Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புன்னகை’ Category

>தொற்றுவன யாவை என்று உங்களைக் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்?

நோய்கள் என்பதுதானே!

தடிமன், காய்ச்சல், டைபொயிட், சயரோகம் எனச் சொல்லி மாளாது. எயிட்ஸ் என்றால் கெடி கலங்கும், சிக்கன் குன்யா, டெங்கு என்ற பெயர்களைக் கேட்டாலே தூர விலகிச் செல்லச் சொல்லும்.

ஆம் தொற்றுநோய்கள் என்றாலே துன்பம்தான்.

“ஆனால் மகிழ்ச்சியைக் கொடுக்கும் தொற்றுதல் ஒன்று உண்டு. யார் என்று தெரியாதவர்களையும் கூட அரவணைக்கும். அத்துடன் இன்புறுத்தவும் செய்யும். ஆனால் அது கிருமிகளால் தொற்றுவதில்லை.”

அது என்ன?

புன்னகை!

நீங்கள் புன்னகைத்தால் முழு உலகமுமே உங்களுடன் இணைந்து புன்னகைக்கும். முழு உலகமும் புன்னகைக்கும் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை என்ற போதும் தொற்றும் என்பது உண்மையே.அறிமுகமானவர்களுக்கு மட்டுமின்றி முற்றிலும் அந்நியமானவர்களுக்கு கூடத் தொற்றும் ஆற்றல் கொண்டதுதான் புன்னகை.

இவ்வாறு சொல்வது வெற்றுக் கற்பனைக் கருத்து அல்ல. ஆய்வு ரீதியாக நிறுவப்பட்டது. மிகப் பிரபலமான பிரமிங்ஹாம் மருத்துவ ஆய்வின் ஒரு பகுதிதான் இது. நம்பிக்கைக்குரிய BMJ மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் புன்னகை மற்றவர்களுக்குத் தொற்றுவது உண்மை. அதை நீங்கள் நிச்சயம் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுறுவதற்கு காரணம் என்ன?

நீங்கள்தான் காரணமா?

உங்கள் செய்கைகளும், எண்ணங்களும், பழக்கங்களும் மட்டும் உங்களை மகிழ்வுறுத்துகிறதா?

இல்லை உங்கள் உறவினரும் நண்பர்களும் காரணமாகலாம்.

அதுமட்டுமல்ல உங்களுக்கு அறிமுகமே இல்லாதவர்களும் காரணமாகலாம் என்கிறார்கள்.

சமூக ஒன்று கூடல்களிலும், பொது நிகழ்வுகளிலும் யாரைச் சுற்றிக் கூட்டம் கூடுகிறது. அவற்றின் மையப் புள்ளியாக இருப்பவர்கள் யார்?

மகிழ்ச்சியானவர்கள்தான்.

அவர்களைச் சுற்றியே மக்கள் மொய்க்கின்றனர். மகிழ்வு அனைவரையும் காந்தம் போல தொற்றிக் இழுக்கிறது. மகிழ்வுடன் இருப்பவர்களுக்கு மகிழ்வோடிருக்கும் ஏனையவர்களின் நட்புகள் நிறையக் கிடைக்கின்றன. மகிழ்ச்சியான நண்பர்களும், சகோதர சகோதரிகள் அருகிருப்பதும் மேலும் விரைவாகப் பரவச் செய்யும். நண்பர்களுக்கு மட்டுமின்றி நண்பர்களின் நண்பர்களுக்கும் படு வேகமாகப் பரவக் கூடியது இது.

எனவே தொற்றுநோய்தானே?

மகிழ்ச்சியுள்ள கணவன் அல்லது மனைவி மகிழ்ச்சியைக் கடத்த உதவுவார்தான். ஆயினும் நண்பர்கள் அளவிற்கு துணைவரின் மகிழ்ச்சி வராது என்கிறது ஆய்வு.

ஆனால் எதிர்ப் பாலாரிடையே பரவுவது ஒரே பாலாரைவிடக் குறைவானது. அதாவது நண்பனுக்கு நண்பன், நண்பிக்கு நண்பி மேலாகும்.

சந்தோசமான ஒவ்வொரு நண்பனும் உங்கள் மகிழ்ச்சியை 9 சதவிகிதத்தால் உயர்த்துகிறார்கள். எனவே ஒவ்வொரு நண்பன் அதிகரிக்கும் போதும் நீங்கள் அந்த நண்பர் குழுமத்தின் மத்தியில் இருப்பதாக உணர்வீர்கள். அதனால் அலையலையாக மகிழ்வைப் பெற வாய்ப்புக் கிட்டும்.

ஒவ்வொரு அழுமூஞ்சி நண்பனும் உங்கள் மகிழ்ச்சியை 7 சதவிகிதத்தால் குறைக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே அத்தகைய நண்பர் இருந்தால் அவரை விட்டு விலகுவது நல்லது என அவ் ஆய்வு பரிந்துரைக்கவில்லை.துன்பம் பொதுவாக தனிமையையே நாடுகிறது. துன்பம் வரும்போது மற்றவர்களுடன் பேசப் பிடிக்காது. மற்றவர்களுடனான நெருக்கத்தைத் தவிர்க்க முனைகிறது. இதனால்தானோ என்னவோ மகிழ்ச்சி தொற்றுவது போல துன்பம் பரவுவது இல்லை.

“துன்பம் சேர்கையில் யாழிசைத்து இன்பம் சேர்க்க மாட்டாயா” எனப் பாடியது சோகத்தின் தனிமையில் மற்றெதையும் விட இசை மனத்திற்கு இதமாக இருக்கும் என்பதை ஞாபகம் ஊட்டுகிறது அல்லவா?

மனிதர்களுக்கு மனமகிழ்வைத் தரும் மற்றொரு விடயம் பணம் சேர்வதாகும். அதனால்தானே மனிதர்கள் பணத்தின் பின் பேயாகப் பறக்கிறார்கள்.

ஆனால் அது தரும் மகிழ்ச்சியானது புன்னகைக்கும் நண்பனுடன் ஒப்பிடும்போது அற்பமானது.

ஆனால் இதை உணராதவர்களே அதிகம். பணத்திற்காக நட்புக்களையும் உறவுகளையும் தூக்கி எறிபவர்கள்தான் ஏராளம்.

Bayon: smiling faceகம்போடியாவின் சிற்பத்தை பாருங்கள். இந்தச் சிற்பத்தில் உள்ள அமைதியான முறுவல் எல்லோரையும் கவர்வது அதிசயமல்லவே.

Bayon: smiling face

‘மகிழ்வுடன் இருப்பது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்துடன் அது உளநெருக்கீட்டை அதிகரிக்கச் செய்யும் ஹோர்மோன்கள் சுரப்பதைக் குறைக்கிறது’ என அன்ரூ ஸ்டெப்டோ என்ற உளவியல் பேராசிரியர் கூறுகிறார். அவர் University College London யைச் சேர்ந்தவராவார்.

மகிழ்வுடன் இருப்பதற்குக் கிடைக்கும் போனஸ் இதுவெனலாம்.

மகிழ்வோடு இருங்கள். மகிழ்ச்சியோடு உள்ளவர்களின் நட்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சி பரந்து விரிந்து பரவும்.

ஆனால் மற்றவர்களை அழிப்பதிலும், ஒடுக்குவதிலும், அடிமைப்படுத்துவதிலும் மகிழ்வுறுவது தவறென்று சொல்லவும் வேண்டுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

Read Full Post »