Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மரணம்’ Category

நீங்கள் எவ்வாறு மரணமடைய விரும்புகிறீர்கள்

மரணத்தை நெருங்குபவர்களைப் பராமரித்தல்

‘நீங்கள் எவ்வாறு மரணமடைய விரும்புகிறீர்கள்’

‘சாவா எனக்கா’ என இந்தக் கேள்வியைக் கேட்டதும் பயந்தவிடாதீர்கள். அல்லது ‘எனக்கு வயசு கொஞ்சம்தானே. இதை பற்றி யோசிக்க இன்னமும் கன காலம் கிடக்கு’ என்று சொல்லி விடயத்தை விட்டு நழுவி ஓடப் பார்க்காதீர்கள். எல்லோரும் அறிய வேண்டிய விடயங்கள் பற்றியதுதான் இக்கட்டுரை.

hands-in-prayer

மரணத்தைத் தள்ளிப் போடும் வழி வகைகள் பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுத் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. ஆனால் அவை எதிலும் திடமான முடிவுகள் எதுவும் கிட்டவில்லை. மாறாக எந்த ஒரு விஞ்ஞானியும் மரணம் இல்லாத வாழ்வு பற்றிப் பேசவே இல்லை. ஏனெனில் எந்த ஒரு உயிருக்கும் மரணம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வந்தே தீரும். அதனால்தான் ‘ஐஞ்சிலும் சாவு நூறிலும் சாவு’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

மரணங்களின் வகைகள்

மரணங்கள் எப்படி வரும்? நோயுடனும் வரலாம். நோய்கள் எதுவும் வெளிப்படையாக தெரியாத போதும் வரலாம். நோய் எதுவும் அடியோடு இல்லாதபோதும்; வரலாம். நோயுடன் போராடி அது முற்றிய நிலையிலும் வரலாம்.

எவ்வாறாயினும் மரணங்கள் மூன்று வகையில் வரும் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

  1. எதிர்பாராத திடீர் மரணம்(Sudden death) –  மாரடைப்பு, கடுமையான ஸ்ரோக், விபத்து போன்றவை இதில் அடங்கும். அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிவரும் விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் மரணங்கள் பெரும்பாலும் சடுதியான இருதய நிறுத்தம் (ஊயசனயைஉ யசசநளவ) காரணமாகவே நிகழ்கின்றன.
  2. ஏற்றமும் இறக்ககுமும் கொண்ட படிப்படியான வீழ்ச்சியைத் தொடர்ந்து திடீர் மரணம்.;.( Slow decline, Periodic Crisis, Sudden death) அல்ஸை}மர் நோய், இருதய வழுவல், சிறுநீரக வழுவல், போன்றவை இரண்டாவதில் அடங்கும். நோய் தீவிரமாகி மருத்துமனை செல்வது, சுகமாகி வீடு திரும்புவது. சிறிது காலம் சுகம். மீண்டும் சுற்று வளையும் ஆரம்பிக்கும். திடீரெனத் தீவிரமாகி மரணம் கிட்டும்.
  3. நிதானமான சரிவின் முடிவில் குறுகிய கடும் நிலையுடனான மரணம் (Steady decline, Short terminal phase).  மூன்றாவதில் பெரும்பாலான சிகிச்சை பலனளிக்காத புற்று நோய்கள் அடங்கும். படிப்படியாக நோய் அதிகமாகி எதுவித நல்ல திருப்பமும் இன்றி மரணமடைவார்கள்.

இந்த மூன்று வகைகளில் உங்கள் தேர்வு எதுவென யாரைக் கேட்டாலும் நிச்சயமாக சடுதியாக ஏற்படும் மரணம் என்ற விடைதான் வரும்.

‘தூங்கும் போது மரணம் வர வேண்டும். பேசிக் கொண்டு இருக்கும்போது வர வேண்டும். விளையாடிக் கொண்டிருக்கும போது, படம் பார்க்கும்போது, பாடிக்கொண்டிருக்கும்போது, தொழில் செய்து கொண்டிருக்கும்போது சைக்கிள் ஓடும்போது’ என நான் வினவிய ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமானவற்றைச் சொன்னார்கள்.

ஆனால் அத்தகைய் மரணங்கள் மிகக் குறைவாகவே ஏற்படுகின்றன. நூறு பேரில் பத்துப் பேருக்கு மட்டுமே அவ்வாறு நிகழும் என அறிக்கைகள் சொல்கின்றன. மிகுதி 90 சதவிகிதத்தினருக்கும் அத்தகைய பாக்கியம் கிட்டாது.

மரணத்துடனான போராட்டம் அதிகரிப்பு

இன்று பெரும்பாலானவர்கள் நீண்ட நாட்களுக்கு மரணத்துடன் போராட வேண்டியுள்ளது. 10 சதவிகிதத்தினர் மட்டும் சடுதியாக இறந்துவிட மீதி 90 சதவிகிதத்தினரும் நோய்களுடன் வாழ்ந்து, வலிகளுடனும் இயலாமைகளுடனும் போராடி மற்றவர்கள் உதவிகளில் தங்கியிருந்து படிப்படியாகவே மரணத்தைத் தழுவுகிறார்கள்.

AlcestisHerculesLeighton

இதற்குக் காரணம் என்ன? எமது சராசரி வாழ்வுக் காலம் அதிகரித்துள்ளது. 1900 களில் பெரும்பாலானவர்கள் 40-50 வயதிற்கு முன்னரே மரணத்தைத் தழுவனார்கள். 1960 களில் இது 55 முதல் 58 வரை இருந்தது. ஆனால் இன்று 75 வரை வாழ முடிகிறது. வயது முதிரும்போது நோய்களின் தாக்கம் அதிகரிப்பதாலேயே மரணம் துன்பமாக மாறுகிறது.

மலேரியா, கொலரா, சயரோகம், வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய்கள் காரணமாகவே எமது முன்னோர்கள் பெரும்பாலும் இளவயதிலேயே மரணத்தைத் தழுவினார்கள். பெண்களுக்கு மகப்பேறு மறுபிறப்பாக அச்சம் தந்தது. மாறாக இன்று அதிகரித்த மருத்து வசதிகளும் அன்ரிபயோடிக் பாவனையும் இளவயது மரணங்களைக் குறைத்துவிட்டன.

மரணம் பற்றிய பலரது அச்சத்திற்குக் காரணம் மரணத்தை நோக்கிய நோய்களுடனும் இயலாமைகளுடனுமான துயரமான நீள் பயணம்தான். உண்மையில் மரணம் துன்பமானது அல்ல. மரணத்தைக் கொண்டு வரும் நோய்களுடன் போராட நேர்வதே துன்பமானது.

அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

மரணத்தை நெருங்கும் நோயாளிகள், மற்றும் நடமாட முடியாமல் படுக்கையிலிருக்கும் நோயாளிகள் எதி;ர் கொள்ளும் பிரச்சனைகள் பல விதமானவை.

Palliative-Care

உடல் ரீதியான பிரச்சனைகளே பலவாகும். கடுமையான வலி, மூச்சு எடுப்பதில் சிரமம், உணவு விழுங்குவதில் சிரமம், பேச முடியாமை, பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீர் சிந்தல், சிறுநீர்க் குழாயுடன் துன்பம், சிலரால் நடக்க முடியாமல் போய்விடுவதுண்டு. இதனால் ஆறாத படுக்கைப் புண்கள் ஏற்படுதல் என அவர்களது பிரச்சனைகளைச் சொல்லி அடங்காது.

spectrum-of-palliative-care

பொருளாதாரப் பிரச்சனை மற்றொரு புறத்தில் தாக்கும். இலங்கையில் மருத்துவம் இலவசமான போதும் பல மருந்துகள் அரச மருத்துவ மனைகளில் கிடைப்பதில்லை. அவற்றை வாங்கப் பணம் வேண்டும். அடிக்கடி மருத்துவ மனை செல்வதற்கான போக்குவரத்து செலவு, விசேட உணவுகளுக்கான பணம், உதவியாளர் தேவை எனில் அதற்கான செலவு. இவற்றால் பொருளாதார பலம் இல்லை எனில் மரணத்தை நோக்கிய வாழ்வு கட்டுபடியாவதில்லை.

இயலாமையில் வாடும்போது தனிமைப்பட்டுப் போதல் மிகவும் துன்பமானது, வெளியார்கள் சந்திப்பது குறைந்துவிடும். வீட்டில் உள்ளவர்களும் அத்தகையவர்களுடன் கதைத்து பொழுது போக்குவது அரிதாகிவிடும். இதனால் தனிமையும் மன உளைச்சலும் வாட்டி வதைக்கும். ‘ஒரு சொல் பேசமாட்டார்களா’ என உளம் ஏங்கும்.

உணர்வு ரீதியான பாதிப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன. நோயும், தனிமையும் இயலாமையும் தோழமை கொள்ளும்போது கவலை, ஏக்கம், கோபம், மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உணர்வு வெளிப்பாடுகள் அதிகரிக்கும்.

இறை வணக்கம் செய்ய முடியாமை, மதக் கடமைகளை பூர்த்தி செய்ய முடியாத ஏக்கம், மதத் தலைவரைச் சந்திக்க முடியாமை போன்ற மத ரீதியானதும், ஆன்மீக ரீதியிலான குறைபாடுகளும் இருக்கலாம்.

உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவர் உதவுவார்கள். ஆனால் தனிப்பட்ட ரீதியானதும் சமூகரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு அவரது குடும்பத்தவர்களாலும் சுற்றத்தவர்களாலுமே வழங்க முடியும். மருத்துவருடன் மற்ற எல்லோரும் இணைந்த செயற்திட்டமே வேண்டப்படும்.

உபாதைகளையும் துன்பத்தையும் நீக்குவது

மருத்துவர்கள் நோய்க்கு மருத்துவம் செய்பவர்கள். அவற்றைக் குணமாக்குபவர்கள். ஆனால் எல்லா நோய்களையும் முற்றாகக் குணமாக்க முடியாது. பிரஷர். நீரிழிவு, கொலஸ்டரோல் போன்றவற்றை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம்.

Palliative-Care

குணமாக்க முடியாதவை பல. சிகிச்சை பயளிக்காத புற்றுநோய்கள் அவற்றுள் முக்கியமானது. சிறுநீரகம், ஈரல், சுவாசப்பை, மூளை போன்றைவை இயங்க முடியாமல் போவதும் காரணங்களாகும். சிறுநீரக வழுவல், பக்கவாதத்தால் கடுமையாகப் பாதிக்கபட்டவர்கள், அல்ஸீமர் போன்ற முதுமை நோய்களும் இதில் அடங்கும்.

நோய் தணிப்பு பாராமரிப்பு 

ஆம் அவர்கள் மரணம் நெருங்கிவரும் நோயாளிகள். அவர்களால் வழமைபோல இயங்க முடியாது. இவை முற்றாகக் குணப்படுத்த முடியாத நோய்களாக இருந்த போதும் ‘உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது’ என மருத்துவர்கள் கைவிரித்துவிட முடியாது. ‘சாகப் போகிறவர்தானே நடப்பது நடக்கட்டும்’ என உறவினர்களும் வாழாதிருக்க முடியாது. அது மனிதாபிமானம் அற்றது.

அதனால் அவர்களைப் பராமரிப்பது அவசியம். அவர்களது உடல் உபாதைகளைத் தணித்து, அவர்களது மனக் கவலைகளை அக்கறையோடு அணுகுவதுதான் ‘நோய் தணிப்பு பாராமரிப்பு’ (Palliative care) என்கிறார்கள்

நோய் தணிப்பு பராமரிப்பு பற்றி உலக சுகாதர ஸ்தாபனம் கூறுவது இது

‘உயிராபத்து நிலையில் உள்ளவர்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எதிர்கொண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும். அவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதனை தெளிவாக மதிப்பீடு செய்வதும்;, அதற்கான உடல் உள ஆன்மீக ரீதியான ஆறுதலைத் தருவதாகும்.’

செய்ய வேண்டியவை எவை

நோய் தணிப்பு பராமரிப்பின் போது எவற்றை நாம் வழங்க முடியும்?

  • வலி மற்றும் துன்பம் அளிக்கும் எல்லா அறிகுறிகளுக்கும் நிவாரணம் அளிப்பதே முக்கியமாகும். வாழ்க்கை என்பது நிஜம் என உறுதிப்படுத்தும் அதே நேரம் மரணம் என்பது இயல்பானது தவிர்க்க முடியாதது என்பதை அவருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் உணர்த்த வேண்டும்.
  • இந்தப் பராமரிப்பு முறையானது மரணத்தை விரைவுபடுத்துவது அல்லது ஒத்தி வைப்பதற்கானது அல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
  • நோயாளிகளின் உளவியல் மற்றும் ஆன்மீக அம்சங்களையும் அக்கறையோடு கவனிக்க வேண்டும்.
  • நோயாளிகள் இறக்கும் வரை, முடிந்த அளவு அவர் இயங்குவதற்கு ஆதரவும் உதவியும் அளிக்க வேண்டும்.
  • நோயாளியின் துன்பத்தையும் அதைக் கண்டும் தீர்க்க முடியாத கையறு நிலையில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அதைச் சமாளிப்பதற்கான ஆதரவை அளிப்பதும் அடங்கும்.

இவற்றைச் செய்வதற்கு மருத்துவர், மதகுரு, பிசியோதிரபிஸ்ட், தாதியர், உளவளத் துணையாளர், ஏனைய வழிகளில் உதவக் கூடிய தொண்டர்கள் போன்றவர்கள் இணைந்த குழு அணுகுமுறை உதவும்.

இவற்றைச் செய்வதன் மூலம் நோயாளியின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுடன், நோயின் தாக்கத்தில் சாதகமான மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

குடும்பத்தில் சுற்றாடலில் உங்களுக்கும்…

இவை யாவும் மரணத்தை எதிர்நோக்கும் மனிதரை மனிதாபத்துடன் அணுகவும் வேதனையின்றி இருக்கும் வகையில் பராமரிக்கவும் அவசியமானவையாகும்.

இதற்கான தேவை உங்கள் சுற்றாடலில் ஏற்படலாம், அல்லது உங்கள் குடும்பத்திலேயே எழலாம்.

இறுதியில் ஒருநாள் உங்களுக்கும் தேவைப்படலாம் என்பதை மறவாதீர்கள். எனவே மற்றவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்பட இன்றே ஆரம்பியுங்கள்.

0.0.0

இலங்கை குடும்ப மருத்துவ கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நோய் தணிப்பு பராமரிப்புக்கான (certificate course in Pallative Care) இரு முழு நாள் சான்றிதழ் கற்கை நெறி சென்ற 18ம் 19ம் திகதி சனி ஞாயிறு தினங்கள்pல் கொழும்பு லங்கா கொஸ்பிட்டலில் (அப்போலோ மருத்துவமனை) நடைபெற்றது.

பிரதம விரிவுரையாளரான டொக்டர் சுரேஸ்குமார், கேரள மாநிலத்தின் கலிகட் நகரில் உள்ள நோய் தணிப்பு பராமரிப்பு நிறுவனத்தின் இயக்குனர். உலக சுகாதர நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறும் நிறுவனமாகும்.

டொக்டர் சந்தியா புதூர் முத்துமான மற்றும் டொக்டர் மொகமட் சைய்பு ஆகிய இரு விரிவுரையாளர்களும் இந்தப் பயிற்சி நெறியை மிகச் சிறப்பாக நடாத்தினர்.

அக் கற்கை நெறியில் கலந்து பெற்ற அறிவு மற்றும் உணர்வின் உந்தலில் எழுதப்பட்ட கட்டுரை இது.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.00.00.0.0

 

Read Full Post »

>நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது புரிகிறது. அம்பியூலன்சைக் கூப்பிடுவதற்கு முன்னரே சரிந்து விடுகிறார்.

முதல் உதவிச் சிகிச்சையில் பரிச்சியம் உள்ள நீங்கள் அவரின் நாடித் துடிப்பைப் பார்க்கிறீர்கள், அது நின்று விட்டது.
மூக்கில் கை வைத்துப் பார்க்கிறீர்கள், சுவாசமும் நின்று விட்டது.
அவசர அவசரமாக இருதய மசாஜ் செய்து செயற்கை சுவாசமும் கொடுக்கிறீர்கள்.
பிரயோசனமில்லை.
வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது ஏற்கனவே மரணித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

அநியாயச் சாவுதான் என்பதில் சந்தேகமில்லை.முதல் உதவி அறிவுள்ள ஒருவர் அருகிலிருந்து, வேண்டிய உதவியை உடனடியாகச் செய்தும் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரியதுதான்.

உண்மையில் அவர் எப்பொழுது இறந்தார்?

அவரது நிலையை யோசித்துப் பாருங்கள்?

என்ன நடந்தது? அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன. குருதி வெளியேறவில்லை. ஆனால் இருதயம் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. எனவே மூளையானது உள்ள பிராண வாயுவைச் சேமிப்பதற்றாக இயக்கத்தை நிறுத்திவிட்டது. அவ்வளவுதான். ஆயினும் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக கூறிவிட்டார்கள். உண்மையில் அவர் இறந்துவிட்டாரா?

இறப்பு என்பது என்ன? கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று வழமையாகக் கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று 4-5 நிமிடங்களுக்குப் பின்னரே அவனது கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. உங்களது நண்பர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்கு பிராண வாயு கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் மீளச் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அவரது இருதயத்தையும் சுவாசப் பையையும் இயங்க வைக்க முடியாததேயாகும்.

இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக, மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. University of Pennsylvania வைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியமூட்டும் உண்மை வெளிப்பட்டது. மரணித்து ஒரு மணித்தியாலயத்திற்கு மேற் சென்று விட்டபோதும் அந்த மனிதனது (அல்லது சடலமா?) கலங்கள் இறந்து விட்டதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நதபோது மேலும் சில மணிநேரத்திற்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இறந்து சில மணிநேரங்களுக்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருந்தபோதும் வைத்தியர்களால் ஏன் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும். 5 நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்தால், அக் கலங்களுக்கு பிற்பாடு பிராண வாயு கிடைத்த போதும் அவை இறப்பதைத் தடுக்க முடிவதில்லை. அது தான் உண்மை. ஆனால் ஏன்?
இதற்கு விடை கிடைத்தால் உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்துவிடும். இறந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும் முயற்சி ஆராய்ச்சியாக ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

ஆராய்ச்சியானது கலங்களின் உள்ளே உள்ள சிறிய துணிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன. மிட்டோகொன்ரியா (Mitochondria) எனும் அவைதான் கலங்களுக்குத் தேவையான சக்தியை, ஒட்சி ஏற்றம் மூலம் உற்பத்தி செய்கின்றன. மிட்டோகொன்ரியா இன்னுமொரு வித்தியாசமான கடமையையும் செய்கிறது. வழமைக்கு மாறான கலங்களை (உதா புற்றுநோய்க் கலங்கள்) நெறிப்படுத்தப்பட்ட முறையில் மரணிக்கச் செய்கின்றன. இது புற்றுநோய்க்கு எதிரான உடலின் பாதுகாப்பு திட்டம் போலச் செயற்படுகிறது. எனவே, 5 நிமிடங்களுக்குப் பின்னர் திடீரென ஒட்சிசன் கொடுக்கும் போது, அக் கலங்களுக்கும் புற்றுநோய்க் கலங்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர முடியாமல் மரணிக்கச் செய்கின்றனவோ என எண்ணுகிறார்கள்.

ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் நாம் செய்வது என்ன? இருதயம் நின்று விட்ட ஒருவரை 10-15 நிமிடங்களுக்கு பின்னர் கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க மருந்துகள் கொடுப்பதுடன் பிராண வாயுவையும் பம்ப் செய்கிறோம். இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்கிறோம். இது அவற்றின் மரணத்தில் முடிகிறது.

இதற்கு மாறாக மாற்று முறையில் சிகிச்சை செய்தபோது முடிவுகள் சாதகமாக இருந்தன. அதாவது இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தை செயற்கையாக heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இருதயத்தை துடிக்க வைத்தார்கள். 80 சத விகிதமானவர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அத்துடன் குருதியின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், பிராண வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களை குறைக்க முடியும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஜசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் மரணித்தவருக்கும் சிகிச்சை செய்து ‘உயிர்ப்பிக்க’ முடியும். ஆராச்சிகள் தொடர்கின்றன. அது நாளாந்த செயற்பாட்டிற்கு வந்து, அதுவும் எங்கள் நாட்டிற்கு வந்து சேரும் வரை மாரடைப்பு வராதிருக்க பிரார்திப்போமாக.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி:- இருக்கிறம் 01.10.2007

Read Full Post »