Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மருத்துவம்’ Category

சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது.  கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டொக்டர்?

வி. சுகி நெல்லியடி

பதில்:- இனிப்பு உணவுகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று சொல்வதற்கு முன்னர் அதற்கு அடிமையாகிவிட்டேன்  என்று நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.

இனிப்புக்கு அடிமையாவது என்பது வெறும் பேச்சுச் சொல்ல அல்ல. அது ஒரு நோய் போல பலரைiயும் பீடித்துள்ளது. ஏனெனில் நாம் இனிப்பை உட்கொள்ளும் போது எமது குருதியில் அபின் சார்ந்ததும் டோபமின் போன்றதுமான இரசாயனங்கள் கலக்கின்றன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

குருதியில் அதிகளவு டோபமின் சேரும்போது எம்மையறியது ஒரு இன்ப உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை தொடர வேண்டுமாயின் உடலானது இனிப்பை மேலும் உட்கொள்ளத் தூண்டுகிறது. நாட்செல்லச் செல்ல அதே அளவு இன்பத்தைப் பெற கூடியளவிலான இனிப்பை உட்கொள்ள நேர்கிறது. மது மற்றும் போதைப் பொருள்களும் அவ்வாறுதான் அடிமையாக்குகின்றன.

இனிப்பானது கொகேயினை விட அதிகமாக ஒருவரை அடிமைப்படுத்த வல்லது என Cassie Bjork என்ற ஆய்வாளர் கூறுகிறார். அத்துடன் அதிக இனிப்பை உட்கொள்வதால் எடை ஏறுகிறது. இதன் தொடர்ச்சியாக பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவை வரும். எனவே நீங்கள் விரும்பியவாறு அதிக இனிப்பிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்தான்.

இனிப்பு என்பது சீனி சர்க்கரை ஆகியவற்றிலும் அவை சேர்க்;கப்பட்ட உணவுகளிலும் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. பழங்களிலும் இருக்கிறது. பழங்களில் உள்ள இனிப்பு தனியாக வருவதில்லை. பழங்களிலுள்ள இனிப்பானது நார்ப்பொருள் மற்றும் ஏனைய போசணைப் பொருட்களுடன் கலந்து வருகிறது. இதனால் அவற்றில் சீனியின் அடர்த்தி குறைவு. எனவே அவற்றை உண்ணும் போது குருதியில் சீனியின் அளவு திடீரென ஏறுவதில்லை என்பதையும் குறிப்பிடலாம். எனவே அவற்றில் அடிமையாகும் நிலை ஏற்படுவதில்லை.

இதிலிருந்து விடுபடுவது எப்படி?

முதல் வேலையாக உங்களது வீட்டிலிருந்து சீனியையும் சீனி சார்ந்த பொருட்களை வீசிவிடுங்கள். அலுமாரிகளிலிருந்து அகற்றுவதுடன் உங்கள் முயற்சி நின்றுவிடக் கூடாது. அவற்றை உண்பதில்லை என திடசங்கற்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஓவ்வொரு நேர உணவையும் சரியான நேரத்தில் போதியளவாகவும் போசாக்கு நிறைந்ததாகவும் உட்கொள்ள வேண்டும். காலை உணவிலிருந்து இதை ஆரம்பிப்பது முக்கியம். இப்பொழுது பலர் வேலை அவசரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு பின்னர் பசி எடுக்கும் போது திடீர் உணவுகளை கடையில் வாங்கித் திணிக்கும் போதே இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. எனவே மாப் பொருள் புரதம் கொழுப்பு போன்ற போசணைகள் சரியான அளவில் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். ஏதாவது காய்கறி பழவகைகள் சேர்ந்திருப்பது அவசியம்.

போதிய நீர் அருந்துங்கள். தினமும் 6 கிளாஸ் நீர் அருந்துவது நல்லது. அவை இனிப்பூட்டப்பட்ட பானங்களாக இருக்கக் கூடாது.

பசி இருப்பது கூடாது. பசி இருந்தால் இனிப்பு சேர்ந்த உணவுகளுக்கான அவா அதிகரிக்கும். எனவே பிரதான உணவுகளுக்கு இடைப்பட்ட வேளைகளில் சிறு உணவுகள் உட்கொள்ளலாம். ஆனால் கேக் பிஸ்கற், ரோல்ஸ், பற்றிஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தொடவும் கூடாது. பழங்களாகவோ காய்கறிகள் அதிகம் சேர்ந்தவையாகவும் இருப்பது நல்லது.

மாறாக வறுத்த கடலை, கச்சான் எண்ணெய் சேர்க்காத கரட் வறுவல் போன்ற ஏதாவது ஒரு இனிப்பற்ற போசாக்கு சிற்றுணவை தயாராக வைத்திருங்கள். வீட்டில் இருக்கும் போது மட்டுமல்ல வேலைக்கு போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பசி எடுக்கும்போது இவற்றை உண்ணுங்கள். கடை நொறுக்குத் தீனிகளை சாப்பிடவே வேண்டாம்.

தினசரி ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் குருதியில் சீனியின் அளவை அதிகரிக்க விடாமல் தடுப்பதால் இனிப்பு மீதான நாட்டத்தையும் குறைக்கும். அத்துடன் மனம் மகிழ்ச்சியாக இருப்பதாலும் வெற்றுப் பொழுதுகள் இல்லாததாலும் இனிப்பை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது.

மனம் மகி;ழ்சியாக இருப்பது அவசியம். மறை சிந்தனைகளில் மூழ்காதீர்கள். தேவையற்ற உணர்வுச் சிக்கலகளில் மூழ்க வேண்டாம். மகிழ்சிசான பொழுதுபோக்குளில் ஈடுபடுங்கள்.

மனஅழுத்தம் இருந்தால் அதை மறக்க பலர் மதுவை நாடுகிறார்கள். உங்களைப் போன்ற இனிப்பிற்கு அடிமையானவர்கள் இனிப்பையே நாடுவார்கள். எனவே மனஅழுத்தத்தை தூண்டும் விடயங்களில் ஈடுபடாதீர்கள். உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, தியானம், யோகாசனம், மந்திர உச்சாடனம் போன்ற ஏதாவது செயற்பாட்டில் ஈடுபடுவதும் நன்மை தரும். அதே போல போதிய உறக்கமும் அவசியம்.

இக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு சும்மா இருக்காதீர்கள். உடனடியாக எழுந்து உங்கள் வீட்டிலுள்ள சொக்லேட், ஐஸ்கிறீம் முதற்கொண்டு எல்லா இனிப்புகளையும் குப்பைக் கூடையில் வீசுவதிலிருந்து உங்கள் முயற்சியை ஆரம்பியுங்கள். இனிப்பிலிருந்து விடுதலை நிச்சயம்.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

Read Full Post »

உடற்பருமன் அதிகமானவர்கள் ‘பேலியோ டயட்’ (Paleo diet)  மேற்கொண்டால் உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும் என்கின்றார்கள் ,உண்மையா?

கே.விதுசன் கிளிநொச்சி

பதில்:- உங்கள் கேள்வியான பேலியோ டயட் டின் பயன்கள் பற்றி கருத்துக்கள் உண்மையா என்பதற்கு வரு முன்னர் ‘பேலியோ டயட்’ என்றால் என்ன என்பது பற்றிய விளக்கத்தை அளிப்பது அவசியம் என நினைக்கிறேன். அதுவே கேள்விக்கான விடையினை பெருமளவு தெளிவுபடுத்திவிடும் எனவும் கருதுகிறேன்.

‘பேலியோ டயட்’ என்பதை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தால் பழைய கற்கால உணவு முறை எனலாம். ‘பேலியோ டயட்’ றை வேடுவர்களின் தேடல் உணவு, குகை மாந்தரின் உணவு போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள்.

அதாவது மனித இனமானது விவாசாயத்தை மேற்கொள்வதற்கு முன்னைய காலத்தில் மிருகங்களைக் கொன்று அதன் தசைகளையும், மீன்களையும், மரம் செடி கொடிகளிலுள்ள காய்களையும் பழங்களையும் விதைகளையும் உண்டது போன்ற உணவு முறை என்பதாகும். குறைந்தது 25 மில்லியன் முதல் 10.000 ஆண்டுகளுக்கு முன்னரான மனிதர்களின் உணவு முறை எனக் கொள்ளலாம். உண்மையில் அவர்கள் என்ன உணவு உட்கொண்டார்கள் என்பது பற்றி எங்களுக்குத் தெளிவாகத் தெரியாது. என்ன உட்கொண்டிருப்பார்கள் என நாம் எமக்குள்ள அறிவு மூலம் நாமே கற்பிதம் கொண்ட முறை எனலாம்.

விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு முற்பட்ட காலத்து உணவு முறை என்று கொள்ளும் போது அதில் அரிசி கோதுமை குரக்கன் சாமை போன்ற தானித வகைகள் எதுவும் இருக்காது. பால் தயிர் உப்பு சீனி போன்றவையும் இருக்காது. அதே போல எண்ணெய் பொரித்தல் வறுத்தல் போன்ற உணவு தயார்ப்பு முறைகளும் இருக்காது. கொழுப்பு என்பது மிருகங்களின் தசைகளிலிருந்து விதைகளிலிருந்தும் பெற்றதாக மட்டுமே இருந்திருக்கும்.

போசாக்கு ரீதியாகப் பார்க்கும் போது புரத உணவுகள் அதிகமுள்ளதும், மாப்பொருள் உணவுகள் மிகவும் குறைந்த அளவிவானதும், பொரித்தல் வதக்கல் போன்ற பதப்படுத்தல் முறைகள் அற்றதுமான உணவு முறை என்று கொள்ளலாம். கேக், பிஸ்கட், பற்றிஸ், ரோல்ஸ், ஐஸ்கிறீம் போன்ற நவீன கலோரிக் குண்டுகள் எதுவும் இந்த உணவு முறையில் நெருங்காது.

இயற்கையோடு இணைந்த, பதப்படுத்தல் முறைகள் அற்ற, புராதன மனிதனின் உணவு முறையைக் கைக்கொள்வதால் எடை அதிகரிக்காது, நீரிழிவு, கொலஸ்டரோல், இருதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நவீன நோய்களுக்கான சாத்தியம் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம் என்பதே இந்த உணவுமுறையைக் கைக்கொள்பவர்களின் நோக்கமாகும்.

இந்த உணவுமுறையின் நன்மைகள் என்று சொல்லப்படுவவை எவை?

அரிசி கோதுமை போன்ற மாப்பொருள் உணவுகளும் கொழுப்பு உணவுகள் நொறுக்குத் தீனிகள் தவிர்க்கப்படுவதால் உட்கொள்ளப்படும் கலோரியின் அளவு குறைவடையும். இதனால் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

உட்கொள்ளப்படும் உணவின் அளவு எவ்வளவு அவற்றின் கலோரிப் பெறுமானம் எவ்வளவு என்றெல்லாம் கணக்கிட வேண்டிய தேவை இல்லாததால் சுலபமான முறை. சங்கடங்கள் இன்றி சுலபமாகத் தொடரக் கூடிய முறை எனலாம்.

சொல்வதற்கு சுலபமாக இருந்தபோதும் பல நடைமுறைப் பிரச்சனைகள் இந்த பேலியோ டயட் முறையில் இருக்கின்றன.

முதலாவதாக கற்கால மனிதர்கள் எதைச் சாப்பிட்டார்கள் என்பது பற்றிய தெளிவான உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது. எனவே நாம் இப்பொழுது கடைப்பிடிக்கும் இந்த உணவு முறையானது ஊகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

அடுத்து இதுதான் பேலியோ டயட் என்று உத்தியோகபூர்வமான வரையறுக்கப்பட்ட உணவு முறை எதுவும் கிடையாது. பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி சொலிகிறார்கள்ளூ உட்கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு சிலர் பால் தயிர் மற்றும் தானிய உணவுகளை முற்றாக ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். எனவே அது ஒரு சமபல வலுவுள்ள ஆரோக்கிய உணவாக இருக்குமா என்பது சந்தேகமே.

பொதுவாக இந்த உணவு முறையில் இறைச்சி உட்கொள்வது அதிகமாக இருக்கிறது. ஆனால் கொலஸ்டரோல் போன்ற பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் இன்றைய காலகட்டத்தில் அவற்றின் உபயோகத்தை அளவோடு வைத்திருக்குமாறே இப்பொழுது அறிவுறுத்தப்படுகிறது.

பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடை இறைச்சிகளைத் தவிர்த்து இச்சையாக மேயும் கால்நடை இறைச்சியையே உண்ண வேண்டும் என பேலியோ டயட் டின் சில தீவிர ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இது நடைமுறைச் சிக்கலானதும் செலவை அதிகரிக்கச் செய்யும் விடயமாகவும் இருக்கிறது.

இந்த உணவுமுறையானது ஒரே மாதிரியாக இருப்பதாலும் பல்வேறு வகைகளையும் உள்ளடக்குவதில்லை என்பதால் பலருக்கு சிலகாலத்திற்குள்ளேயே சலிப்பை ஏற்படுத்திவிடும் என்பதும் உண்மையே.

நாம் கற்கால மனிதர்கள் போல உறுதியான உடல் உள்ளவர்களாக, நீரிழிவு, கொலஸ்டரோல், இருதயநோய்கள் போன்றவை வராமல் வாழவேண்டுமானால் அந்த  உணவு முறையை மட்டும் கடைப்பிடிப்பது போதுமா?

எங்கள் வாழ்க்கை முறை மாறிவிட்டது. அவர்கள் முழுநேர உடல் உழைப்புடன் வாழ்ந்தவர்கள். மாறாக இன்றைய மனிதர்கள் உடல் உழைப்பின்றி கதிரையே கதி என்று நாள் முழுவதும் கிடப்பவர்கள். போதிய உடல் உழைப்போ உடல் உழைப்போ இன்று கிடையாது.

எனவே அவர்களுக்கு என்று நம்பப்படும் உணவு முறை எமக்கு உதவுமா என்பது சந்தேகமே. அதே நேரம் ஓடியாடித் திரியாத உடல் உழைப்பற்ற இன்றைய வாழ்க்கை முறைக்கு இன்றைய வழமையான உணவு முறைகள் பொருத்தமானவை என்றும் சொல்ல முடியாது. நிச்சமாக மோசமானவையே.

எனவே பேலியோ டயட் முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தீட்டாத தானியங்கள் பால் பாற்பொருட்கள் போன்றவற்றிற்கு இடம் அளிக்க வேண்டும். அத்துடன் தினசரி உடற் பயிற்சி அல்லது உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் சரியாக வரையறுக்கப்பட்ட ஒரேயொரு பேலியோ டயட் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

இறுதியாக ‘பேலியோ டயட்’ (Paleo diet)  மேற்கொண்டால் உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும் என்கின்றார்கள் ,உண்மையா? என்ற கேள்விக்கு விடையாக எடை குறையும் என்பது நிச்சயம். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஆனால ஏற்கவே உள்ள நீரிழிவை முற்று முழுதாக குணமாக்குவது என்பது சாத்தியமி;ல்லை.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கூன் விழுந்தவர் பாடியவரின் கூன் பிரச்சனைகள்;

‘அரிது அரிது மானிடராதல் அரிது

மானிடராயினும் கூன் குருடு

செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…’ என்று கூன் விழுந்த பாட்டி ஒளவையார் பாடினார்.

கூன் விழுதல் பொதுவாக முதுமையில் வருவது. ஆனால் ஒளவையார் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று பாடினார். அதாவது பிறக்கும் போதே கூன் விழுவதைப் பற்றிப் பாடியுள்ளார். பிறப்பிலேயே வரும் நோய் என்று பாடியுள்ளதாக பொருள் கொள்ளலாம். உண்மைதான். பிறப்பிலும் இளவயதிலும் கூட முதுகு வளையலாம். ஆனால் அவ்வாறு வருவது குறைவு. முதுமையில் வருவதே அதிகம்.

முள்ளந்தண்டில் வளைவானது முன்பின்னாகவும் வரலாம். பக்கவாட்டிலும் வரலாம். முன்பின்னாக வருவதை kyphosis என மருத்துவத்தில் சொல்வார்கள்.

அதிலும் முதுவயதில் மேல் முதுகில் வரும் வளைவான கூனை வயது காரணமான Age related Hyperkyphosis    என்பார்கள்.

இவர்களின் மேல் முதுகு முள்ளந்தண்டு எலும்புகள் வழமைக்கு மாறாக அதீதமாக முன்பக்கமாக வளைந்திருப்பதே கூனுக்கு காரணமாகும். மணிக்கணக்காக கணனியின் முன் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் இத்தகைய கூன் (Hyperkyphosis)  வர வாய்ப்புண்டு.

பக்கவாட்டு வளைவானது சாதாரண கண்களுக்கு கூன் தெரிவதுபோல வெளிப்படையாகத் தெரிவது குறைவு. பக்கவாட்டு வளைவை மருத்துவத்தில் (Scoliosis) என்பார்கள்,

நாளாந்தம் பல கூன் விழுந்த முதியவர்களைக் காண்கிறோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். மிகுந்த சிரமத்துடுன் கைத்தடி ஊன்றி அடியெடுத்து நடந்து வருவார்கள்.

உண்மையில் முதியவர்களில் 20 முதல் 40 சதவிகிதமானவர்கள் கூன் விழுதலால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் முக்கியமாக பெண்களே பாதிப்படைவது அதிகம். இந்த வளைவிற்கு பாதிப்புற்றவர்களது வழமையான இருக்கும் மற்றும் நிற்கும் நிலைப் போக்குகள் (Posture) காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் அதிகமாகப் பாதிப்படைவதற்குக் காரணம் மகப்பேறு, பாலுட்டுதல், மற்றும் போதிய கல்சியம் உட்கொள்ளமை காரணமாக இருக்கிறது.

இருந்தபோதும் முக்கிய காரணம் வயதாவதன் காரணமாக அவர்களது முள்ளெலும்பில் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும்தான். முக்கியமாக அவர்களது முள்ளெலும்புகளில் ஏற்படும் உடைவுகளும் சேதங்களும்தான். கூனல் விழுந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு முள்ளந்தண்டு உடைவு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வயதாகும் போது முள்ளெலும்பில் ஏற்படும் உடைவுகள் விழுந்து அடிபடுவதால் ஏற்படுவதல்ல.

வயதாகும் போது அவர்களின் எலும்புகளில் உள்ள கல்சியம் சத்தின் அடர்த்தி குறைகிறது. இதனால் முள்ளெலும்புகளின் நலிவடைகின்றன. உடலின் பாரத்தை சுமக்க முடியாமல் அவை நசிந்து உடைகின்றன. இவ்வாறு எலும்பு நலிவடைவதற்கு வயது மட்டும் காரணமல்ல. ஸ்டிரொயிட் வகை மருந்துகளை நீண்ட காலம் தொடர்ந்து உபயோகிப்பதும் காரணமாகிறது.

உதாரணத்திற்கு சொல்வதானால் ஆஸ்த்மாவுக்கு உபயோகிக்கும் சில வகை இன்ஹேலர்களில் ஸ்டிரொயிட் மருந்துகள் இருக்கின்றன. ஆனால் இவை மிகமிகக் குறைந்த அளவில் இருப்பதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் பலருக்கு இன்ஹேலர்கள் உபயோகிக்க விரும்பமில்லாததால் மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள். இம் மாத்திரைகளில் உள்ள ஸ்டிரொயிட் மருந்துகளின் அளவு மிக அதிகம். அதனால் எலும்பு சிதைவு மட்டுமின்றி நீரிழிவு உட்பட பல நோய்கள் வரலாம்.

முள்ளந் தண்டுகளை இணைப்பது வட்டமான மென்மையான இடைத்தட்டங்கள் (Intervertebral disc) ஆகும். வயதாகும் இவை ஈரலிப்பை இழந்து சுருங்க ஆரம்பிக்கும். இவையும் கூன் முழுவதை மோசமடையச் செய்யும். இடைத்தட்டம் சுருங்குவதால் உடலைத் திருப்புவது குனிவது, வளைவது போன்ற பல்வேறு செயற்பாடுகளும் சிரமமாக இருக்கும். அவற்றை முழுமையாகச் செய்வது இயலாதிருக்கும்.

பொதுவாக வலிகள் படுத்து ஆறுதல் எடுக்கும் போது தணிந்து விடும். ஆனால் முள்ளந்தண்டு வளைந்திருப்பதால் படுக்கும் போது அவை அழுத்தப்படுவதால் வலி ஏற்படுவது அதிகம்.

மிக அரிதாக ஆனால் முள்ளெலும்புகளில் என்புப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதுவும் முள்ளெலும்பை வளையச் செய்யலாம்.

சிறிய கூனல் உடல் ரீதியாக பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தபோதும் கடுமையான கூனலானது பல்வேறு பாதிப்புகளைக் கொண்டுவரும்.

கூனலானது உடல் தோற்றத்தை முற்று முழுதாகப் பாதிப்பதால் உளரீதியாகவும் மனத்தாக்கம் ஏற்படலாம். தனது தோற்றம் பற்றிய தாழ்வுணர்ச்சி, விழுந்துவிடுவோமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு, மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டி இருக்கிறதே கவலை போன்றவை ஏற்படக் கூடும்.  உள வலியுடன் உடல் வலியையும் இணைந்து கொள்ளும்.

அத்துடன் கடுமையான கூனலானது சுவாசப்பையை அழுத்தக் கூடும். அவ்வாறு சுவாசப்பையில் கடும் அழுத்தம் ஏற்படுமாயின் சுவாசித்தலில் சிரமங்களும் ஏற்படக் கூடும்.

அவ்வாறே கடுமையான கூனலானது குடல் மற்றும் உணவுத் தொகுதிகளையும் அழுத்தக் கூடும். அவ்வாறு அழுத்தினால் உணவை விழுங்குவதில் சிரமங்கள் தோன்றக் கூடும். அத்துடன் வயிற்று ஊதல் பொருமல் ஏப்பம், நெஞ்செரிப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

கூன் விழுவது முள்ளம்தண்டு எலும்புகளைப் பாதிப்பதுடன் அவற்றை இயங்கவைக்கும் தசைத் தொகுதிகளையும் நலிவடையச் செய்யும். இதனால் நாற்காலியிலிருந்து எழும்புவது சிரமமாக இருக்கும். கைபிடி உள்ள கதிரையாயின் அவற்றை கைகளால் பற்றிக் கொண்டே எழ நேரும்.

அத்துடன் இயல்;பாக நடப்பதிலும் சிரமங்கள் ஏற்படும். நடப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக விழுவதற்கான சாத்தியங்கள். இத்தகைய விழுகைகளால் வேறு எலும்பு முறிவுகளையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாகும்.

இவ்வாறான பல்வேறு பாதிப்புகளால் மரணத்திற்கான சாத்தியம் முன்நோக்கி நகர்கிறது.

வயது மூப்பினால் ஏற்படும் கூன் பிரச்சனையைத் தீர்க்க சிகிச்சைகள் ஏதும் பயன்படுமா. அல்லது ‘வயசு போனவர்தானே. இனி வைத்தியம் செய்து என்ன பிரயோசனம். ஏதோ இதோடை சமாளிக்க வேண்டியதுதான்… ‘ என்று சொல்லி கைகழுவிட வேண்டியதுதானா?

கைவிட வேண்டியதில்லை. பல வழிகளில் முயலலாம். பலன் கிடைக்கும்.

சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் முதியவர்களில் அதற்கான சத்திரசிகிச்சைகள் சாத்தியமில்லை அத்தகைய சத்திரசிக்சிசைகளைத் தாங்குவதற்கான உடல் வலிமை இருக்காது என்பதுடன் மயக்க மருந்து கொடுப்பதிலும் சிக்கல்கள் இருக்கலாம்.

முள்ளந்தண்டு வளைவுகளை நிமிர்த்துவதற்கான பட்டிகள் (back braces) கிடைக்கின்றன. இவற்றை அணிவதால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

மிக முக்கியமானது முள்ளந்தண்டுகள் அவற்றை தசைநார்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கான பல பயிற்சிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து செய்வதன் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. இத்தகைய பயிற்சிகளை உடற் பயிற்சி மருத்துவம் செய்பவர்களின் அறிவுறுத்தலுடன் செய்வது நல்லது.

சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் சுவாசப்பையின் ஆற்றலை அதிகரிப்பதற்கான சுவாசப் பயிற்சிகள் தேவைப்படும்.

இவ்வாறான பயிற்சிகள் மூலம் கூன் உள்ளவர்கள் தங்கள் பாதிப்புகளை ஈடு செய்து மகிழ்வோடு வாழ முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

எனக்கு வயது 25 . நான் ஒரு பெண்.  அதிகமாக தலைமுடி உதிர்கின்றது. தீர்வு என்ன?

வி. கஜானி கண்டி

பதில்- எமது முடிகள் நிரந்தரமானவை அல்ல அவை உதிராமல் இருப்பதற்கு. தினமும் 50 முதல் 100 வரையான முடிகள் உதிரவே செய்கின்றன. அதே நேரம் புதிதாக முளைக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முடியும் 5- 6 ஆண்டுகள் வளர்ந்து வாழ்ந்து பின்னர் உதிர்கின்றன. வேறு முளைக்கின்றன. இது இயற்கையானது. ஆனால் வயதாகும்போது உதிர்வதற்கு ஏற்றளவு புதிதாக முனைப்பதில்லை.

ஆனால் நீங்கள் இளம் வயதுக்காரி. எனவே உதிர்வாற்கு ஏற்ப புதிதாக முளைக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கு வழமையைக் விடக் கூடுதலாக உதிர்வது போலத் தெரிகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் தந்தை அல்லது தாயிடமிருந்து வந்த பரம்பரை அம்சங்கள் காரணமாக இருக்கலாம். உங்களது வாழ்க்கை முறைகளில் ஏதாவது தவறு இருக்கலாம். சில தருணங்களில் சில நோய்களும் காரணமாக இருக்கலாம்.

ஏனைய விடயங்களைப் பற்றிப் பேச முன்னர் உங்கள் வயதில் வரக் கூடிய இரண்டு முக்கிய நோய்கள் இல்லை என்பதை நிச்சயப்படுத்த வேண்டும்.

உங்கள் தைரொயிட் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் முடி அதிகமாக உதிரக் கூடும். தைரொயிட் என்பது எமது கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. தைரொக்சின் ஹோர்மோனை சுரக்கும். இது குறைவாக சுரந்தால் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குழப்பங்கள், சோம்பேறித்தன்மை, முடி உதிர்தல் போன்ற பல அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு வேறு எந்த அறிகுறிகளும் இன்றி முடி ஐதாவதே ஒரே ஓரு அறிகுறியாக இருக்கும். TSH என்ற இரத்தப் பரிசோதனையைச் செய்வதன் மூலம் உங்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறதா என்பதை சுலபமாகக் கண்டறியலாம்.

பொலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ரோம் (PCOS) என்ற நோயும் உங்கள் வயதில் இருக்க வாய்ப்புண்டு. எடை அதிகரிப்பு மாதவிடாய்க் குழப்பங்கள் முகப் பருக்கள் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். மருத்துவ ஆலோசனை மூலம் இந்தப் பிரச்சனை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

வேறு பல காரணங்களையும் சொல்லலாம்.

அண்மையில் ஏதாவது உளவியல் தாக்கங்கள் இருந்திருந்தாலும் முடி அதிகமாக உதிரக் கூடும். அண்மையில் குழந்தை பிறந்திருந்தாலும் அக் காலத்தில் ஏற்படுகிற ஹோர்மோன் மாற்றங்களாலும் முடி உதிரக் கூடும். மாறாக கர்ப்பமாக இருந்த காலத்தில் முடி மிகவும் அடர்த்தியாக இருந்ததை நீங்கள் நினைவு கூரக் கூடும். தலையில் பங்கஸ் தொற்று நோய் போன்ற சரும நோய்கள் இருந்தாலும் அதிகமாக முடி உதிரும். தொற்று நோயல்லாத வேறு சரும நோய்களாலும் முடி உதிரலாம்.

எனவே உங்கள் முடி கடுமையாக உதிர்கிறது எனில் அது வேறு நோய்கள் காரணமாக இல்லை என்பதை மருத்து ஆலோசனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொளு;ளும் பெண்களுக்கும் அதிகமாக முடி உதிர வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். அதே போல உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், மூட்டு நோய்கள், மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு உபயோகிக்கும் சில மருந்துகளும் முடி உதிர்தலை அதிகரிக்கும். நீங்கள் அவ்வாறு உபயோகித்தால் அதுதான் காரணமா என அறியவும் மாற்று மருந்துகளுக்கான ஆலோசனைக்காகவும் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

முடி உதிர்வதற்கு உங்கள் தவறான வாழ்க்கை முறைகளும் காரணமாகலாம். மிக நெருக்கமான பற்களை உடைய சீப்புகளைத் தவிர்த்து சற்று அதிக இடைவெளி உடைய பற் சீப்புகளை உபயோகியுங்கள். இறுக்கமான பற்கள் உடைய சீப்புகள் முடிகளை இழுத்து பிடுங்கிவிடவும் வாய்ப்புண்டு. அதேபோல முடியை அலங்கரிக்கும் போது மிக இறுக்மாக முடியைக் கட்டுவதும் கூடாது. இறுக்கமான பின்னல் இறுக்கமான போனி ஸ்டைல் போன்றவற்றை தவிர்த்து சற்று தொளதொளப்பாக முடியைச் சீவிக்க கட்டுவது நல்லது.

இரத்த சோகை போசாக்கு குறைபாடு போன்றவையும் காரணமாகலாம். எனவே விற்றமின்கள், இரும்புச் சத்து, புரதம்  போன்றவை உள்ள மீன், கீரை, பருப்பு பயறு வகைகள், காய்கறி பழவகைகள் உள்ளடங்கிய போசாக்கு உணவுகளை உண்பது அவசியம்.

முடி மீண்டும் வளர்வதைத் தூண்டுவதற்கான தலைக்கும் பூசும் சில மருந்துகள் இருக்கின்றன. உங்கள் முடி உதிர்விற்கு வேறு நோய்கள் காரணம் இல்லை எனில் மருத்துவர் அதை உங்களுக்கு சிபார்சு செய்வார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கர்ப்பகால உடல் நிறையை எவ்வாறு குறைப்பது?
புனிதா மட்டக்களப்பு

பதில்:- கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது என்பது இயற்கையானது. கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும். நிறைமாதத்தில் ஒரு கர்ப்பணியின் எடையானது சுமார் 10-11 கிலோ அதிகரிக்கும். ஆனால் அதைவிட அதீதமாக அதிகரிப்பது கூடாது.

அவ்வாறு அதீதமாக அதிகரித்தால் அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்தே சிகிச்சை செய்ய வேண்டும்.

எடை அதிகரிப்பானது படிப்படியாக அமையும். முதல் மூன்று மாதங்களில் எடை அதிகரிப்பானது சுமாராகவே இருக்கும். அக் காலப்பகுதியில் சுமார் 1-2 கிலோ அதிகரிப்பே காணப்படும். அதன் பின்னர் வாராவாரம் சுமார் 0.5 கிலோ அதிகரிக்கக் கூடும்.

இந்த எடை அதிகரிப்பில் 2 முதல் 2.5 கிலோவானது கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் நச்சுகொடிக்கானதாகும். சுமார் 2 கிலோ கர்ப்பிணியின் மார்பக மற்றும் ஏனைய ஏனைய திசுக்கள் அதிகரிப்பதால் ஏற்படுவதாகும். மிகுதி 1.25 கிலோவானது அம்னியோடிக் திரவம் மற்றும் அதிகரித்த ஏனைய நீர்களிலானதாகும்.

கர்ப்பத்தின் குறித்த காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பானது எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தால் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

ஆனால் கருவறையில் இருப்பது இரணைக் குழந்தைகளானால் அதிகரிப்பு சற்று அதிகமாக இருக்கும்.

கர்ப்பகாலத்தில் திடீரென கூடுதலாக எடை அதிகரிப்பது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.

அத்துடன் பிரஸர் அதிகரிப்போடு கூடிய (Pre eclampsia) பிறீஇக்கொலம்சியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். இரத்த சிறுநீர் மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகளை மருத்துவர் அல்லது தாதி உடாக செய்து காரணத்தைக் கண்டறிந்து அதற்கான பரிகாரம் தேடவேண்டும்.

நோய்கள் காரணமல்லாத எடை அதிகரிப்பு என்று அறிந்தால் அவர் தனது உணவு முறையில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதுடன் சற்று உடற் பயிற்சியும் செய்து தேவைக்கு அதிகமான எடை அதிகரிப்பை சரி செய்ய வேண்டும்.

உதாரணமாக எண்ணெயில் பொரித்த, வதக்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் பால் அருந்த வேண்டும். அதை ஆடை நீங்கிய பாலாக அருந்த வேண்டும்.

சீனி அதிகம் சேர்ப்பதையும் இனிப்பான பானங்களையும் தவிர்க்க வேண்டும். லட்டு, கேசரி,தொதல்,கேக், சொக்ளட், டோநட் போன்ற போன்ற இனிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதீத எடை உள்ளவர்கள் உப்பையும் குறைப்பது நல்லது. ஏனெனில் உப்பானது உடலில் மேலதிக நீர் தேங்கிநிற்கச் செய்யும். அது எடையை அதிகரிக்கும்.

உடலில் தேங்கியுள்ள மேலதிக கொழுப்பைக் குறைப்பதற்கு உடற் பயிற்சியம் அவசியம். பொதுவாக நீந்துவது கர்ப்ப காலத்திற்கு ஏற்றதாகும். ஆயினும் எத்தகைய உடற் பயிற்சி நல்லதென்பதை இட்டு மருத்துவரோடு கலந்தாலோசிப்பது நல்லது.

கலோரி வலுக் கூடிய உணவுகளை மட்டுமே அதிக எடையுடைய கர்ப்பணிகள் தவிர்க்க வேண்டும். ஆயினும் போசாக்கு நிறைந்த உணவுகளான பால் முட்டை இறைச்சி காய்கறிகள் பழவகைகள் பருப்பு பயறு வகைகள் போன்றவற்றை போதியளவு உட்கொள்வது அவசியம்.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா?
பாரம் தூக்குவது மட்டுமல்ல உங்கள் நாளந்த செயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகளை கொண்டு வரலாம்

நாரிப்பிடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கவே முடியாது. தமது வாழ்நாளில் என்றாவது ஒரு நாளாவது இதை அனுபவித்தே இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதர்களை அதிகம் பீடிக்கும் பிர்சனையாக இருக்கிறது.

நாரிப்பிடிப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது எமது பின்புறத்தின் கீழ் முள்ளெலும்புகள் உள்ள பகுதியில் ஏற்படும் வலியாகும். Low backpain என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதேபோல பின்புறத்தின் மேல் பகுதியிலும் வலி ஏற்படலாம். இதை Upper backpain என்பார்கள்.

பொதுவாக இது ஏற்பட்டதற்கு ஏதாவது ஒரு காரணத்தை பெரும்பாலானவர்கள் இனங்கண்டிருப்பார்கள். குனிந்து ஏதாவது பாரத்தை தூக்கும்போது ஏற்படலாம். பாரம் தூக்கமாமல் சாதாரணமாக குனிந்துவிட்டு நிமிரும்போதும் ஏற்படலாம். மாறாக மொபைல் போனை நீண்ட நேரம் தூக்கிப் பிடித்து பார்க்கும்போது அல்லது கணனியில் நீண்ட நேரம் வேலை செய்த பின்னர் மேல் முதுகில் தேர்ள்மூட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் வலி ஏற்படலாம்.

தானாகவே பெரும்பாலும் குணமாகியிருக்கும். கவனியாது விட்டுவிடுவோம். சிலவேளைகளில் மருத்துவரிடம் ஓடவேண்டியும் நேர்ந்திருக்கலாம்.

எப்படியாயினும் நாம் கவனத்தில் எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் ஏதோ ஒருவிதத்தில் எமது முதுகுப் புறத்திற்கு அதிகளவு வேலைப்பளுவைக் கொடுகிறோம் என்பதற்கான சிகப்பு எச்சரிக்கiயாக அது இருக்கிறது. அத்தகைள வலி தொடரும் போது அல்லது மீண்டும் மீண்டும் வரும்போது தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.

பரம்பரை அம்சங்கள்

‘இது எனக்கு எனது அம்மா தந்தது.’ என்பார்கள் சிலர். தந்தையில் பழிபோடுவார்கள் வேறு சிலர். உண்மைதான் இத்தகைய பிடிப்புகளுக்கு பரம்பரை அம்சங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு மட்டும் இல்லை.

பரம்பரையாக வருவதற்கு அவர்களது உடல்தோற்ற அமைவு (Posture) காரணமாக இருக்கலாம். முள்ளந்தண்டு அமைப்பிலோ, இடுப்பு எலும்புகளிலோ கால்களிலோ உள்ள அசாதராண மாற்றங்கள் காரணமாகலாம். ஆனால் அத்தகைய தோற்ற அமைவு மாற்றங்கள் இல்லாத போதும் வலி ஏற்படலாம். மாறாக எத்தகைய அமைவு மாற்றங்கள் இருந்தபோதும் வலி பாதிப்பு ஏற்படாதிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அதன் அர்த்தம் என்ன? முதுகு நாரி வலி ஏற்படுவதற்கான ஏதுநிலையை பரம்பரை அம்சங்கள் கொண்டிருந்தாலும் சரியான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பிரச்சனை ஏற்படாமல் நாம் தடுக்க முடியும் என்பதேயாகும்.

அதற்கு முதற்படியாக உங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் முதுகுப் புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை இனம் காண வேண்டும்.

திரும்ப திரும்ப செய்யப்படும் செயற்பாடுகள்

பாரம் தூக்கினால் அதுவும் முக்கியமாக தவறான முறையில் தூக்கினால் பிடிப்பு வரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மருத்துவர்கள் உங்களுக்கு இது பற்றி நீண்ட அறிவுரைகளை நிச்சயம் தந்தே இருப்பார்கள். அல்லது வாசித்தும் அறிந்திருக்கலாம்.

ஆனால் மீண்டும் மீண்டும் செய்யும் ஒரேவிதமான சாதாரண செயற்பாடுகள் கூட முதுகுப் புறத்தின் தசைகளுக்கும் முள்ளந்தண்டுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தாலாம். அது நாளடைவில் சிதைவுகளை ஏற்படுத்தும்

ஒரே விதமாகச் செய்யும் செயற்பாடுகள் அந்த உறுப்புகளுக்கான தசை வளர்ச்சிகளில் சமனற்ற தன்மையைக் கொண்டு வரும். இது நாளடைவில் தோற்ற அமைவில் மாறுபாடுகளை ஏற்படுத்தி வலியைக் கொண்டுவரும்.

தவறான உடல்நிலை வலியை ஏற்படுத்தும் என்றோம். உதாரணமாக நீங்கள் முன்நோக்கி சாய்ந்து (குனிந்து அல்ல) ஒரு பொருளை எடுக்கும்போது முள்ளந்தண்டின் பின்புறத்தில் விழவேண்டிய அழுத்தத்தை முள்ளந்தண்டின் முன்புறத்திற்கு கொடுக்கிறீர்கள். இது முள்ளந்தண்டுகளுக்கு இடையுள்ள இடைத்தட்டத்திற்கு கூடிய அழுத்தத்தைக் கொடுக்கும். நாளடைவில் இது இடைத்தட்டச் சிதைவுக்கு இட்டுச்செல்லும்.

உங்கள் தொழிலானது தினமும் பலதடைவைகள் முன்நோக்கி சாய்வதாக இருந்தால் அல்லது நீண்ட நேரம் நிற்பதாக இருந்தால் முதுகுவலி வரும் என்பதற்காக வேலையை விட்டுவிட வேண்டுமா? நிச்சயமாக இல்லை.

அதற்கு ஈடுசெய்யுமுகமாக நீங்கள் செய்யும் வேலைக்கு எதிர்புறமான தசைப் பயிற்சிகளை எடுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் அடிக்கடி முன்நோக்கி சாய வேண்டிய வேலையாக இருந்தால் அதற்கு மாற்றாக வயிற்று தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமமான தரையில் படுத்திருந்து கொண்டு இரு கால்களையும் மடிக்காமல் 90 பாகைக்கு உயர்த் வேண்டும். பின்னர் கால்களை மெதுவாக படிபடிப்படியாக பதித்து சமநிலைக்கு இறக்க வேண்டும். வயிற்றுத் தசைநார்கள் இறுகுவதை நீங்களே உணரக் கூடியதாக இருக்கும்.

நீண்ட நேரம் நிற்க வேண்டியது உங்கள் தொழில் முiறாயாக இருந்தால் அதற்கு மாற்றாக நீந்துவது அல்லது ஓடுவது போன்ற பயிற்சிகளை எடுப்பது உதவும்.

மன அழுத்தம்

உடலுக்கான அதீத வேலைகள் வலியைக் கொண்டுவருவது போலவே மன அழுத்தமும். மன உடல் வலி, நாரி வலியை கொண்டுவரலாம். மன அழுத்தம் இருக்கும்போது கோபம் பதற்றம் எரிச்சலுறும் தன்மை போன்றவை ஏற்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அனுபவத்திலும் உணர்ந்திருப்பீர்கள்.

அதே போலத்தான் உடல் வலிகளும் ஏற்பட வாய்ப்புண்டு. மனஅழுத்தம் ஏற்படும் போது உடலின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. உதாரணமாக இடுப்பெலும்பின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. இதனால் தன்னையறியாமலே இடுப்பு பகுதி முன்நோக்கி சற்று சரிவடைகிறது. இது நாரிவலியைக் கொண்டு வரும்.

மனஅழுத்தமானது உடலைப் பாதிப்பதைத் தடுப்பதற்கு மனஅமைதியைக் காக்க முயல்வதுடன் உடல் பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

புகைத்தல்

புகைத்தல் உடலாரோக்கியத்திற்கு தீங்கானது என்பதை எல்லோருமே அறிவோம். ஆனால் அது முதுகு வலியையும் கொண்டுவருவதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா. புகைத்தலானது குருதிக் குழாய்களை (நாடிகளை) சுருங்க வைத்து குருதி ஓட்டத்தைக் குறைத்து உறுப்புக்களை நலிவடையச் செய்கிறது. அவ்வாறு முள்ளந்தண்டு எலும்புகள் அவற்றை இணைக்கும் இடைத்தட்டம் ஆகியவற்றிக்;கான குருதி ஓட்டத்;ததை குறைவடையச் செய்யும் இதனால் அதிகரித்த வேலைப் பளுவால் அவற்றில் ஏற்படும் சிதைவுகள் குணமடையமல் மோசடைகின்றன. இது வலியை ஏற்படுத்தும்.

எனவே புகைத்தலை நிறுத்த வேண்டும். இதைத் தவிர புற்றுநோய்கள். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு புகைத்தலே காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள்

முதுகுவலி நாரி வரி ஏற்படாமல் தடுக்க வேண்டுமாயின் அவற்றிற்கான தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். முக்கியமாக முதுகுப்புற தசைகள், வயிற்றறைத் தசைகள் மற்றும் இடுப்புத் தசைகளை வலுப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே வலியால் பீடிக்கப்பட்டவர்கள் பயிற்சி செய்யத் தொடங்கு முன்னர் செய்ய வேண்டிய பயிற்சி எது, அதைசட சரியாக செய்வது எப்படி என்பதற்கு உடற் பயிற்சி ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசனைகளை கேட்டு அறிய வேண்டும். தவறான பயிற்சிகள் வலி மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது என்பதை மறக்கக் கூடாது.

எனவே நீங்கள் முதுகுவலி நாரிவலி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவராயின் ‘எனக்கு ஏன் இந்தப் பிரச்சனை? நான் பாரம் தூக்கவில்லையே என மூளையைக் குழப்பாமல் உங்கள் நாளாந்த செயற்பாடுகள் எதாவது அதற்குக் காரணமாக இருக்கலாமா என மாற்று வழியில் யோசியுங்கள்.

விடையும் கிடைக்கும். நலமும் நாடி வரும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

M.B.B.S (Cey); D.F.M (Col), F.C.G.P (Col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

அடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது  என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்?

எஸ். பிரணவி, சாவகச்சேரி

பதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பாட்டிகள் சொல்லி பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது. ஏன் பல மருத்துவர்கள் கூட அது தீங்கானது எனச் சொல்லக் கூடும். மாற்றுக் கருத்துகளும் உள்ளன.

அண்மையில் அதாவது 2017 ல் செய்யப்பட்ட ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பாதிப்பு இல்லை என்கின்றன.

நெட்டி முறிக்கும்போது என்ன நடக்கிறது என 400 பேரை அல்டரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்நேரம் சடுதியாக தனித்துவமான ஒளிப்பாய்ச்சல் போன்று மூட்டிற்குள் ஏற்பட்டது. நெட்டி முறிக்கும்போது மூட்டிற்குள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டிருக்கும் இருக்கும் இரு எலும்புகளினதும் மேற்பரப்புகள் இழுப்பட்டு விலகுகின்றன.

மூட்டிற்குள் இருக்கும் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயாது சுலபமாக அசைவதற்கு உதவியாக அதற்குள் சிறிது திரவம் இருக்கிறது. அதை synovial fluid  என்பார்கள். இது கிறீஸ் போன்று செயற்படும். நெட்டி முறிக்கையில் எலும்பு மேற்பரப்புகள் சற்று விலகும். அப்போது போது மூட்டிற்குள் இருக்கும் அழுத்தம் குறைவதனால் அதற்குள் மேலதிக திரவம் வேகமாக உள்ளிழுக்கப்படும். இதன் போதே நெட்டி முறியும் சத்தம் உண்டாகிறது.

இவ்வாறு நெட்டி முறிக்கும் போது மூட்டினது உள்ளவு தற்காலிகமாக சற்று அதிகரிக்கிறது. அதனால் மூட்டினது செயற்பாட்டு வீதம் அதிகரிக்கிறது. அதாவது கூடியளவு வளையவும் நிமிரவும் முடிகிறது. எனவே நல்லது என்றுதானே சொல்ல வேண்டும்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் அதாவது 1990 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது நெட்டி முறிப்பதால் கைகள் சற்று வீங்குவதுடன் பிடிக்கும் வலிமையும் குறைகிறது என்றது. ஆனால் அந்த ஆய்வானது சரியான முறையில் நடைபெறவில்லை என இப்பொழுது சுட்டிக் காட்டப்படுகிறது. அத்துடன் 2017 ல் செய்யப்பட்ட இரு ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பிடிக்கும் வலிமை குறையவில்லை எனத் தெளிவாகச் சொல்லின.

எனவே நெட்டி முற்பதால் பாதிப்பு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. மாறாக சற்று சுகமான உணர்வு ஏற்படுகிறது. அதாவது சுலபமாக வளையவும் நிமிரவும் முடிவதால்.

சவ்வுகள் மாட்டு;படுவதாலும், எலும்புகள் தேய்ந்து ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் சில வகை சத்தங்கள் கழுத்து, தோள்மூட்டு, முழங்கால் போன்ற மூட்டுகளில் கேட்பதுண்டு. இவை முற்றிலும் வோறன சப்தங்கள். நெட்டி முறித்தல் சத்தங்கள் அல்ல. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். ஏனெனில் அவை நோய்கள் காரணமாக ஏற்படலாம் என்பதால் அடிப்படைக் காரணம் கண்டறியப்பட வேண்டும்.

நெட்டி முறித்தவருக்கு அதன் பின்னர் அந்த மூட்டானது சுகமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். எனவேதான் அவர் அவ்வாறு செய்கிறார். ஆந்த சுக உணர்வானது நாம் எற்கனவே கூறிய விளக்கங்களின் அடிப்படையில் உண்மையும் கூட.

ஆனால் நெட்டி முறிப்பதைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருப்பவருக்கு அந்த சத்தமானது எலும்புகள் முறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதைச் கேட்கச் சகிக்க முடியாதிருக்கிறது. அதனாலேயே அது ஆபத்தானது என்ற உணர்வைக் கொடுக்றது. அதுவும் வயதானவர்களுக்கு அது நரகாசமாக ஒலிக்கலாம். அதனால்தான் காலம் காலமாக அது ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்.

நீண்ட காலம் நெட்டி முறித்தவர்களுக்கு எலும்பு தேய்வு ஏற்படுமா என்பதற்கான ஆதாரங்களும் ஆய்வுகள் ஊடாக கண்டு பிடிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பட வேண்டும்.

எனவே இன்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நெட்டி முறிப்பது ஆபத்தானது அல்ல என்றே சொல்ல முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது 
எதிரொலிக்கு கேள்விகள் அனுப்ப (ethirolimedia@gmail.com), Tel 0212243818

0.00.0

Read Full Post »

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா?

எஸ் . வினோத் வவுனியா

பதில்:- பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் வரக் கூடும் என்ற சில சந்தேகங்கள் பரவலாக உள்ளன.

பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் நிறக் கலவைகளில் பலவிதமான இரசாயனங்கள் கலந்துள்ளன. நிக்கல், குறோமியம், மங்கனீஸ், கோபாலட், டைடேனியம் ஒட்சைட் போன்றவை முக்கியமானவை. (nickel, chromium, manganese, cobalt, or titanium dioxide).  இவற்றில் பல நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அந்த இரசாயனங்கள் பச்சை குத்தப்பட்ட இடத்தில் மட்டுப்பட்டு நிற்காமல் அருகில் உள்ள சருமத்திற்கும் நிணநீர்த் தொகுதி ஊடாக நிணநீர்க் கட்டிகளுக்கும் பரந்து சென்று அவற்றை சற்று வீக்கமடையச் செய்வதாக அண்மைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவை நச்சுத்தன்மை வாய்ந்தமை என்பதற்கு அப்பால் நிக்கலும் குரோமியமும் புற்றுநோய்த் தூண்டியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே பச்சை குத்துபவர்களுக்கு எதிர்காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் புற்றுநோய் ஏற்படுவதாக இதுவரை கண்டறியப்படவில்லை.

பச்சை குத்தப்பட்டவர்கள் எந்தவித ஆபத்தும் இன்றி சாதாரணமாக இருப்பதால் அவை பாதுகாப்பானவை என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் இருக்கிறது. ஆனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட நீண்ட பல வருடங்கள் எடுக்கும் என்பதால் அவை பற்றி பெரும்பாலும் தெரியவருவதில்லை.

பச்சை குத்துவது என்பது சருமத்தில் சில அடையாளங்களை அல்லது கோலங்களை அல்லது எழுத்துக்களை வர்ண கலவைகளால் பதிப்பதாகும். சிறிய ஊசிகள்களால் நுண்ணிய அளவு வண்ணக் கலவைகளை மீண்டும் மீண்டும் சருமத்தின் மேற்பகுதியில் குத்துவதால் அவை உள்ளே செல்கின்றன.

இவை நிரந்தரமான அடையாளங்கள் என்பது குறிபிடப்பட வேண்டியதாகும். காலத்தால் அழியாதவை. எனவே அந்நியப் பொருளான அது உடலில் நிரந்தரமாகக் குடிகொள்ளப் போகிறது என்பது கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம். எந்த அந்நியப் பொருளானாலும் அதற்கு எதிராக உடல் எதிர்வினையாற்றக் கூடும்.

புற்றுநோய் வருமா இல்லையா என்ற பிரச்சனைக்கு அப்பால் வேறு பல பாதிப்புகள் ஏற்படுவதை மருத்துவர்களாகிய நாம் காண முடிகிறது.

ஒவ்வாமை சரும நோய்கள் மிக முக்கியமானவை. அந்த இடத்தில் சருமத்தில் அரிப்பு எடுப்பது, அழற்சி மற்றும் எக்ஸிமா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு உடனடியாகவே அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் வேறு சிலருக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவை தோன்றக் கூடும்.

பச்சை குத்திய உடங்களில் கிருமித் தொற்று ஏற்பட்டு புண்கள் தோன்றுவதை அதிகம் காண முடிகிறது. இதற்குக் காரணம் பச்சை குத்தும் பணியாளர்கள்; தமது கைகளை கழுவுதல் குத்துவதற்கு உபயோகிக்கும் ஊசிகளை கிருமி நீக்கம் செய்யாமை போன்ற சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்காமையே ஆகும். சருமத்தில் கிருமித் தொற்று மட்டுமின்றி பெரிய சீழ் கட்டிகள் வரை ஏற்படுவதுண்டு.

பச்சை குத்திய இடங்களில் தழும்புகள் தோன்றுவது மற்றுமொரு பிரச்சனை. அழகைத் தேடப் போய் அசிங்கத்தில் முடிவதாக இது அமையும். இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. உடலியல் ரீதியாக சிலருக்கு இவை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இருந்தபோதும் ஆழமான பெரிய புண்கள் ஏற்பட்டால் எவருக்கும் தழும்புகள் தோன்றலாம். தழும்புகள் சுலபமாகக் குணப்படுத்த முடியாதவை என்பதால் அவை வராமல் தடுப்பதே உசிதமானது.

சிறிய காய்கள் முளைகள், சரும அழற்சி போன்றை உள்ள இடங்களில் பச்சை குத்துவது அறவே கூடாது. ஏனெனில் அவை பின்பு புற்றுநோயாக மாறக் கூடிய சாத்தியம் உள்ளது. புச்சை குத்துவதில் உபயோகிக்கும் நிறக் கலமிகள் அதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.

இவ்வாறாக பல வித பாதிப்புகள் ஏற்படுவதால் பச்சை குத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது 

எதிரொலிக்கு கேள்விகள் அனுப்ப (ethirolimedia@gmail.com), Tel 0212243818

0.00.0

Read Full Post »

கேள்வி-  நான் ஒரு பெண். எனது வயது 55. எனக்கு நீரிழிவு (Type 11 )உள்ளது.  எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்.

ஆர். சுமதி வவுனியா

பதில்:- நீரிழிவாளர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு என்று சொல்லாதீர்கள் நீரிழிவாளர்களுக்கான உணவுத் திட்டம் என்று சொல்லுங்கள். ஏனெனில் நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம்.

ஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.

நீரிழிவாளர்களுக்கான உணவுகளை விரும்பிய அளவு உண்ணக் கூடியவை, இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டியவை, மிகக் குறைவாக உண்ண வேண்டியவை என வகுத்துக் கொள்ளலாம்.

விரும்பிய அளவு உண்ணக் கூடியவை

விரும்பிய அளவு உண்ணக் கூடிய  உணவுகள் என்று எவற்றைக் குறிப்படலாம்.

பொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.

ஒருவர் உண்ணும் ஒரு கோப்பை உணவில் அரைவாசி காய்கறிகளாக இருக்க வேண்டும். கோப்பையில் முதலில் காய்கறி உணவு வகைளால் அரைவாசி நிரப்பிவிட்டு அதன் பின்னரே சோறு இடியப்பம் புட்டு பாண் அப்பம் போன்ற உணவுகளை வைக்க வேண்டும்.

ஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை (கிழங்கு வகைகள்) ஓரளவே உண்ண வேண்டும்.

இடைப்பட்ட அளவில் உண்ண வேண்டியவை

வேறு சில உணவுகளை இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டும். பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.

முக்கியமாகச் சொல்ல வேண்டியது சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல என்பதே. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம். தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது.  ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.

தீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. புளுங்கலை விட பச்சையரிசி நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு சாப்பிட நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை மேலும் சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும்.

இதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருளானது உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.

இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல.

இவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.

பயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.

உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.

பழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பலாப்பலம் கூட ஓரிரு சுளைகள் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் சீனிச் சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிக அதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.

மீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும்.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது. முட்டையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 3-4 முறை மட்டும் உண்ணலாம்.

மிகக் குறைவாக உண்ண வேண்டியவை எவை

இனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது. இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.

இனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா?

100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் துண்டில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா?

100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸ்கட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

அதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

‘உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்’ என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.

களையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.

எனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் போன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.

உணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.

ஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.

இனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

நான் மூக்குத்தி குத்தி 2 மாதங்கள் ஆகின்றன  டொக்டர். ஆனால் குத்திய இடத்தில் ஏற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?

கங்கா சுரேஸ் கொழும்பு

பதில்:- உங்களுக்கு மூக்கு குத்தியது யார், குத்தியவர் சுகாதார முறைப்படி குத்தினாரா என்பது எனது எதிர்க் கேள்வியாக இருக்கும்.

ஏனெனில் மூக்கு குத்திய இடத்தில் புண் என்றால் பெரும்பாலும் கிருமித் தொற்றாகவே இருக்க வேண்டும். மூக்கு குத்தியபோது சுகாதார முறைப்படி குத்தாவிட்டால், அதாவது குத்தியவரின் கைகளில் இருந்தோ, உங்கள் மூக்கில் இருந்தோ அல்லது மூக்குத்தியிலிருந்தோ கிருமி பரவியிருக்கலாம்.

கிருமித் தொற்றா என்பதை நீங்கள் எவ்வாறு இனங் காண முடியும்?

மூக்கு குத்திய இடத்தில் சற்றே வீக்கத்துடன் வலியும் இருக்கும். கை பட்டால் அல்லது அவ்விடம் தட்டுப்பட்டால் வலி அதிகமாகும். அவ்விடம் சற்று செம்மை பூத்திருக்கவும் கூடும். சில வேளைகளில் அவ்வித்திலிருந்து சற்று சீழ் வடியவும் கூடும். ஆறாத  புண்ணால் மூக்கு குத்திய இடத்தில் சற்று சதை வளரவும் கூடும். சதை அதிகம் வளர்ந்தால் மூக்குத்தி அதனுள் புதைந்து விடவும் கூடும்.

புண் விரைவில் ஆறவில்லை எனில் புண்ணைச் சுத்தமாக வைத்திருப்பது விரைவில் குணமடைய உதவும்.

தினமும் 4-5 தடவைகள் புண்ணைக் கழுவுங்கள். சோப் போட்டு கழுவுவதைவிட உப்புத் தண்ணீரால் கழுவுவது நல்லது. ஸ்பிரிட், ஹைரஜன் பெரோக்சைட் (Hydrogen peroxide)  போன்றவற்றை சுத்தம் செய்யப் பயன்படுத்த வேண்டாம்.

புண்ணைக் கழுவுவதற்கு முன்னர் உங்கள் கைகளை சோப் போட்டு சுத்தம் செய்வது அவசியம். கழுவிய இடத்தில் உள்ள ஈரத்தை சுத்தமான துணியால் மட்டுமே ஒத்தித் துடைக்க வேண்டும். அல்லது சுத்தம் செய்வதற்கான புதிய ரிசூ வை உபயோகிக்கலாம்.

புண் உள்ள இடத்தில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் சுடுதண்ணி ஒத்தடம் கொடுப்பது நல்லது.

சுத்தம் செய்யும் போது மூக்குத்தியை அகற்ற வேண்டியதில்லை. துவாரம் மூடாமல் இருப்பதற்கும் சீழ் தேங்கி நிற்காமல் வடிவதற்கும் மூக்குத்தி அதிலேயே இருப்பது நல்லது. எதற்கும் உங்கள் மருத்துவரிடம் அதைக் கழற்றுவதா வேண்டமா என்பது பற்றி ஆலோசனை பெறவும்.

பொதுவாக சாதாரண கிருமித் தொற்று எனில் அதற்கான அன்ரிபயோடிக் ஓயின்மென்ற் பூச அது மாறிவிடும். பொதுவாக Mupirocin ஓயின்மென்ட் நல்ல பலன் கொடுக்கும். ஆயினும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இத்தகைய மருந்துகளை உபயோகிப்பது உசிதமானதல்ல. சில வேளைகளில் அன்ரிபயோடிக் மாத்திரைகளை உட்கொள்ளவும் நேரலாம்.

மாறாக ஒரு சிலருக்கு மூக்குத்தியால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் புண் ஆறாது இருக்கும் ஒவ்வாமையால் ஏற்பட்ட புண் ஆயின் வலி அதிகமாக இருக்காது. ஆனால் சற்று நமைச்சல் இருக்கலாம். இதற்குக் காரணம் மூக்குத்தியில் உள்ள உலோகப் பொருள் உங்களுக்கு ஏற்படுத்தும் ஒவ்வாமையே ஆகும்.

சுத்தமான பொன்னுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவு. ஆனால் சுத்தமான பொன்னால் நகைகள் செய்ய முடியாது ஏனெனில் அவை உறுதியாக இருக்காது. எனவே நிக்கல் (Nickel) போன்ற வேறு சில உலோகங்களையும் கலந்தே நகை செய்வார்கள். அவற்றிற்கு ஒவ்வாமை ஏற்படுவது அதிகம். கவரிங் நகை எனில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.

உங்களது புண் ஓவ்வாமையால் ஏற்பட்டது எனில் மூக்குத்தியை அகற்றிவிட புண் ஆறிவிடும். ஆனால் மீண்டும் போடக் கூடாது.

வேறொரு பிரச்சனையும் உள்ளது. மூக்குத்தியை எந்த இடத்தில் குத்தியிருக்கிறீர்கள் என்பதாகும். மூக்குத் துவாரங்களுக்கு இடையேயுள்ள தடுப்பு சுவரில் குத்தியிருக்கிறீர்களா?

மூக்கின் தடுப்பு சுவரின் அடிப்பகுதி மாத்திரம் தசை சவ்வுகளால் ஆனது. அதற்கு மேலே உள்ள பகுதியில் குருத்தெலும்பு உள்ளது. அதில் குத்தியிருந்தால் அதில் கடுமையான குருத்தெலும்பு கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மூக்கின் மூக்கின் தடுப்பு சுவர் (Perichondritis and necrosis of nasal wall)    சிதைந்து முக்கின் அமைப்பையே மாற்றிவிடக் கூடியளவு ஆபத்தானது. ஆனால் உங்கள் பிரச்சனை அது அல்ல என ஊகிக்க முடிகிறது.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

Older Posts »