Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புதிய ஆய்வுகள்’ Category

Resistin என்ற தடுப்பான்
கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு புதிய காரணி கண்டு பிடிப்பு

தொற்றுதல் இல்லாமல் மனிதர்களுக்கு அதிகமாக மரணத்தைக் கொண்டு வரும் உயிர்கொல்லிப் பிரச்சனைகளாக இருப்பன மாரடைப்பு, பக்கவாதம், சுவாச நோய்கள், புற்றுநோய்கள் போன்றவையாகும்.

ncd_treeஅவை வருவதற்குக் காரணங்கள் என்ன?

வற்றாத சுனைகளாக என்றும் மனித உடல்களில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் அடிப்படை மருத்துவச் சிக்கல்கள் சிலதான் காரணமாகின்றன. நீழிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல் அதீத எடை ஆகியவற்றைச் சொல்லலாம்.

இவற்றில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு காரணங்கள் என்ன?
கொழுப்புச் சாப்பாடுகளும் உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும்தான் என எல்லோரும் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் அதற்கு மேலும் ஏதாவது அடிப்படைக் காரணம் உண்டா?

ரெசிஸ்டின் எனும் புதிய காரணி

கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு அதிலும் முக்கியமாக கெட்ட கொலஸ்டரோல் எனப்படும் (low-density lipoprotein or LDL) அதிகரிப்பதற்கு எமது உடலுள் கொழுப்புக் கலங்களால் சுரக்கப்படும் ரெசிஸ்டின் (resistin) என்ற புரதம்தான் காரணமாகிறது என கனடிய விஞ்ஞானிகள் சிலர் தமது ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள்.

ஆனால் ரெசிஸ்டின் என்ற இப் புரதம் இப்பொழுதுதான் புதிதாகக் கண்டுபிடிக்கபட்டதல்ல. 2001ம் ஆண்டு பெனிசில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த Dr Mitchell A Lazarதலைமையிலான குழுவினரே முதன் முதலாகக் கண்டு பிடித்தனர்.
அப்புரதத்திற்கு ரெசிஸ்டின் என்ற பெயரை ஏன் ஆரம்பத்தில் வைத்தார்கள்?

காரணம் சுவார்ஸமானது.

Resist என்றால் தமிழில் தடை அல்லது எதிர்ப்பு எனப் பொருள்படும். எனவே Resistin என்றால் தடுப்பான் எனச் சொல்லலாம் அல்லவா? சுண்டெலிகளுக்கு இந்த ஊசியை ஏற்றியபோது அவற்றின் உடலில் இன்சுலினிற்கு எதிராக (insulin resistance) இது இயங்கியமை கண்டறியப்பட்டது. அதாவது நீரிழிவைக் கொண்டுவரக் கூடியது என்பதாகும்.

உடலிலுள்ள கொழுப்பு பகுதிகளிலேயே ரெசிஸ்டின் உற்பத்தியாகி நேரடியாக குருதியில் வெளியேறுகிறது. எனவே நாளமில்லாச் சுரப்பு நீர் எனலாம். எலி, சுண்டெலி, மனிதன் ஆகியவற்றில் ரெசிஸ்டினானது அதீத எடையுடன் தொடர்புடையது என்பதை ஆய்வாளர்கள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளார்கள்.

எவ்வாறு செயற்படுகிறது

resistinஇந்த ரெசிஸ்டின் எவ்வாறு குருதியில் கொலஸ்டரோல் அளவைக் கூட்டுகிறது என்பது பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
முக்கியமாக ஈரலின் செயற்பாட்டில் ரெசிஸ்டின் இடையூறு செய்கிறதாம்.

  • கெட்ட கொலஸ்ரோலான LDL லை அதிகளவு உற்பத்தி செய்ய ஈரல் கலங்களை இது தூண்டுகிறது.
  • அதே நேரம் கொலஸ்டரோலை உணரும் திறனைக் கொண்ட ஈரல் கரங்களின் செயலாற்றலைக் குறைக்கிறது. இதனால் ஈரலானது கொலஸ்ரோலை உடலிலிருந்து அகற்றுவது குறைவடைகிறது

எனவே இரத்தக் குழாய்களில் LDL கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு இந்த ரெசிஸ்டின் தான் காரணமாகிறது எனலாம்.

cor_atheஇரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்தால் அது நாளங்களின் உட்பகுதியில் படிவுகளாக (Atherosclerosis) உறையும். இவ்வாறு படிவதால் இரத்தக் குழாய்களின் உட்சுற்றளவு குறுகும். இதனால் உடலின் முக்கிய உறுப்புகளுக்கு தேவையான இரத்தம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும்.

இருதயத்திற்கு இரத்தம் செல்வது குறைந்தால் மாரடைப்பு வரும். மூளையின் பகுதிகளுக்கு செல்வது குறைந்து அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் எனப்படும்

Stroke வரும். ஓட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இருதய மற்றும் மூளை நோய்கள் ஏற்படுவதற்கு இவை இணைந்து வழி கோலுகின்றன. கண், சிறுநீரகம் போன்ற ஏனைய பல உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படவே செய்யும்.
மருந்துகளின் செயற்பாட்டையும் பாதிக்கிறது

மற்றொரு முக்கிய விடயத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

கொலஸ்டரோல் உள்ளவர்களுக்கு பொதுவாக Atrovastatin, Simvastatin, Rosuvastatin போன்ற Statin மருந்துகளையே உலகளாவிய ரீதியில் மருத்துவர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆனால் LDL கொலஸ்டரோலைக் குறைப்பதற்கு ஸ்டற்டின் மருந்துகள் அவர்களில் 40%  ஆனவர்களுக்கு பயன்படவில்லை என்கிறார்

McMaster University யின் மருத்துவ துறை சார்ந்த பேராசிரியர்

Dr. Shirya Rashid. இதற்குக் காரணம் அவர்களது குருதியில்  ரெசிஸ்டின் அளவு அதிகமாயிருப்பதை தங்கள் ஆய்வு சுட்டிக் காட்டுவதாக அவர் சொல்கிறார்.

புதிய மருந்துகளை கண்டு பிடிக்க வேண்டும்

சரி அப்படியானால் இந்த ஆய்வுகளின் முடிவானது கொலஸ்டரோல் பிரச்சனையில் மருத்துவர்களையும் நோயாளிகளையும் எங்கு இட்டுச் செல்கிறது.

குருதியில் அதிகரித்த LDL கொலஸ்டரோல் அளவிற்கு இந்த ரெசிஸ்டின் காரணமாகிறது. எனவே இந்த ஆய்வானது புதிய மருந்துகளுக்கான தேடலை ஆரம்பித்திருக்க்pறது. குருதியில் ரெசிஸ்டினைக் குறைப்பதற்கான மருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் LDL கொலஸ்டரோலைக் குறைக்கலாம். பக்கவாதம் மாரடைப்பு ஆகியன ஏற்படுதற்கான சாத்தியத்தை அதனால் குறைக்கும் என நம்பலாம்.

indexஇது கனடாவில் செய்யப்பட்ட ஆய்வு. ஆனால் எமக்கும் பொருத்தமானது ஏனெனில் இங்கும் தொற்றா நோய்களால் நாளாந்தம் 350 பேர் இறப்பதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்திருக்கிறது. உலகளாவிய ரீதியில் தொற்றா நோய்களால் இறப்பவர் தொகை 36 million அல்லது 63% என WHO 2008 ல் அறிவித்தது.

இருந்தபோதும் இவற்றைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளும், சீரான உணவு முறைகளும் உடல் உழைப்பும் அவசியமானவை என்பதற்கே முதலிடம் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

rist-factor-doe-hear-disease1புதிய மருந்துகள் எப்போ வரும் எனக் காத்துக் கொண்டிருக்காமல் எமது வாழ்க்கை முறையை நெறிப்படுத்துவோம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்
எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை. இங்கு மீள் பதிவாகிறது

Read Full Post »