அவள் கட்டிப் போடும் மருத்துவம் செய்திருந்தாள். இது கட்டிப் பிடி மருத்துவமல்ல. கட்டிப் போட்ட வைத்தியம்.இதைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரிடையாக இப்பொழுது பார்க்க முடிந்தது.அவளது முகத்தில் ஒரு கருமையான முளை. கழலை என்றும் சொல்வார்கள்.
![]() |
வேறு வேறு தோற் கழலைகள் |
இவை பெரும்பாலும் ஆபத்து அற்றவை. அரிதாக சருமப் புற்றுநோயாக இருப்பதுண்டு.
இந்த முளைக்குத்தான் அவள் கட்டிப்போடு மருத்துவம் செய்திருந்தாள். தனது தலை முடியால் அதன் அடிப்பாகத்தில் இறுக்கிக் கட்டியிருந்தாள். அவ்வாறு கட்டினால் அதற்கு தேவையான குருதி கிடைக்காது. அது இறந்து கருகி விழும். இது முற்காலத்தில் வீட்டு மருத்துவமாகச் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் மருத்துவ வசதிகள் மிகச் சிறப்பாக இருப்பதால் இப்பொழுது ஒருவரும் அதை நாடுவதை நான் நீண்ட காலமாகக் காணவில்லை.
ஏதோ ஒரு உந்துதலில் அவ்வாறு தலை முடியினால் கட்டிப் போட்டுவிட்டாள். அடுத்த அடுத்த நாட்களில் பயம் பிடித்தது. ஏதாவது ஆகுமா. முகத்தில் புண் ஏற்பட்டுவிடுமா, சீழ் பிடிக்குமா எனப் பலபல சந்தேகங்கள்.
இப்பொழுது என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பது என தலையில் விழுந்தது.
பிரச்சனைகள் ஏற்படாமல் தீர்க்க அதை நீக்குவோம் என்றேன். ஏற்றுக் கொண்டாள்.
அவ்விடத்தை சுத்தம் செய்து, மரக்கச் செய்யும் மருந்தைப் போட்டு அகற்ற முடிவு செய்தோம்.
அவ்வாறே செய்தோம்.
சிறிய காயம் என்பதால் மூடித் தையல் போட வேண்டி நேரவில்லை. வெறுமனே மருந்திட்டு பிளாஸ்டர் போட்டு அனுப்பி வைத்தேன்.
ஐந்து நாளில் மீண்டும் வருவார். காயம் ஆறியிருக்கும். சில நாட்களில் அழகு வதனம் முன் போல ஆகிவிடும்.
இவ்வாறு சுய வைத்தியம் செய்யலாமா எனக் கேட்காதீர்கள். கிருமி தொற்றிவிடலாம். அல்லது ஆபத்தான புற்று நோய் போன்ற கட்டியில் தானே சிகிச்சை செய்ய முனைந்து பிரச்சனையை மோசமாக்கலாம்.
மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நல்லது.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை இது கட்டிப் போட்ட வைத்தியம். கட்டிப்பிடி வைத்தியம் அல்ல