Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புத்தாண்டு வாழ்த்து’ Category

என்ன சொல்ல என்ன சொல்ல
இந்தப் புத்தாண்டில்
வருடா வருடம்
சொல்லி சொல்லி
கேட்டு கேட்டு
அலுத்தே போனது
இன்னும் என்ன
சொல்ல இருக்கு
சொல்லாததையா
சொல்லப் போறன்.

 

DSC05675-001 

கற்பனைக் கோட்டைகள்
கனவுகள் புலரும் வரை
புலர்ந்த பின்
வாழ்க்கை ஓடும்
வழமைபோல
சிரிப்புகள் அழுகைகள்
சீண்டல்கள் சினப்புகள்
நம்பிக்கைகள் அவலங்கள்
வெற்றிகள் தோல்விகள்
பெருமைகள் பொறாமைகள்
புதிதாக என்ன இருக்கிறது
எல்லாமே தொடரத்தான் போகிறது

 DSC05651-001

இருந்தும் ஒரு நம்பிக்கை
நாளை மறுநாள்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வருடமும்
புலர்வதும் பொலிவதும்
எமது கைகளில்தான்
எதிர்கொள்வோம் நம்பிக்கையுடன்
இந்த 2014 லையும்

SDC12511-001

எம்.கே.முருகானந்தன்

00.0.0.0.00

Read Full Post »

புது வருட ஆரம்பக் கொண்டாட்டங்களும், குதூகலங்களும்
வெடியோசைகள் மெளனித்தித்தது போல போல அடங்கிவிட்டன.
திங்கள், செவ்வாய் என வேலை நாட்கள் தொடங்கிவிட்டதால்
எல்லோரையும் பிஸியாக்கிவிட்டிருக்கும்.
இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைத்த புதுவருட வாழ்த்துக்களை
ஒருமுறை மனத்தில் நினைவூட்டிப் பார்க்கலாமே?

யாருடைய புதுவருட வாழ்த்து உங்கள் மனதிற்கு இதமாக இருந்தது?

அதிகாலை கண்விழிக்க முன்னரே காதருகே Happy New Year Darling கிசுகிசுப்புடன் புது வருடம் பிறந்திருக்குமே! மற்ற வேலைகளை எல்லாம் மறந்து வாழ்க்கைத் துணையைக் கணகணப்புடன் கட்டியணைக்க வைத்திருக்குமே. அந்த வாய்மொழி வாழ்த்து பிடித்ததா?

கன்னத்தில் முத்தமிட்டு “Happy New Year Dad” என உங்கள் செல்லக் குட்டி வாழ்த்தியிருக்குமே! இதைவிட வேறென்ன வேண்டும் என மனத்தை நெகிழ வைத்திருக்குமே.

டெலிபோன் கிணுகிணுக்க எரிச்சலுடன் தூக்கம் கலைந்து நேரத்தைப் பார்த்தால்  அதிகாலை 5 மணி. இந்த நேரத்தில் யார் என ரிசீவரைத் தூக்குகிறீர்கள்.

“எல்லா செளபாக்கியங்களும் கிட்டி, இந்தப் புதுவருடத்திலும் இனி வரும் காலங்களிலும் நீ நல்லா வழ வேணும்.”. காலையில் கோயிலுக்கும் போகும் அவசரத்திலும் மறக்காமல் வாழ்த்துச் சொன்ன அம்மாவின் வாழ்த்து உங்களை மகிழச்சியில் ஆழ்த்தியதா?

கிக்கீ கிக்கீ என குருவியின் அழைப்புப்போல விடாது இசையாக ஒலித்துக் கொண்டே நண்பர்களும் உறவுகளும் அனுப்பிய வாழ்த்துக்களால் நிரம்பி வழியும் SMS செய்திகள் பிடித்திருந்தனவா?

கணனியைத் திறந்தால் Facebook கிலும், Twitter, Google +, e mail கிலும் வந்திருக்கும் வாழ்த்துக்களும் செய்திகளும் உங்களுக்குப் பிடித்திருக்கும்.

இப்படிப் பல வாழ்த்துகள் கிட்டியிருந்தாலும் அதில் ஏதாவது ஒன்று உங்கள் மனதுக்கு நெருக்கமானதாக மகிழ்ச்சியில் ஆழத்துவதாக அமைந்திருக்கும். அது யாருடையது?

இதே போல எனக்கும் பல வாழ்த்துகள் கிடைத்திருந்தன.

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், இலக்கிய வட்டத்தினர், ஊடகத் துறை நட்புகள் எனப் பல. பலவிதமாக, பல வடிவங்களில்..

பல நோயாளிகளிடமிருந்து கூட..

அதில் இவரது வாழ்த்து மடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவர் ஒரு மிகவும் வயது முதிர்ந்தவர். 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சென்ற வருட கிருஷ்மஸ்க்கு அடுத்த நாள்தான் தனது 87வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருந்தார்.

இந்த வயதிலும் தானே கடைக்குப் போய் இந்த வாழ்த்து மடலை எனக்கு வாங்கி அனுப்பியிருக்கிறார். இவர் தானே சென்று வாங்கிய விடயம் நேற்று அவரது மகள் தனது மகனை சிகிச்சைக்காகக்  கொண்டு வந்தபோதுதான் தெரிந்தது.

“உங்கள் அப்பாவிற்கு எனது வாழ்த்தையும் அவரது வாழ்த்து மடலுக்கு நன்றியையும் தெரிவியுங்கள்” என்றேன்.

“தானாகவே போய் வாங்கிப் போட்டிருக்கிறார் போலை. அவர் அனுப்பியது எங்களுக்குத் தெரியாது. அப்படி ஒரு அன்பு அவருக்கு உங்கள் மேல்” என்றார்.

எனக்குப் புல்லெரித்ததது.

பணத்தினால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற மமதையுடைய காலத்தில் தனியார் மருத்துவனான என்னை நினைத்து புது வருட வாழ்த்து அனுப்பியிருக்கிறார். அதில் தனது நடுங்கும் கைகளால் வாழ்த்து எழுத எவ்வளவு சிரமமப்பட்டிருப்பார்.

வாழ்த்து மடலில் அவரது பெயரை மட்டும் மறைத்திருக்கிறேன்.

அவ்வளவு ஆழ்ந்த அன்பு அவருக்கு இருந்திருக்கிறது. சுமார் 32 வருடங்களாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவானாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருந்தது.

இப்படி எத்தனை மகிழ்ச்சிகள் குடும்ப மருத்துவனாக இருப்பதில்.

உங்கள் அனுபவங்கள் எப்படி?

0.0.0.0.0.0.0

Read Full Post »

>
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்த்துச் சொல்வதில் கூட ஒரு சிக்கல் தமிழர்களாகிய எங்களுக்கு இருக்கிறது. தைப்பொங்கல் புத்தாண்டா, சித்திரை வருடம் புத்தாண்டா என்ற கேள்விக்கும், ஆராய்ச்சிகளுக்கும் என்றுமே குறைவில்லை.

தொடர்ந்து கொண்டே இருக்கும் விவாதம் இது. ஆராச்சியாளர்களும் இறுக்கமான இனப் பற்றாளர்களும் இவை பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் கடந்த முப்பது ஆண்டுகள் வரை எல்லா சந்தோசங்களையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள் எமது மக்கள். பண்டிகைகளைக் கொண்டாடாது தலைதலை முறையாக சோகத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தது எமது இனம்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு. துன்பங்கள் இருந்த போதும் அதனையும் மீறி மனத்தில் மகிழ்ச்சி பெற அவாவ வேண்டும். தாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இல்லையேல் மனச்சோர்வு பிடித்த சமூகமாகத் தாழ்ந்துவிடக் கூடிய அபாயம் உண்டு என்பதை மனோவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எனவே வாழ்த்துங்கள்!

வாழ்த்திக் கொண்டே இருங்கள்.

உங்கள், எங்கள் மனதுகளில் தோய்ந்திருக்கும் இருண்ட பக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வெளிச்சத்திற்கு வாருங்கள்.

முதலில் உங்கள் உள்ளத்தில் ஒளியை ஏற்றுங்கள்.

ஒளி பரவட்டும்.

உங்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் பரவ விடுங்கள்.

உதவிக் கரம் நீண்டுவதுடன் நின்றுவிடாது அவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்யுங்கள். இறுகிக் கிடக்கும் முகத்தின் தசை நார்கள் இறுக்கம் தளர்ந்து இலேசாகும் போது மனமும் இறக்கை கட்டி வானில் பறக்கும்

மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்கப் பாடுபடுவோம். அதற்காக உழைப்போம்.

இது பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் பண்ணி‘மகிழ்வுட்டும் தொற்று நோய்’ என்ற எனது கட்டுரையை படித்துப் பாருங்கள்

இதனைப் பற்றிய ஆங்கில ஆராச்சிக் கட்டுரையின் சுருக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்.

Read Full Post »

>

துளிர்த்து எழுதலின் சுகம்
சொல்லித் தெரிவதில்லை.
பனியில் நனைந்து
பசுமையில் குளிர்ந்து
பசளையின் செறிநிலத்தில்
முளைவிடுதலில்
ஆச்சரியம் ஏதுமில்லை.
துளிர்த்து எழுதலின் சுகம்
அங்கு இருக்கவே செய்கிறது.
உயிரூட்டும்
மழைத்துளியில்
தரிசு நிலத்திலும்
உயிர் பிறக்கவே
செய்யும்.
ஆண்டவன்
இட்ட பிச்சை அது!
தகிக்கும் சூரிய
வெம்மையில்
தீய்ந்து
வரண்ட மண்ணில்
துலா ஓடிப் பாய்ந்த
சிலதுளி நீரிலும்
விதைகள் முளைக்கவே
செய்யும்
மனித உழைப்பின்
மகிமை அது!
ஹிரோசிமாவின்
நச்சுக் குண்டுகள்
எரித்தழித்த
மண்ணிலும் கூட
உயிரின் ஓலம்
கேட்டதில்லையா?
ஓலங்கள் அடங்கி
இன்று
ஆனந்த கீதங்களும்
பிறந்தனவே!
நம்பிக்கையும்
உறுதியும்,உழைப்பும்
திடசங்கற்பமும்
இருந்தால்
மனித நிண
வெட்கை
அனலாய் வீசும்
சுடுகாட்டிலும்
துளிர் முளைக்கும்.
துளிர்த்து எழுதலின் சுகம்
நிஜமாய் அங்கிருக்கும்.
சுயமான சுகம்
வெற்றியின் சுகம்
அது! வேகத்தின் சுகம்
வீரத்தின் சுகம்
சுட்டெரிக்கும்
அழிவிலிருந்து
மீண்டெழும் சுகம்
சொல்லித் தெரிவதில்லை.
சொல்லிப் புரியப்போவதும்
இல்லை.

– அழகு சந்தோஷ்-

Read Full Post »