>
நீங்கள் ஏன் புளக்கிங் செய்கிறீர்கள்?
இவ்வாறு ஒரு கேள்வி
எழுப்பப் பட்டால் ஆயிரக்கணக்கான காரணங்கள் சொல்லப்படக் கூடும்.
ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை முன் வைப்பார்கள்
சொந்தக் காரணங்களுக்காக

ஆனால் எம்மில் பலரும் ஏதோ ஒரு விதத்தில் தமது மகிழ்ச்சிக்காக, சுயதிருப்திக்காகவே
எழுதுகிறார்கள்.
நண்பர்களின் தொடர்புகளைப் பேணுவதற்கும் வளர்ப்பதற்காகவும் எழுதுவதுண்டு.
தான் அறிந்த விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் பதிவிடுகிறார்கள்.
அறிவியல், தொழில் நுட்பம்,
கலை, இலக்கியம்,
சினிமா, நாடகம்
போன்ற பல்வேறு துறை சார்ந்த அனுபவங்களை பதிவிடுவதும் அதிகம்.
தமது கொள்கைகளைப் பரப்புவதற்காகவே பல பதிவுகள் உள்ளன.
இவை எதுவும் இன்றி சிலர் தமது புகழை வளர்பதற்காகவும் எழுதுகிறார்கள்.
இவை யாவுமே தமது சுய அடையாளங்களை காப்பதற்கான அல்லது தன்னில் உள்ள நான் என்ற உணர்வைத் திருப்திப்படுத்துவதற்குமான செயற்பாடுகளாகவே இருக்கின்றன.
இவற்றை சொந்தக் காரணங்களுக்கான (Personal) புளக்கிங் எனலாம்
வியாபார மற்றும் தொழில் ரீதியான
இதற்கு மாறாக சிலர் தமது தொழில் முயற்சியை வளர்பதற்காகவும் புளக்கிங் செய்வதுண்டு. உதாரணமாக நீங்கள் ஒரு தொழில் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் எனில் அதன் வளர்ச்சிக்காக பதிவுகளை ஏற்றக் கூடும். அல்லது அதன் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் முயற்சியாகவும் இருக்கக் கூடும்.
ஆயினும் அவ்வாறு செய்தால் அதனை தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லிவிடுவது நல்லது. இது வாசகர்களை தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லாமலிருக்க உதவும்.
எவ்வாறு இருந்த போதும் 1980 களின் நடுப் பகுதியிலேயே புளக்கிங் செய்வது ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. அந் நேரத்தில் பெரும்பாலும் ஊடகவியலாளர்களே எழுதினார்கள். பெரும்பாலும் தமது தனிப்பட்ட விடயங்களையே எழுத ஆரம்பித்தனர்.
ஆனால் இன்று எழுதப்படும் பதிவுகளின் உள்ளடக்கமும் பரப்பும் மிகவும் விசாலமானது.
தெளிவான நோக்கு வேண்டும்
காரணங்கள் எதுவாக இருந்தாலும் எழுத ஆரம்பிக்கும் போது எதை எழுதப் போகிறேன், யாருக்காக எழுதப் போகிறேன், எவ்வாறு எழுதப் போகிறேன் எனத் தெளிவான நோக்கம் இன்றி எழுதக் கூடாது.
சிலர் தமது பதிவுகளை ஆரம்பிக்கும்போது
‘இன்று எதை எழுதுவது என்று தெரியவில்லை…’
என்று தொடங்குவார்கள்.
இதைவிடத் தவறான அணுகுமுறை எதுவும் இருக்காது என்பது எனது கருத்தாகும்.

ஒரு நாள் ஒருவர் எழுதாது விட்டால் குடியா முழுகிப் போய்விடும்.
அவர் எழுதாவிட்டால் மற்றவர்கள் கவலையில் தற்கொலை செய்யவா போகிறார்கள்?
அதற்காக எழுத வேண்டியது மிக சீரியசான விடயமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.
சற்று ரிலக்ஸ்சாக மற்றவர்களுடன் உரையாடுவதற்கான பதிவாக இருப்பதிலும் தவறில்லை.
யாருக்காக, எத்தகைய பதிவு செய்யப்போகிறேன் என்ற தெளிந்த சிந்தனையுடன் எழுதுவது மாத்திரமின்றி அதை Labels ல் சொல்லிவிடுவதும் நல்லது.
மற்றொரு விடயம் சில பதிவர்கள் மிகச் சிறப்பாக எழுதுவார்கள். உள்ளடக்கம் சிறப்பாக இருக்கலாம். எழுத்துநடை வாசகர்களைக் கவர்ந்து இழுக்கலாம்.
இதனால் அவர்களது வாசகர் வட்டம் விரிந்து கொண்டே போகும். பாராட்டுக்கள் குவியும். அவர்கள் வாழும் பிராந்தியத்திலிருந்து மாத்திரமின்றி, அந்த நாட்டிலிருந்தும் உலகு எங்கும் இருந்தும் வாசகர்கள் கிடைப்பார்கள்.
எனவே தனது மதிப்பைக் காப்பாற்றுவதற்காக மேலும் சிறப்பாகப் பதிவிட முயற்சிப்பார்கள். இது பதிவின் தரத்தை உயர்த்த உதவும்.
ஆயினும் எதற்கும் ஒரு எல்லை உண்டு. தனது பெயரைத் தக்க வைப்பதற்காக தொடர்ச்சியாக அல்லது தினமும் எழுதியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுவது ஒரு ஆபத்தான கட்டம்.
இந் நிலையில் எழுதுபவற்றின்
உள்ளடக்கம், தரம் ஆகியன
களை இழந்து விடலாம்.

வாசகர்களது எதிர்பார்ப்பைப்
பூர்த்தி செய்ய முடியாத கட்டத்தை எட்டி,
அவர்களால் புறக்கணிக்கப்படும்
நிலைக்கு ஆளாகலாம்.
சில வில்லங்கங்கள்
இன்று புளக்கிங்கில் சில வில்லங்கங்கள் உண்டு. இன்று பலர் எழுதுகிறார்கள். அதனால் ஒரு புதிய விடயத்தைப் பற்றி எழுதுவது என்பது கஸ்டம். ஏனெனில் பலர் ஏற்கனவே அது பற்றி எழுதியிருக்கக் கூடும். எனவே மேலும் ஈடுபாட்டுடன் எழுத வேண்டிய நிலை உள்ளது.
சிறப்பான எழுத்து நடை, வாசிப்பதற்கு உகந்த பக்க கட்டமைப்பு ஆகியன அவசியம். புகைப்படங்கள், விளக்கப்படங்கள், வீடியோ போன்றவற்றை இணைக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். இதற்கான வசதிகள் பலரும் பயன்படுத்தும் blogspot.com, wordpress போன்றவற்றில் கிடைக்கிறது. கணனி அறிவு குறைந்தவர்களும் மிகவும் சுலபமாகக் செய்யக் கூடியதாக உள்ளது.
நம்பகத்தன்மை
அழகாகவும், புதிதாகவும், உள்ளடக்கச் சிறப்புடனும் பதிவிடுவதற்கு இணையத்தில் மேலும் தேடல்கள் செய்ய வேண்டி நேரிடும்.
அவ்வாறு தேடி வேறு பதிவுகளிலிருந்து
கருத்துக்களையோ படங்களையோ எடுத்தாள நேர்ந்தால்
அவை சரியான தகவல்கள்தானா,
நம்பகத்தன்மை உடைய பதிவுகள்தானா
என்பதை உறுதி செய்வது அவசியம்.
இது மிகவும் சிரமமானது.
ஏனெனில் இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்டது. எவரும் எதையும் எழுதிவிடலாம். யாரும் தடுக்க முடியாது. திரட்டிகள் சில கட்டுப்பாடுகளை வைத்திருந்த போதும் அவை எவரையும் முழுமையாக மறுக்கவோ மறைத்துவிடவோ முடியாத நிலைதான் உள்ளது.
சுயகட்டுப்பாடுகள்
சுய கட்டுப்பாடுகள் அவசியம்.
அத்துடன் கூடிய பொறுப்புணர்வுடன் எழுத வேண்டிய கடப்பாடு
ஒவ்வொரு பதிவாளருக்கும் இருக்க வேண்டும்.
சமூக நோக்குள்ள பதிவர்கள்தான் மற்றவர்களின் மதிப்பைப் பெற முடியும்.
வேறு பதிவுகளிலிருந்து பதிவுகளையோ, கருத்துக்களையோ, படங்களையோ எடுத்தாண்டிருந்தால் எவை எங்கிருந்து பெறப்பட்டவை என்பதைப் பதிவு செய்வது மிக முக்கியமானது.
அவற்றின் சுட்டிகளைக் கொடுப்பது மேலும் சிறந்தது.
இன்று பதிவர்கள் மட்டுமின்றி பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இணையத்திலிருந்து பெறப்படும் பல படைப்புகளை வெளியிடுகிறார்கள்.
சிலர் நன்றி இணையம் என குறிப்புப் போடுகிறார்கள்.
வேறு சிலர் அதையும் செய்வதில்லை.
எந்தப் பதிவிலிருந்து பெறப்பட்டது,
யாரால் எழுதப்பட்டது போன்ற தகவல்களை
மறைக்காது முழுமையாகத் தருவதுதான்
பண்பான செயலாகும்.
இணையத்தள முகவரிகளை அல்லது அதற்கான சுட்டிகளைத் தருவதே சிறந்தது.
அதுவே சட்ட ரீதியானதும் கூட.
அச்சும் இணையமும்
இணையத்தில் தவறாகவோ, கருத்து முரண்பாடுடனோ ஒருவர் எழுதினால் வாசித்தவர்கள் உடனடியாகவே கேள்வி எழுப்ப முடியும். மறுப்பாக எழுத முடியும் என்பது இணையத்தின் பலம் எனலாம்.

அச்சு ஊடகத்தில் இது மிகவும் சிரமமானது. திருத்தம் மறுப்பு ஆகியன அவற்றில் வெளியிடப்படுவது குறைவு.
வெளியிடப்பட்டாலும் நீண்ட காலதாமதம் எடுக்கும்.
அது போலவே தவறு நேர்ந்துவிட்டால்
உடனடியாக மன்னிப்புக் கோரவோ,
பதிவர்கள் தாமாகவே அப் பதிவைத் திருத்தவோ,
அன்றி முற்றாகவே நீக்க முடியும்
என்பதும் இணையத்திலேயே முடியும்.
அச்சில் போட்டால் அது நடக்கக் கூடிய காரியம் அல்ல.
ஒப்பீட்டளவில் பார்க்கும்போது இணையத்தில் எழுதுவதை, வாசிப்பவர் தொகை குறைவு.
அச்சு ஊடகத்தில் ஆயிரக் கணக்கில் வாசகர் தொகை இருக்கும்.
ஆனால் இணையத்தில் அதிலும் முக்கியமாக தமிழ் வாசகப் பரப்பில் பெரும்பாலும் நூற்றுக் கணக்கிலேயே இருக்க முடியும்.
அவ்வாறு இருந்தும் இணையத்தில் எழுதுவதில் கிட்டும் திருப்தி அச்சு ஊடகத்தில் கிடைப்பதில்லை.
இதற்கான முக்கிய காரணம் பதிவிடும் போது உள்ள உணர்வு நிலை ஆறுவதற்கு முன்னரே அப் படைப்பை உடனடியாகவே மற்றவர்கள் பார்வைக்கு வைக்க முடிவதுதான்.
கைமேல் பலனாகக் கிடைக்கும் எதிர்வினைகளாலும் இணையம் மிகவும் திருப்தி தருகிறது.
எதிர்வினை என்பது பாராட்டாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.
மாற்றுக் கருத்துகளும் வரலாம்.
எது வந்தாலும் அது படைப்பாளிக்கான அங்கீகாரம் என்பதே உண்மை.
தான் எழுதுவதற்கு கிடைக்கும் அங்கீகாரத்தை விட படைப்பாளிக்கு மகிழ்வு அளிக்கக் கூடியது வேறு என்ன?
பயிற்சியால் படைப்பாற்றல் மெருகு ஏறுகிறது
இத்தகைய காரணங்களால் புளக்கிங் செய்யும் ஒருவரது எழுத்து ஆற்றலும், படைப்பாற்றலும் மேலும் மெருகு ஏறுவது உண்மையே.
இணையம் பற்றிய அறிவும் அதன் பயன்பாட்டு அனுபவமும் மேன்படுகிறது.
அத்துடன் சரியான தகவலை பெறுதல், பதிவிடுதல் மற்றவர்களுக்கு கடத்தல் ஆகிய செயற்பாடுகள் சீர்மை அடைகிறது.
அத்துடன் தட்டச்சு செய்யும் வேகமும் வளர்கிறது என்பதையும் சொல்லவே வேண்டும்.
எனது பதிவுலகம்
என்னைப் பொறுத்த வரையில் நான் கடந்த 12 வருடங்களாகவே கணனியைப் பயன்படத்தி வருகிறேன்.
‘பதிவுகள்’ இணைய சஞ்சிகையில் Pathivukal.com பல வருடங்களாக எழுதி வந்துள்ளேன்.
ஆயினும் புளக்கிங் செய்ய ஆரம்பித்து சரியாக இரண்டரை வருடங்களே ஆகின்றன.

இணையப் பயணத்தில் பயனுள்ளதும் இனிமையானதுமான அனுபவங்கள் கிட்டியுள்ளன. நட்புக்கள் பெருகியுள்ளன.
இப்பொழுது
தமிழ்மணம்,
யாழ்தேவி
ஆகிய இரண்டு திரட்டிகளும் நட்சத்திரப் பதிவராக என்னை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியமை மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்ததையும் அளிக்கின்றன.
மகிழ்ச்சிக்கு மேலாக மற்றொரு விதத்தில் பெரு நிம்மதியும் கூட.
ஏனெனில் தினமும் பதிவிட வேண்டியது
என்னைப் பொறுத்தவரையில் மிகவும் பளு நிறைந்தது.
சிரமமானது.
பல வேலைகளை ஒத்தி வைத்தும்,
தூக்கத்தைக் குறைத்துமே செய்ய வேண்டியதாயிற்று.

ஆயினும் பல இணைய நண்பர்களின் கருத்துரைகள் உற்சாகம் ஊட்டியவண்ணம் இருந்தன.
கணனி தொழில் நுட்ப அறிவு அறவே கிடையாத பாவனையாளனாக மாத்திரமே நான் இருந்தபோதும் இந்தளவிற்காகவது
இணைய உலகில்
பயணப்பட முடிந்தமை மகிழ்வளிக்கிறது.
எம்.கே.முருகானந்தன்.
Read Full Post »