Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புரிந்துணர்வு’ Category

> “இரண்டு நாளாகக் காய்ச்சல், மூட்டு மூட்டாக வலிக்கிது. சாப்பாட்டைக் கண்டால் ஓங்காளமாகக் கிடக்கு..”

என்று சொல்லிக் கொண்டு வந்தவர் திரும்பி மனைவியைப் பார்த்தார்.

“வேறை என்னப்பா சொல்லுமன்.” என்று மனைவிக்கு ஆணை பிறந்தது.

சொன்ன வார்த்தைகளில் கட்டளை இருக்கவில்லை என்றபோதும் தொனியில் அப்பட்டமாகத் தெறித்து விழுந்தது.

“சத்தியும் இருக்கு. தொண்டை அரிப்பு, கொஞ்சம் இருமலும்” என்றாள் மனைவி.

“வேறை என்ன சொல்லுமன்” மீண்டும் அவர்தான்.

“உடம்புக்கு முடியாமல் படுத்துக்கிடக்கிறார்… சாப்பிடுறாரும் இல்லை….காய்ச்சல் வாய்க்குத் தோதா உப்புக் கஞ்சி காச்சிக் கொடுத்தும் வேண்டாம் என்கிறார்.”

அப்பதான் புரிந்தது!

வருத்தம் அவருக்கல்ல! மனைவிக்கு என்பது.

அவரை அருகில் உள்ள கதிரையில் உட்கார வைத்து மிகுதி விபரங்களையும் கேட்டுக் குறித்துக் கொண்டேன். பெரும்பாலும் மனைவியே மறுமொழிகளை சொன்னாள். விபரமாகவும் தெளிவாகவும் சொன்னாள்.

நோய் கடுமையாக இல்லை. ஆனால் விளம்பரமாகச் சொல்ல முடியாத மங்குளி போலிருக்கிறது. அதனால் மனைவியே ஸ்பீக்கராகச் செயற்படுகிறார் என்றவிதமான புரிதல் எனக்கு ஏற்பட்டது.

காய்ச்சல் இருக்கிறதா எனப் பார்க்க தேர்மாமீற்றரை வாயுக்குள் வைத்தேன். அசமந்தமாக அக்கறையற்று இருந்தார். விழுந்து உடைந்து விடுமே எனப் பயம் வந்தது.

“விழாமல் பிடித்துக் கொள்ளுங்கோ” என்று சொன்னபோதும் அவரது கை மரக்கட்டையாக அசையாது நின்றது. மனைவியே பிடித்துக் கொண்டாள்.

பரிசோதனைக்காகக் கட்டிலில் படுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கட்டில் சற்று உயரமாதலால் சிறிய ஸ்டுலில் கால் வைத்து ஏற வேண்டும். எழுந்து நின்ற அவர் எதுவுமே பேசாமல் ஸ்டூலைப் பார்த்தார். சின்ன பாரமற்ற ஸ்டூல். சற்று காலால் நகர்தினால் போதும் சரியான இடத்திற்கு வந்து விடும்.

மனைவி பாய்ந்தோடி வந்து ஸ்டூலை நகர்த்தி அவர் ஏறுவதற்கு வசதியாக வைத்தார்.

“கவனமாகப் பார்த்து ஏறுங்கோ” சொன்னதுடன் நிற்கவில்லை. கையைப் பிடித்து ஏறுவதற்கு துணை நின்றாள். சரிந்து படுத்தவுடன் அவரது பட்டன்களைக் கழற்றி சேர்ட்டை ஒரு பக்கமாக ஒதுக்கி பரிசோதனைக்கு தயார்ப்படுத்தினாள்.

காய்ச்சலுடன் வயிற்றுப் பிரட்டலும் அதிகமாக இருந்ததால் மலவாயில் ஊடாக மருந்து வைக்க வேண்டிய தேவை இருந்தது.

விடயத்தைச் சொன்னதுதான் தாமதம் உடனடியாக அவரது உள்ளாடையை சற்று கீழாக விலத்தி, மலவாயில் தெரியும்படி குண்டித் தசைகளைப் பக்கமாக விலத்திப் பிடித்துக் கொண்டாள்.

நான் சப்போசிட்டரியை லாகுவாக வைத்துவிட்டேன்.

மிகுந்த அக்கறையும் ஆதரவும் பரிவுணர்வும் கொண்ட பெண் என்பது புரிந்தது. அத்தகைய புரிந்துணர்வுள்ள பெண்ணை மனைவியாகப் பெறுவதற்கு எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

திரைச்சீலை மூடித் திறக்கிறது. அடுத்த சீன் ஆரம்பமாகியது.

“சுருண்டு சுருண்டு படுக்கிறாள். வேலை ஒண்டும் பறியுதில்லை… என்னெண்டு பாருங்கோ”

உசாராக வந்த இவர் உட்கார்ந்த பல நிமிடங்களுக்குப் பின்னர்தான் அவள் வந்தாள். தள்ளாடியபடி விழுந்துவிடுவது போன்ற களைப்புடன்.

நல்ல காய்ச்சலும் சத்தியும். இவரிலிருந்து தொத்திய வருத்தம்தான். ஆனால் மேலும் சற்றுக் கடுமையாகத் தாக்கிவிட்டது.

காய்ச்சல் பார்க்கும்போது தானே தேர்மாமீட்ரைப் பற்றிக் கொண்டாள்.
கதிரையிலிருந்து கால்களை ஆட்டியபடி கொட்டாவிவிட்டார்.

நானும் நேர்சும் கையைப் பிடித்துத் தூக்கி கட்டிலில் ஏற்ற வேண்டியிருந்தது.

“கொஞ்சம் உசாரா ஏறுறதுதானே. டொக்டருக்கு கரைச்சல் குடுக்கிறாய்” என பின்னாலிருந்து அதட்டல்தான் வந்தது.

 “கட்டின காலம் முதல் இவள் இப்படித்தான் சின்ன நோயெண்டாலும் தூக்கிப்பிடிப்பாள்”

நாக்கு வரண்டு கிடந்தது. காச்சல் நேரத்தில் போதிய நீராகாரம் எடுக்க வேண்டும். இவள் எடுத்ததாகத் தெரியவில்லை.

“என்ன குடிக்கக் கொடுத்தனீங்கள்” விசாரித்தேன்.

“கிறீம்சோடாதான் குடிச்சவள்.”

“ஏன் உடம்புக்கு ஆதாரமாக ஹோர்லிக்ஸ், கஞ்சி ஏதாவது கொடுத்திருக்கலாமே” என விசாரித்தேன்.

 “அவள் எங்கை எழும்பிக் கரைக்கிறாள், சோம்பல்காரி, போர்த்துக் கொண்டு படுத்திட்டாள்”

நோயாளியைப் பராமரிக்கும் அவரின் அக்கறையை என்ன வார்த்தைகளில் பாராட்டுவது.

சேலைன் ரிப் கொடுக்க வேண்டி வந்தபோது அருகில் ஆதரவாக இருக்க அவரில்லை.

“இவளோடை இருந்தால் எனக்குக் கொலைப் பட்டினிதான். நீங்கள் கொஞ்சம் கவனியுங்கோ. நான் பக்கத்துக் கடையிலை ஏதாவது சாப்பிட்டு ரீயும் குடிச்சிட்டு வாறன்”

அசந்து கிடந்த அவள் மெதுவாகக் கண்ணைத் திறந்தாள். “கவனமாகப் பார்த்துப் போங்கோ. ஓட்டோ, மோட்டார் சைக்கிள்கள் கண்மண் தெரியாமல் ஓடி வந்து தட்டிப் போடும்.

பெண்ணே நீ படுக்கையில் கிடந்தால் என்ன பரலோகம் போனால் என்ன எனக்கு என் சொகுசு முக்கியம் என்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

புறப்பட்ட அவர் காதில் விழுந்ததோ தெரியவில்லை. அவர் பறந்து போனார்.
அப்பிராணியான அவள் கிடந்து உழன்றாள்.

எதற்கும் குறை கண்டு, குற்றம் சாட்டி, தொழிலாளியில் அக்கறை எடுக்காத முதலாளிபோல அவர் தன் வயிறு நிறைக்கப் போகிறார்.

நீங்களும் இப்படியான கணவனாகத்தான் இருக்கப் போகிறீர்களா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

வீரகேசரி வாரவெளியீடு 12.12.2010 வெளியான எனது கட்டுரை

முதிய தந்தையின் துயரக் குரல் பற்றிய எனது முன்னைய பதிவுக்கு

‘எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ’ துயரக் குரல் பின் கதவில் கேட்கிறது.

0.0.0.0.0.0

Read Full Post »