Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தலைவலி’ Category

கபாலம் வெடிக்குமாப் போல கிடக்கு என்று தலையைப் பிடித்துக் கொண்டுவருபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றும் மைகிரேன் என்று தாங்களே பெயர் சொல்லிக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். இருந்தபோதும் இவர்கள் எல்லோருமே உண்மையில் ஒற்றைத் தலைவலிக்காரர் அல்ல.

சாதாரண தலைவலியானது தடிமன், மூக்கடைப்பு, மனப்பதற்றம், காய்ச்சல் போன்ற பல நோய்களின்போது ஒரு அறிகுறியாக வெளிப்படுவதுண்டு.

ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது அவைபோன்ற வெறும் தலைவலியல்ல. மிகவும் தனித்துவமான ஒரு நோயாகும். அந்நோய் இல்லாத தருணங்களிலும் கூட அது பற்றிய எண்ணம் வந்தால் பதறவைக்கக் கூடிய கடுமையான நோயாகும். தான் செய்து கொண்டிருப்பது எவ்வளவு முக்கிய வேலையானாலும் அதைக் கைவிட்டுவிட்டு ஒதுங்குமளவிற்குத் தீவிரமானதாகும்.

வேறுபடுத்தும் அறிகுறிகள்

18146

இத் தலைவலியின் சில தனித்துவமான பண்புகள் ஏனைய தலைவலிகளிலிருந்து வேறுபடுத்த உதவுகின்றன.

  • தூங்க முடியாதபடி துடிதுடிக்க வைக்கும் மிகக் கடுமையான தலைவலி இது. படுவேகமாகக் குத்துவதுபோலவும், கூடிக்குறைந்து கொண்டிருப்பதுபோவும் தோன்றலாம்.
  • தலையின் ஒரு பக்கத்தில் மட்டுமே இது தாக்கும். பெரும்பாலனவர்களுக்கு தொடர்ந்து அதே பக்கத்திலியே தாக்கும்.
  • கண்ணின் உட்புறமாகவோ தலையின் பின்புறமாகவோ அன்றி கழுத்துப் பகுதியிலோ தாக்கக் கூடும்.
  • ஆரம்பிக்கும்போது மந்தமாக ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களிலோ சில மணிநேரத்திலோ தாங்கமுடியாதளவிற்கு அதிகரிக்கும்.
  • சில நிமிடங்களில் தணியாது. பொதுவாக 6மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை கூட தொடரும்.
  • பார்வை தொடர்பான சில சடுதியான தாற்காலிக மாற்றங்கள் ஒற்றைத் தலைவலி வரப்போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதுபோல வருவதுண்டு.

    பார்க்கும் போது வெற்றுப்புள்ளி அல்லது கருமையான புள்ளிகள்

    மங்கிய பார்வை

    கண் வலி

    நட்சத்திரங்கள் மின்னுவதுபோல அல்லது கோடுகள் வளைந்து வளைந்து செல்வதுபோல

 ஒரு குழாயினூடாக அல்லது சுரங்கத்தினூமாகப் பார்ப்பது போலிருத்தல்

  • இவற்றதை; தவிர திடீரெனக் குளிராக உணர்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, சோர்வு களைப்பு, பசியின்மை, குமட்டல் வாந்தி, விறைப்புத்தன்மை, வியர்வை, ஒளிகளைப் பார்க்கக் கூச்சம், அல்லது ஒலிகளைப் பொறுக்க முடியாமை போன்ற அறிகுறிகளும் இருக்கக் கூடும்.

தலைவலி வருவதற்கு முன்னர் சிலருக்கு, கொட்டாவிவிடுவது, சிந்தனைத் தெளிவின்மை, குமட்டல் பேசும்போது சரியான வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றுவதுண்டு.

headaches

சிலருக்கு தலைவலி நின்ற பின்னரும் கூட, மனம் சோர்சாக இருத்தல், சிந்தனை தெளிலாக இல்லாதிருத்தல், தூக்கக் கலக்கம போன்ற உணர்வு, கழுத்து வலி என அதன் பாதிப்பு ஓரிரு நாட்களுக்குத் தொடர்வதுண்டு.

யாருக்கு வரும்

பொதுவாக குழந்தைப் பருவத்திலும் முதமையிலும் வருவது குறைவு. 10 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட காலத்திலேயே முதன்மதலில் தோன்றுவதுண்டு.

பொதுவாக ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகமாக வருவதுண்டு.

ஒற்றைத் தலைவலி உள்ள பெண்களுக்கு அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் காலங்களில் குறைவாகவே வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் பலருக்கு வருவதும் உண்டு.

தூண்டும் காரணங்கள் எவை?

மூளைக் கலங்களின் வழமைக்கு மாறான செயற்பாடுகளால்தான் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது என நம்பப்படுகிறது. அதனால் நரம்பு பாதையிலும் மற்றும் இரசாயன மாற்றங்களாலும் இரத்தக் குழாய்களும் தசைநார்களும் இறுக்கமடைவதே தலைவலியை ஏற்படுத்துகிறது.

Migraine-Triggers

இவ்வாவறு நிகழ்வதை பல விடயங்கள் தூண்டுகின்றன. ஒருவருக்கு எந்தெந்த விடயங்கள் தலைவலயைத் தூண்டுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் கூலம் தலைவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

  • மனஅழுத்தம், பதகளிப்பு நோய், மனஅமைதியைக் குலைக்கும் சம்பவங்கள்.
  • சில வகை மணங்களும் வாசனைத் திரவியங்களும்,
  • உரத்த சத்தங்கள், பிரகாசமான ஒளி உதாரணமாக கடும் வெயிலில் அலைவது,
  • மதுபானம், புகைத்தல் போன்றவை
  • பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள், கருத்தடை மாத்திரைகள்.
  • வழமையான தூக்க வழக்கங்களில் மாற்றஙகள், தூக்கக் குறைபாடு,
  • காலம் தவறிய உணவு, கடுமையான உடற்பயிற்சி
  • சில வகை உணவுகள்

* பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகள், மோனோசோடியம் குளுட்டாமேட் (MSG) கொண்ட உணவுகள்

* பேக் பண்ணப்பட்ட உணவுகள், சாக்லேட், விதைகள், கொட்டைகள், வேர்க்கடலை வெண்ணெய்,

* Tyramine கலந்த சிவப்பு ஒயின், நாட்பட்ட சீஸ், மீன், கோழி, ஈரல், போன்றவை

* அவகாடோ, வாழை, ஓரென்ஞ், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்

* வெண்காயம் சிலரில்

 சிகிச்சை

  • நீங்கள் ஓற்றைத் தலைவலி நோயாளியானால், அதைத் தூண்டும் காரணிகளை அனுபவத்தின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நோய் தோன்றுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
  • தலைவலி வந்துவிட்டால் சப்தற்ற அமைதியான இடத்தில் ஆறுதல் எடுங்கள். ஒளி குறைவான அல்லது இருண்ட அறை உசிதமானது.
  • முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள்.
  • கடுமையான தலைவலியானால் டிஸ்பிரின் போன்ற கரையக் கூடிய அஸ்பிரின் மாத்திரைகளில் இரண்டைக் கரைத்துக் குடியுங்கள். சிலர் இபூபுருவன் 400 மிகி மாத்திரை ஒன்றை உட்கொள்வதுண்டு.
  • வாந்தியும் கலந்திருந்தால் டொம்பெரிடோன் 10மிகி மாத்திரைகளில் இரண்டு அல்லது புரொமெதசீன் 25மிகி மாத்திரையில் ஒன்று விழுங்கலாம்.
  • மிக அடிக்கடி தலைவலி வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு சில மாதங்களுக்கு தினசரி தடுப்பு மாத்திரைகள் உண்ண நேரலாம். அது மருத்து ஆலோசனையுடன் அவரது வழிகாட்டலில் மட்டும் செய்ய வேண்டியதாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

 MBBS(Cey), DFM (Col), MCGP (col)

 குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »