Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பாற்பற்கள்’ Category

‘பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது. பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை’ என்றாள் அந்த இளம் தாய்.

அந்தப் பருவத்தில் வயிற்றோட்டத்துடன் குழந்தையைக் கொண்டு வரும்போது கூட அது பல்லு முளைப்பதற்காக என்றே பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். உண்மையில் குழந்தைகளில் முதற் பல்லுகள் முளைப்பதற்கும் காய்ச்சலுக்கும் வயிற்றோட்டத்திற்கும் எது வித தொடர்பும் கிடையாது.

அதேபோல வாந்தி, மூக்கால் வடிதல். இருமல் போன்றவற்றிற்கும் பல் முளைத்தலுக்கும் தொடர்பில்லை.

பல் முளைப்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அது நோயல்ல. என்றபோதும் அது பற்றி பல்வேறு விதமான தவறான கருத்துக்கள் நம்பிக்கைகள் எமது சமூகத்தில் இருக்கிறன.

மறுபக்கத்தில் அது கொண்டாட்டத்திற்கு உரிய நிகழ்வாகவும் இருக்கிறது. பல்லுக் கொழுக்கட்டை அவித்து அதை ஒரு விழாவாகவே கொண்டாடும் பாரம்பரியம் எம்மிடையே இருக்கவே செய்கிறது.

முதற் பற்களை பாற் பற்கள் என்றும் சொல்வார்கள். குழந்தையின் ஈறுலிருந்து முதற் பல் எட்டிப் பார்க்கும் காலத்தையே பல் முளைத்தல் என்பார்கள்.

முதற் பல் எப்போது முளைக்கும்? பொதுவாக குழந்தைகள் பிறந்து 4 முதல் 7 மாதம் ஆகும் போது முதற்பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். சில குழந்தைகளுக்கு 3 மாதத்திலேயே முளைக்க ஆரம்பிப்பது உண்டு. வேறு சிலருக்கு ஒரு வயது கூட ஆகலாம். முதற் பல் முளைப்பது தாமதமாவதற்கு பரம்பரை அம்சமும் காரணமாக இருக்கலாம்.

ஆச்சரியமான ஒரு விடயம் என்னவெனில் சில பிள்ளைகள் பிறக்கும் போதே பல்லுடன் முளைக்கின்றன. 3000 குழந்தைகளில் ஒருவருக்கு அவ்வாறு இருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய பற்கள் பொதுவாக உறுதியற்றவையாக இருப்பதால் அவை தாமாகவே உதிர்ந்து வீழ்ந்து சுவாசக் குழாயில் அடைத்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. எனவே அதை அகற்றிவிடுவர்.

முன் நடுப்பற்கள்தான் முதலில் முளைக்கும். அவற்றை வெட்டும் பற்கள் என்றும் குறிப்பிடுவார்கள். பெரும்பாலும் கீழ்வாய் முன் பற்கள்தான் முதலில் முளைப்பதுண்டு. அதைத் தொடர்ந்து மேல்வாய் முன் பற்கள் முளைக்கும். படிப்படியாக ஏனையவை முளைத்து மூன்று வயதாகும்போது 20 பாற்பற்களும் முழுமையாக முளைத்துவிடும்.

நிரந்தரப் பற்கள் பெரும்பாலும் 5 முதல் 13 வயது வரையான காலகட்டத்தில் முளைக்க ஆரம்பிக்கும். அதே நேரத்தில் பாற் பற்கள் படிப்படியாக விழ ஆரம்பிக்கும்.

பாற்பற்கள் முளைப்பது பல குழந்தைகளில் எந்தவித ஆர்ப்பாட்டமோ அறிகுறிகளோ இன்றி இயல்பாக நடந்துவிடும். ஆயினும் சில பிள்ளைகளில் முதற் பற்கள் முளைப்பது குழந்தைக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் கடினமான ஒரு காலப் பகுதியாக இருக்கலாம்.

பற்கள் முளைப்பது என்பது முரசை பிரித்து வெளிவருவது என்பதால் சற்று வேதனை இருக்கலாம். வெளியே வருவதற்கு முன்னர் முரசின் அப் பகுதி சற்று வீங்கி சிவத்து இருக்கக் கூடும்.

இதன் காரணமாக குழந்தை அமைதியற்று காணப்படலாம். அடிக்கடி அழவும் கூடும். தூக்கக் குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு. பால் குடிப்பதும் உணவு உட்கொள்வதும் குறையக் கூடும்.

வீணீர் அதிகம் வடியும்.

குழந்தை விரலை அடிக்கடி வாய்க்குள் கொண்டு போவதையும் அவதானிக்க முடியும். ஏனெனில் வலி காரணமாக எதையாவது மெல்ல வேண்டும் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்படும்.

வீணீர் கூடுதலாக வடிவதால் ஏற்படும் ஈரலிப்பால் வாயைச் சுற்றியும் கன்னத்திலும் சருமம் சொரசொரப்பாக மாறக் கூடும்.

பல் முளைக்கும் காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய வேதனையைத் தணிக்க அவ்விடத்தை உங்கள் விரல்களால் சற்று நீவி விடுவது உதவும்.

பல்முளைக்கும் காலத்தில் குழந்தைகளின் அசௌகரியத்தை தணிக்க வநநவாநசள என்று அழைக்கப்படும் கடினமான பொம்மைகளைக் கடிக்கக் கொடுப்பதுண்டு. இவை இயற்கையான மரத்தால் அல்லது ரப்பர் சிலிக்கோன் போன்றவற்றால் ஆனவையாக இருக்கலாம். செயற்கை ரசாயனங்கள் இல்லதததால் மரத்தால் ஆனவை விரும்பப் படுகிறது. ரப்பரால் ஆனவை கிருமி நீக்கி சுத்தம் செய்ய சுலபமானவை என்ற போதும் காலம் செல்ல செல்ல கடினமாவதால் எதிர்மாறான பலனைத் தரக் கூடும்.

வலியைத் தணிப்பதற்கு அவ்விடத்தை மரக்கச் செய்யும் பூசக் கூடிய மருந்துகளும் கிடைக்கின்றன. இவை மருத்துவரின் சிபார்சு இன்றி தாங்களாகவே வாங்கக் கூடியவை. ஆனால் இவற்றைப் பாவிப்பதில் மிகுந்த அவதானம் தேவை.

ஏனெனில் இவற்றில் benzocaine என்ற இரசாயனம் கலந்திருக்கக் கூடும். இதை இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் இந்த ரசாயனமானது குருதியில் ஒட்சியன் அளவைக் குறைத்து உயிராபத்தை விளைக்கக் கூடிய methemoglobinemia என்ற ஆபத்து நிலையைக் கொண்டுவரலாம்.

இலங்கையில் விற்பனையாகும் பல வாய் மற்றும் முரசுகளுக்கு பூசும் மருந்துகளில் benzocaine கலந்துள்ளது. எனவே வாங்குவதில் மிகுந்த அவதானம் தேவை. அல்லது நீங்களாக அத்தகைய பூச்சு மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு உபயோகிக்காது இருப்பது பாதுகாப்பானது.

வலியைத் தணிப்பதற்கு பரசிற்றமோல் மருந்து குழந்தையில் நிறைக்கு ஏற்ப கொடுக்கலாம். ஆயினும் இபூபறுவன் போன்ற மருந்துகளை 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகுளுக்கு கொடுப்பது நல்தல்ல.

இருந்தபோதும் குழந்தை கடுமையாக வேதனைப்பட்டால் அல்லது 101 ற்கு மேல் காய்ச்சல் அடித்தால் அது வேறு காரணங்களுக்காக இருக்கலாம். எனவே அந்நிலையில் மருத்துவ ஆலோசனை பெறுவது உசிதமானது.

பல் முளைக்க ஆரம்பித்ததுமே அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் பற்சொத்தை ஏற்படும். ஆரோக்கியமான பற்கள் நீங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய பெரும் சொத்து ஆகும்.

தினசரி இரண்டு தடவைகளாவது குழந்தையின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். நனைத்த தடித்த சுத்தமான துணிகளால் தேயத்துவிடலாம். குழந்தைகளுக்கான பிரஸ்கள் கிடைக்கின்றன.

குழந்தை படுக்கப் போகும்போது பால் போத்தலைக் கொடுப்பதை தவிருங்கள். பால் வாயில் ஊறிக்கிடந்து பற்சொத்தையைக் கொண்டு வரும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்
0.00.0

 

 

 

Read Full Post »