Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பொடுகு’ Category

பொடுகு என்பது எமது சிரசின் சருமத்தில் ஏற்படும் ஒரு வகை அழற்சி நோயாகும். சருமம் காய்ந்து அதன் துகள்கள் உதிர்வதுடன் தலையில் சற்று அரிப்பும் இருக்கலாம்.

இது மற்றவர் முன் சங்கடமாக உணர வைப்பதாக  இருந்தாலும் ஆபத்தான நோயல்ல.

hair_scalp_s4_yellow_dandruff

இதை அறவே ஒழிப்பது சற்று சிரமம் ஆனபோதிலும் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும்.

  • இதற்கென பலவிதமான சம்பூ வகைகள் விறபனையாகின்றன. அதில் செலனியம், சலிசிலிக் அமிலம் மற்றும் நாகம் (salicylic acid, selenium sulfide or zinc pyrithione).இருக்கிறதா என அவதானிக்கவும்.
  • பொடுகு கடுமையாக இருந்தால் தினமும் அந்த சம்பூவை உபயோகிக்கவும். அது கட்டுப்பாட்டினுள் வந்ததும் வாரத்திற்கு மூன்று முறை, வாரத்திற்கு இருண்டு முறை எனப் படிப்படியாகக் குறைக்கவும்.
  • சம்பூவை தலைக்கு வைத்ததும் கழுவக் கூடாது. தலையில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் கழிந்த பின்னர் கழுவ வேண்டும். மருத்து தலையின் சருமத்தில் ஊற நேரம் தேவை என்பதாலேயே அவ்வாறு செய்ய வேண்டும்.
  • ஆதற்கு குறையவில்லை வேறு மருந்துகளை (ஸ்டிரொயிட் லோசன் Steroid lotion) அவர் தரக் கூடும்.
 IMG_NEW
 தினக்குரல் பத்திரிகையில் (12.09.2013) வெளியான எனது மருத்துவக் குறிப்பு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Read Full Post »

>பொடுகு என்பது சாதாரணகக் காணப்படும் ஆபத்தற்ற பிரச்சனையாகும். இருந்த போதும் பலரையும் மிகுந்த துன்பத்திற்கும் மனக் கஷ்டத்திற்கும் ஆளாக்கும் பிரச்சனை இது.

தலையில் அரிப்பைக் கொடுப்பது மாத்திரமின்றி வெள்ளித் துகள்கள் போல சருமத் துண்டுகள் கழன்று வருவதால் அசிங்கமான உணர்வையும் ஏற்படுத்துகிறது.

இது ஒரு தொற்றுநோய் அல்ல.

பாரதூரமான வருத்தமும் அல்ல.

ஆனால் மற்றவர்கள் முன் வெட்கப்பட்டு தலைகுனிய வைக்கிறது.

தனிமனித ஆளுமைக்குச் சவால் விடுகிறது.



சாதாரண நோய் என்ற போதும் மருத்துவத்திற்கு பல வேளைகளில் சவால் விடுகிறது.

சுலபமாகக் கட்டுப்படுத்தலாம்

முற்று முழுதாகக் குணமாக்குவது சிரமம் ஆனபோதும்,

பெரும்பாலும் சுலபமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூடியதாகும்.

தினமும் தலைக்கு சாதாரண ஷம்பூ போட்டு முழுகுவதால் மட்டுமே இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடலாம்.

கடுமையான பொடுகுள்ளவர்களும் அவர்களது நிலைக்கு ஏற்ற விசேட மருத்துவ ஷம்பூகளை உபயோகிப்பதன் மூலம் குணம் காணலாம்.

பெரும்பாலான பதின்ம வயதினருக்கும் வளர்ந்தவர்களுக்கும் பொடுகு இருப்பதைக் கண்டு பிடிக்க மருத்துவ அறிவு கூடத்தேவையில்லை. தலையை உற்றுப் பார்த்தால் போதும்.



தேங்காய்த் துருவல் போன்ற உருவமுள்ள, எண்ணைப் பிடிப்பான உதிர்ந்த சருமத் துகள்கள் முடியிலும், தோள் புறத்திலும் விழுந்து கிடக்கும். அத்துடன் தலையில் அரிப்பும் இருக்கும்.

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பலரின் தலையில் வெள்ளை நிறத்தில் சொரசொரப்பான படையாக தொப்பி அணிந்ததுபோல தோன்றுவதும் ஒரு வகை பொடுகுதான்.



பார்ப்பதற்கு அசிங்கமாகவும் பெற்றோர்களைப் பயமுறுத்துவதாகவும் தோன்றும் இது ஆபத்தற்றது. குழந்தை வளர்ந்து ஒரு வயதாகும் நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

பொடுகுள்ள மற்றவர்களும் தலையை ஷாம்பூ உபயோகித்து சுத்தமாக வைத்திருந்தால் போதுமானது. தலைச் சருமம் சிவந்து வீங்கி துன்பம் அளித்தால் மட்டும் மருத்துவரைக் காண வேண்டிய தேவை ஏற்படும்.

எதனால் ஏற்படுகிறது

வரட்சியான சருமம் உள்ளவர்களுக்கு பொடுகு உண்டாவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும் குளிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியம் மேலும் அதிகமாகும். வரட்சியான சருமம் உள்ளவர்களது பொடுகானது பொதுவாக எண்ணெய்ப் பற்றற்றதாகவும் அளவில் சிறியதாகவும் இருக்கும்.

எண்ணைத் தன்மையான சருமம் உள்ளவர்களுக்கு மற்றொரு விதமான பொடுகு ஏற்படுவதுண்டு. இதுவே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவதாகும். சற்றுச் சிவந்த வழுவழுப்பான எண்ணைச் சருமத்தில் உண்டாவது மங்கலான நிறம் கொண்ட அல்லது மஞ்சற் தன்மையான பொடுகாகும்.

இதனை மருத்துவத்தில் seborrheic dermatitis என்பார்கள். அதாவது இது எக்ஸிமா போன்ற தோல் அழற்சி நோயாகும். இது தலையில் மட்டுமின்றி அக்குள், தொடையின் மடிப்புப் பகுதி, மார்பின் மத்திய பகுதி, கண் புருவம், மூக்கின் மடிப்புப் பகுதி, காதின் பின்புறம் ஆகியவற்றிலும் தோன்றுவதுண்டு.



சுத்தம்செய்யாத தலைமுடி அடிக்கடி தலைக்கு முழுகிச் சுத்தம் செய்யாதவர்களின் தலையில் அவர்களது தலையிலிருந்து சுரக்கும் எண்ணெய்ப் பொருள்,

உதிரும் சருமத் துகள்கள் ஆகியன சேர்ந்திருந்து

பொடுகு ஏற்படுவதை ஊக்குவிக்கும்.

சரும நோய்கள். இவற்றைத் தவிர எக்ஸீமா (Eczema) , சொறாஸிஸ் (Psoriasis) போன்ற சரும நோய்களும் பொடுகு நோய்க்குக் காரணமாகலாம்.

உங்கள் தலைமுடியைப் பேணுவதற்காகவும் அழகுபடுத்துவதற்காகவும் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள், கிறீம், சாயம் ஊட்டிகள் போன்றவையும் கூட தோலில் அரிப்பு, அழற்சியை ஏற்படுத்தி பொடுக்கிற்கு வழிவகுக்கலாம்.

அடிக்கடி ஷம்பு இடுவதும், அதிக அளவில் முடியை அழகுபடுத்தும் பொருட்களை உபயோகிப்பதும் தலையில் சருமத்தை உறுத்திப் பொடுகிற்குக் காரணமாகலாம்.

மலஸ்சிசா கிருமி ஈஸ்டைப் போன்ற ஒரு கிருமியான மலஸ்சிசா (malassezia) எமது தலையின் சருமத்தில் இயற்கையாக வாழ்கிறது. இது எந்த நோயையும் ஏற்படுத்துவதில்லை. ஆயினும் சிலவேளைகளில் இது அத்துமீறி வளர்ந்து தலையில் சுரக்கும் எண்ணெயை இரையாக்குவதால் சருமம் அழற்சியடைந்து வேகமாக உதிர்கிறது. இது பொடுகாக வெளிப்படும்.

மலஸ்சிசா கிருமி ஏன் சிலரில் சிலநேரங்களில் வேகமாக வளர்கிறது என்பது தெளிவாகத் தெரியாதபோதும், மனஅழுத்தம், வேறு உடல் நோய்கள், ஹோர்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம், பார்க்கின்ஸன் நோய், நலிவடைந்த உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதும் காரணமாகலாம் என நம்பப்படுகிறது.

யாருக்கு எதனால் ஏற்படுகிறது

பொதுவாக இளைமைக் காலத்தில் தோன்றும் இது நடுத்தர வயது வரை நீளக் கூடும்.

ஆயினும் முதியவர்களுக்கு வராது என்று சொல்ல முடியாது.

சிலருக்கு முதுமை வரை தொடர்ந்து இருக்கக் கூடுமாயினும்

பெரும்பாலும் வயதாகும்போது அதன் வேகம் குறைந்துவிடும்.

பெண்களைவிட ஆண்களுக்கு பொடுகுத் தொல்லை அதிகமாயிருப்பதற்குக் காரணம் அவர்களது தலையில் கூடியளவு எண்ணெய்ச் சுரப்பிகள் இருப்பதாகும். ஆண் ஹோர்மோன்கள் அடிப்படைக் காரணமாயிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எண்ணெய்த் தன்மையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் தோன்றலாம்.

போசாக்கு குறைந்த உணவும் காரணமாகலாம் முக்கியமாக சின்க் (Zinc), விற்றமின் பீ போன்ற குறைபாடுகளும் காரணமாகலாம்.

பார்க்கின்ஸன் போன்ற நரம்பு சம்பந்தமான நோயுள்ளவர்கள், மற்றும் மாரடைப்பு பக்கவாதம் போன்ற பாரிய நோய்களின் பாதிப்பால் உளநெருக்கீட்டுக்கு ஆளாபவர்களுக்கும் அதிகம் ஏற்படுகிறது.

மருத்துவம்

பொடுகு கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை அல்ல. சற்று அதிக காலம் எடுக்கக் கூடியது என்பதால் சற்று பொறுமையாகவும், தொடர்ந்தும் அக்கறை எடுப்பது அவசியமாகும். பொதுவாக மென்மையான ஷம்பூக்களை உபயோகித்து தலையைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமே பலருக்கு அதன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும்.



முடியாதபோது மருத்துவ ஷம்பூக்களை நாடவேண்டி நேரிடும். Zinc கலந்தவை, Coal Tar கலந்தவை, சலிசலிக் அமிலம் கலந்தவை, செலீனியம் கலந்தவை, பங்கசுக்கு எதிரான மருந்துகள் (உதா- Ketoconazole)கலந்தவை எனப் பல வகையுண்டு. மருத்துவ ஆலோசனையுடன் தங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஷம்பூ உபயோகிக்கும் போது அவதானிக்க வேண்டியவை

ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று தடவைகளாவது உங்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட ஷம்பூவை உபயோகிக்க வேண்டும்.

பிறகு வாரத்திற்கு இரண்டு தடவைகளாகக் குறைக்கலாம்.

மிகக் கடுமையான பொடுகு உள்ளவர்கள் தினமும் உபயோகிக்கலாம்.

ஷாம்பு வைத்தவுடன் தலையைக் கழுவக் கூடாது.

3 முதல் 5 நிமிடங்கள் வரை காலம் தாழ்த்திக் கழுவினால்தான் மருந்து செயற்பட போதிய அவகாசம் கிடைக்கும்.

நீண்டகாலம் உபயோகித்து அதன் வீரியம் குறைந்துவிட்டதாகத் தோன்றினால் மருத்துவரின் ஆலோசனையுடன் வேறு வழியில் செயற்படும் மற்றொரு ஷம்பூவை மாற்றலாம்.



வேறு என்ன செய்யலாம்

சமபல வலுவள்ள போஷாக்கு உணவுகளை உண்ணுங்கள். அதிலும் முக்கியமாக சின்க் Zinc விட்டமின் பீ, போன்றவை பொடுகைத் தடுக்கும் என நம்பப்படுகிறது.

உங்கள் தலைச் சருமமானது எண்ணெய்த் தன்மை அதிகமுள்ளதாயின் தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. ஷம்பு இட்டு சுத்தப்படுத்துவது நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி :- வீரகேசரி

Read Full Post »