Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மருத்துவம்’ Category

கேள்வி:- நாயால் கடியுண்டவர்கள் ஏ.ஆர்.வி தடுப்பூசி போட்டால் முட்டை, இறைச்சி, பழவகைகள் போன்றவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டுமா?
எம்.சதீஸ் நல்லூர்

பதில்:- நிச்சயமாக எதையும் உண்ணாமல் தவிர்க்க வேண்டியதில்லை. விரும்பிய உணவுகளை உண்ணலாம்.

அவை ஆரோக்கியமான உணவுகளாக இருக்கும் பட்சத்தில்.

ஏன் இவ்வாறான தவறான கருத்துகள் எம் மக்களிடையே உலாவுகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

ஏ.ஆர்.வி தடுப்பூசி ஒரு சிலரில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆயினும் அது இல்லை என்பதை அலர்ஜி பரிசோதனை ஊசி மூலம் நிச்சயப்படுத்திய பின்னரே ஏ.ஆர்.வி தடுப்பூசியை போடுவார்கள். எனவே தயக்கமின்றிப் போடலாம்.

அதேபோல முட்டை, இறைச்சியும் ஏங்காவது ஒரு சிலரில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதை அவர்களே அனுபத்தில் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அலர்ஜி உள்ளவர்கள் அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏ.ஆர்.வி தடுப்பூசி போடும்போது மட்டுமல்ல. எப்போதும்.
எவ்வாறாயினும் ஏதாவது ஒவ்வாமை ஒருவருக்கு இருந்தால் அது பற்றி ஊசி போடு முன்னர் மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.
போதிய பாதுகாப்புடன் தடுப்பூசியைப் போட அந்தத் தகவல் மருத்துவருக்கு உதவும்.
யாழ் லிருந்து வெளியாகும் எதிரொலி வாராந்த பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் பகுதியில் வாசகர் கேள்விகளுக்கு நான் அளிக்கும் பதில்கள்

Read Full Post »

“போகுது வருகுது
போகுது வருகுது
போய்ப் போய் வருகிறது……”

” …எத்தனை மருந்துகளைப்பூசிவிட்டேன்
மறைவது போல ஏய்புக் காட்டி
மீண்டும் மீண்டும் வருகிறது..”

நாற்பதை அண்டிய அவள் தனக்கு சீனி கொலஸ்டரோல் பிரஸர் ஏதாவது வந்துவிட்டதா எனப் பாரக்க வந்திருந்தாள்

ரிப்போட்டுகளைக் காட்டி முடிந்து எழுந்து போக முயன்றவள்
மீண்டும் இருந்தாள்.

இதையும் காட்ட வேணும் என்று நினைச்சனான் மறந்து போனன்
என்று மூக்கைக் காட்டினாள்

கறுத்து சொரப்பாக மூக்கின் மேற்பாகம் அசிங்கமாகக் கிடந்தது.

“ஒரு வகை எக்ஸிமா ஒட்டுக் கிரந்தி” என்றேன்

ஆனால் “மருந்து பூசியும் மாறுதில்லையே” என்றாள்

“கண்ணாடி போடுறனீங்கள்தானே ஒருக்கா போடுங்க பார்ப்பம்” என்றேன்.

நான் நினைத்தது சரி

மூக்கில் அழுத்திக் கொண்டிருக்கும் நோஸ்பாட் (nose pad) கண்ணணாடியால் ஆனது எனவே அது காரணமல்ல

கண்ணாடி பிரேமின் ரிம்தான் காரணம் அது மெட்டலால் ஆனது

அந்த மெட்டலுக்கான ஒவ்வாமையால் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது

அதனால்தான் மீண்டும் மீண்டும் வருகிறது

“கண்ணாடியை மாற்றுங்கள் பிளாஸ்டிக் பிரேம் உள்ளதாக இருக்க வேண்டும்” என்றேன்

அடுத்த முறை அவளைக் கண்டபோது மூக்கு அழகாக இருந்தது

சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஒவ்வாமை ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி ஒட்டுக் கிரந்தி Allergic contact Dermatitis என்பார்கள்.

இப் பிரச்சனை பற்றி மேலும் அறிய எனது புள்கிற்கு விசிட் அடியுங்கள்

http://hainallama.blogspot.com/2012/04/allergic-contact-dermatitis.html

Read Full Post »

இவரின் வாயினுள் வெள்ளையாக ஏதோ தெரிகிறதே. புட்டுத் துகள்கள் ஒட்டிக்கிடக்கின்றன என எண்ணாதீர்கள்.

இவரது டொன்சிலில்தான் அவை இருக்கின்றன. ஒட்டிக் கொண்டு அல்ல. சிறிது சிறிதாக வளரந்த கற்கள் அவை.

மனித உடலுறுப்புகளில் கற்கள் உருவாவதை நீங்கள் அறிநிதிருப்பீர்கள். சிறுநீர்கக் கற்கள் மற்றும்  பித்தப்பை கற்கள் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வேளை அவற்றால் பாதிக்கப்பட்டிருக்கவும் கூடும்.

ஆனால் தொண்டையில் உள்ள டொன்சில் என்று உறுப்பில் கற்கள் தோன்றலாம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கும்.

உங்கள் தொண்டையின் உட்புறத்தில் இரு பக்கங்களிலும் உருண்டையான கட்டி போல இருப்பபைதான் டொன்சில் (Tonsils) ஆகும். இது ஒரு வகை சுரப்பி ஆகும்.

வடிகட்டி என்றும் சொல்லலாம். வாய்வழியே உட்செல்லும் கிருமிகளை பரவவிடாது தடுப்பும் உறுப்பு ஆகும்.

இது வழவழப்பான உறுப்பாக இருப்பதில்லை. மேடும் பள்ளங்களும் சில வேளை சிறு குழிகளும் அவற்றின் மேற்பரப்பில் தென்படலாம்.

இந்த மேடு பள்ளங்களில் கிருமிகளும் சளிபோன்ற திரவங்களும் உதிர்ந்த கலங்களும் மாட்டுப்பட்டுக்கிடக்கலாம். கால ஓட்டத்தில் உன்றியைந்து இறுகி கட்டியாகி கற்களாக உருவாகின்றன.

இது எவரிலும் தோன்றலாம் என்ற போதும் அடிக்கடி ரொன்சிலில் கிருமித் தொற்று ஏற்படுபவர்களில் அதிகம் வர வாய்ப்புண்டு.

பொதுவாக இது போன்ற சிறிய கற்களே தோன்றுகின்றன என்ற போதும் பெரிய கற்களும் வரலாம்.

அறிகுறிகள்

இது பொதுவாக அறிகுறிகள் அற்ற நோய். மருத்துவர்கள் வாயைப் பரிசோதிக்கும் போது அல்லது ஆராச்சி மனம் கொண்டவர்கள் வாயை ஆவெனெத் திறந்து கண்ணாடியில் பார்க்கும் போது தெரியவரலாம்.

வாய் நாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
விழுங்குவதில் சிரமம் காது வலி போன்ற அறிகுறிகள் அரிதாக ஏற்படலாம்.

சிகிச்சை

பொதுவாக எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது

மெல்லிய சுடுநீரில் உப்பு கரைத்து அலசிக் கொப்பளிப்பது நிவாரணம் அளிக்கக் கூடும்
.
மிக அவசியம் என்று கருதினால் மருத்துவர் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைக் கொடுக்கக் கூடும்

மிக அரிதான சத்திர சிகிச்சை செய்து அகற்றுவதும் உண்டு

மொத்தத்தில் சொல்வதானால்அலட்டிக் கொள்ளத் தேவையற்ற நோய்.

0.00.0

Read Full Post »

சமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்

மறதி பற்றி எல்லோருக்குமே தெரியும். தனிப்பட்ட அனுபவங்கள் எல்லோருக்கும் நிறையவே இருக்கும். ஆனால் மறதிக் கோளாறு நோய் (Dementia) பற்றி அறிந்திருக்கிறீர்களா.

உங்களுக்கு இல்லாவிடினும் உங்கள் சுற்றாடலில் அத்தகையவர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.

எம்மிடையே முதியவர்கள் தொகை அதிகரித்து கொண்டே போவதை யாவரும் அறிவோம். அவர்கள் தாமாகவே இயங்கிக் கொண்டு இருக்கும் வரை பிரச்சனை இல்லை. அது முடியாத போது தனிமையும், அதுவும் பராமரிப்பதற்கு பிள்ளைகள் அருகில் இல்லாது போவதும் பிரச்சனையை விஸ்வருபம் எடுக்க வைக்கும்.
உடலால் இயங்குவது மட்டுமின்றி மூளைத் திறனும் பாதிப்படையும் போது நிலமை கட்டுக்கடங்காமல் போய்விடுகிறது.

முதுமையில் மறதி ஏற்படுவது சகசம். ஆயினும் மறதிக் கோளாறு நோய் (Dementia) என்பது சற்று பாரதூரமானது. அவர் தான் யார் தனது சுற்றம் என்ன தான் செய்ய வேண்டியது என்ன போன்ற யாவற்றையும் மறந்து விடுகின்ற ஒரு அவல நிலையாகும். மற்றவரின் துணையின்றி இயங்குவது முற்றாக முடியாததாகிவிட்டது.

ஒருவரது சிந்தனைத் திறன், நடத்தை முறைகள் மற்றும் அன்றாட செயற்பாடுகளையும் பாதிப்பதாக இருக்கிறது.
இங்கு விடயங்களை மறப்பது மட்டுமின்றி அறிந்து உணரும் திறனும் பாதிப்படையும். உதாரணமாக தனது தாய் மொழியையே சரியாக பாவிப்பதில் சிக்கல்களும் உண்டாகலாம். அதாவது தனது மனதில் எழுவதை சொற்களால் வெளிப்படுத்தும் ஆற்றல் முடங்கிப் போய்விடலாம்.

அத்துடன் விடயங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல், இடத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்ளும் திறன் ஆகியவற்றிலும் பாதிப்பும் ஏற்படும்.
தானகவே உண்பது உடுப்பது முடியாமலாகிவிடுகிறது மலசலம் கழிவதை உணர முடிவதில்லை, பசி தாகம் போன்ற தன் அடிப்படைத் தேவைகளைக் சொல்வது போன்றவை கூட முடியததாகி ஒரு ஜடம் போல வாழ்வதாகும்.

இதற்கு காரணம் மூளையின் சில நரம்பணுக்கள் செயலிழந்து போவதும் ஏனைய நரம்புகளுடனான தொடர்புகளை இழப்பதும் ஆகும்.

இது முதுமையில் ஏற்படக் கூடிய நோய் என்ற போதும் முதுமையின் கட்டாய நியதி அல்ல. முதுமையால் மட்டும் ஏற்படும் நோயுமல்ல. பெரும்பாலான முதியவர்கள் இது வராமல் தப்பிவிடுகிறார்கள். இது நரம்புக் கலங்கள் சேதமடைவதால் ஏற்படும் நோயாகும்.
இப்படிப்பட்ட நோயாளிகளை இப்பொழுது முன்னரை விட அதிகமாக காண நேர்கிறது.

இத்தனையவர்களை பாராமரிப்பது மிகவும் சிரமமாhன காரியம். இதனால் பல மேலை நாடுகளில் அவர்களை அதற்கான விசேட முதியோர் இல்லங்களில் வைத்துதூன் பாராமரிக்கிறார்கள்.

அங்கு இத்தகைய மறதிக் கோளாறு நோயுள்ளவர்களைப் பராமரிப்பதற்கான பயிற்சி எடுத்த பணியாளர்கள் பராமரிப்பதால் அது நல்ல முறையில் நடைபெறுகிறது. ஆயினும் அது கடமை மட்டுமே.

அந்த பராமரிப்பானது முதுமை மறதி நோயாளிக்கு தனிப்பட்ட ரீதியானதாக பிரத்தியேகமானதாக மனதுக்கு நெருக்கமானதாக இருப்பதில்லை.
பிள்ளை பேரப்பிள்ளை சகோதரம் நட்புகள் போன்ற உறவின் உணர்வுப் பாலம் பராமரிப்பு இல்லங்களில் கிட்டுவதில்லை. சமூக ஊடாட்டம் அற்றுப் போய்விடுகிறது.

மறதிக் கோளாறு நோயானது எதுவுமே செய்து முன்னேற்றக் கூடிய நோயல்ல என்ற போதும் அண்மை செய்யப்பட்ட ஒரு ஆய்வானது பச்சைக் கொடி காட்டுகிறது.

தினமும் அவர்களுடன் உரையாடுவது அவர்களுக்கு ஆர்வம் உள்ள விடயங்களை கண்டறிவது, அவர்களது பராமரிப்பில் அவர்களுக்கு விருப்பமான முறையில் செய்வதற்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற தனிப்பட்ட ரீதியான விடயங்களும் அடங்குகின்ற போது நிலமை மாறியது. அவர்கள் சற்று மகிழ்ச்சியானவர்களாக கோபம் சினம் ஆக்கிரோசம் குறைந்தவர்காளாக மாறினார்கள்.

தனிப்பட் ரீதியில் கவனம் எடுத்து வாரத்தில் ஒரு மணி நேரமாவது சமூக ஊடாட்டதிற்கு வாய்ப்பு அளிப்பது அவர்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்கிறது அந்த ஆய்வு.

ஆயினும் முன்னர் செய்ப்பட்ட ஆய்வுகளானது விசேட பராமரிப்பு நிலையங்களில் உள்ள மறதிக் கோளாறு நோயாளிகளுக்கு சமூக ஊடாட்டம் ஆனது வாரத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு குறைவாகவே கிடைக்கிறது என்றது. இதனால் அவர்களிடையே கிளர்ச்சியடைதல் ஆக்கிரோசம் போன்ற பிரச்சனைகள் அதிகமாகின்றன.
எனவே சமூக ஊடாட்டமானது செலவு குறைந்த சுலமமான பராமரிப்பில் அடக்கக் கூடியதாகும்.

தாய் நாட்டில் வாழும் எங்களுக்கு இந்த ஆய்வு எந்தளவு பயன் தரக் கூடியது.

இங்கு வயோதிபர்களுக்கான பராமரிப்பு இல்லங்களே உள்ளன. மறதிக் கோளாறு நோயாளர்களே அங்கு சேர்க்கவே மாட்டார்கள். மறதிக் கோளாறு நோயாளர்களுகான விசேட பாராமரிப்பு இல்லங்கள் இங்கு கிடையவே கிடையாது.

அவர்களை பராபரிப்பது மிகப் பெரிய சுமை என்ற போதும் வீட்டில் உள்ளவர்களே செய்கிறார்கள்.
எனவே தனது தாய் தந்தை சகோதரம் போன்ற உறவுகளே இப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களுடன் ஓரளவேனும் பிரத்தியேக ஊடாடலில் ஈடுபடுவார்கள்; என்றே எதிர் பார்க்கலாம்.

ஆனால் நாங்கள் நினைப்பது போல வீட்டுப் பராமரிப்பில் எல்லாமே சுமுகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

பல முதியர்கள் மருத்துவர்களிடம் வருகிறார்கள். அவர்கள் மறதிக் கோளாறு நோயாளர்கள் என்றில்லை. சாதராரண வயோதிபர்கள்.
‘உங்களட்டை போகவேணும் என்று நட்டுப்பிடிச்சுக் கொண்டு நிண்டா. அதுதான் கூட்டிக் கொண்டு வந்தம்’ என உறவினர்கள் எரிச்சலோடு சொல்லுவார்கள்.

என்ன நோய் என்று கேட்டாலும் அந்த முதியவர்களில் பலருக்கு ஒன்றும் சொல்லத் தெரிவதில்லை. ‘ கை உளையுது கால் உளையுது தலை இடிக்குது’ என்று ஏதாவது வாய்க்கு வந்ததை சொல்வார்கள்.

உண்மையில் மருத்துவர்களான எங்களின் அன்பான விசாரிப்பும், தொடுகையும், தேறுதல் படுத்தல் வார்த்தைகள் மட்டுமே அவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிடும். அதுதான் அவர்களுக்கு வேண்டியது. மருந்துகள் இரண்டாம் பட்சம்.

மருத்துவர்தான் இவற்றை செய்ய வேண்டும் என்றில்லை.

வீட்டில் உள்ளவர்களே இதைச் செய்யலாம். பலர் செய்கிறார்கள். ஆனால் வேறு பலர் ‘எங்களுக்கு இருக்கிற வேலைகளுக்கை இவையளின்ரை அலட்டலை கேட்ட முடியுதே’ என ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள்.
முதியவர்கள் அதிலும் முக்கியமாக இயலாமையால் துவண்ட முதியர்கள், தாங்கள் பேசுவதைச் செவிமடுப்பதற்கும், அன்பான ஆதரவூட்டும் வார்த்தைகளை கேட்பதற்கும் ஆறுதல் படுத்தும் தொடுகைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

அதைக் கொடுங்கள் அவர்களது நோயில் பெரும் பகுதி பறந்தோடிவிடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (Col)
குடும்ப மருத்துவர்

0.00.0

 

 

Read Full Post »

‘பிள்ளை உன்ரை வாயையும் ஒருக்கால் டொக்டருக்கு காட்டு’ என அம்மா மகளுக்கு சொன்னாள்.

ஏற்கனவே மகளின் காலில் உள்ள ஒரு தேமலுக்கு காட்டி மருந்து பற்றிய விளக்கங்னளயும் கேட்டுவிட்டு புறப்படும் தருணத்தில், வந்த இடத்தில் இதையும் முடித்துக் கொண்டு போகும் எண்ணத்தில் அம்மா இவ்வாறு கூறினாள்.

கொவ்வை வாய் திறந்த குட்டி அழகியின் உதட்டின் உட்புறத்தில் வெண்மையாக ஒரு கட்டி.

மற்றொரு இளம் பெண் அலறிப்புடைக்காத குறையாக என்னை நாடி வந்திருந்தாள். அவளது வாயினுள்ளும் இது போன்றதொரு கட்டி இருந்தது. வாயின் மென் சவ்வில் தடிப்பமாக  வட்ட வடிவில் வெண்மை நிறத்தில் இருந்தது. அரை சென்ரி மீட்டர் அளவு இருக்கலாம்.

பொதுவாக வேதனை எதுவும் இல்லையாம். இறுக்கி அழுத்தியபோது சற்ற வேதனை இருந்தது.

இவற்றை நீர் கட்டி என்று சொல்லலாம். மருத்துவத்தில் Mucous cyst  என்பார்கள். சீதச் சுரப்பி என சொல்வது கருத்து ரீதியாக சரியான தமிழ் சொல்லாக இருக்கும்

வெண்மையாக அல்லது வெளிர் நீல நிறத்தில் வாயின் உட்புறமுள்ள மென் சவ்வுகளில் வட்டவடிவாக தோன்றும் கட்டிகள் இவை. சாதாரணமான ஒரு சென்ரி மீற்றருக்கு குறைவான அளவிலேயே இருக்கும். ஆயினும் சில தருணங்களில் 3.5 சென்ரி மீற்றர் வரை பெருக்கக் கூடும்.

இத்தகைய கட்டிகள் எந்த வயதிலும் வர வாய்ப்புண்டு.;. ஆயினும் பொதுவாக 10 முதல் 25 வயதினரிடையேதான் அதிகம் காணக் கூடியதாக இருக்கிறது.

இவை எவ்வாறு தோன்றுகின்றன எனச் சரியாகச் சொல்ல முடியாது.

இருந்தாலும் சொண்டு கடித்தல் சொக்கையை கடித்தல் போன்ற ஊறுகளால் எற்படுவதற்கான வாய்பு அதிகம்.

இதே போன்று வேறு ஏதாவது குத்தியதால் அல்லது காயம் படுதலால் எச்சில் சுரப்பிகளில் காயம் ஏற்படுபட்டும் இவை தோன்றுகின்றன.

எனவே மன அழுத்தங்களால் உதடுகளை கடிப்பவர்களிடையே இவை தோன்றுவது அதிகம்.

சிலரில் இந்த கட்டிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதுண்டு.

பல் இடுக்குகளில் காரை (tartar)  படிவதைத் தடுப்பதற்கான பற்பசைகளை உபயோகிப்பவர்களிலும் சிலருக்கு தோன்றுகிறது.

மேற் கூறிய இருவரில் ஒருவர் நீர்க்கட்டி பற்றி பெரிதாக அக்கறைப்படவில்லலை. போகும் போக்கில் சொன்னார். மற்றவர் அலறிப் பிடித்து ஓடி வந்தார்.

எது சரி? உண்மையில் இது உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டிய பாரதூர நோயா இல்லையா?

இது சாதாரண நோய்தான். பயப்பட வேண்டியதில்லை. தானே ஓரிரு மாதங்களில் குணமாகிவிடும்.

ஆயினும் இது சாதாரண நீர்க்கட்டிதானா இல்லையா என்பதை நீங்களாக தீர்மானிப்பது சாத்தியமல்ல. மருத்துவர் பார்த்துத்தான் நோயை சரியாக நிர்ணயம் செய்ய முடியும். எனவே மருத்துவரிடம் காட்ட வேண்டிய தேவை நிச்சமாக உள்ளது.

மருத்துவர்களால் பார்த்த மாத்திரத்திலேயே இதை இனங் காண முடியும். ஆயினும் ஒரு சில தருணங்களில் நோயை நிச்சயப்படுத்த பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

நீர்க்கட்டியானது நீண்ட காலத்திற்கு குணமாகாது இருந்தால் அல்லது அதன் அளவு 2 சென்ரி மீற்றருக்கு கூடுதலாக இருந்தால், வேகமாக வளர்ந்து வந்தால், அல்லது அதன் தோற்றம் புற்று நோய் போன்ற சந்தேகத்தை கொடுத்தால் மருத்துவர் அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்புவார். புற்றுநோய் போன்ற ஆபத்தான நோயல்ல என்பதை நிச்சயப்படுத்தவே இவ்வாறு செய்வார்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல வாயின் மென்சவ்வுகளில் வரும் இந்த நீர்க்கட்டிகள் எந்தவித சிகிச்சையும் இன்றி தாமாகவே குணமாகிவிடும்.

நீங்களாக அதைக் குத்தவோ கீறவோ அகற்றவோ முற்பட வேண்டாம். கிருமித்தொற்றுக்கு ஆளாகக் கூடும் என்பதுடன் மீளவும் வரக் கூடும்.

நீண்ட காலம் குணமாகாது இருந்தால் அல்லது வலி இருந்தால் அல்லது உண்ணும் போது இடைஞ்சலாக இருந்தால் அதை அகற்ற முடியும்.

லேசர் சத்திர சிகிச்சை கூலம் அகற்றலாம். சுpல தருணங்களில் அந்த இடத்தில் ஸ்டிரோயிட் ஊசி மருந்து ஏற்றி அறையச் செய்வதுண்டு.

எதுவானாலும் பயப்பட வேண்டிய நோயோ சிகிச்சையோ அல்ல என்பதை புரிந்து கொண்டால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (Col)

குடும்ப மருத்துவர்

0.0.0

Read Full Post »

சுயமருத்துவமா? 

உயிர் ஆபத்தாகலாம். அவதானமாயிருங்கள்

போதையாகும் வயிற்றைக் கட்டுப்படுத்தும் மருந்து

சுயமருத்துவம்

வயிற்றோட்டமா காய்ச்சலா. இருமலா, மூட்டு வலியா எதுவானாலும், எத்தகைய பாரதூரமான நோயானாலும் மருந்துக்கடையில் எவரும் தாமாகவே மருந்து வாங்கி சாப்பிடக் கூடியதாக இருக்கிறது நம் நாட்டில்.

எந்த மருத்துவரின் ஆலோசனையும் தேவையில்லை. அடிப்படை மருத்துவ அறிவு இல்லாத எவரும் கூட தாங்களாகவே தாம் விரும்பிய மருந்துகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இல்லாவிட்டால் மருந்துக் கடைக்காரர் மருத்துவராக மாறி மருந்துகளைக் தாராளமாக வழங்குகிறார்.

செலவு மிச்சம். மருத்துவரிடம் சென்று காத்திருக்க வேண்டியதில்லை. நேரமும் மிச்சம் என்பதுதான் பலரும் சொல்லும் சாட்டு.

அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி எவரும் சிந்திப்பதி;லை.

அரசாங்கமானது மருந்து விற்பனை சம்பந்தமாக பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஆயினும் அதைப் பற்றி யாருக்குக் கவலை. சட்டங்களைப் புறக்கணித்து மருந்துகள் அமோகமாக விற்பனை ஆகின்றன.

எந்த நகரைப் பார்த்தாலும் சாப்பாட்டு கடைகளுக்கு அடுத்ததாக களை கட்டி நிற்பவை மருந்து கடைகள்தான்.

மேலை நாடுகளில் அவ்வாறில்லை. மருத்துவரின் சிட்டை இன்றி பெரும்பாலான மருந்துகளை வாங்க முடியாது.

ஆனால் அங்கும் கூட ஒளிவு மறைவாக சில மருந்துகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளித்தது.

வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்து

வயிற்றோட்டம் வந்தால் என்ன செய்வீர்கள். பலர் ஓமம் அவித்து குடிப்பார்கள். சிலர் உணவுகளை கட்டுபாடாக உண்பார்கள். சற்று விசயம் தெரிந்தவர்கள் முதல் உதவியாக தயிர் அல்லது யோகட் சாப்பிட்டு பார்ப்பார்கள்.

ஆனால் சற்றுப் படித்த அரை வேக்காடு முட்டாள்கள் என்ன செய்வார்கள்?

மருந்துக் கடைக்கு ஓடிச் சென்று வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்தை வாங்கிப் பார்ப்பார்கள். Loperamide என்ற மருந்து மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. பல வியாபாரப் பெயர்களில் கிடைக்கிறது.

இந்த மருந்து என்ன செய்யும்.

அடிக்கடி வயிற்றால் போவதை உடனடியாகக் கட்டுப்படுத்தும்.

இதை எவ்வாறு செய்கிறது?

உணவுக் கால்வாயின் செயற்பாட்டை- அதன் தொடர் அசைவியக்கத்தை குறைக்கிறது. உணவுக் கால்வாயிலிருந்து அதிகமாக நீரை உறிஞ்சி எடுக்கச் செய்கிறது. இவை காரணமாக மலம் அடிக்கடி கழிவது குறையும். அத்துடன் மேலதிகமாக நீர் உறிஞ்சப்படுபதால் மலம் இறுக்கமாகவும் மாறும்

ஆனால் வயிற்றோட்ட நோய்க்கான அடிப்படைக் காரணத்தை இம் மருந்து குணப்படுத்துவதில்லை. உதாரணமாக உணவு மாசடைதல் காரணமான கிருமித்தொற்றால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருந்தால் அதை குணப்படுத்தாது.

இருந்தபோதும் பிரயாணம் பண்ணும்போது அல்லது ஏதாவது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது வயிற்றோட்டம் இடைஞ்சல் கொடுக்காது தற்காலிகமாகத் தடுக்க இம் மருந்துகள் உதவுகின்றன.

வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்தால் மரணங்கள்

அமெரிக்காவில் திடீரென இறந்த ஒரு 24 வயது இளைஞனின் குருதியை பரிசீலித்தபோது அதில் லொபரமைட் மருந்தின் அளவானது அதிகமாக இருந்தது. சாதாரணமாக இம் மருந்தை எடுக்கும் போது இருக்கக் கூடிய குருதிச் செறிவை விட 25 மடங்கு அதிகமாக இருந்தது.

அதேபோல 39 வயதான ஒருவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது அவர் மரணித்துவிட்டார். இவரது குருதியிலும் லொபரமைட் மருந்தின் அளவானது அதிகமாக இருந்தமை கண்டறியப்பட்டது.

அவர்கள் இருவருமே போதைப் பொருள் பாவனையாளர்கள். போதைப் பொருளை நிறுத்தும்போது ஏற்படும் பக்கவிளைவுகளை சமாளிக்க இந்த வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தும் மருந்தை உட்கொண்டார்கள். மிக அதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்தது.

லொபரமைட் மருந்தானது Heroin,  morphine போன்ற போதைப் பொருட்களை நிறுத்தும் போது ஏற்படும் உடல் உள உபாதைகளைச் சமாளிப்பதற்கு பயன்படுத்தும் Methadone- buprenorphine மருந்தை ஒத்தது. ஆனால் இதுவும் கூட குறைந்தளவான தாக்கத்தையுடைய போதைப் பொருளையாகும். சுருங்கச் சொன்னால் Methadone, Loperamide  யாவுமே குறைந்த வீச்சினாலான போதைப் பொருற்களே.

இவற்றை துஸ்பிரயோகம் செய்பவர்கள் ஒன்றில் இதைப் போதைப் பொருளாக பயன்படுத்த முயல்வர். அல்லது ஏற்கனவே உபயோகிக்கும் போதைப் பொருளை நிறுத்தும்போது ஏற்படும் அசௌகரியங்களை சமாளிக்க உட்கொள்கிறார்கள். எதற்காக உபயோகித்தாலும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு உபயோகிக்கும் சாதாரண அளவை விட பல மடங்கு உபயோகிக்க நேர்வதால்தான் ஆபத்தாகிறது.

வயிற்றோட்டத்தின் போது இம் மருந்தை ஒரு நாளுக்கு 3 அல்லது 4 மாத்திரைகளுக்கு மேற்பட உபயோகிப்பதில்லை. ஆனால் போதைப் பாவனையாளர்கள் தங்கள் இடைஞ்சல்களைச் சமாளிக்க 100 மாத்திரைகளை உட்கொள்வதும் உண்டு. நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து உயோகிப்பதாலும் அதிகளவு மாத்திரைகளை உட்கொள்வதாலுமேயே பாரதூரமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன.

சுவாசம் குறைவதும், இருதயத் துடிப்பு ஒழுங்கீனம் அடைவதுமே மரணங்களுக்கு காரணமாயின். அத்துடன் மூளை வீக்கம், சிறுநீர் பிரியாமை, இருதய வீக்கம், கால் நாளங்களில் குருதி உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதும் அவதானிக்கப்பட்டது.

இவை லொபரமைட் மருந்தை மிக அதிக அளவில் உட்கொண்டதால் ஏற்படும் பக்க விளைவுகளாகும்.

லோபரமைட் மருந்தை துஸ்பிரயோகம் செய்வது பற்றிய அறிக்கைகள் மேலை நாடுகளிலேயே தெரிய வந்துள்ளது. இன்னமும் இலங்கையில் அறியப்படவில்லை.

லோபரமைட் மருந்து மட்டுமல்ல வேறு பல மருந்துகளும் கூட வேண்டாததும் ஆபத்தானதுமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

எந்த மருந்தையும் மருத்துவ ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது.

மருத்துவர் சிபார்சு செய்த மருந்தின் அளவை மீறி அதிகம் போடக் கூடாது. இவற்றை கடைப்பித்தால் ஆபத்து உங்களை நெருங்காது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (Col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

சுண்ணாம்பு வெற்றிலை பாக்கு பற்றியே பலரும் பேசுகிறார்கள். ஆனால் இது சுண்ணாம்பும் கண்களும் பற்றிய பதிவு

இந்த பெண்ணின் கண்களில் எதனைக் காண்கிறீர்கள்?

அவளது கண்ணின் கரு விழியின் பெரும் பகுதி ஆடை படர்ந்தது போல வெண்மையாக கிடக்கிறது.

கருவிழியானது வெண் விழியோ என மயங்க வைக்கிறது.

20160331_112534

இது கற்றரக்ட் (cattaract) எனப்படும் நோயல்ல. வெண்புரை எனத் தமிழில் பேசப்படும் அது வில்லையை பாதிப்பதாகும்.

இவளது  கருவிழி பாதிப்படைந்திருக்கிறது. நல்ல வேளை நடுப்பகுதி பாதிப்பு அடையவில்லை. அவ்வாறாயின் அவளது பார்வை முழுமையாக மறைந்திருக்கும்.

இதற்குக் காரணம் சுண்ணாம்பு ஆகு‌ம்.

இன்று இளம் தாயாக இருக்கும் இவள் சிறு பெண்ணாக இருந்த போது சுண்ணாம்பு பைக்கற்றை வைத்து விளையாடி இருக்கிறாள். அதை அழுத்திய போது பைக்கற் வெடித்து சுண்ணாம்பு கண்ணிற்குள் பீச்சிட்டு அடித்திருக்கிறது.

கண்ணைக் கழுவினாலும் சுண்ணாம்பின் துகள்கள் மறைந்திருந்து படிப்படியாக பார்வையை பறித்து விடும். இவளுக்கும் அவ்வாறே ஆனது

நல்ல காலம் நடுப்பகுதி பாதிப்படையாததால் பார்வை தப்பிவிட்டது.

இருந்த போதும் விழியானது மடலுடன் ஒட்டி கண் சிறிசாகி திறப்பதில் சிரமம் இருந்தது. அந் நேரம் சத்திர சிகிச்சை மூலம் கண்களை திறக்க வைத்தவர் யாழ் கண் டொக்டர் குகதாசன் ஆவார்.

80 களில் இது பாரிய பிரச்சனையாக இருந்தது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
“சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்” என்ற நூலை அந்நேரம் எழுதினேன்.

கண்டி கண் மருத்துவர் Dr.Seiman அவர்களது ஆலோசனையுடன் எழுதினேன்.  ஊற்று நிறுவனம் அந்த கை நூலை வெளியிட்டது.

சுண்ணாம்பு படுவதால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றியும் அந்த நூலில் எடுத்துச் சொல்லியுள்ளேன்

17935

இன்று அந்த நூலின் படத்தை போடுவதற்காக தேடினேன். நூலைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஆயினும் நூலகம் இணையத் தளத்தில் அந்த நூல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நூலகத்திற்கு என நன்றிகள்
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D

Read Full Post »

« Newer Posts - Older Posts »