Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புகைப்படங்கள்’ Category

மலை நகரின் சிறுகுன்றில்
தனிமரமொன்று வான் முட்ட
கால் உன்னி கிளர்ந்தெழுந்து
பாய்ந்தெழத் துடிக்கிறதோ!

கால்கட்டு விட்டொழித்து
கட்டற்ற சுதந்திரத்தை
நெஞ்சாழச் சுவாசிக்கும்
பெருவாழ்வு எட்டிடவா?

இல்லை!

காலடி பின்வைத்து
கண்சுருக்கி, தலை சரித்து
விழி கூர்த்துப் பாருங்கள்.
பெண் துணையை கைநீட்டி
அருகணைத்து முத்தமிட
முகம் நெருங்கி வருகிறதா?.

கண்மூடிக் கற்பனையை
சிறகடித்துப் பறக்கவிடுங்கள்.
சில் மனத்தில்
பொல்லாத காட்சிகள்
பொச்சடித்து விரிந்து வரும்.
நிறைவாழ்வு அதுவல்ல.

தன் சுகம் இழப்பதும்
தன் வலி மறப்பதும்
தாராள மனதுடன்
தயங்காது விட்டொழித்து
துணைக்காக வாழ்வதும்
தன்னைத் தொலைத்ததில்
மகிழ்வதும்  இழப்பல்ல.

அது சுதந்திரத்திலும் மேலானது.

0.0.0
மற்றொரு கவிதை மலையகம், இழப்பு, புகைப்படங்கள்

களிகொண்டு எழுந்த சூரியன் துயர் மூழ்கி ஒளிந்தான்

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

>

சென்ற தை மாதம் 6,7,8,9  திகதிகளில் கொழும்பில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பல சலசலப்புகள் எழுந்தபோதும் அவற்றை மேவி மிகச் சிறப்பாக நடைபெற்ற மாநாடு அதுவாகும். பல பயனுள்ள கட்டுரைகள் படிக்கப்பட்டன.

இது விழாவின் நிகழ்சிநிரல் நூலாக..

பல எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கக் கிடைத்தமை மிக அரிய அனுபவமாகும்.

தெணியான், செங்கை ஆழியான் மேடையில்

 அதிலும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல இளம் எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடிகளைக் கண்டும் அவர்களுடன் நேரில் பேசியும் மகிழ்ந்ததை நேரில் காணக் கூடியதாக இருந்தது.

கூட்டத்தில் இரண்டாம் நிகழ்வு ஒன்றின்போது பார்வையாளர் சிலர்

ஒரே நேரத்தில் மூன்று அரங்குகளில் எனப் பல ஆய்வரங்குகள் நடைபெற்றன. அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றபோதும் எதில் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப் பலராலும் முடிவெடுப்பதில் சிரமம் இருந்தது. இத்தகைய மநாடுகளில் இது தவிர்க்க முடியாததே.

நிகழ்வுகள் நேரத்திற்கு ஆரம்பமாகி குறித்த நேரத்தில் முடிவுற்றமைக்கு அமைப்பாளர்களையும் பங்கு பற்றியோரையும் ஒரே நேரத்தில் பாராட்ட வேண்டும்.

விழாவை ஒட்டி பல நூல்கள் வெளிடப்பட்டன.

1. கட்டுரைக் கோவை

2. விழா தொடர்பான சிறப்பு மலர்.

3. பேராளர்களுக்கு வழங்கப்பட்ட நூல்களில் முகங்கள் என்ற தலைப்பிலான புலம் பெயர்  பற்றிய சிறுகதைத் தொகுதி.

3. டொக்டர் சிவதாஸ் எழுதிய மகிழ்வுடன் என்ற உளவியல் நூல்.

பல சஞ்சிகைகள் தங்கள் அம்மாத இதழ்களை மாநாட்டுச் சிறப்பிதழ்களாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1. மல்லிகை ஆண்டு மலர் விழாச் சிறப்பிதழாக

2. ஞானம் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்.

 நூல் விற்பனை நிலையம் வாயிலருகே அமைந்திருந்தது. பலரும் அவற்றைப் பார்ப்பதும், தமக்குப் பிரியமானவற்றை வாங்குவதுமாக இருந்தனர்.

3. ஜீவநதி சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்

இதற்காக அயராது உழைத்த திரு.ஞானசேகரன், அஸ்ரப் சிஹாப்தீன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முருகபூபதி போன்ற அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களாவர். ஆனால் இவர்களைத் தவிர ஒரு பெரும் படைப்பாளி உலகமே அவர்கள் பின் நின்று ஒத்தாசை வழங்கியதை மறக்க முடியாது.

மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன்.எஸ்.டி.சிவநாயம் அரங்கில் முதல் நாள் நடைபெற்ற ‘கணினியும் வலைப்பதிவுகளும்’ என்ற ஆய்வரங்கில் இணைத் தலைவராக.

இணைப்பேராசிரியை மு.சு.தங்கம்(இந்தியா) என்னுடன்  இணைத் தலைமையை  ஏற்றிருந்தார்.

அதற்காக ஒரு சான்றிதழ் எனக்கும் வழங்கப்பட்டது.

இணைத்தலைமை, கட்டுரை படித்தல் என பங்கு பற்றிய அனைவருக்குமே அவ்வாறான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டம் நடந்த உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க வாயில் முன்னே நான்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

முன் வீட்டு அயல் வீட்டு
தெருவோரப் பூவெல்லாம்
பறித்தெடுத்து இறைவனுக்கு
அர்ப்பணித்தல் அடாத செயலென்பர்.
அதனையே மொபைல் போனில்
அமுக்கி வைத்து இணையத்தில்
பகிர்ந்து கொண்டால்
கலைப் படைப்பெனத்
திமிர் கொள்வர்.

வெண்மையும் இளம் சிகப்பும்
இன்னும் பெயர் தெரியா நிறமனைத்தும்
தெருவோரம் தான்தோன்றி புன்னகைக்கும்
செடிகளில் விதவிதமாய்
இதழ் விரிக்கும்.

மதராசப் பட்டினத்தில்
படகோட்டும்
கூவம் நதியல்ல
கொழும்பு நகரின் கனால் (Canal)
கழிவு நீரின் நாற்றம்
காத தூரம் ஓட வைக்கும்
ஆயினும் அதன் போசாக்கு
அதன் கரை ஜனனிக்கும்
கொடி செடியைப் போசிக்கும்.

கதிரவனின்  கரம் வாட்ட
சென்ட் பீற்றர்ஸ் மாணவர்கள்
நீண்டுழைத்து
நீரிழப்பால் உடல் தளர்வர்.
விளையாடும் மைதானத்தில்.

மறுகரையில்
நீரோரம் நிதமிருந்தும்
சிறு செடிகள் அனல் காற்றில்
அலையாடி சருகாவர்.

தடைபோட்ட தாழ்வாரத்தில்
அடைந்திருக்க மனதின்றி
கொட்டும் மழையில்
குதித்துக் கும்மாளமிட
தெருவோரம் தலை நீட்டி
உடல் நனைக்கும் ஆனந்தம்
தொடர்மாடி வீட்டு
முகப்போர அலங்காரச் செடிக்கு
சிலவேளை கை கூடும்..

வானத்தின் நீலத்தை
தன்னிதழில் வர்ணமிட்டு
கோலம் வரைந்திருக்கும்,
வானத்தைத் தன்வாழ்வில்
சிறுபொழுதும் காணாத
உள்வீட்டு குறும் செடி.

ஆண்டி, ஆண்டகை
இழிசனர், உயர்சாதி
உழைப்பவன், சுரண்டல்காரன்
என வர்க்க பேதமில்லா
பூக்களின்
சாம்ராஜ்யம் இது.

பூக்கள், செடிகள் பற்றிய கவிதையுடனான முன்னைய புகைப்படப் பதிவுகளுக்கு கீழே கிளிக்குங்கள்.:-

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2011

எமது  ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் தைப்பொங்கல் தினமாகிய இன்று 15.01.2011 பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரியில் நடை பெற்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

இறை தியானத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது.

அங்கத்தவர்கள் மெளனமாக  எழுந்து நின்று இறை தியானம் செய்தனர்.

தொடர்ந்து தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் கூட்டம் நடை பெற்றது.தலைமையுரையைத் தொடர்ந்து பதில் செயலாளர் திரு.க.பிரபாகரன் தனது அறிக்கைகளை வாசித்தார்.

கலந்துகொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்.

ஆண்களில் சிலர்.

உபபொருளாளர் திருமதி வள்ளி பிரபாகர் சென்ற ஆண்டிற்கான கணக்கறிக்கையச் சமர்ப்பித்தார். 

ஆற்றிய பணிகள் பற்றியும், பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் பற்றியும் கருத்துரை வழங்கிய எம்.கே.முருகானந்தன்.

சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது.


மீண்டும் தலைவராகத் தெரியப்பட்ட டொக்டர்.எம்.கே.இரகுநாதன் ஏற்புரை வழங்குகிறார்.

கூட்டம் மாலை 6 மணியளவில் நிறைவுற்றது.

புதிய செயற்குழு பற்றிய விபரத்தை விரைவில் இத் தளத்தில் காணலாம்.

Read Full Post »

>வண்டினம் ரீங்காரிக்கவில்லை
வாகனங்கள் இரையவில்லை
வீதியில் மனிதரில்லை
சந்தடி ஏதும் இன்றி
எங்கணும் அமைதி ஓச்சல்.

புலர்ந்ததெனச் சேவல் கூவவில்லை
பேடுகள் கதகதக்கும் கூட்டினுள்ளே
அடையெனப் பொய்யாய் சிறகு மூடி
அடங்கியே கிடந்தன.

காகங்கள் கரையவில்லை
குருவிகள் கத்தவில்லை
குயில்களும் இசைக்க மறந்து
துயில் நீங்க மறுத்துப் படுத்தன.

நாய்கள் குரைக்கவில்லை
நாரைகள் ஒளிந்த இடம்
எங்கெனப் புரியவில்லை.
சோவெனும் காற்றின் ஓசை
கேட்பதற்கு யாருமில்லை.

புள்ளினம் விழிக்கவில்லை
புலரும் வேளை வந்த போதும்
பள்ளி செல்லும் சிறுவர் கூட்டம்

பாதையில் இல்லவேயில்லை,

ஆதவன்முடங்கிக் கிடந்தான்
மஞ்சினைப் போர்வையாக்கி
முகிலினுள் வெக்கை உண்டா?

மலையகக் குளிரில் மரத்து
‘எங்கணும் கண்டதில்லை இத்தனை குளிரை’
என்றனன் நெருப்புக் குழம்பை
வயிற்றினில் நிறைத்து வைத்தவன்.

அன்டாடிக்கா பனிப் பாறைகள்
சைபீரியா குளிரையும் கண்டதில்லையோ
டொரன்டோவும் பீற்றர்ஸ்பேர்க்கும்
போய் வருவது மறந்து போயிற்றோ?

நித்தமும் சுற்றுலா போவோன்
இவ்விடம் முடங்கியடங்கி விழித்த வேளை…

அலைகளை மேவிஎழுந்தான்.
அடிவானம் சிலிர்த்து மகிழ்ந்தது
மீனவர் வாடி திரும்ப வழியும் கணடனர்
கடற்கரை ஓரம்
மெல்லென எட்டிப் பார்த்தான்
அறுகம்பே என பெயர் காதில் விழுந்தது.

ஆறுமுகம் குடா. எமது கடலோரம்
அறுகம் பே ஆன செய்தி தெரிந்தபோது
களிகொண்டெழுந்த சூரியன்
துயர் மூழ்கி ஒளிந்து கொண்டான்
மேனி அடங்க.

புகைப்படங்களும் வரிகளும்:-
எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »

>நுவரெலியா நகருக்கு சென்ற போது மொபைல் போன் கமராவில் எடுத்த சில படங்கள் இவை.

மஞ்சு மூடி மலைகள் ஒழிந்து கொண்ட நேரமல்ல.
சூரிய ஒளியில் பிரகாசிக்கிறது மலை அடிவாரம்.
தேயிலைச் செடிகள் நிரை நிரையாக..

பாதை ஓரத் தேயிலைத் தோட்டம்

டிவோன் நீர் வீழ்ச்சிக்கு அருகில்
சென்ட் கிளயர் தேயிலைத் தோட்ட வாயில்.
அதன் வாயிலில் வாய் ஒடுங்கிய பெரிய பொயிலர்.
முன்னைய நாள் தேயிலை பக்டரிகளில்
பயன்படுத்தியதாம்.

பழைய காலங்களில் தேயிலையைப் பதப்படுத்த…

நேர் எதிரே ஒரு பாலம்.
அங்கிருந்து மறுபக்கம் பார்த்தால்
பாய்நதோடும் நீரும் சலசலப்பு ஓசையும்.
சென்ட் கிளயர் நீர் வீழ்ச்சி.

டிவோன் நீர் வீழ்ச்சி

மேகம் மூடிய மலைகள்.
மலையோரம் வளைந்தோடும் பாதைகள்.
கிடு கிடு பள்ளத்தாக்கில் துள்ளிக் குதித்து
சரிந்தோடி சாகசம் காட்டும் நீர்வீழ்ச்சி.
எத்தனை இன்பம் வைத்தாய் என்நாட்டில்.

சென்ட் கிளயர் நீர் வீழச்சி.

பாய்ந்து குதிக்கவில்லை.
பரந்து அகலக் கால் பரப்பி
பவ்வியமாய் தலை குனிந்து
பரவசமாய் சாய்ந்து இறங்குகிறாள்
சென்ட் கிளயர் நீர் வீழச்சி.

காதலர் சறுக்கு வீழ்ச்சி

நெடுந்தொலை தூரத்தில் அப்பாவியாக
வான் முட்டக் கை நீட்டி நிற்குமிவள்
செய்த கொடும் செயல் அறிவீரோ?

கைகோத்து கனிமொழி பேசி மலையேகி
இவளருகில் வந்தபோது
கன்னியவள் கால் சறுக்கித் தடுமாற
தன்மடியில் வீழ்த்தி தலைசிதறடித்தாள்.
கண்ணே உன்னோடு இணைவன் நானும் என
தானே தன் கால் சறுக வைத்து வீழ்ந்தானாம்.
வீழ்ந்தவள் கை பிடித்தானோ?
மறு உலகில் மணம் முடித்தனரோ?

மலையேறப் படிகளில்லை
குறும்பாறை வழி செல்லக்
கால்களு்க்கு வலுவில்லை.
காதலர் கதை கேட்டு மனம்சோர
எதுவுமே முடியவில்லை…

சறுக்கி விழுந்தனரோ
கை கோத்துப் பாய்ந்தனரோ
இல்லையேல் Lover’s Leap பெயரெதற்கு
என்றெல்லாம் இடக்காகக்
கேள்வி எழுப்பினால்
விடையளிக்க நான் ஆளில்லை.

இனியொரு இனிய காட்சி.
நுவரெலியா நகரினை
பறவையின்  பார்வையாக
சாந்திபுர குன்றின் உச்சியிலிருந்து
காணும் காட்சி.

பறவையின் பார்வையில் நுவரெலியா

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>மிக வித்தியாசமான நூல் வெளியீடு அது. வெளியீட்டு விழா என்று கூட நான் சொல்லவில்லை. வெளியீடு என்றேன். விழாவாகக் கோலங் கொள்ளவில்லை.கனதியான கருத்தரங்கமாக உருக்கொண்டது.

போற்றலும் பொய்ப் புழுகும், மாலையும் மங்கல விளக்கும், விசேடப் பிரதியெனப் பேரிட்டு மேடையில் பணங் கறத்தலும், போட்டோவில் புன்சிரிக்கும் அதிதிகளுமாய் நாற்றமெடுக்கும் விழாவல்ல இது.

காலங்காலமாய் சடங்குச் சகதியில் சிக்கித் திணறும் விழாக்களுக்கு மாற்றாக தெளிவான நோக்கத்துடனானது. தீர்க்கமான கருத்துக்களுக்கு இடமளித்து, குற்றங் காண்பதை திரையிட்டு மேவாது சுதந்திரமாய் கருத்துரைக்க வைத்த காத்திரமான கூட்டம் இது.

கூடலில் ஆர்வலர்கள்.

கூடல் என்று கூறலாம் போலிருக்கிறது. ஏனெனில் தலை மேசையில் இருப்பவர்கள் மட்டுமின்றி கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்வலர்களும் கருத்துரைக்க இடமளித்ததால் கூட்டம் கூடலாயிற்று.

இலக்கியத்தில் நாட்டமுடைய சிலரின் கூடல் எனலாம். முக்கியமாக சிறுகதைத் துறையில்.

மேலும் சிலர்

50 வருடங்கள் நீளும், நீண்ட படைப்புலகமெனும் காலவெள்ளத்தில் தளாராது நீந்திப் பயணிக்கும் ஒருவரது 9தாவது சிறுகதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா.

நூலாசிரியர் நீர்வை

பொன்னாடை, மலர் மாலைகள், பூச்செண்டு, நூல் திணித்தல் எதுவுமில்லை. வரவேற்புரை, நன்றியுரை போன்ற நித்தியச் சடங்குகளும் கிடையாது.

முக்கியமான கருத்துரைகளைச் செய்தவர்கள் மாணவர்களாகும்.

மாணவ ஊடகவியலாளர் ரவிவர்மன்

பள்ளி மாணவர்கள் அல்ல.

மாணவ ஊடகவியலாளர் எஸ்.சில்மியா

இலக்கியப் படைப்புகளோடும், செய்திகளோடும் உறவாடுபவர்கள். மற்றவர்களைச் சிந்திக்க வைக்க தமது பேனாவோடு எதிர்காலத்தில் உலா வரப் போகிறவர்கள்.

மாணவ ஊடகவியலாளர் ரகுவரன்

ஆம் ஊடகக் கல்வித்துறை மாணவர்கள்.

மாணவ ஊடகவியலாளர் வீ.முகிலன்

ஊடகத் துறைக் கல்லூரியின் விரிவுரையாளரான தேவகௌரியின் மாணவர்கள் அவர்கள்.

ஊடகக் கல்லூரி விரிவுரையாளர் தேவகெளரி

ஆசிரியரின் நெறியாள்கையானது யார் பேசுவது, எப்பொழுது பேசுவது எவ்வளவு நேரம் பேசுவது போன்ற பொதுவிடயங்கள் குறித்தேயன்றி எதைப் பேசுவது, எப்படிப் பேசுவது என அவர்கள் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்கவில்லை எனத் தெரிகிறது.

தலைமை ஏற்று காத்திரமான உரை ஆற்றியவர் பேராசிரியர் சபா ஜெயராசா ஆகும்.

தலைமையுரை பேராசிரியர் சபா ஜெயராசா

கூட்டத்தை ஆரம்பித்து வைத்து சில வார்த்தைகள் பேசியவர் தினகரன் பிரதம ஆசிரியரான திரு. சிவா சுப்பிரமணியம்.

தினகரன் ஆசிரியர் சிவா சுப்பிரமணியம்

மாணவர்களின் கருத்துரைகளை அடுத்து விரிவான கருத்துரை வழங்கியவர் பிரபல எழுத்தாளரான திக்குவல்லை கமால்.

கருத்துரை திக்குவல்லை கமால்

இதைத் தொடர்ந்து பார்வையாளர்களின் சுருக்கமான கருத்துரைகள் இடம் பெற்றன.

மற்றொரு பிரபல எழுத்தாளரான இக்பால் கருத்துரை வழங்கினார்.

கவிஞர் இக்பால்

கே.விஜயன், எம்.கே.முருகானந்தன் போன்ற சிலரும் கருத்துரைகள் வழங்கினர். அவர்கள் கமராவில் சிக்கவில்லை.

நூலாசிரியர்  நீர்வை பொன்னையன் சுருக்கமான பதிலுரை அளித்தார்.

நீர்வை பொன்னையன்

தலைமை ஏற்ற பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் முடிவுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு மையத்தில் (WERC) சென்ற ஞாயிறு 24.10.2010 மாலை 4.30 முதல் மாலை 6.45 வரை இக் கூட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் சபா ஜெயராசா

நூலில் அடங்கியுள்ள சிறுகதைகளும் பின்னுரையாக ‘நீர்வையின் படைப்புகளும் சமூக இயங்குதளமும்’ என்ற தலைப்பிலான எம்.கே.முருகானந்தனின் கட்டுரையும் பொருளடக்கம் பக்கத்தில் அடங்கியுள்ளன.

நூலின் பொருளடக்கம்

கூட்டத்தில் ஆற்றிய உரைகள் எங்கே என்ற கேள்வி எழுகிறதா? Voice Recording ஆக என்னிடம் உள்ளன. அவற்றைப் பதிவேற்றும் வழி எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அல்லது இலக்கியக் கூட்டங்கள் பற்றி மிகச் சிறப்பான தகவல் கட்டுரைகளை பத்திரிகைகளில் தரும் மா.பா.சி (மா.பாலசிங்கம்)  எனது அருகில் இருந்து விரிவான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். அதற்குக் காத்திருப்போம்.

ம.பாலசிங்கம்

மல்லிகை ஒக்ரோபர் இதழில் அவர்தான் அட்டைப் பட நாயகன். அவருக்கு வாழ்த்துக்களும், முற் கூட்டிய நன்றிகளும் உரித்தாகுக.

Read Full Post »

« Newer Posts - Older Posts »