சமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்
மறதி பற்றி எல்லோருக்குமே தெரியும். தனிப்பட்ட அனுபவங்கள் எல்லோருக்கும் நிறையவே இருக்கும். ஆனால் மறதிக் கோளாறு நோய் (Dementia) பற்றி அறிந்திருக்கிறீர்களா.
உங்களுக்கு இல்லாவிடினும் உங்கள் சுற்றாடலில் அத்தகையவர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.
எம்மிடையே முதியவர்கள் தொகை அதிகரித்து கொண்டே போவதை யாவரும் அறிவோம். அவர்கள் தாமாகவே இயங்கிக் கொண்டு இருக்கும் வரை பிரச்சனை இல்லை. அது முடியாத போது தனிமையும், அதுவும் பராமரிப்பதற்கு பிள்ளைகள் அருகில் இல்லாது போவதும் பிரச்சனையை விஸ்வருபம் எடுக்க வைக்கும்.
உடலால் இயங்குவது மட்டுமின்றி மூளைத் திறனும் பாதிப்படையும் போது நிலமை கட்டுக்கடங்காமல் போய்விடுகிறது.
முதுமையில் மறதி ஏற்படுவது சகசம். ஆயினும் மறதிக் கோளாறு நோய் (Dementia) என்பது சற்று பாரதூரமானது. அவர் தான் யார் தனது சுற்றம் என்ன தான் செய்ய வேண்டியது என்ன போன்ற யாவற்றையும் மறந்து விடுகின்ற ஒரு அவல நிலையாகும். மற்றவரின் துணையின்றி இயங்குவது முற்றாக முடியாததாகிவிட்டது.
ஒருவரது சிந்தனைத் திறன், நடத்தை முறைகள் மற்றும் அன்றாட செயற்பாடுகளையும் பாதிப்பதாக இருக்கிறது.
இங்கு விடயங்களை மறப்பது மட்டுமின்றி அறிந்து உணரும் திறனும் பாதிப்படையும். உதாரணமாக தனது தாய் மொழியையே சரியாக பாவிப்பதில் சிக்கல்களும் உண்டாகலாம். அதாவது தனது மனதில் எழுவதை சொற்களால் வெளிப்படுத்தும் ஆற்றல் முடங்கிப் போய்விடலாம்.
அத்துடன் விடயங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல், இடத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்ளும் திறன் ஆகியவற்றிலும் பாதிப்பும் ஏற்படும்.
தானகவே உண்பது உடுப்பது முடியாமலாகிவிடுகிறது மலசலம் கழிவதை உணர முடிவதில்லை, பசி தாகம் போன்ற தன் அடிப்படைத் தேவைகளைக் சொல்வது போன்றவை கூட முடியததாகி ஒரு ஜடம் போல வாழ்வதாகும்.
இதற்கு காரணம் மூளையின் சில நரம்பணுக்கள் செயலிழந்து போவதும் ஏனைய நரம்புகளுடனான தொடர்புகளை இழப்பதும் ஆகும்.
இது முதுமையில் ஏற்படக் கூடிய நோய் என்ற போதும் முதுமையின் கட்டாய நியதி அல்ல. முதுமையால் மட்டும் ஏற்படும் நோயுமல்ல. பெரும்பாலான முதியவர்கள் இது வராமல் தப்பிவிடுகிறார்கள். இது நரம்புக் கலங்கள் சேதமடைவதால் ஏற்படும் நோயாகும்.
இப்படிப்பட்ட நோயாளிகளை இப்பொழுது முன்னரை விட அதிகமாக காண நேர்கிறது.
இத்தனையவர்களை பாராமரிப்பது மிகவும் சிரமமாhன காரியம். இதனால் பல மேலை நாடுகளில் அவர்களை அதற்கான விசேட முதியோர் இல்லங்களில் வைத்துதூன் பாராமரிக்கிறார்கள்.
அங்கு இத்தகைய மறதிக் கோளாறு நோயுள்ளவர்களைப் பராமரிப்பதற்கான பயிற்சி எடுத்த பணியாளர்கள் பராமரிப்பதால் அது நல்ல முறையில் நடைபெறுகிறது. ஆயினும் அது கடமை மட்டுமே.
அந்த பராமரிப்பானது முதுமை மறதி நோயாளிக்கு தனிப்பட்ட ரீதியானதாக பிரத்தியேகமானதாக மனதுக்கு நெருக்கமானதாக இருப்பதில்லை.
பிள்ளை பேரப்பிள்ளை சகோதரம் நட்புகள் போன்ற உறவின் உணர்வுப் பாலம் பராமரிப்பு இல்லங்களில் கிட்டுவதில்லை. சமூக ஊடாட்டம் அற்றுப் போய்விடுகிறது.
மறதிக் கோளாறு நோயானது எதுவுமே செய்து முன்னேற்றக் கூடிய நோயல்ல என்ற போதும் அண்மை செய்யப்பட்ட ஒரு ஆய்வானது பச்சைக் கொடி காட்டுகிறது.
தினமும் அவர்களுடன் உரையாடுவது அவர்களுக்கு ஆர்வம் உள்ள விடயங்களை கண்டறிவது, அவர்களது பராமரிப்பில் அவர்களுக்கு விருப்பமான முறையில் செய்வதற்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற தனிப்பட்ட ரீதியான விடயங்களும் அடங்குகின்ற போது நிலமை மாறியது. அவர்கள் சற்று மகிழ்ச்சியானவர்களாக கோபம் சினம் ஆக்கிரோசம் குறைந்தவர்காளாக மாறினார்கள்.
தனிப்பட் ரீதியில் கவனம் எடுத்து வாரத்தில் ஒரு மணி நேரமாவது சமூக ஊடாட்டதிற்கு வாய்ப்பு அளிப்பது அவர்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்கிறது அந்த ஆய்வு.
ஆயினும் முன்னர் செய்ப்பட்ட ஆய்வுகளானது விசேட பராமரிப்பு நிலையங்களில் உள்ள மறதிக் கோளாறு நோயாளிகளுக்கு சமூக ஊடாட்டம் ஆனது வாரத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு குறைவாகவே கிடைக்கிறது என்றது. இதனால் அவர்களிடையே கிளர்ச்சியடைதல் ஆக்கிரோசம் போன்ற பிரச்சனைகள் அதிகமாகின்றன.
எனவே சமூக ஊடாட்டமானது செலவு குறைந்த சுலமமான பராமரிப்பில் அடக்கக் கூடியதாகும்.
தாய் நாட்டில் வாழும் எங்களுக்கு இந்த ஆய்வு எந்தளவு பயன் தரக் கூடியது.
இங்கு வயோதிபர்களுக்கான பராமரிப்பு இல்லங்களே உள்ளன. மறதிக் கோளாறு நோயாளர்களே அங்கு சேர்க்கவே மாட்டார்கள். மறதிக் கோளாறு நோயாளர்களுகான விசேட பாராமரிப்பு இல்லங்கள் இங்கு கிடையவே கிடையாது.
அவர்களை பராபரிப்பது மிகப் பெரிய சுமை என்ற போதும் வீட்டில் உள்ளவர்களே செய்கிறார்கள்.
எனவே தனது தாய் தந்தை சகோதரம் போன்ற உறவுகளே இப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களுடன் ஓரளவேனும் பிரத்தியேக ஊடாடலில் ஈடுபடுவார்கள்; என்றே எதிர் பார்க்கலாம்.
ஆனால் நாங்கள் நினைப்பது போல வீட்டுப் பராமரிப்பில் எல்லாமே சுமுகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
பல முதியர்கள் மருத்துவர்களிடம் வருகிறார்கள். அவர்கள் மறதிக் கோளாறு நோயாளர்கள் என்றில்லை. சாதராரண வயோதிபர்கள்.
‘உங்களட்டை போகவேணும் என்று நட்டுப்பிடிச்சுக் கொண்டு நிண்டா. அதுதான் கூட்டிக் கொண்டு வந்தம்’ என உறவினர்கள் எரிச்சலோடு சொல்லுவார்கள்.
என்ன நோய் என்று கேட்டாலும் அந்த முதியவர்களில் பலருக்கு ஒன்றும் சொல்லத் தெரிவதில்லை. ‘ கை உளையுது கால் உளையுது தலை இடிக்குது’ என்று ஏதாவது வாய்க்கு வந்ததை சொல்வார்கள்.
உண்மையில் மருத்துவர்களான எங்களின் அன்பான விசாரிப்பும், தொடுகையும், தேறுதல் படுத்தல் வார்த்தைகள் மட்டுமே அவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிடும். அதுதான் அவர்களுக்கு வேண்டியது. மருந்துகள் இரண்டாம் பட்சம்.
மருத்துவர்தான் இவற்றை செய்ய வேண்டும் என்றில்லை.
வீட்டில் உள்ளவர்களே இதைச் செய்யலாம். பலர் செய்கிறார்கள். ஆனால் வேறு பலர் ‘எங்களுக்கு இருக்கிற வேலைகளுக்கை இவையளின்ரை அலட்டலை கேட்ட முடியுதே’ என ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள்.
முதியவர்கள் அதிலும் முக்கியமாக இயலாமையால் துவண்ட முதியர்கள், தாங்கள் பேசுவதைச் செவிமடுப்பதற்கும், அன்பான ஆதரவூட்டும் வார்த்தைகளை கேட்பதற்கும் ஆறுதல் படுத்தும் தொடுகைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.
அதைக் கொடுங்கள் அவர்களது நோயில் பெரும் பகுதி பறந்தோடிவிடும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (Col)
குடும்ப மருத்துவர்
0.00.0