Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘போதை’ Category

சுயமருத்துவமா? 

உயிர் ஆபத்தாகலாம். அவதானமாயிருங்கள்

போதையாகும் வயிற்றைக் கட்டுப்படுத்தும் மருந்து

சுயமருத்துவம்

வயிற்றோட்டமா காய்ச்சலா. இருமலா, மூட்டு வலியா எதுவானாலும், எத்தகைய பாரதூரமான நோயானாலும் மருந்துக்கடையில் எவரும் தாமாகவே மருந்து வாங்கி சாப்பிடக் கூடியதாக இருக்கிறது நம் நாட்டில்.

எந்த மருத்துவரின் ஆலோசனையும் தேவையில்லை. அடிப்படை மருத்துவ அறிவு இல்லாத எவரும் கூட தாங்களாகவே தாம் விரும்பிய மருந்துகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இல்லாவிட்டால் மருந்துக் கடைக்காரர் மருத்துவராக மாறி மருந்துகளைக் தாராளமாக வழங்குகிறார்.

செலவு மிச்சம். மருத்துவரிடம் சென்று காத்திருக்க வேண்டியதில்லை. நேரமும் மிச்சம் என்பதுதான் பலரும் சொல்லும் சாட்டு.

அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி எவரும் சிந்திப்பதி;லை.

அரசாங்கமானது மருந்து விற்பனை சம்பந்தமாக பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஆயினும் அதைப் பற்றி யாருக்குக் கவலை. சட்டங்களைப் புறக்கணித்து மருந்துகள் அமோகமாக விற்பனை ஆகின்றன.

எந்த நகரைப் பார்த்தாலும் சாப்பாட்டு கடைகளுக்கு அடுத்ததாக களை கட்டி நிற்பவை மருந்து கடைகள்தான்.

மேலை நாடுகளில் அவ்வாறில்லை. மருத்துவரின் சிட்டை இன்றி பெரும்பாலான மருந்துகளை வாங்க முடியாது.

ஆனால் அங்கும் கூட ஒளிவு மறைவாக சில மருந்துகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளித்தது.

வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்து

வயிற்றோட்டம் வந்தால் என்ன செய்வீர்கள். பலர் ஓமம் அவித்து குடிப்பார்கள். சிலர் உணவுகளை கட்டுபாடாக உண்பார்கள். சற்று விசயம் தெரிந்தவர்கள் முதல் உதவியாக தயிர் அல்லது யோகட் சாப்பிட்டு பார்ப்பார்கள்.

ஆனால் சற்றுப் படித்த அரை வேக்காடு முட்டாள்கள் என்ன செய்வார்கள்?

மருந்துக் கடைக்கு ஓடிச் சென்று வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்தை வாங்கிப் பார்ப்பார்கள். Loperamide என்ற மருந்து மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. பல வியாபாரப் பெயர்களில் கிடைக்கிறது.

இந்த மருந்து என்ன செய்யும்.

அடிக்கடி வயிற்றால் போவதை உடனடியாகக் கட்டுப்படுத்தும்.

இதை எவ்வாறு செய்கிறது?

உணவுக் கால்வாயின் செயற்பாட்டை- அதன் தொடர் அசைவியக்கத்தை குறைக்கிறது. உணவுக் கால்வாயிலிருந்து அதிகமாக நீரை உறிஞ்சி எடுக்கச் செய்கிறது. இவை காரணமாக மலம் அடிக்கடி கழிவது குறையும். அத்துடன் மேலதிகமாக நீர் உறிஞ்சப்படுபதால் மலம் இறுக்கமாகவும் மாறும்

ஆனால் வயிற்றோட்ட நோய்க்கான அடிப்படைக் காரணத்தை இம் மருந்து குணப்படுத்துவதில்லை. உதாரணமாக உணவு மாசடைதல் காரணமான கிருமித்தொற்றால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருந்தால் அதை குணப்படுத்தாது.

இருந்தபோதும் பிரயாணம் பண்ணும்போது அல்லது ஏதாவது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது வயிற்றோட்டம் இடைஞ்சல் கொடுக்காது தற்காலிகமாகத் தடுக்க இம் மருந்துகள் உதவுகின்றன.

வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்தால் மரணங்கள்

அமெரிக்காவில் திடீரென இறந்த ஒரு 24 வயது இளைஞனின் குருதியை பரிசீலித்தபோது அதில் லொபரமைட் மருந்தின் அளவானது அதிகமாக இருந்தது. சாதாரணமாக இம் மருந்தை எடுக்கும் போது இருக்கக் கூடிய குருதிச் செறிவை விட 25 மடங்கு அதிகமாக இருந்தது.

அதேபோல 39 வயதான ஒருவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது அவர் மரணித்துவிட்டார். இவரது குருதியிலும் லொபரமைட் மருந்தின் அளவானது அதிகமாக இருந்தமை கண்டறியப்பட்டது.

அவர்கள் இருவருமே போதைப் பொருள் பாவனையாளர்கள். போதைப் பொருளை நிறுத்தும்போது ஏற்படும் பக்கவிளைவுகளை சமாளிக்க இந்த வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தும் மருந்தை உட்கொண்டார்கள். மிக அதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்தது.

லொபரமைட் மருந்தானது Heroin,  morphine போன்ற போதைப் பொருட்களை நிறுத்தும் போது ஏற்படும் உடல் உள உபாதைகளைச் சமாளிப்பதற்கு பயன்படுத்தும் Methadone- buprenorphine மருந்தை ஒத்தது. ஆனால் இதுவும் கூட குறைந்தளவான தாக்கத்தையுடைய போதைப் பொருளையாகும். சுருங்கச் சொன்னால் Methadone, Loperamide  யாவுமே குறைந்த வீச்சினாலான போதைப் பொருற்களே.

இவற்றை துஸ்பிரயோகம் செய்பவர்கள் ஒன்றில் இதைப் போதைப் பொருளாக பயன்படுத்த முயல்வர். அல்லது ஏற்கனவே உபயோகிக்கும் போதைப் பொருளை நிறுத்தும்போது ஏற்படும் அசௌகரியங்களை சமாளிக்க உட்கொள்கிறார்கள். எதற்காக உபயோகித்தாலும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு உபயோகிக்கும் சாதாரண அளவை விட பல மடங்கு உபயோகிக்க நேர்வதால்தான் ஆபத்தாகிறது.

வயிற்றோட்டத்தின் போது இம் மருந்தை ஒரு நாளுக்கு 3 அல்லது 4 மாத்திரைகளுக்கு மேற்பட உபயோகிப்பதில்லை. ஆனால் போதைப் பாவனையாளர்கள் தங்கள் இடைஞ்சல்களைச் சமாளிக்க 100 மாத்திரைகளை உட்கொள்வதும் உண்டு. நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து உயோகிப்பதாலும் அதிகளவு மாத்திரைகளை உட்கொள்வதாலுமேயே பாரதூரமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன.

சுவாசம் குறைவதும், இருதயத் துடிப்பு ஒழுங்கீனம் அடைவதுமே மரணங்களுக்கு காரணமாயின். அத்துடன் மூளை வீக்கம், சிறுநீர் பிரியாமை, இருதய வீக்கம், கால் நாளங்களில் குருதி உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதும் அவதானிக்கப்பட்டது.

இவை லொபரமைட் மருந்தை மிக அதிக அளவில் உட்கொண்டதால் ஏற்படும் பக்க விளைவுகளாகும்.

லோபரமைட் மருந்தை துஸ்பிரயோகம் செய்வது பற்றிய அறிக்கைகள் மேலை நாடுகளிலேயே தெரிய வந்துள்ளது. இன்னமும் இலங்கையில் அறியப்படவில்லை.

லோபரமைட் மருந்து மட்டுமல்ல வேறு பல மருந்துகளும் கூட வேண்டாததும் ஆபத்தானதுமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

எந்த மருந்தையும் மருத்துவ ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது.

மருத்துவர் சிபார்சு செய்த மருந்தின் அளவை மீறி அதிகம் போடக் கூடாது. இவற்றை கடைப்பித்தால் ஆபத்து உங்களை நெருங்காது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (Col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »