Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பெண் நோய்கள்’ Category

>பெண்களே! வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள்

மகளைவிட தாய் வெட்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. சற்றுத் தயங்கிய பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.

“இந்தப் பிள்ளை மெலிஞ்சு கொண்டு போறாள்….
சோம்பிக் கொண்டு கிடக்கிறாள்…பசியும் குறைவு….”
நேரடியாக விடயத்திற்கு வராது சுற்றி வளைத்துக் கொண்டிருந்தாள் அம்மா.

சற்று மெல்லிய தோற்றம் கொண்டவளாயினும், மகளின் முகத்தில் நோயின் வாட்டம் தென்படவில்லை. அழகாக, திரட்சியாக பதின்ம வயதுகளின் கவர்ச்சியுடன் தோன்றினாள்.

மகளிலிருந்து கண்ணை விலக்கி அம்மாவில் பார்வையைப் பதித்தேன். சற்று முன் நகர்ந்த அம்மா தனது குரலைத் தாழ்த்தி…..

“இவளுக்கு சரியா வெள்ளை படுகுது. உருகிக் கொண்டு போறாள்.”

வெளிப்படையாகப் பேசுங்கள்.

இவர்கள் சற்று வெட்கப்பட்டவர்கள். காலம் மாறிவிட்டது.
இன்றைய இளம் பெண்கள் பலர் தாயின் துணையின்றித் தனியாகவே வந்து தங்கள் பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசுமளவிற்கு முன்னேறிவிட்டார்கள்.

தன்னம்பிக்கை வளர்ந்து விட்டது.
திருப்தியடையக் கூடிய மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.

பாலியல் உறுப்புகளில் அரிப்பு, வேறுநோய்கள், மாதவிடாய்ப் பிரச்சனைகள், பாலுறவின் போது ஏற்படக் கூடிய உடல் உளப் பிரச்சனைகள் என எதுவானாலும் மருத்துவருடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இது பொருந்தும்.

வெள்ளைபடுதல்

இந்த வெள்ளைபடுதல் என்பது பெரும்பாலும் நோயே அல்ல.
Vaginal Discharge என ஆங்கிலத்தில் சொல்வதை
நல்ல தமிழில் யோனிக் கசிவு எனலாம்.

பெண் பாலுறுப்பிலிருந்து சற்றுத் திரவம் கசிவது இயற்கையானது. வாயிலிருந்து எச்சில் ஊறுவது போன்றது.
வாய் எந்த நேரமும் ஈரலிப்பாக இருப்பதற்குக் காரணம் எச்சில்.

அதேபோல பெண்ணுறுப்பு அதன் சுரப்புகள் காரணமாக எப்பொழுதும் ஈரலிப்பாக இருக்கும்.

  • கிருமிகள் தொற்றாதிருக்கவும்,
  • உடலுறவின் போது இன்பம் அளிக்கவும்,
  • மகப்பேற்றின் போது துணையாக இருப்பதற்கும் இது அவசியம்.

எனவே குழந்தை பெற்றெடுக்கக் கூடிய வயதுகளில் மிகவும் அவசியமானது. விசனிக்க ஏதும் இல்லை.

உணவில் ஆசை ஏற்பட்டால் எச்சில் அதிகம் ஊறும்.
அதேபோல பாலுணர்வு மேலெழும்போது யோனியிலிருந்து சுரப்பது அதிகமாகும்.

பதின்ம வயதுகளில் பாலியல் உணர்வுகள் மெருகேறும்போது பையன்கள் தங்கள் ஆண்குறிகள் திடீர் திடீரென விறைப்படைவது கண்டு வியப்பிற்கும் குற்ற உணர்விற்கும் ஆளாவது போலவே பெண்பிள்ளைகளும் இந்த வெள்ளை படுதலைக் கண்டு அசூசை அடைகிறார்கள்.

தாய்மார் தங்கள் இளமை நினைவுகளை மீளநினைத்து தங்கள் பெண்பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிப்பது முக்கியமாகும்.
ஆயினும் பல நோய்களாலும் யோனியிலிருந்து திரவம் கசியக் கூடும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சாதாரண வெள்ளைபடுதல்

சாதாரண வெள்ளை படுதல் என்பது சற்று வழவழப்பான எச்சில் போன்ற தெளிவான திரவமாகும்.
பிறப்பு உறுப்பில் உள்ள கருப்பைக் கழுத்திலிருந்து பெருமளவு சுரக்கும். அதேபோல யோனியின் சுவர்களிலிருந்தும் கசியும்.

சுரக்கும் போது இது வெண்மையாக இருந்தாலும் காற்றுப்பட்டதும் சற்று மஞ்சள் நிறமாகலாம்.
அதேபோல உள்ளாடைகளில் பட்ட பின்ரும் நிறம் மாறலாம்.
உடலிலுள்ள பெண்ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜின் இதை ஓரளவு கட்டுப்படுத்துகிறது.

வழமையாக ஓரளவு இருக்கும் இந்த வெள்ளைபடுதல் மனஅழுத்தங்களின் போது சற்று அதிகரிக்கலாம். ஏனைய மன அழுத்தங்கள் போலவே வெள்ளை படுதல் பற்றிய பய உணர்வும், அசூசை ஆகியவை உள்ளதை மேலும் மோசாமாக்கிவிடும்.

பல இளம் பெண்கள் மாதவிடாய்க்கு இடைப்பட்ட சில தினங்களில் இது அதிகமாவதை அவதானித்திருப்பர். சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நேரத்தில் இவ்வாறு கூடியளவு வெள்ளைபடலாம்.

கருவுற்று இருக்கும் காலங்களிலும் வெள்ளைபடுவது அதிகரிக்கும்.
முன்னரே குறிப்பிட்டது போல பாலியல் ரிதியான உணர்வுகள் கிளறும்போதும் வெள்ளை படுதல் அதிகரிக்கும்.

வேறு நோய்கள் காரணமாக

தொற்று நோய், புற்றுநோய், ஒவ்வாமை போன்ற பல காரணங்களலும் வெள்ளை படுதல் ஏற்படலாம்.
நீரிழிவு இருந்தால் பங்கஸ் தொற்று நோயாலும் தோன்றலாம்.

ஆனால் இவற்றின்போது பெரும்பாலும் அரிப்பு, எரிவு, கெட்ட மணம், போன்றவை சேர்ந்திருக்கும்.

நோய்கள் காரணமா?

வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதற்கு உரிய அறிகுறிகள் என்ன?

  • இதுகாலம் வரை இல்லாதவாறு திடீரென அதிகரிக்கும் வெள்ளைபடுதல்
  • அதன் நிறத்தில் மாற்றம்
  • அதன் மணத்தில் திடீரென ஏற்படும் மாற்றம்.
  • பெண் உறுப்பிலும் அதனைச் சுற்றியும் எரிவு, சினப்பு, அரிப்பு போன்றவை தோன்றுதல்.
  • மாதவிடாய் இல்லாத தருணங்களில் வெள்ளையில் இரத்தக் கறையும் தென்படல்.

வெள்ளையுடன் இரத்தக் கசிவும் சேர்ந்திருந்தால் புற்றுநோயாகவும் இருக்கலாம். ஆனால் இது பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களிலேயே அதிகம் ஏற்படும்.

நீங்கள் செய்யக் கூடியவை என்ன?

உங்கள் பாலுறுப்பை சுத்தமாகவும் ஈரலிப்பு இன்றியும் வைத்திருங்கள்.

பல பெண்கள் உடலுறவின் பின்னரும் மாதவிடாய் காலங்களிலுத் தமது உறுப்பைச் சுத்தமாக வைத்திருப்பதாகக் கூறி நீரை உள்ளுக்குள் அடித்துச் சுத்தப்படுத்துவார்கள்.

இது தவறான முறை. அவ்வாறு செய்யும்போது பெண் பாலுறுப்பின் மென் திசுக்களில் இயல்பாக இருக்கும் நல்ல கிருமிகள் அழிந்து, அங்கு நோயைப் பரப்பும் தீய கிருமிகள் பரவிவிடும்.

மாதவிடாய் நேரங்களில் பாட்ஸ் (Pads) மட்டுமே உபயோகியுங்கள்.

உள்ளே வைக்கும் டம்புன்ஸ் (Tampons) கூடவே கூடாது

உள்ளாடைகள் எப்பொழுதும் பருத்தித் துணியால் ஆனதாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
சில்க், நைலோன் போன்றவை ஈரத்தை உறிஞ்ச மாட்டாது.
அத்துடன் வியர்வையையும் உறிஞ்சமாட்டாது.
காற்றோட்டத்தையும் தடுக்கும். இவை காரணமாக அரிப்பும் தொடர்ந்து கிருமித் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அத்துடன் மிக இறுக்கமான உள்ளாடைகளும் கூடாது.

பாலுறுப்பை அண்டியுள்ள பகுதிகளில் வாசனை ஸ்ப்ரே, பவுடர் போன்ற பொருட்களையும் உபயோகிக்க வேண்டாம்.

ஈஸ்ட் கிருமித் தொற்று இருந்தால் லட்டோ பசிலஸ் உள்ள யோகட், தயிர் போன்றவற்றை உண்பது நல்லது. கடுமையான அன்ரிபயரிக் உபயோகிக்கும் போதும் ஈஸ்ட் தொற்றுதைத் தடுக்க உண்ணலாம்.

பாலுறவின்போது ஆணுறை உபயோகிப்பதன் மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்கு கிருமிகள் பரவுவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு இருந்தால் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை சரியான அளவில் கட்டுப்படுத்தி வையுங்கள். இல்லையேல் பங்கஸ் கிருமித்தொற்றும் ஏற்படும்.

எப்பொழுது டொக்டரிடம்

வெள்ளை படுதலுடன் காய்ச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை இருந்தால் கட்டாயம் மருத்துவரைக் காண வேண்டும்.

நீங்கள் உடலுறவு கொண்டவருக்கு சிபிலிஸ், கொனரியா, கிளமிடியா, எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் இருந்திருக்கலாம் என சற்று சற்தேகம் இருந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்.

வெள்ளை படுதலுக்கு மேலாக பாலுறுப்புப் பகுதியில் அரிப்பு, சிறிய கொப்பளங்கள், புண் போன்றவை இருந்தால் நிச்சயம் மருத்துவ உதவி அவசியம்.

எனவே வெட்கத்தை விட்டொழியுங்கள். உங்கள் உடல் நலத்தைப் பேண உங்கள் மருத்துவருடன் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசுங்கள்.

இருக்கிறம் சஞ்சிகையில் நான் எழுதி வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

‘களைக்குது களைக்குது என்று காலையிலிருந்து வருத்தம் பாடிக் கொண்டிருக்கிறா. என்னெண்டு ஒருக்கால் பாருங்கோ…’ என்றார் உள்ளே நுழைந்தவர்;.

தொடர்ந்து ‘இண்டைக்கு கடைச் சாப்பாடுதான் போல கிடக்கு’ என்றும் சலித்துக் கொண்டார்.

வந்தவர் கதிரையில் உட்காரும் மட்டும் நோயாளியின் தலை கண்ணில் படவேயில்லை.
மெதுவாக அடியெடுத்து பின்தொடர்ந்து வந்த பெண்மணியின் முகமெங்கும் ஆயாசம் பரவிக் கிடந்தது.
சற்று இளைப்பதும் தெரிந்தது.
நோயுற்றதால் களைப்படைந்திருந்தாள்.

நோயில் துன்பப்படும் மனைவியை அக்கறையோடு கைபிடித்துக் கூட்டி வராது, அவளால் சமைத்துப் போட முடியாத அடுத்த நேரச் சாப்பாடு பற்றி மட்டுமே கவலைப்படும் இத்தகைய மனிதர்களைப் பற்றிச் சொல்வது என்ன?

அவளுக்கு நெஞ்சை அடைக்கவில்லை. நடு நெஞ்சில் வலிக்கவும் இல்லை. வலி இடது தோளுக்கோ கையுக்கோ  வலி பரவவில்லை. வியர்த்து ஒழுகவில்லை.

நான் விபரமாகக் கேட்டபோதுதான்
காலையிலிருந்து முதுகுப்புறமாக சற்று வலிக்கிறதாகச் சொன்னாள்.

பரிசோதித்தபோது,
இருதயம் சற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
பிரஷர் சற்றுக் குறைந்திருந்தது.
ஈ.சி.ஜி யில் சிறிய மாற்றமே இருந்தது.
ஆனால் கார்டியக் ரோபனின் இரத்தப் பரிசோதனை
மாரடைப்புத்தான் என்பதை உறுதிப்படுத்தியது.

மாரடைப்பைக் கையாளக் கூடிய வசதியுள்ள மருத்துவ மனைக்கு உடனடியாக அனுப்பி வைத்ததால் அவருக்கு எதிர்காலத்தில் சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை.

ஒரு வேளை அவள் மரணித்திருந்தால்?

பின்னர்தான் அவளின் அருமை புலப்பட்டிருக்கும்.

‘அவள் இருக்கு மட்டும் எனக்கு என்ன குறை’
என நினைந்து ஒழுகுவது மட்டுமே மிஞ்சியிருக்கும்.

மாரடைப்பினால் பாதிப்பு பெண்களுக்கு அதிகம்

கடுமையான மாரடைப்பினால் அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண்கள் அங்கேயே இறப்பதற்கான சாத்தியம்
ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்
என இரு வருடங்களுக்கு முன்னர்
Circulation Dec 08, 2008
சஞ்சிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை கூறியது.

காரணங்கள் எவை?

பெண்கள் அதிகமாக மரணமடைவது ஏன் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பிரதான காரணம் நோய் வந்தாலும் பெண்கள் மருத்துவமனைக்கு உடனடியாக வருவதில்லை.
ஆண்களைவிட அதிக காலதாமதமாகிறது எனக் கண்டறியப்பட்டது.
இது ஏன்?

பெண்களில் மாரடைப்பின் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை

பெண்கள் தங்கள் நோய் அறிகுறிகளுக்கான காரணம் மாரடைப்புத்தான் என உடனடியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் பெண்கள் பலருக்கும் வரும் மாரடைப்பு நோயின் வலி கடுமையாகவும் மருத்துவப் புத்தகங்களில் வருவது போல (typical) வியர்வையுடன் கூடிய கடுமையான நடுநெஞ்சு வலியாக இருப்பதில்லை.

தலை அம்மல்
முதுகு உளைவாகவோ,
களைப்பாகவோ,
நெஞ்செரிப்புப் போலவோ
வெளிப்படுவதுண்டு.

இதனால் பெரும்பாலும் வாய்வுத் தொல்லை என்றோ, சமிபாடின்மை என்றோ அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.

அமெரிக்காவின் தேசிய உடல்நலத்திற்கான திணைக்களம் (NIH) செய்த ஆய்வு ஒன்றின் பிரகாரம்,

95% சதவிகிதமான பெண்களில் வழமைக்கு மாறான கடுமையான களைப்பு, மூச்செடுப்பதில் சிரமம், தூக்கக் குழம்பம் ஆகியனவே முக்கிய அறிகுறிகளாக இருந்தனவாம்.
30% சதவிகிதத்திற்கு குறைவானவர்களுக்கே நெஞ்சு வலி இருந்ததாம்.
45% சதவிகிதமானவர்களுக்கு நெஞ்சு வலியே இருக்கவில்லையாம்.

இதனால்தான் நோயாளிகள் கவனிப்பை ஈர்ப்பதில்லை.

மேலதிக தகவல்களுக்கு:-கிளிக் பண்ணுங்கள்

தாமதித்த மருத்துவ உதவி

பெண்கள் அதிகமாக மரணமடைவதுதற்கு இரண்டாவது முக்கிய காரணம் மருத்துவர்கள் எனலாம். பெரும்பாலான மருத்துவர்களும் நெஞ்சுவலி இருந்தால்தான் மாரடைப்பு பற்றிச் சிந்திக்கிறார்கள். இதனால் பெண்கள் பிரத்தியேகமற்ற சாதாரண அறிகுறிகளுடன் வந்தால் உடனடியாக துரித செயற்பாட்டில் இறங்கத் தவறிவிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் கூறிய ஆய்வின் பிரகாரம்,
உடனடியாக அஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,
ஒன்றரை மணிநேரத்திற்குள் சத்திர சிகிச்சைக்கு எடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,

சேதமடைந்த இருதய தசைகளுக்கு இரத்த ஓட்டததை மீளவைக்கும் சிகிச்சைகள் (Reperfusion therapy) 25சதவிகிதமும்
பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே கொடுக்கப்பட்டதாம்.

ஆண் முதன்மைச் சமுதாயம்

போதாக்குறைக்கு ஆண்களை முதன்மைப்படுத்தும் எமது சமுதாய வழக்கில் ஆண்களுக்கு வருத்தம் வந்தால் அள்ளிப் பிடித்துக் கொண்டு ஓடுவதுபோல, பெண்களது நோய்களுக்கு அக்கறைபடுவது குறைவு எனலாம்.

மாரடைப்பு நோயுடன் மருத்துவ மனைக்கு வரும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் மரணமடைவதற்கு இவையே காரணம் எனலாம்.

பெண்களே நீங்கள் செய்யக் கூடியது என்ன?

பிழை எங்கிருந்தாலும், மற்றவர்கள் மீது குறையைப் போடுவதற்கு முதல் உங்களில் நீங்கள் அக்கறை எடுங்கள்.

நீரிழிவு, அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பது போன்றவையே மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.
உங்களுக்கு அவை இருக்கிறதா என்பதை இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் கண்டறியுங்கள்.

அவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள் போன்ற முயற்சிகளை உடனடியாகவே ஆரம்பியுங்கள்.

பெண்களுக்கு மாரடைப்பு நெஞ்சுவலியுடன் மட்டும் வருவதில்லை என்ற தெளிவுடன் இருந்து, அதற்கான ஏனைய அறிகுறிகளையும் அறிந்து வைத்திருங்கள்.

உங்களுக்கு திடீரென ஏற்பட்ட ஏதாவது நோயின் அறிகுறி மாரடைப்பாயிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால்
உடனடியாக இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளைக் கரைத்துக் குடித்துவிட்டு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

விரைந்து செயற்பட்டால் மாரடைப்பிலிருந்து மாத்திரமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும் தப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

இருக்கிறம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின்  மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.

சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.

சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.

கேட்கவே கோபம் வருகிறதா?

கேவலம்! ஆடாத ஆட்டம் போடும் சிறுக்கிகள் என்று ஏசத் தோன்றுகிறதா?


இவை அவர்கள் தாமாக விரும்பிக் கொண்ட பாலுறுவின் விளைவா?

அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.

சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.

குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.

எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.

சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை வேறு யாரோ ஒருவரது பிரச்சனையாக அன்றி, உங்களோடு சம்பந்தப்பட்ட ஒருவரது பிரச்சனையாக எண்ணிப் பாருங்கள். உங்கள் சினேகிதி, சகோதரி, அல்லது மனைவி அல்லது அம்மா என்று எண்ணிப் பாருங்கள்.

கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?

யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?

எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.

வேண்டப்படாத கர்ப்பம் தங்கிவிட்டால் என்ன நடக்கிறது?

கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.

ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.

பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.

அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.

தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.

சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.


கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்ணா? மாதவிலக்கு உங்கள் பணிக்குத் தொல்லையாக இருக்கிறதா?

அத்தோடு இன்னொரு குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்ற எண்ணத்தில் உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நற் சேதி.

உங்களைப் போலவே வேலைக்குச் செல்லும் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் என்பது ஒரு இடைஞ்சல். மாதவிடாய் சம்பந்தப்பட்ட உடல் உள உழைச்சல்களுடன் புன்னகை போர்த்திக் கொண்டு தொழில் செய்வது பெரும் துன்பம். அத்தோடு குழந்தைகள் பெறுவதையும் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம். இல்லையேல் தொழிலையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாதிருக்கிறது.

இத்தகையோருக்கு உதவுவதற்காக புதிய வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் அறிமுகமாயுள்ளன.


தொழில் புரிபவர்களுக்காக மட்டுமல்ல, வேறு காரணங்களுக்காக தமது மாதவிலக்கு குறைவாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கும் இது உதவும்.

வேறு மருத்துவ காரணங்களுக்காக மாதவிடாயின் குருதிப்பெருக்கை குறைக்கவும், மாதவிடாய்களுக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களும் உதவும்.

இந்த புதிய வகை மாத்திரைகளின் விஷேசம் என்ன? இவை மூன்று வகையானவை.

முதலாவது, வழமையான மாத்திரைகள் போல ஒரு மாதத்திற்கானது. இதனால் மாதாமாதம் மாதவிலக்கு வரும். ஆனால் குருதிப்போக்கு இருக்கும் நாட்களின் எண்ணிக்கை குறையும். அதனால் இரத்த இழப்பும் குறையும். இதை எப்படிச் செய்கிறாரகள்? வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரை அட்டைகளில் 21 ஹோர்மோன் மாத்திரைகளும், 7 சத்து மாத்திரைகளும் இருக்கும். ஆனால் இதில் ஹோர்மோன் மாத்திரைகள் 24ஆக அதிகரிக்கப்பட்டு, இரும்புச் சத்து மாத்திரைகள் 4 ஆகக் குறைந்திருக்கும்.

இரண்டாவது வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே மாதவிலக்கு வரும். அதாவது வருடத்திற்கு மூன்று தடவைகள் மட்டுமே வரும். இதற்குக் காரணம் அதிலுள்ள ஹோர்மோன் மாத்திரைகள் 84 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சத்து மாத்திரைகளும் 7 ஆக இருக்கும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்போது குருதிப் போக்கு 7 நாட்கள் வரை இருக்கலாம்.

மூன்றாவது வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும்போது உங்களுக்கு மாதவிலக்கே வராது. ஏனெனில் அதில் வழமையான ஹோர்மோன் மாத்திரைகள் மட்டுமே இருக்கும்.

இம் மூன்று புதிய வகை மாத்திரைகளும் கரு தங்குவதைத் தடுப்பதைப் பொறுத்தவரையில் வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் போலவே நல்ல பலனளிப்பவை.

பக்கவிளைவுகள் இருக்காதா?

பாரிய பக்கவிளைவுகள் கிடையாது. வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகிப்பவர்களுக்கு உள்ளது போன்றே சில்லறை பக்கவிளைவுகளே இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு மேல் இவற்றை உபயோகிக்கக் கொடுத்து பரிசோதித்தபோது இது தெரியவந்தது. ஆயினும் ஒரு சிலருக்கு கண்ணில் படுவதுபோல சிறிதளவு இரத்தப்போக்கு (Spotting) இருந்தது. மேலும் நீ;ண்ட காலம் பாவிக்கும்போதுதான் புதிய தகவல்கள் தெரியவரும்.

எங்கே கிடைக்கும் என்கிறீர்களா?

இப்பொழுது அமெரிக்காவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. மிக விரைவில் இங்கும் கிடைக்கலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி 28.09.2008

Read Full Post »

>உங்கள் மார்புக் கச்சையின் அளவு என்ன? அது 20 வயதில் எத்தனையாக இருந்தது?

இருபது வயதில் ஒருவர் அணியும் மார்புக் கச்சையின் அளவை வைத்து அவருக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் (Type 2 diabetes) வருமா என எதிர்வு கூற முடியும் என கனடாவில் செய்யப்பட்டு CMAJ மருத்துவ இதழில் அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. பெரிய மார்புக் கச்சையை இளவயதில் உபயோகிக்க நேர்ந்தவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என அக்கட்டுரை தெரிவிக்கிறது.

A அல்லது அதற்குக் குறைந்த ( A cup size) அளவான மார்புக் கச்சையை சாதாரண அளவாக ஆய்வாளர்கள் கொண்டார்கள். B,C,D யும் அதற்கு மேலானவையும் சாதாரணத்திற்கு மேலான அளவுகளாகக் கொள்ளப்பட்டன. A அளவிற்கு மேல் தேவைப்பட்டவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான சாத்தியம் அதிகமாம். மார்புக் கச்சையின் அளவென்பது உண்மையில் அதன் கனபரிமாணத்தை (Volume) குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. இதை அளவிடுவதற்கு ஸ்கான் முதலான பல வழிகள் இருந்தாலும் அவை காலத்தையும் பணத்தையும் அதிகம் வேண்டுவன.

மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தில் அதன் கனபரிமாணத்தில் 15 சதவிகித மாற்றங்கள் இயல்பாகவே ஏற்படுகின்றன. அதாவது அதன் பருமனில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே அளவிடும் முறையில் ஏற்படக் கூடிய சிறிய வேறுபாடுகள் பற்றிக் கவனம் கொள்ள வேண்டியதில்லை.

ஆய்வுக்கு உட்பட்டவர்களின் பரம்பரையில் நீரிழிவு இருத்தல், தவறான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி வாழ்க்கை முறை ஆகியற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தபோதும் மார்புக் கச்சையின் அளவிற்கும் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியத்திற்கும் ஆன தொடர்பு தெளிவாகத் தெரிந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

குசானோ குழுவினர் (Kusano and colleagues) செய்த மற்றொரு ஆய்வானது மார்புக் கச்சையின் அளவிற்கும் மார்புப் புற்றுநோய்க்கும் இடையே தொடர்பிருப்பதை எடுத்துக் காட்டியது.

அளந்து பார்ப்பதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கையில் வெட்கம் டாக்டர்கள் மார்புக் கச்சையின் அளவைக் கேட்கிறார்களே என எரிச்சல் வருகிறதா? `ஈர்க்கிடை போகா இளமுலை மாதர் தம், என்று பாடினார் மாணிக்கவாசகர். சிவபெருமானின் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் மனக்கண்ணில் தோன்றி ஞானம் அளித்த அளவிற்கு பெண்களின் மார்பினது பருமனும் அழகும் ஞானிகளுக்கும் கண்ணில் பட்டு கவிபாடும் அளவிற்கு கவர்ச்சியாக இருந்திருக்கின்றது. இதனால் போலும் பெண்களின் அக்கறைக்குரிய அங்கமாகவும் இருக்கிறது.

ஆய்வு மார்பின் கவர்ச்சி காரணமாகவல்ல. அதன் பருமனைப் பற்றியது. அதன் பருமனானது உடற் திணிவு (Body mass Index-BMI) க்கு ஓரளவு ஒத்ததாக இருக்கிறது. உடற் திணிவைக் கணிப்பதற்கு ஒருவரின் உயரம், எடை ஆகியன அளக்கப்பட்டு பின் கணிக்கப்பட வேண்டும்.

அதேபோல வயிற்றின் சுற்றளவிற்கும் உடற் திணிவிற்கும் இடையேயும் தொடர்பு இருக்கிறது. அதையும் ஆடை நீக்கி அளந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் தனது மார்புக் கச்சையின் அளவு தெரியாத பெண்களே இருக்க மாட்டார்கள்.

எனவே, நீரிழிவு வருமா என எதிர்வு கூறுவதற்கு சிகிச்சை நிலையத்தில் எடை பார்க்கும் மெசினைத் தேடவேண்டியதோ சட்டையைக் கழற்றி அளவுகள் எடுக்க வேண்டிய சங்கடமோ இல்லை. சுலபமாக அளவு பற்றிய சுயதகவலுடனேயே முடிவு எடுக்கலாம். நீரிழிவு வருமா என மதிப்பீடு செய்வதற்கு இவ் அளவு மட்டும் போதுமானதல்ல. ஏனைய பல தரவுகளுடன் இதையும் இணைத்துப் பார்த்து வைத்தியர்கள் முடிவுக்கு வரலாம்.

சரி ஆய்வின் முடிவுக்கு வருவோம்.

இளம் பெண்களே! மார்பின் அளவு அல்லது திணிவு மிக அதிகமாக அதிகரிக்க இடமளிக்க வேண்டாம். ஏனெனில் அது பின்பு மார்புப் புற்றுநோய் மற்றும் நீரிழிவு ஏற்பட வழிவகுக்கும். மார்பின் அளவை சரியான அளவில் வைத்திருப்பதற்கு ஒரே வழி உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவதுதான்?

Read Full Post »