தலையைப் பொத்திக் கொண்டு வருவார்கள். ‘தலை விண் விண் என்று கிடக்கு’ என்பார்கள். ‘நிறைய வேலையள் கிடக்கு ஒண்டும் செய்ய முடியவில்லை. தலையிடியும் அம்மலும் பொறுக்க முடியாது’ எனவும் சொல்வார்கள்.
அதைத் தடுக்க ஆலோசனை கூறினால், ‘நாளை முதல் குடிக்க மாட்டேன். இது சத்தியமடி தங்கம்..’ எனத் தலைமேல் கை வைக்காத குறையாகச் சொல்வார்கள். ஆனால் மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கதைத்தான்.
பிரச்சனை ஏற்படும் போது தலையில் கை வைத்து கம்மென்றிருப்பார்கள். போத்தலைக் கண்டுவிட்டால் …
“..குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
சாவுக்கு பயமில்லை, சாத்திரங்கள் ஏதுமில்லை
இன்றிருப்போர் நாளையில்லை என்றே குடிக்கிறோம்”
என்று ஒரு கவிஞர் இணையத்தில் சொன்னது போலப் பாடி, நல்லது சொன்னவனைiயே கிண்டலடிப்பார்கள். மறுநாள் மீண்டும் தலைப்பாரம், தலையிடிப் பிரச்சனைதான்.
மதுவின் தொக்கிய விளைவுகள்
ஆனால் மதுபானத்தின் இந்த தொக்கிய விளைவுப் பிரச்சனையானது முடாக் குடியர்களுக்கானது மட்டுமல்ல. நண்பர்களின் ஒன்று கூடல், பிறந்தநாள் விழா, கிருஸ்மஸ் கொண்டாட்டம் போன்றவற்றில் மது அருந்தியவர்களுக்கும் ஏற்படுவதுண்டு.
போதையில் மிதந்ததற்கு மறுநாள் ஏற்படும் இத்தகைய வேண்டாத விளைவுகள் ஆளுக்காள் மாறுபடும்.
- பொதுவாக களைப்பு,
- தாகம்,
- தலையிடி,
- தசைப்பிடிப்பு,
- ஓங்காளம்,
- வாந்தி,
- வயிற்று வலி,
- தலைப்பாரம்,
- தலைச்சுற்று,
- போன்றவையாகலாம்.
- அல்லது வெளிச்சம், சத்தம் ஆகியவறைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் எரிச்சலுறலாம்.
- இருதயம் வேகமாகத் துடிப்பது,
- கண் சிவத்தல்,
- தடுமாற்றம்,
- மனத்தை ஒருமுகப்படுத்துதலில் சிரமம், போன்ற அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
- இவற்றால் மனப்பதற்றம், எரிச்லுறதல், சினம் போன்றவை தோன்றும்.
தொக்கிய விளைவுகள் ஏன் ஏற்படுகின்றன.
பல காரணங்கள் உள்ளன.
- மது சேதனமுறும்போது உடலில் தோன்றும் acetaldehyde என்ற நச்சுப்பொருள் ஒரு காரணமாகும்.
- நோயெதிர்புத் தொகுதில் ஏற்படும் மாற்றங்கள்,
- குளுக்கோஸ் சேதனமடைவதில் பிரச்சனை,
- உடலில் நீர் வரட்சி,
- புரஸ்ரோகிளன்டின் தொகுக்கப்படுதில் சிக்கல்,
- இருதயத்தின் அதிகரித்த செயற்பாடு,
- தூக்கக் குழப்பங்கள்,
- குருதிக் குழாய்கள் விரிவடைதல்,
- ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பலவாகும்.
இவ் அறிகுறிகள் போதை தணியும் போதே வெளிப்படும். பொதுவாக அதிக மது அருந்தி போதையில் மிதந்ததற்கு மறுநாள் காலையில் தோன்றும்.
மதுபானத்தின் தொக்கிய விளைவுகளானவை பாதிப்புற்றவருக்கு எரிச்சல் அளிப்பதாக இருந்தாலும், பார்த்திருப்பவர்களுக்கு கிண்டலடிப்பதற்கும் நகைத்து மகிழ்வதற்கும் ஏற்ற சுவார்ஸமான சம்பவங்களையும் கொண்டிருக்கும்.
Hang over என்ற ஆங்கிலப்படம் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்டதனால் Hang over 1, Hang over 2 என குட்டிகளை ஈன்று கொண்டிருக்கிறது.
தமிழில் மதுபானக் கடை வந்தது. அது தொக்கிய விளைவை விட மதுபானக் கடையில் நிதம் நடக்கும் சம்பவங்களையே சொன்னது.
மதுபானம் அதை அருந்திப் பழகியவர்களுக்கு இனியது. சுகம் கொடுப்பது. கவலைகளை மறக்கச் செய்து தடையற்ற மனவெளியில் சிறகடிக்கச் செய்வதாக இருக்கிறது. முக்கிய பிரச்சனையாக இருப்பது அதைத் தொடரும் இத்தகைய தொக்கிய விளைவுகள்தாம்.
அவ்வாறான தொக்கிய விளைவற்ற மதுபானம் ஒன்று கண்டு பிடிகப்பட்டால் அது குடியர்களுக்கு கண்கண்ட தெய்வமாகிவிடும். அதிலேயே பூரண சரணாகதி அடையவும் கூடும்.
முக்தி விரைவில் சாத்தியமாகும்!
புகையற்ற ஈ சிகரட் கதை ஞாபகம்தானே. தம் அடிப்போம் ‘ஈ’ தம் அடிப்போம்- ஈ சிகரெட் பாதுகாப்பானதா?
மதுவின் பின் விளைவுகள்
மதுபானம் என்பது ஒரு பானமாக இருந்த போதும் அது ஒரு மருந்து (Drug) எனலாம். சற்று மனதைத் தளரச் செய்யும் ஆற்றலும் இருப்பதால் போதை மருந்து என்றே சொல்ல வேண்டும். மதுவானது பல்வேறு ஆபத்தான பின்விளைவுகளை கொடுப்பதை அறிவீர்கள். வருடாந்தம் 2.5 மில்லியன் இறப்புகளுக்கு மதுப்பாவனை காரணமாக இருக்கிறது.
மதுவானது காலாதிகாலமாக உபயோகிக்கப்பட்டு வருகின்ற பொருளாக இருக்கிறது. அதன் காரணமாகவே இன்றும் புழக்கத்தில் இருக்க முடிகிறது. இதுவே இன்று புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மருந்தாக இருந்தால் எந்த அரசும் இதற்கு அங்கீகாரம் அளித்திருக்கவே மாட்டாது. அந்தளவிற்கு ஈரல், மூளை, இருதயம் என உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் சிதைத்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
ஆனால் மிகப் பாரிய பிரச்சனை மதுவை உபயோகிக்க ஆரம்பிப்பவர்களில் 10 சதவிகிதமானவர்கள் அதற்கு ஆட்படுவதுதான். குடியில் மூழ்கிவிட்டால் அதை விட்டொழிப்பது கஸ்டாமாகும், புகைத்தல் போதைப் பொருட்கள் மற்றும் மதுவானது காதலை விட நெருக்கமானது. விடுப்பிரிய இடம் அளிக்காது. தன்னோடு ஒட்டி இணைத்துவிடும்.
ஆனால் முடிவு கோரமானது. அழிக்கவே செய்யம்.
மதுவின் மற்றொரு பிரச்சனை போதையில் கிளம்பும் வன்முறைதான். பறக்கும் விமானத்தின் கதவைத் திறக்க முயலும் அளவிற்கு அப்பன் பிள்ளை என்று தொடரும் பரம்பரைப் போதையாளர்களும் உண்டு.
மதுப் பாவனையை தவிர்பதற்கு அல்லது குறைப்பதற்கு வழி என்ன?
குடிக்க ஆரம்பிக்காமல் தவிர்ப்பதும், ஏற்கனவே ஆரம்பித்துவிட்டால் அதைக் கைவிடுவதும்தான். மஹாத்மா காந்தி மது ஒழிப்பு பிரசாரங்கள் செய்தார். ஆனால் அவர் வழிகாட்டிய காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்தபோதும் அதை ஒழிக்க முடியவில்லை.
மதுப்பாவனையை குறைப்பதற்கு ஏதாவது செய்கிறோம் எனச் சொல்லும் அரசுகள் யாவும் கஜானாப் பைகளை நிரப்பிக் கொண்டு பரமயோக்கியர் போன்று வெளிப் பாவனையைக் காட்டுகின்றன.
எனவே போதைப் பிரியர்களுக்கான மாற்று வழி என்ன?
பாதுகாப்பான மதுபானம்
பாதுகாப்பான மதுபான வகை ஒன்றைக் கண்டுபிடிப்பதுதான்.
மதுவின் தாக்கமானது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதாகும். நரம்புக் கலங்கள் தமக்கிடையே செய்திகளை அனுப்புவதற்கும் தொடர்பாடலுக்குமாக நரம்பியல் கடத்திகளைப் (neurotransmitter) பயன்படுத்துகின்றன. பலவித நரம்பியல் கடத்திகள் உடலில் உள்ளன.
இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை அமைதிப்படுத்தும் சரியான மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனுக்கு மது கொடுக்கக் கூடிய அமைதியையும், சந்தோசத்தையும் கொடுக்கலாம். அவ்வாறு அமைதிப்படுத்தும் ஒரு இரசாயனம்; Gamma aminobutyric acid (Gaba) என்பதாகும்.
இது மூளையில் உற்பத்தியாகிறது. மருந்தாகவும் கிடைக்கிறது.
இவ்வாறான இரசாயனங்களின் கலவைகளை மதுவிற்கு பதிலாக உபயோகிக்கலாம். இவற்றில் மதுவின் தொக்கிய விளைவு இருக்காது என்கிறார் David Nutt என்பவர். மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசி நல்லுறவை வளர்க்க முடியும். மதுவினால் எற்படும் வன்முறை போன்ற பின்விளைவுகளும் இருக்காது என்று மேலும் சொல்கிறார்.
தான் அவ்வாறான ஐந்து பொருட்களை இனம் கண்டுள்ளதாகவும் அவற்றை சரியான அளவுகளில் கலந்து பரீட்சித்திருப்பதாக Guardian ல் எழுதிய ஒரு கட்டுரையில் தெரிவித்தார். அதை மது போன்ற திரவ வடிவில் தயாரிக்க வேண்டும். பாவனையாளர்களின் தேர்வுகளுக்கும் ஏற்ப பல்வேறு நிறங்களிலும் சுவைகளில் கொடுக்க வேண்டும் என்பதே தன் முன் உள்ள சவால் என்கிறார்.
சரி இதற்கான ஆதாரங்கள் என்ன? எங்கே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்.
தானே தனக்குப் பரீட்சித்துப் பார்த்ததாகக் கூறினார். தான் அதை உட்கொண்ட போது தனக்கு பதற்றங்கள் ஏதும் இன்றி மனம் ஆறுதலாக இருந்தத்தகவும், சுகமான தூக்கம் வந்ததாகவும் சொல்கிறார். பின்னர் அதற்கான மாற்று மருந்ததைச் (antidote ) சாப்பிட்டதும் சில நிமிடங்களில் சகசமான நிலைக்கு வந்துவிட்டதாகவும், ஒரு விரிவுரையையும் நடாத்த முடிந்ததாகவும் சொல்கிறார்.
இந்த ஆய்வு பற்றி சில மதுபானத் தயரிப்பாளர்களிடம் வினவியபோது அவர்களுக்கும் இதில் இத்தகைய தொக்கிய விளைவற்ற மதுவைத் தயாரிப்பதில் ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. பணம் கொட்டும் இடத்தைத் தம் கையினுள் அடக்குவதில் அவர்கள் கில்லாடிகள் அல்லவா?
பாதுகாப்பானதுதானா?
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. போதை கொடுக்கும் மதுபோன்ற பானம். ஆனால் மது போன்ற பக்கவிளைவுகள் அற்றது. அதிலிருந்து உடனடியாக விடுபட்டு வேறு வேலைகளில் ஈடுபட வேண்டுமாயின் அதன் தாக்கத்திலிருந்து உடனடியாக மீள்வதற்கு மாற்று மருந்துகளும் உண்டு.
ஆகா அற்பதமான ஐடியா.
பார்க்கில் பார்ட்டியில் அல்லது வேறு எங்காவது அதை மசுக்கிடாமல் அடித்து சந்தேசமாக இருக்கலாம், வீடு போக முன்னர் மாற்று மருந்தை வாயில் போட்டுவிட்டு மனைவி முன் ஒன்றும் தெரியாத அப்பாவியாக பாவனை காட்டலாம்.
பள்ளிக்குப் போக முன் ஒரு டோஸ் அடித்துவிட்டு பள்ளி போகலாம். ஆசிரியர் வருவதற்கு முனனர்; மாற்று மருந்து அடித்துவிட்டு நல் மாணவனாக கலர் காட்டலாம்.
மொத்தத்தில் எல்லாமே ஏமாற்றுக் காரி;யங்கள்தாம். இவை எதுவுமே மனித மனத்தில் உண்மையான மகிழ்ச்சியை வளர்ப்பதற்கானவை அல்ல. அவற்றை மறக்கச் செய்து போலியான ஆனந்தத்தில் மூழ்க வைப்பவைதான். ஏற்கனவே இதை ஒத்த மருந்துகள் பாவனைiயில் இருக்கவே செய்கின்றன.
Benzodiazepine வகை மருந்துகள் அத்தகவையன. இவை மனப்பதற்றத்தை தவிர்த்து அமைதிப்படுத்தக் கூடியவை. வழமையாக வலிப்பு, மதுவில் இருந்து விடுபதற்காக, தசைப்பிடிப்பு, தூக்கத்திற்கு என்று பல காரணங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன.
Diazepam, Chlordiazepoxideபோன்ற பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம். வலியம், லிபிரியம் போன்ற பெயர்கள் பலருக்கும் பரிச்சயமானவை. இவை போன்ற மருந்துகள் பல உள்ளன.
ஆனால் தன்விருப்பின் பேரில் வாங்கும் சுய பாவிப்பானவை அல்ல மருந்துவர்கள் நோயாளிகளுக்கு தமது கண்காணிப்பின் கீழ் மட்டுமே இத்தகைய மருந்துகளை உபயோகிக்கிறார்கள். குறிப்பட்ட காலத்திற்கு குறிபட்பிட்ட அளவுகளில் கட்டுப்பாடுகளுடன் மட்டும். ஏனெனில் அவற்றிக்கும் ஆட்பட்டு விடுபட முடியாத (addiction) நிலை ஏற்படும். அதனால்தான் பிரிஸ்கிரிப்பசன் இன்றி வாங்க முடியாது.
இப்பொழுது தொக்கற்ற மது என்ற பெயரில் அவற்றை அல்லது அதை ஒத்தவைகளை வர்த்தக மயமாக்கப் பார்க்கிறார்கள். திறந்த பொருளாதாரம் போல திறந்த போதைப் பாவனை.
ஒரு குழியிலிருந்து எடுத்து மற்றொரு படுகுழியில் வீழ்த்தும் விளையாட்டுத்தான்.
மற்றொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். மதுவிற்கு மாற்றாகத் தான் தேர்ந்தெடுத்த மருந்துகள் எவை என்பது பற்றி அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல அவை பரந்த மட்டத்தில் ஆய்வு செய்யப்படவும் இல்லை. சுய அனுபவம் பற்றியே பேசியிருக்கிறார்.
எனவே ‘நம்பத் தகுந்தது அல்ல. கவைக்கு உதாவது’ என்று தட்டிக் கழித்துவிடலாமா?
மனித மனங்களில் கவலையும் அதிருப்தியும் தன்னம்பிக்கை இன்மையும் இல்லாது ஒழியும் வரை மாய உலகில் தன்னை மூழ்க வைத்து தற்காலிக சுகம் தேடும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
“யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார். மனிதன் மாறவில்லை.” எனப் பாடினார்கள்
அவன் மாறப் போவதுமில்லை. மது மருந்து மாத்திரைகள் என மனித மனத்தை மாய உலகில் பறக்க வைப்பதற்கான முயற்சிகள் தொடரவே செய்யும்.
“எம்மையும் எம் சந்ததிகளையும் நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.” எஸ்.ஜே.வி ஞாபகம் வந்தால் நான் அதற்குப் பொறுப்பில்லை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
00.0.0.00