Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நீரிழிவு’ Category

கேள்வி-  நான் ஒரு பெண். எனது வயது 55. எனக்கு நீரிழிவு (Type 11 )உள்ளது.  எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்.

ஆர். சுமதி வவுனியா

பதில்:- நீரிழிவாளர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு என்று சொல்லாதீர்கள் நீரிழிவாளர்களுக்கான உணவுத் திட்டம் என்று சொல்லுங்கள். ஏனெனில் நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம்.

ஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.

நீரிழிவாளர்களுக்கான உணவுகளை விரும்பிய அளவு உண்ணக் கூடியவை, இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டியவை, மிகக் குறைவாக உண்ண வேண்டியவை என வகுத்துக் கொள்ளலாம்.

விரும்பிய அளவு உண்ணக் கூடியவை

விரும்பிய அளவு உண்ணக் கூடிய  உணவுகள் என்று எவற்றைக் குறிப்படலாம்.

பொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.

ஒருவர் உண்ணும் ஒரு கோப்பை உணவில் அரைவாசி காய்கறிகளாக இருக்க வேண்டும். கோப்பையில் முதலில் காய்கறி உணவு வகைளால் அரைவாசி நிரப்பிவிட்டு அதன் பின்னரே சோறு இடியப்பம் புட்டு பாண் அப்பம் போன்ற உணவுகளை வைக்க வேண்டும்.

ஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை (கிழங்கு வகைகள்) ஓரளவே உண்ண வேண்டும்.

இடைப்பட்ட அளவில் உண்ண வேண்டியவை

வேறு சில உணவுகளை இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டும். பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.

முக்கியமாகச் சொல்ல வேண்டியது சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல என்பதே. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம். தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது.  ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.

தீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. புளுங்கலை விட பச்சையரிசி நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு சாப்பிட நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை மேலும் சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும்.

இதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருளானது உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.

இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல.

இவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.

பயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.

உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.

பழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பலாப்பலம் கூட ஓரிரு சுளைகள் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் சீனிச் சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிக அதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.

மீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும்.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது. முட்டையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 3-4 முறை மட்டும் உண்ணலாம்.

மிகக் குறைவாக உண்ண வேண்டியவை எவை

இனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது. இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.

இனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா?

100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் துண்டில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா?

100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸ்கட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

அதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

‘உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்’ என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.

களையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.

எனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் போன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.

உணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.

ஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.

இனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

“அம்மா ஒரே தூக்கமா இருக்கிறா. கூப்பிட்டால் எழும்புறா இல்லை. ஒருக்கால் போய்ப் பாருங்கோ” மகன் சொன்னார்.

அவர் பேசியது லண்டனில் இருந்து.

fainted lady

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்ற வாரம்தான் அம்மா வீடு திரும்பியிருந்தார். வீட்டில் கூட இருந்த மகள் அவசர அலுவலாக ஊருக்குப் போய்விட்டா.

பராமரிப்பு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தாதிப் பெண்தான் பராமரிக்கிறாள். மற்ற மகள் சற்றுத் தள்ளி வேறு வீட்டில் இருக்கிறா. ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் வந்து பார்த்து ஆக வேண்டியவற்றைச் செய்து திரும்புவா.

பார்த்தவுடனேயே அது சாதாரண தூக்கம் அல்ல எனப் புரிந்தது. மயக்கநிலை. இரத்த குளுக்கோசைப் பார்த்தபோது அது 40 ல் நின்றது. Hypoglycemia என்போம். இரத்தத்தில் சீனியின் அளவு சாதாரண அளவிலும் குறைவது என அர்த்தமாகும்.

மற்றொரு ஐயாவின் நிலை முற்றும் மாறானது.

அண்மையில்தான் நீரிழிவு எனக் கணடறிந்திருந்தோம். “நீங்கள் தந்த குளிசைப் போட்டால் எனக்கு களைக்குது. இரத்தத்திலை சீனி குறைஞ்சபடியால்தான் தலைச் சுத்து வரும் என்று நண்பர் சொன்னர். நான் தலைச்சுத்து வந்தவுடன் சீனியைப் வாயிலை போடுறன்.”

அவரது இரத்த சீனி அளவைப் பார்த்போது அது 300 யைத் தாண்டியிருந்தது. குருதியில் சீனியின் அளவு மிக அதிகமாக இருந்தமைக்கு காரணம் அவரது சீனியன் அளவு குறைவது பற்றிய தவறான கருத்துதான்.

Blood sugar

களைப்பு என்றவுடன் சீனியை தேவையின்றி உபயோகித்திருந்தார்.

களைப்பு தலைச்சுத்து சோர்வு என்ற எந்த அறிகுறிகள் ஏற்பட்டாலும் அது சீனி குறைவதால்தான் என சீனி நோயாளர்கள் பலரும் கருதுகிறார்கள். இவை வேலைப்பளு, நித்திரைக் குறைவு, மனச்சோர்வு போன்ற வேறு காரணங்களாலும் ஏற்படலாம். தனக்கு நீரிழிவு என்று அறிந்தவுடன் ஏற்படும் மனச்சோர்வும் களைப்பாக தோன்றுவதுண்டு.

நீரிழிவும் மருந்துகளும்

நவீன மருந்துகள் நீரிழிவு நோயாளிகளுக்கு அபரிதமான நன்மைகளைச் செய்துள்ளன. நீரிழிவு என்பது பயங்கர நோயாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. குறைந்த வயதில் மரணமடைவதற்கு அதுவும் முக்கிய காரணமாக இருந்தது.

மாறாத புண்களுக்காக பலரும் கால்களை இழந்தார்கள். ஆனால் இன்றைய மருந்துகளாலும் நீரிழிவு பராமரிப்பு பற்றிய நவீன அறிவியலாலும் நீரிழிவு நோயாளிகளால் ஏனையவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. முற்காலம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இன்று அவர்களுக்கு இல்லை.

“இந்த மருந்துகளைச் சாப்பிட்டுத்தான் எனக்கு நோய்” எனப் பலர் சொல்வார்கள் ஆனாலும் மருந்துகள் காரணமாகவே நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் வாழ முடிகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதால் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறு நீரகப் பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க முடிகிறது. மரணங்கள் பின்தள்ளப்பட்டு முழுமையான ஆயுசு கிட்டுகிறது.

குருதியில் சீனியின் அளவு குறைதல்

இருந்தபோதும் ஒரு முக்கியமான ஆபத்து இருக்கவே செய்கிறது. முன்னரே குறிப்பட்ட குருதியில் சீனியன் அளவு குறைவதே அது ஆகும். இது பெரும்பாலானவர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சனையாக இங்கு காணப்படுவதில்லை. நோயாளிகள் சரியான முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை அளவு மாறாமல், வேளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் இதைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது.

low blood sugar

இருந்தபோதும் Yale School of Medicine and the University of Chicago வில் செய்யப்பட்ட ஆய்வானது குருதியில் இரத்தம் குறைவதானது எதிர்பாராமல் நடக்கக் கூடியது என்கிறது.

தங்களது நீரிழிவின் அளவை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கே இது ஏற்படலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. சீனியின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு சீனியின் மட்டம் திடீரெனக் குறையும் என யாரும் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் 10000 Type 2  நீரிழிவாளர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு எதிர்பாராத முடிவைக் கொடுத்தது. ஒரு வருடம் ஆய்வு செய்யப்பட்ட போது அவர்களில் 10 சதவிகிதமானவர்களுக்கு சீனிமட்டம் குறைந்ததைக் கண்டறிந்தார்கள். அதுமட்டுமின்றி சீனியின் அளவு கட்டுப்பாஎன்றி அதிகமாக இருந்தவர்களுக்கே அவ்வாறு சீனி மட்டம் எதிர்பாராது குறைந்ததாம். .

குறைந்த சீனி மட்டம் என்பது எது?

சாதாரண சீனி மட்டம் என்பது 60 mg/dl  முதல் 118 mg/dl வரையாகும்எது? சீனி மட்டமானது 60 mg/dl (3.3 mmol/L) க்குக் கீழ் குறைந்தால் அது Hypoglycemia எனப்படும் குறைந்த சீனி மட்டம் எனப்படும். இந்த நிலையில் அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். மேலும் குறைந்தால் கோமா என்று சொல்லப்படும் மயக்கத்திற்கும் இட்டுச் செல்லலாம்.

குறைந்த சீனி மட்டத்தின் அறிகுறிகள் எவை?

ஒருவரின் இரத்தத்தில் சீனிமட்டம் குறைந்திருப்பதை எப்படி அறிவது?

நடுக்கம், பயம், வியர்வை, களைப்பு, கடுமையான பசி, தலையிடி, கண்பார்வை மங்கல், தலைச்சுற்று, நெஞ்சுப் படபடப்பு, மாறாட்டம், தடுமாற்றம், பேச்சுத் திணறல், கூடுதலான நித்திரைக் குணம், வயிற்று வலி, ஓங்காளம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

இவ்வறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும் என்பதில்லை. ஒரு சில அறிகுறிகள் மட்டும் தெரிந்தாலும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

சில தருணங்களில் நோயாளி; உணர்வதற்கு முன்னரே கூட இருப்பவர்கள் அவரில் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடும். நீங்கள் குழப்படைந்திருப்பதையும், கூடுதலாகச் சினமடைவதையும், வெளிறிப் போயிருப்பதையும், வியர்த்திருப்பதையும் அவர்கள் அவதானிக்கலாம்.

இவ்வாறு நேரும்போது குளுக்கோ மீட்டர் இருந்தால் உடனடியாக இரத்தத்தில் சீனி மட்டத்தை அளவிடுவது அவசியம். அதில் சீனி மட்டம் 60 mg/dl (3.3 mmol/L)  க்குக் குறைவாக இருந்தால் உங்கள் இரத்தத்தில் சீனி மட்டம் குறைவிட்ட நிலை(Hypoglycemia)  என நிச்சயமாகச் சொல்லலாம்.

இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது?

உபவாசம், விரதம், அல்லது பட்டினி கிடப்பது, போதிய உணவு எடுக்காதது, காலம் தாழ்த்தி உண்பது, வழமைக்கு மாறான கடும் உடற்பயிற்சி அல்லது கடுமையான உடல் உழைப்பு போன்றவை காரணமாகலாம்.

T2.large

திடீரென வழமைக்கு மாறாக மருந்தின் அளவை அதிகரிப்பதும் காரணமாகலாம். ‘இண்டைக்கு சாப்பாடு கூடிப் போச்சு’ என்று எண்ணி தேவைக்கு அதிகமான இன்சுலின் மருந்தை ஏற்றுவது அல்லது கூடிய அளவு நீரிழிவு மாத்திரைகளை எடுப்பதாலும் இது நிகழலாம்.

நீரிழிவு மருந்துகளில் மெட்போரின் மருந்தை மட்டும் எடுக்கும்போது குருதி குளுக்கோஸ் அளவானது வழமையை விடக் குறைவதி;லை. அதேபோல acarbose, pioglitazone, rosiglitazone போன்றவையும் ஏற்படுத்துவதில்லை. ஏனைய எல்லா மருந்துகளையும் தேவையான அளவிலும் அதிகம் உட்கொண்டால் அந் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

இது ஆபத்தான நிலையாகும். இவ்வாறு நேர்ந்தால் உடனடியாக சிறிது குளுக்கோஸ் (15 கிராம்- -4 தேக்கரண்டி) குடியுங்கள். குளுக்கோஸ் கிடைக்காவிட்டால் ஒரு மேசைக் கரண்டியளவு சீனி கரைத்துக் குடியுங்கள். அல்லது அரைக் கப் பழச்சாறோ இனிப்புச் சேடாவோ குடியுங்கள், அல்லது இரண்டு டொபி உட்கொள்ளவும். 10 நிமிடம் ஓய்வு எடுக்கவும். சுகம் தெரியும். உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுங்கள். ஏனைய இனிப்புகளை விட குளுக்கோஸ் விரைவாக குருதியால் விரைவாக உறிஞ்சப்படும் என்பதாலேயே அது சிறந்தது.

உங்களால் உடனடியாக இரத்த குளுக்கோஸ் நிலையை அளவிட முடியாதிருந்தால், ஆனால் அதே நேரம் அறிகுறிகள் நிச்சயமாக சீனி மட்டம் குறைந்திருப்பதே எனத் தெரிந்தாலும் மேற் கூறிய நடவடிக்கைகளை எடுங்கள்.

முதலில் கூறிய பெண்ணுக்கு நாளம் ஊடாக குளுக்கோஸ் ஏற்றிய பின் மெதுவாக சகச நிலைக்கு வந்தாள். வீட்டில் குளுக்கோமீட்டர் இருந்தது. இருந்தபோதும் தாதிப்பெண் அதை உபயோகித்து சீனியின் அளவை அளவிட்டுப் பார்த்திருக்கவில்லை. விடயம் விளங்கிய மகளும் ஊருக்குப் போயிருந்தாள். மருத்துவ மனையில் கொடுத்த மருந்துகளின் அளவை நீரிழிவின் நிலைக்கு மாற்றவில்லை. அதனால் எற்பட்ட வினை.

நீரிழிவு இல்லாதவர்களிலும் ஏற்படுமா?

நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களில் ஓரு சிலர் குருதியி;ல் சீனியின் அளவு குறைவதற்குரிய அறிகுறிகள் தமக்கு ஏற்படுவதாகக் கூறுவதுண்டு. ஆனால் அவர்களில் உண்மையான சீனி குறைதல் ஏற்படுவது சாத்தியமில்லை.

ஆயினும் நீரிழிவின் முன்நிலையில் (Pre Diabetes) இருப்பவர்களுக்கு அவ்வாறான நிலை ஏற்பட ஓரளவு சாத்தியமுண்டு. அவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து உணவு உட்கொள்ளாதிருந்தால் iளெரடin சநளளைவயnஉந நிலையால் அவர்களது சீனி மட்டம் குறையலாம்.

மிக மிக அரிதாக இன்சுலினை உறபத்தி செய்யும் கட்டிகள் (insulinomas)தோன்றினாலும் அவ்வாறான நிலை தோன்றலாம்.

மேற்கொண்டு செய்ய வேண்டியவை

குருதியில் குளுக்கோஸ் அளவு குறைந்தால் நிச்சயம் உங்கள் மருத்துவரைக் காண வேண்டியது அவசியமாகும். அவர் கீழ் கண்ட விடயங்களில் மேலும் ஆலோசனைகள் வழங்குவார்.

  • மருந்துகளை மாற்றக் கூடும் அல்லது அவற்றின் அளவுகளில் மாற்றம் செய்யவும் கூடும். அவற்றை உணவிற்கு முன்னரா பின்னரா எவ்வளவு நேர இடைவெளியில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விளக்கக் கூடும்.
  • சரியான உணவு முறைகள் பற்றியும் அவற்றை எவ்வளவு கால இடைவெளிகளில் எடுக்க வேண்டும் என்பதிலும் ஆலோசனைகள் வழங்கக் கூடும். உணவுகளை தவிர்ப்பதும், விரதங்கள் பிடிப்பதும் நீரிழிவு ள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. 
  • உடற் பயிற்சிகளுக்கு முன்னரும் பின்னரும் இரத்த குளுக்கோஸ் அளவைப் பரிசோதிப்பது சிறந்தது. அது 100 ற்கு கீழாக இருந்தால் சிறிய உணவு உட்கொண்ட பின்னர் பயிற்சியைச் செய்யலாம். நீரிழிவு மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திற்குள் உடற் பயிற்சி செய்வது உகந்ததல்ல. 
  • மதுபானம் நல்லதல்ல. அதுவும் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்தினால் சீனியின் அளவு குறையலாம். மது அருந்தி ஓரிரு நாட்களுக்குப் பின்னரும் அவ்வாறு ஏற்படலாம் என்பதால் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

 

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.00.0.0

Read Full Post »