திரத்திலும் மேலானது.

0.0.0
மற்றொரு கவிதை மலையகம், இழப்பு, புகைப்படங்கள்

களிகொண்டு எழுந்த சூரியன் துயர் மூழ்கி ஒளிந்தான்

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

>

சென்ற தை மாதம் 6,7,8,9  திகதிகளில் கொழும்பில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பல சலசலப்புகள் எழுந்தபோதும் அவற்றை மேவி மிகச் சிறப்பாக நடைபெற்ற மாநாடு அதுவாகும். பல பயனுள்ள கட்டுரைகள் படிக்கப்பட்டன.

இது விழாவின் நிகழ்சிநிரல் நூலாக..

பல எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கக் கிடைத்தமை மிக அரிய அனுபவமாகும்.

தெணியான், செங்கை ஆழியான் மேடையில்

 அதிலும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல இளம் எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடிகளைக் கண்டும் அவர்களுடன் நேரில் பேசியும் மகிழ்ந்ததை நேரில் காணக் கூடியதாக இருந்தது.

கூட்டத்தில் இரண்டாம் நிகழ்வு ஒன்றின்போது பார்வையாளர் சிலர்

ஒரே நேரத்தில் மூன்று அரங்குகளில் எனப் பல ஆய்வரங்குகள் நடைபெற்றன. அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றபோதும் எதில் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப் பலராலும் முடிவெடுப்பதில் சிரமம் இருந்தது. இத்தகைய மநாடுகளில் இது தவிர்க்க முடியாததே.

நிகழ்வுகள் நேரத்திற்கு ஆரம்பமாகி குறித்த நேரத்தில் முடிவுற்றமைக்கு அமைப்பாளர்களையும் பங்கு பற்றியோரையும் ஒரே நேரத்தில் பாராட்ட வேண்டும்.

விழாவை ஒட்டி பல நூல்கள் வெளிடப்பட்டன.

1. கட்டுரைக் கோவை

2. விழா தொடர்பான சிறப்பு மலர்.

3. பேராளர்களுக்கு வழங்கப்பட்ட நூல்களில் முகங்கள் என்ற தலைப்பிலான புலம் பெயர்  பற்றிய சிறுகதைத் தொகுதி.

3. டொக்டர் சிவதாஸ் எழுதிய மகிழ்வுடன் என்ற உளவியல் நூல்.

பல சஞ்சிகைகள் தங்கள் அம்மாத இதழ்களை மாநாட்டுச் சிறப்பிதழ்களாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1. மல்லிகை ஆண்டு மலர் விழாச் சிறப்பிதழாக

2. ஞானம் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்.

 நூல் விற்பனை நிலையம் வாயிலருகே அமைந்திருந்தது. பலரும் அவற்றைப் பார்ப்பதும், தமக்குப் பிரியமானவற்றை வாங்குவதுமாக இருந்தனர்.

3. ஜீவநதி சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்

இதற்காக அயராது உழைத்த திரு.ஞானசேகரன், அஸ்ரப் சிஹாப்தீன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முருகபூபதி போன்ற அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களாவர். ஆனால் இவர்களைத் தவிர ஒரு பெரும் படைப்பாளி உலகமே அவர்கள் பின் நின்று ஒத்தாசை வழங்கியதை மறக்க முடியாது.

மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன்.எஸ்.டி.சிவநாயம் அரங்கில் முதல் நாள் நடைபெற்ற ‘கணினியும் வலைப்பதிவுகளும்’ என்ற ஆய்வரங்கில் இணைத் தலைவராக.

இணைப்பேராசிரியை மு.சு.தங்கம்(இந்தியா) என்னுடன்  இணைத் தலைமையை  ஏற்றிருந்தார்.

அதற்காக ஒரு சான்றிதழ் எனக்கும் வழங்கப்பட்டது.

இணைத்தலைமை, கட்டுரை படித்தல் என பங்கு பற்றிய அனைவருக்குமே அவ்வாறான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டம் நடந்த உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க வாயில் முன்னே நான்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

முன் வீட்டு அயல் வீட்டு
தெருவோரப் பூவெல்லாம்
பறித்தெடுத்து இறைவனுக்கு
அர்ப்பணித்தல் அடாத செயலென்பர்.
அதனையே மொபைல் போனில்
அமுக்கி வைத்து இணையத்தில்
பகிர்ந்து கொண்டால்
கலைப் படைப்பெனத்
திமிர் கொள்வர்.

வெண்மையும் இளம் சிகப்பும்
இன்னும் பெயர் தெரியா நிறமனைத்தும்
தெருவோரம் தான்தோன்றி புன்னகைக்கும்
செடிகளில் விதவிதமாய்
இதழ் விரிக்கும்.

மதராசப் பட்டினத்தில்
படகோட்டும்
கூவம் நதியல்ல
கொழும்பு நகரின் கனால் (Canal)
கழிவு நீரின் நாற்றம்
காத தூரம் ஓட வைக்கும்
ஆயினும் அதன் போசாக்கு
அதன் கரை ஜனனிக்கும்
கொடி செடியைப் போசிக்கும்.

கதிரவனின்  கரம் வாட்ட
சென்ட் பீற்றர்ஸ் மாணவர்கள்
நீண்டுழைத்து
நீரிழப்பால் உடல் தளர்வர்.
விளையாடும் மைதானத்தில்.

மறுகரையில்
நீரோரம் நிதமிருந்தும்
சிறு செடிகள் அனல் காற்றில்
அலையாடி சருகாவர்.

தடைபோட்ட தாழ்வாரத்தில்
அடைந்திருக்க மனதின்றி
கொட்டும் மழையில்
குதித்துக் கும்மாளமிட
தெருவோரம் தலை நீட்டி
உடல் நனைக்கும் ஆனந்தம்
தொடர்மாடி வீட்டு
முகப்போர அலங்காரச் செடிக்கு
சிலவேளை கை கூடும்..

வானத்தின் நீலத்தை
தன்னிதழில் வர்ணமிட்டு
கோலம் வரைந்திருக்கும்,
வானத்தைத் தன்வாழ்வில்
சிறுபொழுதும் காணாத
உள்வீட்டு குறும் செடி.

ஆண்டி, ஆண்டகை
இழிசனர், உயர்சாதி
உழைப்பவன், சுரண்டல்காரன்
என வர்க்க பேதமில்லா
பூக்களின்
சாம்ராஜ்யம் இது.

பூக்கள், செடிகள் பற்றிய கவிதையுடனான முன்னைய புகைப்படப் பதிவுகளுக்கு கீழே கிளிக்குங்கள்.:-

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

Older Posts »