Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பூசும் மருந்துகள்’ Category

>வயதான பலர் மூட்டு வலிக்கிறது எனப் பூச்சு மருந்துகளை முழங்கால், கணுக்கால் என அடிக்கடி பூசிக்கொண்டிருப்பார்கள். “பொழுது போகாதற்கு அதை இதைப் தேச்சுக் கொண்டிருக்கிறதுதான் வேலை” என இளவட்டங்கள் அலட்சியமாகப் பேசும். அல்லது “கண்டதையும் பூசி உடுப்புகளையும் பாழாக்கிறதுதான் மிச்சம்” என நக்கல் அடிக்கும்.

நோ எண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணய் பூசுவதால் பலன் ஏதும் கிடைக்கிறதா இல்லையா என கருத்துச் சொல்ல எனக்கு அருகதையில்லை. அவை எனது படிப்பு, அனுபவம் ஆகியவற்றிற்கு அப்பாலானவை.

பலன்

ஆனால் வலி நிவாரணி ஜெல் மருந்துகளைப் பூசுவதால் பலன் கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் பலருக்கும் இவ்வாறு பூசுவதால் பலன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. பல மருத்துவர்களுக்கே அவ்வாறு பூசுவதன் பயன் பற்றி நம்பிக்கை கிடையாது. எனவே இது பற்றி சில ஆய்வுகள் செய்யப்பட்டன.

நாட்பட்ட முழங்கால் வலி, மற்றும் வயதானவர்களில் ஏற்படும் ஒஸ்ரியோ ஆர்திரைடிஸ் (osteoarthritis) நோயாளார்களில் டைகுளோபெனிக் சோடியம் (Diclofenac sodium) மருந்தை மாத்திரைகளாக கொடுக்கும்போது ஏற்படும் வலிநிவாரணத்திற்கு ஒத்ததாக ஜெல் மருந்தாகப் பூசுவதாலும் நன்மை கிடைத்தது. உட்கொள்ளும் மாத்திரைகளைப் போலவே வலியுள்ள இடத்தில் பூசப்படும் மருந்தும் வலியைத் தணிப்பதில் உதவுகிறது என்பது இதனால் தெளிவாகிறது.


பக்கவிளைவுகள்

வலிநிவாரணிகளை மாத்திரைகளைப் பாவிக்கும்போது ஏற்படும் முக்கிய பக்கவிளைவு குடல் சம்பந்தமானாதாகும். பல நோயாளர்களும் வயிற்று எரிவு, புகைச்சல், இரைப்பைப் புண் ஆகியன ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். அது உண்மையே. அத்துடன் இவை இரத்த அழுதத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. இருதய நோய்களைக் கொண்டு வருவதும் அதிகம் என்பதும் அனுபவத்திலும், ஆய்வுகளிலும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் அவற்றை பூச்சு மருந்தாகப் பாவிக்கும்போது அத்தகைய பக்கவிளைவுகள் மிகக் குறைவாகவே ஏற்பட்டன. இதற்குக் காரணம் பூச்சு மருந்தாக பாவிக்கும்போத ஒரு சதவிகிதம் மட்டுமே உறிஞ்சப்பட்டு குருதிவழியாக உடலெங்கும் பரவுகிறது. இருந்தபோதும் வலியுள்ள இடத்தில் உறிஞ்சப்படும் மருந்தினால் நோய் தணிகிறது

பக்கவிளைவுகள்

அப்படியானால் பூச்சு மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாதா என்ற கேள்வி எழுகிறது.

  • நீண்ட காலத்திற்கு அதாவது 6 மாதம் ஒரு வருடம் எனத் தொடர்ந்து பூசி வரும்போது தோல் வரட்சி ஏற்படலாம். 
  • அத்துடன் தோலில் அரிப்பு, எரிவு, சிவத்தல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். 
  • சிலரில் கொப்பளங்கள் போடுவதும், எக்ஸ்சிமா போன்றவை வருவதும் உண்டு.

இத்தகைய பக்கவிளைவுகள் பெரும்பாலும் தொடர்ந்து பூசும் இடத்தில் மட்டுமே வரும். தோல் வரட்சியடைந்தால் சாதாரணமான இதப்படுத்தும் கிறீம் வகைகளை (அழளைவரசளைiபெ ஊசநயஅ) உபயோகிப்பதன் மூலம் தடுத்துவிடலாம்.

எத்தகைய பூச்சு மருந்துகள் உதவும்?

எல்லா வெளிப் பூச்சு மருந்துகளும் உதவுமா?

மருந்தகங்களில் வலிக்காகப் பலவகையான வெளிப் பூச்சு மருந்துகள் விற்பனையாகின்றன. இவை யாவுமே பயனுள்ளவையா எனக் கேட்டால் இல்லையென்றே கூற வேண்டும். Diclofenac, Ibuprofen, Ketoprofen, Piroxicam போன்ற பல வலிநிவாரணி மருந்துகள் ஜெல் மருந்துகளாக பூசுவதற்கு ஏற்ப வருகின்றன. இவை பயனளிக்கும்.
 
அதே நேரம் Methyl salicylate போன்ற சாதாரண வலிநிவாரணி மருந்துகள் Menthol, Camphor, Eucalyptus Oil போன்றவற்றுடன் கலந்து கிடைக்கின்றன. இவை வாசனையையும், பூசுமிடத்தில் சற்று எரிவையும் ஏற்படுத்துவதுடன் நோயாளிக்கு மனதுக்கு இதமான உணர்வையும் கொடுக்கும். 

ஆயினும் அவை வலிநிவாரணிகளாகப் பயன்படுமா என்பது பற்றி நிச்சமாகக் கூறமுடியாது.

காசைக் கரியாக்காதீர்கள்.

எனவே வலிநிவாரணி மருந்துகளாகக் கிடைத்தால் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். அதில் எது உங்களுக்கு ஏற்றது என்பதை உங்கள் மருத்துவருடன் கேட்டுப் பயன்படுத்துங்கள்.

கடையில் கிடைப்பதையெல்லாம் பூசி காசை வீணாக்காதீர்கள்.

மூட்டு வலிகள் சம்பந்தமான எனது ஏனைய பதிவுகள்

  1. மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்
  2. மூட்டுத் தேய்வு நோயை இனங் காட்டும் ஹெர்படன்ஸ் நோட் (Heberden’s Node)
  3. முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
  4. நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் தினசரியின் ஹாய்நலமா ? பத்தியில் 15.12.2010 ல் நான் எழுதிய கட்டுரை
Advertisements

Read Full Post »