>
மணிவிழாக் கண்ட முருகானந்தன் மணிவிழாக் காணும் முருகானந்தனுக்கு வாழ்த்து
எம்.கே.முருகானந்தன்
காலம் எவ்வளவு வேகமாக ஓடிவிடுகிறது. ஓளியை விட வேகமாகச் செல்லக் கூடியது மனம் என்கிறார்கள்.
ஆயினும் அந்த மனத்தின் வேகத்தைக் கூட காலம் வேகமாக கடந்துவிடுகிறது.
நேற்றுப் போலிருக்கிறது முருகானந்தனும் முருகானந்தனும் கல்கிஸ்சவிலிருந்து புஞ்சிபொரளையருகில் இருந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரே இரட்டைத் தட்டு பஸ்சில் 1970 களின் முற்கூறில் பயணம் செய்தமை.
அந்நேரத்தில் நாம் பயணித்தது வெவ்வேறு பாடநெறிகளுக்காகத்தான். ஆயினும் 80களில் என்று நினைக்கிறேன். நான் பருத்தித்துறையில் தனியார் மருத்துமனை நடாத்திக் கொண்ட காலத்தில் அவர் உதவி மருத்துவப் பயிற்சி முடித்து மருத்துவராகிவிட்டார்.
ஒரே பெயரில் இரு மருத்துவர்கள்.
பருத்தித்துறையில் நோயாளிகளுக்கு முருகானந்தன் என்றால் அது நான் மட்டுமே.
அவ்வாறே அக்கராயனிலும் வன்னேரிக் குளத்திலும் நோயாளிகளுக்கு முருகானந்தன் என்றால் அவர் மட்டுமே.
இருவருமே மருத்துவத்திற்கு அப்பால் இலக்கிய உலகிலும் பயணிப்பவர்கள்.
ஆழ்ந்த மொழிப்பற்றும், தனித் தமிழில் ஆர்வம் கொண்டவருமான அவர் ச.முருகானந்தனாகப் பயணித்தார்.
பள்ளி மாணவப் பருவம் முதலே காரணம் தெரியாமலே இரட்டை இனிசலில் ஆர்வம் கொண்ட நான் தொடர்ந்தும் எம்.கே.முருகானந்தனாகப் பயணிக்கிறேன்.
சிலநேரங்களில் வன்னேரிஐயா, பிரகலத ஆனந்தன் போன்ற பெயர்களில் அவர் மாறுவேடத்தில் இலக்கிய உலகில் உலா வருவார்.
முறுவன், அழகு சந்தோஸ், எம்.கே.எம், மருதடியான் என நான் ஒழிந்து கொள்வேன்.
அந்த அதே ச.மு வும் எம்.கே.எம் மும் இன்றும் நண்பர்கள். என்றுமே நண்பர்கள்தான்.
1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி தைத்திருநாளன்று பிறந்த ச.மு க்கு இது மணிவிழா ஆண்டாகும்.
ஆழ்ந்த சமூக நேசிப்பாளி
‘ச.முருகானந்தன் என்ற படைப்பாளி பற்றிப் பேசும் போது அவருடைய சமூக நேசிப்பின் தன்மை பற்றியும் பேச வேண்டிய தேவை ஏற்படுகிறது. போர் சூழ்ந்திருந்த வன்னிப் பிரதேசத்தில் அதுவும் பின்தங்கிய ஒரு காட்டுக் கிராமத்தில் மருத்துவராக கால் நூற்றாண்டு காலம் பணிபுரிவதென்பது சாதாரண விடயமல்ல.’
என இவரது சமூக அக்கறையை விதந்து சொல்கிறார் தாமரைச்செல்வி மல்லிகைக் கட்டுரை ஒன்றில்.
வன்னிப் பிரதேச மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அற்புதமாகக் கையாண்ட, அப் பிரதேசத்தில் நீண்ட காலம் வாழ்ந்த அற்புத எழுத்தாளரான தாமரைச்செல்வி அவ்வாறு சொல்வதிலிருந்து ச.மு எத்துணை அர்ப்பணிப்போடு மருத்துவப் பணியாற்றியிருக்கிறார் என்பது புரிகிறது.
‘மூச்சுவிட நேரமில்லாத மருத்துவப் பணியின் மத்தியிலும் தனது எழுத்துப் பணியை ஒரு தவம் போல மேற்கொள்பவர்’ என்று கூறும் தாமரைச்செல்வி, ‘அவருடைய எழுத்துப் பணியை விட அவர் செய்துவரும் மருத்துவப் பணி உயர்வானது என்பேன்’ என உயிரபாயம் உள்ள சூழலிலும் அவர் வன்னியில் ஆற்றிய மகத்தான பணியை, பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
செ.கதிர்காமநாதன் பிறந்த மண்ணில் பிறந்த ச.மு இயல்பாகவே சிறுகதைத் துறையில் மூழ்கினார். இன்று ஈழத்தின் முக்கியமாகச் சிறுகதை எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
இலங்கையில் அவர் சிறுகதை எழுதாத பத்திரிகை சஞ்சிகை எதுவுமே இருக்காது. அசுர சிறுகதைப் படைப்பாளி. சுமார் 200க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவர் தொடாத கருவும் இருக்காது. அனுபவித்தது, அனுபவிக்காதது, கேள்விப்பட்டது யாவுமே காலத்தின் தேவை கருதியும், சமூக அக்கறை காரணமாகவும் இலக்கியப் படைப்புகளாக வாசகர்களை சென்றடைகின்றன. அவர்களுக்கு ஏதாவது சொல்ல முயல்கின்றன. இவ்வாறு அதிகம் எழுதினாலும் ஒவ்வொரு படைப்பும் காத்திரமான சமூகப் பிரச்ஞை உள்ள நல்ல படைப்புகளாகும்.
இவரது பெரும்பாலான படைப்புகளை நான் படித்திருக்கிறேன். அவற்றில் வேட்டை, இந்த மண், அப்பாவும் நானும் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தன.
நூல்கள்
ஆறு சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளியாகியுள்ளன.
• மீன்குஞ்சுகள்
• தரைமீன்கள்
• இது எங்கள் தேசம்
• இனி வானம் வசப்படும்
• ஒரு மணமகளைத் தெடி
• நாம் பிறந்த மண்
ஆகியனவாகும்.
பிரதானமாக சிறுகதை எழுத்தாளரான போதும் இவரை ஒரு பல்துறை எழுத்தாளராகவே கொள்ள வேண்டும்.
• சிறுகதை
• கவிதை
• குறுநாவல்
• மருத்துவம்
• விமர்சனம்
• அறிவியல் கட்டுரைகள்
என இவரது எழுத்துப் பரப்பு விரிந்தது.
சுமார் 150 கவிதைகள், கட்டுரைகள் 100, குறுநாவல்கள் 10 என எழுதிக் குவித்துள்ளார்.
மேற் கூறிய 6 சிறுகதைத்தொகுப்புகள் உட்பட ஏலவே 12 நூல்களை வெளியிட்டுள்ளார். குறுநாவல் தொகுதிகள் 2, கவிதை 2, மருத்துவம் 1, அறிவியல் 1 என்பனவாகும். ‘நீ நடந்த பாதையிலே’, ‘துளித்தெழும் புதுச்செடிகள்’ கவிதைத் தொகுதிகள். ‘அது ஒரு அழகிய நிலாக்காலம்’, நெருப்பாற’ ஆகியன குறுநாவல் தொகுதிகளாகும்.
பரிசுகளின் மன்னன்
மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த சிறுகதைத் தொகுதியான ‘தரைமீன்கள்’ க்கு சாகித்தியப் பரிசு வாங்கியது முதல் விருதுகள் போட்டிப் பரிசுகள் இவரைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை சுமார் 33க்கு பரிசுகள் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.
அவற்றிற்கு மகுடம் சேர்ப்பது போன்றது ‘சென்னை இலக்கிய சிந்தனை விருது’ ஆகும். இவரது முதல் சிறுகதைத்தொகுப்பான ‘மீன்குஞ்சுகள்’ தான் அந்தப் பெருமைக்குரிய பரிசைப் பெற்றது. அதேபோல எமது நாட்டின் பெருமைக்குரிய தகவம் பரிசினையும் தனது சிறுகதைக்குப் பெற்றிருக்கிறார்.
மீரா பதிப்பக வெளியீடான ‘எயிட்ஸ் இல்லாத உலகம்’ என்ற இவரது மருத்துவ நூல் வடமாகாண விருது பெற்றது. சுடர், ஜீவநதி, மல்லிகை, ஞானம் போன்ற பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் நடாத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகள் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அமரர் கனக செந்திநாதன் ஞபகார்த்தப் போட்டியில் இவரது குறுநாவல் ஒன்றும் பரிசைத் தட்டிக் கொண்டது.
முதலில் குறிப்பிட்ட 33 பரிசுகளில் 30 சிறுகதைகளுக்காக என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய 3ம் கவிதைகளுக்காகும்.
‘உங்களுக்குக் கிடைத்த பரிசுகளில் பெரும்பாலானவை உங்கள் சிறுகதைகளுக்காகவே இருக்கிறன. அதுதான் உங்களுக்கு மிகவும் லாகவமான படைப்புத்துறை போல் இருக்கிறது. வாசகர்களும், சஞ்சிகை ஆசிரியர்களும் போட்டி நடுவர்களும் கூட அதைத்தான் உங்கள் முக்கிய படைப்புத்துறையாகக் கொள்கிறார்கள் எனத் தெரிகிறது. மற்றவர்கள் கருத்துக்கு மேலாக நீங்கள் உங்களது சிறுகதைகளில் எவற்றை உங்களது சிறந்த படைப்புகளாகக் கொள்கிறீர்கள்’ எனக் கேட்டேன்.
‘ஒவ்வொரு படைப்பையும் என்னளவில் ரசித்தே எழுதுகிறேன். ஆனாலும் கூட ‘அலியன் யானை’, ‘இந்த மண்’, ‘நான் சாகமாட்டேன்’, ‘அன்னை’, ‘வேட்டை’, ‘தாத்தா சுட்ட மண், ‘சுடலை ஞானம்’ ஆகியன எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகள்’ என்றார்.
முதலடியும் தடமும்
சென்ற தைப்பொங்கல் தித்தன்று 60வது வயதை எட்டி மணிவிழா ஆண்டில் நிற்கும் நண்பர் ச.மு 1976ல் அதாவது தனது 26வது வயதில் ‘கண்களின் வார்த்தைகள் தெரியாதோ’ என்ற சிறுகதையுடன் தினகரன் ஊடாக எழுத்துலகில் கால்வைக்கிறார்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தனது மானசிக இலக்கியக் குருவாகக் கொள்ளும் இவர் இலங்கையில் உள்ள எல்லாப் பத்திரிகளும் சஞ்சிகைகளும் தனது படைப்புகளுக்கு வரவேற்பு அளித்துள்ளதை மனநிறைவுடன் நினைவு கூறுகிறார். அதற்கு மேலான தீபம், கணையாழி, தாமரை, எரிமலை, செம்மலர் உட்பட பல இந்திய சஞ்சிகைகளிலும் தனது படைப்புகள் வெளிவந்ததை மகிழ்வோடு நினைவு கூர்கிறார்.
மல்லிகைக்கும் இவருக்கும் நிறையத் தொடர்புண்டு. அதனால்தான் இவரது முதல் தொகுதியான மீன்குஞ்சுகள் மல்லிகைப் பந்தல் வெளியீடாகப் பிரசுரமாயிற்று. மீண்டும் 2003ல் தரைமீன்கள் மல்லிகைப் பந்தல் ஊடாக வந்தது.
கருப்பொருள்
இவரது படைப்புகள் பெரும்பாலும் எமது நாளாந்த வாழ்வின் அனுபவங்களைப் பேசுகின்றன. சம்பவக் கோர்வைகள் அழகாகப் பின்னப்பட்டிருக்கும். உணர்வுகளின் பிசைவுகள் ஊடாக வாழ்வை தரிசிப்பதற்கு மேலாக அர்த்த புஸ்டியான நிகழ்வுகள் மனித வாழ்வின் மாறுபட்ட கோணங்களை எம் முன் நிறுத்தும்.
தனது எழுத்துலகின் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் வர்க்க முரண்பாடுகள், சாதீயம், சீதனம், பெண்ணியம் போன்ற சமூகப் பிரச்சனைகளைத் தனது படைப்புகளின் கருப்பொருளாகக் கொண்டிருந்தார்.
இருந்தபோதும் இனப் பிரச்சனை தீவிரம் அடைந்து போர் முனைப்புப் பெற்ற போது போர்க்காலச் சிறுகதைகள் பலவற்றை மிகவும் யதாரத்த பூர்வமாகப் படைத்துள்ளார்.
போரினால் மிகவும் பாதிப்படைந்த மக்களிடையே வன்னிப் பகுதியில் மருத்துவராக நீண்டகாலம் உணர்வுபூர்வமாகப் பணியாற்றியதால் இவருக்குக் கிட்டிய களநிலை அனுபவங்கள் இவரது படைப்புகளுக்கு உண்மைத் தன்மையைக் கொடுத்துள்ளன.
களங்கள்
வன்னி பிரதேச மக்களது வாழ்வின் ஊறுகள் இவற்றின் படைப்புகள் பலவற்றின் அடிநாதமா அமைகின்றன. அதே போல தான் பிறந்த வடமராட்சி பிரதேசத்தின் மண்வாசனை பிற பல படைப்புகளில் அற்புதமாக விழுந்துள்ளன. சிறு வயதில் தான் விளையாடித் திரிந்த கரணவாய் கிழக்குப் பிரதேசம், நீந்தி விளையாடிய உச்சிலா கோயில் குளம் ஆகியன ‘இந்த மண்’ சிறுகதையில் அழகிய சித்திரமாக வார்க்கப்பட்டுள்ளன. அவை எம்மையும் எமது இளமைக்காலத்தில் மூழ்க்க வைக்கும் வல்லமை கொண்டவை.
அதேபோல மலையகத்தில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. அவரது முதல் சிறுகதை இவர் கம்பளை வைத்தியசாலையில் பணியாற்றிய போது எழுதியுள்ளார். அதன் பின்னரும் அவ்வப்போது மலையகப் பிரச்சனைகள் பற்றி இடையிடையே படைப்புகளைச் செய்துள்ளார். மறுபடியும் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் குறுகிய காலம் மலையக கொட்டகலையில் பணியாற்றிய போது அந்த மக்களின் பிரச்சனைகளை கூர்ந்து அவதானித்துள்ளார். அனுபவபூர்வமாக உணர்ந்தவற்றை படைப்பாக்கம் செய்துள்ளார்.
இப்பொழுது மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியாகியுள்ளது. மலையகத்தைச் சாராத ஞானசேகரன், மறைந்த நண்பர் புலோலியூர் சதாசிவம் ஆகியோரைத் தொடர்ந்து அப்பிரதேச வாழ்வை இலக்கியமாக்கியவர்களில் இவரும் முக்கியமானவராகிறார்.
சினிமா
இவருக்கு சினிமாவும் மிகவும் ஆர்வமுள்ள மற்றொரு துறையாகும். முக்கியமாக தமிழ் சினிமாவின் வரலாறு தெரிந்தவர். பல விடயங்களை நுணுக்கமாக நினைவில் வைத்திருப்பவர். அவற்றின் இன்றைய போக்குகளும் புரிந்தவர். நான் மிகக் குறைவாகவே அதுவும் தேர்ந்தெடுத்த சில படங்களையே பார்ப்பவன். இதனால் இவர் எழுதும் சினிமா விமர்சனங்களை நான் ஆர்வத்தோடு படிப்பதுண்டு.
மணிவிழாக் காணும் நண்பர் முருகானந்தனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் சிறந்த மருத்துவப் பணியுடனும் இலக்கியப் பங்களிப்புடனும் நிடூழி வாழ வாழ்த்துகிறேன்.
இவரது மனைவி சந்திரகாந்தா முருகானந்தனும் இப்பொழுது படைப்புலகில் அதிகம் பேசப்படுகிறார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வீரகேசரி வார வெளியீட்டிலும், பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் வெளியான எனது கட்டுரையின் மீள்பதிவு.
Read Full Post »