Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மருத்துவம்’ Category

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா?

எஸ் . வினோத் வவுனியா

பதில்:- பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் வரக் கூடும் என்ற சில சந்தேகங்கள் பரவலாக உள்ளன.

பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் நிறக் கலவைகளில் பலவிதமான இரசாயனங்கள் கலந்துள்ளன. நிக்கல், குறோமியம், மங்கனீஸ், கோபாலட், டைடேனியம் ஒட்சைட் போன்றவை முக்கியமானவை. (nickel, chromium, manganese, cobalt, or titanium dioxide).  இவற்றில் பல நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அந்த இரசாயனங்கள் பச்சை குத்தப்பட்ட இடத்தில் மட்டுப்பட்டு நிற்காமல் அருகில் உள்ள சருமத்திற்கும் நிணநீர்த் தொகுதி ஊடாக நிணநீர்க் கட்டிகளுக்கும் பரந்து சென்று அவற்றை சற்று வீக்கமடையச் செய்வதாக அண்மைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவை நச்சுத்தன்மை வாய்ந்தமை என்பதற்கு அப்பால் நிக்கலும் குரோமியமும் புற்றுநோய்த் தூண்டியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே பச்சை குத்துபவர்களுக்கு எதிர்காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் புற்றுநோய் ஏற்படுவதாக இதுவரை கண்டறியப்படவில்லை.

பச்சை குத்தப்பட்டவர்கள் எந்தவித ஆபத்தும் இன்றி சாதாரணமாக இருப்பதால் அவை பாதுகாப்பானவை என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் இருக்கிறது. ஆனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட நீண்ட பல வருடங்கள் எடுக்கும் என்பதால் அவை பற்றி பெரும்பாலும் தெரியவருவதில்லை.

பச்சை குத்துவது என்பது சருமத்தில் சில அடையாளங்களை அல்லது கோலங்களை அல்லது எழுத்துக்களை வர்ண கலவைகளால் பதிப்பதாகும். சிறிய ஊசிகள்களால் நுண்ணிய அளவு வண்ணக் கலவைகளை மீண்டும் மீண்டும் சருமத்தின் மேற்பகுதியில் குத்துவதால் அவை உள்ளே செல்கின்றன.

இவை நிரந்தரமான அடையாளங்கள் என்பது குறிபிடப்பட வேண்டியதாகும். காலத்தால் அழியாதவை. எனவே அந்நியப் பொருளான அது உடலில் நிரந்தரமாகக் குடிகொள்ளப் போகிறது என்பது கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம். எந்த அந்நியப் பொருளானாலும் அதற்கு எதிராக உடல் எதிர்வினையாற்றக் கூடும்.

புற்றுநோய் வருமா இல்லையா என்ற பிரச்சனைக்கு அப்பால் வேறு பல பாதிப்புகள் ஏற்படுவதை மருத்துவர்களாகிய நாம் காண முடிகிறது.

ஒவ்வாமை சரும நோய்கள் மிக முக்கியமானவை. அந்த இடத்தில் சருமத்தில் அரிப்பு எடுப்பது, அழற்சி மற்றும் எக்ஸிமா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு உடனடியாகவே அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் வேறு சிலருக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவை தோன்றக் கூடும்.

பச்சை குத்திய உடங்களில் கிருமித் தொற்று ஏற்பட்டு புண்கள் தோன்றுவதை அதிகம் காண முடிகிறது. இதற்குக் காரணம் பச்சை குத்தும் பணியாளர்கள்; தமது கைகளை கழுவுதல் குத்துவதற்கு உபயோகிக்கும் ஊசிகளை கிருமி நீக்கம் செய்யாமை போன்ற சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்காமையே ஆகும். சருமத்தில் கிருமித் தொற்று மட்டுமின்றி பெரிய சீழ் கட்டிகள் வரை ஏற்படுவதுண்டு.

பச்சை குத்திய இடங்களில் தழும்புகள் தோன்றுவது மற்றுமொரு பிரச்சனை. அழகைத் தேடப் போய் அசிங்கத்தில் முடிவதாக இது அமையும். இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. உடலியல் ரீதியாக சிலருக்கு இவை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இருந்தபோதும் ஆழமான பெரிய புண்கள் ஏற்பட்டால் எவருக்கும் தழும்புகள் தோன்றலாம். தழும்புகள் சுலபமாகக் குணப்படுத்த முடியாதவை என்பதால் அவை வராமல் தடுப்பதே உசிதமானது.

சிறிய காய்கள் முளைகள், சரும அழற்சி போன்றை உள்ள இடங்களில் பச்சை குத்துவது அறவே கூடாது. ஏனெனில் அவை பின்பு புற்றுநோயாக மாறக் கூடிய சாத்தியம் உள்ளது. புச்சை குத்துவதில் உபயோகிக்கும் நிறக் கலமிகள் அதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.

இவ்வாறாக பல வித பாதிப்புகள் ஏற்படுவதால் பச்சை குத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது 

எதிரொலிக்கு கேள்விகள் அனுப்ப (ethirolimedia@gmail.com), Tel 0212243818

0.00.0

Read Full Post »

கேள்வி-  நான் ஒரு பெண். எனது வயது 55. எனக்கு நீரிழிவு (Type 11 )உள்ளது.  எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்.

ஆர். சுமதி வவுனியா

பதில்:- நீரிழிவாளர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு என்று சொல்லாதீர்கள் நீரிழிவாளர்களுக்கான உணவுத் திட்டம் என்று சொல்லுங்கள். ஏனெனில் நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம்.

ஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.

நீரிழிவாளர்களுக்கான உணவுகளை விரும்பிய அளவு உண்ணக் கூடியவை, இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டியவை, மிகக் குறைவாக உண்ண வேண்டியவை என வகுத்துக் கொள்ளலாம்.

விரும்பிய அளவு உண்ணக் கூடியவை

விரும்பிய அளவு உண்ணக் கூடிய  உணவுகள் என்று எவற்றைக் குறிப்படலாம்.

பொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.

ஒருவர் உண்ணும் ஒரு கோப்பை உணவில் அரைவாசி காய்கறிகளாக இருக்க வேண்டும். கோப்பையில் முதலில் காய்கறி உணவு வகைளால் அரைவாசி நிரப்பிவிட்டு அதன் பின்னரே சோறு இடியப்பம் புட்டு பாண் அப்பம் போன்ற உணவுகளை வைக்க வேண்டும்.

ஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை (கிழங்கு வகைகள்) ஓரளவே உண்ண வேண்டும்.

இடைப்பட்ட அளவில் உண்ண வேண்டியவை

வேறு சில உணவுகளை இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டும். பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.

முக்கியமாகச் சொல்ல வேண்டியது சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல என்பதே. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம். தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது.  ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.

தீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. புளுங்கலை விட பச்சையரிசி நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு சாப்பிட நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை மேலும் சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும்.

இதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருளானது உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.

இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல.

இவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.

பயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.

உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.

பழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பலாப்பலம் கூட ஓரிரு சுளைகள் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் சீனிச் சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிக அதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.

மீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும்.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது. முட்டையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 3-4 முறை மட்டும் உண்ணலாம்.

மிகக் குறைவாக உண்ண வேண்டியவை எவை

இனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது. இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.

இனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா?

100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் துண்டில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா?

100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸ்கட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

அதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

‘உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்’ என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.

களையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.

எனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் போன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.

உணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.

ஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.

இனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

நான் மூக்குத்தி குத்தி 2 மாதங்கள் ஆகின்றன  டொக்டர். ஆனால் குத்திய இடத்தில் ஏற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?

கங்கா சுரேஸ் கொழும்பு

பதில்:- உங்களுக்கு மூக்கு குத்தியது யார், குத்தியவர் சுகாதார முறைப்படி குத்தினாரா என்பது எனது எதிர்க் கேள்வியாக இருக்கும்.

ஏனெனில் மூக்கு குத்திய இடத்தில் புண் என்றால் பெரும்பாலும் கிருமித் தொற்றாகவே இருக்க வேண்டும். மூக்கு குத்தியபோது சுகாதார முறைப்படி குத்தாவிட்டால், அதாவது குத்தியவரின் கைகளில் இருந்தோ, உங்கள் மூக்கில் இருந்தோ அல்லது மூக்குத்தியிலிருந்தோ கிருமி பரவியிருக்கலாம்.

கிருமித் தொற்றா என்பதை நீங்கள் எவ்வாறு இனங் காண முடியும்?

மூக்கு குத்திய இடத்தில் சற்றே வீக்கத்துடன் வலியும் இருக்கும். கை பட்டால் அல்லது அவ்விடம் தட்டுப்பட்டால் வலி அதிகமாகும். அவ்விடம் சற்று செம்மை பூத்திருக்கவும் கூடும். சில வேளைகளில் அவ்வித்திலிருந்து சற்று சீழ் வடியவும் கூடும். ஆறாத  புண்ணால் மூக்கு குத்திய இடத்தில் சற்று சதை வளரவும் கூடும். சதை அதிகம் வளர்ந்தால் மூக்குத்தி அதனுள் புதைந்து விடவும் கூடும்.

புண் விரைவில் ஆறவில்லை எனில் புண்ணைச் சுத்தமாக வைத்திருப்பது விரைவில் குணமடைய உதவும்.

தினமும் 4-5 தடவைகள் புண்ணைக் கழுவுங்கள். சோப் போட்டு கழுவுவதைவிட உப்புத் தண்ணீரால் கழுவுவது நல்லது. ஸ்பிரிட், ஹைரஜன் பெரோக்சைட் (Hydrogen peroxide)  போன்றவற்றை சுத்தம் செய்யப் பயன்படுத்த வேண்டாம்.

புண்ணைக் கழுவுவதற்கு முன்னர் உங்கள் கைகளை சோப் போட்டு சுத்தம் செய்வது அவசியம். கழுவிய இடத்தில் உள்ள ஈரத்தை சுத்தமான துணியால் மட்டுமே ஒத்தித் துடைக்க வேண்டும். அல்லது சுத்தம் செய்வதற்கான புதிய ரிசூ வை உபயோகிக்கலாம்.

புண் உள்ள இடத்தில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் சுடுதண்ணி ஒத்தடம் கொடுப்பது நல்லது.

சுத்தம் செய்யும் போது மூக்குத்தியை அகற்ற வேண்டியதில்லை. துவாரம் மூடாமல் இருப்பதற்கும் சீழ் தேங்கி நிற்காமல் வடிவதற்கும் மூக்குத்தி அதிலேயே இருப்பது நல்லது. எதற்கும் உங்கள் மருத்துவரிடம் அதைக் கழற்றுவதா வேண்டமா என்பது பற்றி ஆலோசனை பெறவும்.

பொதுவாக சாதாரண கிருமித் தொற்று எனில் அதற்கான அன்ரிபயோடிக் ஓயின்மென்ற் பூச அது மாறிவிடும். பொதுவாக Mupirocin ஓயின்மென்ட் நல்ல பலன் கொடுக்கும். ஆயினும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இத்தகைய மருந்துகளை உபயோகிப்பது உசிதமானதல்ல. சில வேளைகளில் அன்ரிபயோடிக் மாத்திரைகளை உட்கொள்ளவும் நேரலாம்.

மாறாக ஒரு சிலருக்கு மூக்குத்தியால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் புண் ஆறாது இருக்கும் ஒவ்வாமையால் ஏற்பட்ட புண் ஆயின் வலி அதிகமாக இருக்காது. ஆனால் சற்று நமைச்சல் இருக்கலாம். இதற்குக் காரணம் மூக்குத்தியில் உள்ள உலோகப் பொருள் உங்களுக்கு ஏற்படுத்தும் ஒவ்வாமையே ஆகும்.

சுத்தமான பொன்னுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவு. ஆனால் சுத்தமான பொன்னால் நகைகள் செய்ய முடியாது ஏனெனில் அவை உறுதியாக இருக்காது. எனவே நிக்கல் (Nickel) போன்ற வேறு சில உலோகங்களையும் கலந்தே நகை செய்வார்கள். அவற்றிற்கு ஒவ்வாமை ஏற்படுவது அதிகம். கவரிங் நகை எனில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.

உங்களது புண் ஓவ்வாமையால் ஏற்பட்டது எனில் மூக்குத்தியை அகற்றிவிட புண் ஆறிவிடும். ஆனால் மீண்டும் போடக் கூடாது.

வேறொரு பிரச்சனையும் உள்ளது. மூக்குத்தியை எந்த இடத்தில் குத்தியிருக்கிறீர்கள் என்பதாகும். மூக்குத் துவாரங்களுக்கு இடையேயுள்ள தடுப்பு சுவரில் குத்தியிருக்கிறீர்களா?

மூக்கின் தடுப்பு சுவரின் அடிப்பகுதி மாத்திரம் தசை சவ்வுகளால் ஆனது. அதற்கு மேலே உள்ள பகுதியில் குருத்தெலும்பு உள்ளது. அதில் குத்தியிருந்தால் அதில் கடுமையான குருத்தெலும்பு கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மூக்கின் மூக்கின் தடுப்பு சுவர் (Perichondritis and necrosis of nasal wall)    சிதைந்து முக்கின் அமைப்பையே மாற்றிவிடக் கூடியளவு ஆபத்தானது. ஆனால் உங்கள் பிரச்சனை அது அல்ல என ஊகிக்க முடிகிறது.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

‘பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது. பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை’ என்றாள் அந்த இளம் தாய்.

அந்தப் பருவத்தில் வயிற்றோட்டத்துடன் குழந்தையைக் கொண்டு வரும்போது கூட அது பல்லு முளைப்பதற்காக என்றே பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். உண்மையில் குழந்தைகளில் முதற் பல்லுகள் முளைப்பதற்கும் காய்ச்சலுக்கும் வயிற்றோட்டத்திற்கும் எது வித தொடர்பும் கிடையாது.

அதேபோல வாந்தி, மூக்கால் வடிதல். இருமல் போன்றவற்றிற்கும் பல் முளைத்தலுக்கும் தொடர்பில்லை.

பல் முளைப்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அது நோயல்ல. என்றபோதும் அது பற்றி பல்வேறு விதமான தவறான கருத்துக்கள் நம்பிக்கைகள் எமது சமூகத்தில் இருக்கிறன.

மறுபக்கத்தில் அது கொண்டாட்டத்திற்கு உரிய நிகழ்வாகவும் இருக்கிறது. பல்லுக் கொழுக்கட்டை அவித்து அதை ஒரு விழாவாகவே கொண்டாடும் பாரம்பரியம் எம்மிடையே இருக்கவே செய்கிறது.

முதற் பற்களை பாற் பற்கள் என்றும் சொல்வார்கள். குழந்தையின் ஈறுலிருந்து முதற் பல் எட்டிப் பார்க்கும் காலத்தையே பல் முளைத்தல் என்பார்கள்.

முதற் பல் எப்போது முளைக்கும்? பொதுவாக குழந்தைகள் பிறந்து 4 முதல் 7 மாதம் ஆகும் போது முதற்பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். சில குழந்தைகளுக்கு 3 மாதத்திலேயே முளைக்க ஆரம்பிப்பது உண்டு. வேறு சிலருக்கு ஒரு வயது கூட ஆகலாம். முதற் பல் முளைப்பது தாமதமாவதற்கு பரம்பரை அம்சமும் காரணமாக இருக்கலாம்.

ஆச்சரியமான ஒரு விடயம் என்னவெனில் சில பிள்ளைகள் பிறக்கும் போதே பல்லுடன் முளைக்கின்றன. 3000 குழந்தைகளில் ஒருவருக்கு அவ்வாறு இருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய பற்கள் பொதுவாக உறுதியற்றவையாக இருப்பதால் அவை தாமாகவே உதிர்ந்து வீழ்ந்து சுவாசக் குழாயில் அடைத்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. எனவே அதை அகற்றிவிடுவர்.

முன் நடுப்பற்கள்தான் முதலில் முளைக்கும். அவற்றை வெட்டும் பற்கள் என்றும் குறிப்பிடுவார்கள். பெரும்பாலும் கீழ்வாய் முன் பற்கள்தான் முதலில் முளைப்பதுண்டு. அதைத் தொடர்ந்து மேல்வாய் முன் பற்கள் முளைக்கும். படிப்படியாக ஏனையவை முளைத்து மூன்று வயதாகும்போது 20 பாற்பற்களும் முழுமையாக முளைத்துவிடும்.

நிரந்தரப் பற்கள் பெரும்பாலும் 5 முதல் 13 வயது வரையான காலகட்டத்தில் முளைக்க ஆரம்பிக்கும். அதே நேரத்தில் பாற் பற்கள் படிப்படியாக விழ ஆரம்பிக்கும்.

பாற்பற்கள் முளைப்பது பல குழந்தைகளில் எந்தவித ஆர்ப்பாட்டமோ அறிகுறிகளோ இன்றி இயல்பாக நடந்துவிடும். ஆயினும் சில பிள்ளைகளில் முதற் பற்கள் முளைப்பது குழந்தைக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் கடினமான ஒரு காலப் பகுதியாக இருக்கலாம்.

பற்கள் முளைப்பது என்பது முரசை பிரித்து வெளிவருவது என்பதால் சற்று வேதனை இருக்கலாம். வெளியே வருவதற்கு முன்னர் முரசின் அப் பகுதி சற்று வீங்கி சிவத்து இருக்கக் கூடும்.

இதன் காரணமாக குழந்தை அமைதியற்று காணப்படலாம். அடிக்கடி அழவும் கூடும். தூக்கக் குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு. பால் குடிப்பதும் உணவு உட்கொள்வதும் குறையக் கூடும்.

வீணீர் அதிகம் வடியும்.

குழந்தை விரலை அடிக்கடி வாய்க்குள் கொண்டு போவதையும் அவதானிக்க முடியும். ஏனெனில் வலி காரணமாக எதையாவது மெல்ல வேண்டும் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்படும்.

வீணீர் கூடுதலாக வடிவதால் ஏற்படும் ஈரலிப்பால் வாயைச் சுற்றியும் கன்னத்திலும் சருமம் சொரசொரப்பாக மாறக் கூடும்.

பல் முளைக்கும் காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய வேதனையைத் தணிக்க அவ்விடத்தை உங்கள் விரல்களால் சற்று நீவி விடுவது உதவும்.

பல்முளைக்கும் காலத்தில் குழந்தைகளின் அசௌகரியத்தை தணிக்க வநநவாநசள என்று அழைக்கப்படும் கடினமான பொம்மைகளைக் கடிக்கக் கொடுப்பதுண்டு. இவை இயற்கையான மரத்தால் அல்லது ரப்பர் சிலிக்கோன் போன்றவற்றால் ஆனவையாக இருக்கலாம். செயற்கை ரசாயனங்கள் இல்லதததால் மரத்தால் ஆனவை விரும்பப் படுகிறது. ரப்பரால் ஆனவை கிருமி நீக்கி சுத்தம் செய்ய சுலபமானவை என்ற போதும் காலம் செல்ல செல்ல கடினமாவதால் எதிர்மாறான பலனைத் தரக் கூடும்.

வலியைத் தணிப்பதற்கு அவ்விடத்தை மரக்கச் செய்யும் பூசக் கூடிய மருந்துகளும் கிடைக்கின்றன. இவை மருத்துவரின் சிபார்சு இன்றி தாங்களாகவே வாங்கக் கூடியவை. ஆனால் இவற்றைப் பாவிப்பதில் மிகுந்த அவதானம் தேவை.

ஏனெனில் இவற்றில் benzocaine என்ற இரசாயனம் கலந்திருக்கக் கூடும். இதை இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் இந்த ரசாயனமானது குருதியில் ஒட்சியன் அளவைக் குறைத்து உயிராபத்தை விளைக்கக் கூடிய methemoglobinemia என்ற ஆபத்து நிலையைக் கொண்டுவரலாம்.

இலங்கையில் விற்பனையாகும் பல வாய் மற்றும் முரசுகளுக்கு பூசும் மருந்துகளில் benzocaine கலந்துள்ளது. எனவே வாங்குவதில் மிகுந்த அவதானம் தேவை. அல்லது நீங்களாக அத்தகைய பூச்சு மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு உபயோகிக்காது இருப்பது பாதுகாப்பானது.

வலியைத் தணிப்பதற்கு பரசிற்றமோல் மருந்து குழந்தையில் நிறைக்கு ஏற்ப கொடுக்கலாம். ஆயினும் இபூபறுவன் போன்ற மருந்துகளை 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகுளுக்கு கொடுப்பது நல்தல்ல.

இருந்தபோதும் குழந்தை கடுமையாக வேதனைப்பட்டால் அல்லது 101 ற்கு மேல் காய்ச்சல் அடித்தால் அது வேறு காரணங்களுக்காக இருக்கலாம். எனவே அந்நிலையில் மருத்துவ ஆலோசனை பெறுவது உசிதமானது.

பல் முளைக்க ஆரம்பித்ததுமே அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் பற்சொத்தை ஏற்படும். ஆரோக்கியமான பற்கள் நீங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய பெரும் சொத்து ஆகும்.

தினசரி இரண்டு தடவைகளாவது குழந்தையின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். நனைத்த தடித்த சுத்தமான துணிகளால் தேயத்துவிடலாம். குழந்தைகளுக்கான பிரஸ்கள் கிடைக்கின்றன.

குழந்தை படுக்கப் போகும்போது பால் போத்தலைக் கொடுப்பதை தவிருங்கள். பால் வாயில் ஊறிக்கிடந்து பற்சொத்தையைக் கொண்டு வரும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்
0.00.0

 

 

 

Read Full Post »

பகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா?
சுதன் முல்லைத்தீவு

பதில்:- தூக்கத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் நேரிடையான தொடர்பு ஏதும் கிடையாது.

பொதுவாக பகல் தூக்கத்தை நாம் சோம்பேறித்தனத்தின் அடையாளமாகப் பார்க்கிறோம். சோம்பேறியாக இருந்து உடல் உழைப்பில் ஈடுபடாதிருந்தால் உடல் எடை அதிகரிப்பிற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை.

அதாவது பகலில் தூங்கினாலும் சரி தூங்காவிட்டாலும் சரி உடலுழைப்பற்ற வாழ்க்கையானது எடையை அதிகரிக்கவே செய்யும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

மாறாக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர் உடல் அசதி நீங்க, உணவின் பின் சில நிமிடங்கள் தூங்குவதால் எடை அதிகரிக்கப் போவதில்லை. மாறாக அவர் தொடர்ந்தும் கடுமையாக வேலை செய்வதற்கான உந்துசக்தியாக அந்த சிறு தூக்கம் அமையும்.

ஒருவர் குண்டாக இருக்கிறாரா மெல்லியவராக இருக்கிறாரா என்பதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது அவரது பரம்பரை அம்சமும், அவரது உணவுமுறை மற்றும் உடலுழைப்பு போன்ற வாழ்க்கை நடைமுறைகளேயாகும்.

உண்மையில் நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சக்தியில் பெருமளவிலானது (60 முதல் 75 சதவிகிம் வரையானது) எமது உடலின் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. அதாவது மூளை,  இருதயம்,  உணவுக் கால்வாய், அங்கங்கள் உட்பட அனைத்து உறுப்புகளின் செயற்பாட்டிற்கு இது பயன்படுத்ப்படுகிறது. நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் சரி இவை தொடர்நது செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

10 முதல் 25 சதவிகிதமே நமது நாளாந்த நடவடிக்கைகளான நடப்பது, வேலை செய்வது போன்றவற்றிக்கு பயன்படுதப்படுகிறது.

நாம் தினமும் உண்ணும் உணவின் சக்திப் பெறுமானமானது எமது உடலில் நாளாந்த செயற்பாட்டிற்காக நாம் செலவழிக்கும் சக்தியின் அளவை விட அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறி எமது உடலில் சேமிக்கப்படும். அது எடையை அதிகரிக்கச் செய்யும்.

இன்று பலரும் நம் பாரம்பரிய உணவுகளான சோறு இடியப்பம் புட்டு போன்றவற்றை கைவிட்டு கலோரிப் பெறுமானம் அதிகமுள்ள ஏனைய உணவுகளை அதிகம் உள்ளெடுகிறார்கள். ரோல்ஸ் பற்றிஸ் போன்ற பொரித்த உணவுகள், தேநீர்,  சோடா ஜீஸ் போன்ற இனிப்புப் பானங்கள்,  சொக்கிளற் ஜஸ்கிறீம் போன்ற யாவுமே அதிக கலோரிப் பெறுமானம் கொண்டவை. இதுவே அவர்களது எடை அதிகரிப்பிறகு காரணமாகிறது. பகல் தூக்கம் அல்ல.

அத்துடன் உடல் உழைப்பின்றி தொலைக்காட்சி பெட்டி முன் வாளாவிருப்பதும் காரணம்தான்.

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு சுவார்சமானது. உங்கள் கேள்விக்கு எதிர்மாறானது

தூக்கக் குறைபாட்டு பிரச்சனை உள்ளவர்களும் போதியளவு நேரம் தூங்கக் கிடைக்காதவர்களும், போதியளவு நேரம் தூங்குhவர்களை விட அதிக எடை அதிகரிப்பிறகு ஆளாகிறார்களாம். இதற்குக் காரணம் லெப்டின் (Leptin) என்ற
ஹோர்மோன் குறைவாகச் சுரப்பதும் கிறெஹ்லின் (Grehlin) என்ற ஹோர்மோன் அதிகமாகச் சுரப்பதும் ஆகும்.

இதனால் வயிறு நிறையாத உணர்வும் கூடுதலான பசியும் ஏற்படுகிறதாம். அதாவது தூங்காவிட்டால்தான் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று அர்த்தப்படுகிறது.

முடிவாக என்ன ஆலோசனை சொல்லலாம்?

பகல் தூக்கம் என்பது நீண்டதாக இருக்கக் கூடாது. உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்குமளவிற்கு குறுகியதாக இருக்க வேண்டும்.
உணவுகள் போசாக்கானதாக இருக்க வேண்டுமே ஒழிய அதிக கலோரிச் சத்துள்ளதான இருக்க கூடாது.

இவற்றைக் கடைப்பிடித்தால் எடையை சரியான அளவில் பேண முடியும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

கவிதா, பளை

பதில்: மார்பகப் புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவது என்பது இயலாத காரியம். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமல்ல ஏனைய புற்று நோய்களுக்கும் அவ்வாறுதான்.

ஆனால் அந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் எனப் பலவற்றை சொல்லலாம். இத்தகைய ஆபத்தான காரணிகள் உள்ள எல்லோருக்கும் புற்றுநோய் எதிர்காலத்தில் நிச்சயம் புற்றுநோய் வரும் என அர்த்தப்படுத்தக் கூடாது. வுரக் கூடிய ஆபத்து அல்லது சாத்தியம் அதிகம் என்றே கொள்ள வேண்டும்.

முக்கிய காரணியாக பரம்பரை அம்சத்தைக் கூறலாம். பரம்பரையில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால் அவர்களது வழித்தோன்றல்களுக்கு வரக் கூடிய சாத்தியம் அதிகம்.

அத்தகையவர்களுக்கு பரம்பரை அலகு பரிசோதனை மூலம் இது வரக் கூடிய ஆபத்து இருக்கிறதா என்பதை இப்பொழுது கண்டறிய முடியும்.

மார்பகத்தில் புற்றுநோயல்லாத வேறு சில வகை கட்டிகள் ஏற்கனவே வந்தவர்களுக்கும் எதிர்கலத்தில் மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியம் அதிகம்.

மிகக் குறைந்த வயதில் (12க்கு முதல்) பெரியவளானவர்களுக்கும், 55 வயதாகியும் மாதவிடாய் முற்றாக நிற்காதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

குழந்தைகள் பெறாத பெண்களுக்கும் முதற் குழந்தையை 30 வயதிற்கு பின்னரே பெற்றவர்களுக்கும் இதற்கான ஆபத்து அதிகமாகும்.

அதீத எடை உள்ள பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக் கூடிய ஆபத்து அதிகம்.

அதேபோல வேறு நோய்களுக்காக மார்பில் ரேடியம் கதிர்சிகிச்சை செய்தவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

கடந்த பத்து வருட காலத்திற்குள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகித்தவர்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் சற்று அதிகமாகும்.

மாறாக குழந்தைக்கு ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் வரை பாலூட்டிய தாய்மாருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறைவாகும். தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் அவ்வாறே குறைவாகும்.

மமோகிராம் பரிசோதனையின் போது மார்பக திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதாக காணப்பட்டவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

எனவே இத்தகைய சாத்தியக் கூறுகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன? ஒழுங்கான முறையில் சுய மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறிய சந்தேகம் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

நீண்ட தூர பஸ் பயணங்களின்போது கால்கள் வீங்கிவிடுகின்றன? இது எதனால்?
 வைஷ்ணவி கிளிநொச்சி
 
பதில்:- நீண்ட தூர பஸ் பிரயாணங்களின் போது கால்கள் வீங்கிவிடுகின்றன என்று சொன்னீர்கள். எனவே இரண்டு கால்களும் வீங்குகின்றன என்று அர்த்தமாகிறது. ஏனெனில் ஒரு கால் மட்டும் வீங்கினால் அதற்கான காரணங்களும் சிகிச்சையும் வேறுபடும்.
 
பொதுவாக பிரயாணங்களின் பின்னரான கால்வீக்கம் ஆபத்தானதல்ல. பஸ்சில் பிரயாணம் செல்லும் உங்களை விட அதிக நேரம் விமானப் பயணம் செய்து வருபவர்களின் கால்கள் மேலும் அதிகமாக வீங்குவதுண்டு.
 
பிரயாணத்தின் போதான இத்தகைய கால் வீக்கங்களுக்கு முக்கிய காரணம் கால்களை தரையில் வைத்தபடி நீண்ட நேரம் ஒரே இடத்தில் செயலற்று உட்கார்ந்து இருப்பதுதான். இவ்வாறு இருக்கும்போது கால்களுக்கு செல்லும் குருதியில் ஒரு பகுதி மேலே செல்லாமல் நாளங்களில் தேங்கி நிற்கும். இதனால் குருதியில் உள்ள நீரின் ஒரு பகுதி நாளத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள திசுக்களுக்குள் ஊடுருவும். இதுவே  கால் வீக்கத்தைக் கொண்டு வருவதற்கான காரணமாகும். 
 
பொதுவாக கணுக்காலை அண்டிய பகுதிகளில் இது வெளிப்படையகத் தெரியும். ஆனால் இது நீண்ட பிரயாணம் செய்யும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்பதும் உண்மையே.
 
இரு கால்களும் வீங்குவதற்கு ஒருவர் உட்கொள்ளும் சில மாத்திரைகளும் காரணமாகலாம்.
 
நீங்கள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரை உபயோகிக்கிறீர்களா. அவ்வாறு உபயோகிக்கவர்களுக்கு கால் வீக்கம் வருவதற்கான சாத்தியங்கள். உண்டு. அதே போல உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் நிபிடிப்பின், அமைலோடிபின் (Nifedepine, Amlodepine)  போன்ற மாத்திரைகளுக்கும் கால் வீக்கம் வருவதுண்டு. 
 
புருபன் டைகுளோபெனிக் சோடியம், பைரொக்சிகாம் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளும் கால் வீக்கத்தைக் கொண்டுவரலாம். நீரிழிவு நோய்க்கு உபயோகிக்கும் பையோகிளிட்டசோன் மாத்திரைகளும் அவ்வாறு வீக்கத்திற்கு காரணமாகலாம். அதேபோல பிரட்டிசலோன் மாத்திரையும் காரணமாகலாம்.
 
மாத்திரைகளால் ஏற்படும் கால் வீக்கம் பிரயாணம் பண்ணினால்தான் வரும் என்றில்லை. சாதாரண நேரத்திலும் வரலாம். இருந்தபோதும் சிலருக்கு நீண்ட நேரம் பிரயாணம் செய்யும் போதுதூன் முதலில் வெளிப்படுவதுண்டு. 
 
மருந்துகள்தான் உங்கள் கால் வீக்கத்திற்கு காரணமாயின் மருத்துவருடன் கலந்தாலோசித்து வேறு மருந்துகளை மாற்ற முடியுமா என்பதை தீர்மானியுங்கள். நீங்காளாக நிறுத்த வேண்டாம்.
 
சரி பிரயாணம் போதான இந்து கால் வீக்கம் ஏற்படாமல் தடுக்க நீங்கள் என்ன பாதுகாப்பு எடுக்க முடியும்.
 
ஒரேயடியாக உட்கார்ந்திருப்பதை தவிர்த்து ஓரிரு மணித்தியாலயங்களுக்கு ஒரு தடவை எழுந்து சிறிது தூரம் நடந்துவிட்டு மீண்டும் உட்காருங்கள். இது ஆகாய விமானத்தில் சாத்தியம் ஆனால் சனம் நிறைந்த பஸ்சில் முடியாத காரியம் என்பதை அறிவேன்.. 
 
அவ்வாறெனில் நீங்கள் உட்கார்ந்தபடியே உங்கள் முழங்கால்களையும் கணுக்கால்களையும் சற்று மடித்து நீட்டி பயிற்சி கொடுத்தால் இரத்தம் தேங்கி நிற்காது.
கால்களுக்கான குருதி சுற்றோட்டம் சீரடையும்.
 
சாக்கைத் தூக்கிப் போட்டது போல ஆசனத்தில் ஒரே மாதிரி உட்கார்ந்திருக்காது உங்கள் உடல் நிலையை இடையிடையே மாற்றி உட்காருங்கள்.
 
காலுக்குமேல் கால் போட்டுக் கொண்டிருப்பதை பிரயாணத்தின் போது தவிருங்கள்.
 
இறுக்கமான ஆடைகளை அணிவதையும் நீண்ட பிரயாணத்தின் போது தவிருங்கள்.
 
கால் வீக்கத்துடன் வலி இருந்தால் அல்லது ஒரு கால் மட்டும் வீங்குகிறது எனில் மருத்துவ ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும்.
 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0.00.0

Read Full Post »

« Newer Posts - Older Posts »