நான் மூக்குத்தி குத்தி 2 மாதங்கள் ஆகின்றன டொக்டர். ஆனால் குத்திய இடத்தில் ஏற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?
கங்கா சுரேஸ் கொழும்பு
பதில்:- உங்களுக்கு மூக்கு குத்தியது யார், குத்தியவர் சுகாதார முறைப்படி குத்தினாரா என்பது எனது எதிர்க் கேள்வியாக இருக்கும்.
ஏனெனில் மூக்கு குத்திய இடத்தில் புண் என்றால் பெரும்பாலும் கிருமித் தொற்றாகவே இருக்க வேண்டும். மூக்கு குத்தியபோது சுகாதார முறைப்படி குத்தாவிட்டால், அதாவது குத்தியவரின் கைகளில் இருந்தோ, உங்கள் மூக்கில் இருந்தோ அல்லது மூக்குத்தியிலிருந்தோ கிருமி பரவியிருக்கலாம்.
கிருமித் தொற்றா என்பதை நீங்கள் எவ்வாறு இனங் காண முடியும்?
மூக்கு குத்திய இடத்தில் சற்றே வீக்கத்துடன் வலியும் இருக்கும். கை பட்டால் அல்லது அவ்விடம் தட்டுப்பட்டால் வலி அதிகமாகும். அவ்விடம் சற்று செம்மை பூத்திருக்கவும் கூடும். சில வேளைகளில் அவ்வித்திலிருந்து சற்று சீழ் வடியவும் கூடும். ஆறாத புண்ணால் மூக்கு குத்திய இடத்தில் சற்று சதை வளரவும் கூடும். சதை அதிகம் வளர்ந்தால் மூக்குத்தி அதனுள் புதைந்து விடவும் கூடும்.
புண் விரைவில் ஆறவில்லை எனில் புண்ணைச் சுத்தமாக வைத்திருப்பது விரைவில் குணமடைய உதவும்.
தினமும் 4-5 தடவைகள் புண்ணைக் கழுவுங்கள். சோப் போட்டு கழுவுவதைவிட உப்புத் தண்ணீரால் கழுவுவது நல்லது. ஸ்பிரிட், ஹைரஜன் பெரோக்சைட் (Hydrogen peroxide) போன்றவற்றை சுத்தம் செய்யப் பயன்படுத்த வேண்டாம்.
புண்ணைக் கழுவுவதற்கு முன்னர் உங்கள் கைகளை சோப் போட்டு சுத்தம் செய்வது அவசியம். கழுவிய இடத்தில் உள்ள ஈரத்தை சுத்தமான துணியால் மட்டுமே ஒத்தித் துடைக்க வேண்டும். அல்லது சுத்தம் செய்வதற்கான புதிய ரிசூ வை உபயோகிக்கலாம்.
புண் உள்ள இடத்தில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் சுடுதண்ணி ஒத்தடம் கொடுப்பது நல்லது.
சுத்தம் செய்யும் போது மூக்குத்தியை அகற்ற வேண்டியதில்லை. துவாரம் மூடாமல் இருப்பதற்கும் சீழ் தேங்கி நிற்காமல் வடிவதற்கும் மூக்குத்தி அதிலேயே இருப்பது நல்லது. எதற்கும் உங்கள் மருத்துவரிடம் அதைக் கழற்றுவதா வேண்டமா என்பது பற்றி ஆலோசனை பெறவும்.
பொதுவாக சாதாரண கிருமித் தொற்று எனில் அதற்கான அன்ரிபயோடிக் ஓயின்மென்ற் பூச அது மாறிவிடும். பொதுவாக Mupirocin ஓயின்மென்ட் நல்ல பலன் கொடுக்கும். ஆயினும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இத்தகைய மருந்துகளை உபயோகிப்பது உசிதமானதல்ல. சில வேளைகளில் அன்ரிபயோடிக் மாத்திரைகளை உட்கொள்ளவும் நேரலாம்.
மாறாக ஒரு சிலருக்கு மூக்குத்தியால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் புண் ஆறாது இருக்கும் ஒவ்வாமையால் ஏற்பட்ட புண் ஆயின் வலி அதிகமாக இருக்காது. ஆனால் சற்று நமைச்சல் இருக்கலாம். இதற்குக் காரணம் மூக்குத்தியில் உள்ள உலோகப் பொருள் உங்களுக்கு ஏற்படுத்தும் ஒவ்வாமையே ஆகும்.
சுத்தமான பொன்னுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவு. ஆனால் சுத்தமான பொன்னால் நகைகள் செய்ய முடியாது ஏனெனில் அவை உறுதியாக இருக்காது. எனவே நிக்கல் (Nickel) போன்ற வேறு சில உலோகங்களையும் கலந்தே நகை செய்வார்கள். அவற்றிற்கு ஒவ்வாமை ஏற்படுவது அதிகம். கவரிங் நகை எனில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.
உங்களது புண் ஓவ்வாமையால் ஏற்பட்டது எனில் மூக்குத்தியை அகற்றிவிட புண் ஆறிவிடும். ஆனால் மீண்டும் போடக் கூடாது.
வேறொரு பிரச்சனையும் உள்ளது. மூக்குத்தியை எந்த இடத்தில் குத்தியிருக்கிறீர்கள் என்பதாகும். மூக்குத் துவாரங்களுக்கு இடையேயுள்ள தடுப்பு சுவரில் குத்தியிருக்கிறீர்களா?
மூக்கின் தடுப்பு சுவரின் அடிப்பகுதி மாத்திரம் தசை சவ்வுகளால் ஆனது. அதற்கு மேலே உள்ள பகுதியில் குருத்தெலும்பு உள்ளது. அதில் குத்தியிருந்தால் அதில் கடுமையான குருத்தெலும்பு கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மூக்கின் மூக்கின் தடுப்பு சுவர் (Perichondritis and necrosis of nasal wall) சிதைந்து முக்கின் அமைப்பையே மாற்றிவிடக் கூடியளவு ஆபத்தானது. ஆனால் உங்கள் பிரச்சனை அது அல்ல என ஊகிக்க முடிகிறது.
எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0.00.0