Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மருத்துவரின் டயறி’ Category

>டாக்டர் எம்.கே. முருகானந்தனின் “ஒரு டாக்டரின் டயரியில் இருந்து”

டாக்டர் எம்.கே. முருகானந்தன் எழுதியிருக்கும் நலவியல் சார்ந்த ஒன்பது நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. அந்த நூல்கள் அனைத்திலும் அவர் முன்வைக்கும் நலவியல்சார் கருத்துக்களுடன் மெல்லியநகை, எள்ளல் என்பன இழையோடுவதைத் மிகக் குறிப்பாக நோக்கின் அவதானித்துக் கொள்ளலாம். இப்போது “ஒரு டாக்டரின் டயரியில் இருந்து…” என்னும் புதிய நூல் ஒன்று அவர் படைப்பாக வெளியிடப் பட்டிருக்கின்றது.

நலவியல் சார்ந்த முன்னைய நூல்கள் போல் இந்த நூல் இல்லாதிருப்பினும், நலவியற்றுறை சார்ந்த டாக்டர் ஒருவரின் அனுபவ வெளிப்பாடாக இது அமைந்திருப்பதால் அத்துறையோடு தொடர்புபட்ட கருத்துக்கள் இங்கும் தவிர்க்க இயலாது இயல்பாக இடம் பெறுகின்றன. முன்னைய நூல்களில் மெல்லிய நகையும் எள்ளலுமாக வெளிப்பட்ட டாக்டரின் சமூக விமர்சனங்கள் இந்த நூலில் கடும் சீற்றத்துடன் அவர் இதயத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றன.

நலவியற்றுறைசார் நூல்களில், அத்துறை சார்ந்த கருத்துக்களுக்கப்பால் தமது எண்ணங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது தவித்த முருகானந்தன், தம்மை அடக்கி அடக்கி நகையும் எள்ளலுமாகச் சமூகத்தைக் குத்திக்காட்டுவதுடன் நின்றுவிடுகின்றார். தமது உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கு இந்த நூல் வெகுவாய்ப்பாக அமைந்து விட்டதால், அவரது இதயக் குமுறல் மிகுந்த சீற்றத்துடன் பீறிக் கொண்டு பாய்கின்றது. சீரழிந்த சமூகத்துடன் முரண்படுதல், அந்தச் சமூகத்தை விமர்சித்தல், நல்லதோர் சமுதாய உருவாக்கத்தைச் சுட்டி நிற்றல், அதற்காகச் செயற்படுத்தல் என்பன மானுட சமுதாயத்தை நேசிக்கும் மனிதநேயம் மிக்க ஒரு படைப்பாளியின் சிறப்பான குணவியல்புகள். ஓர் எழுத்தாளனின் சிருஷ்டி இலக்கியங்களுக்கூடாக அவனிடம் இருக்கும் இந்த இயல்புகள் வெளிப்படுத்துவதைக் காணலாம். அத்தகைய ஒரு வெளிப்பாட்டினை டாக்டரான முருகானந்தனின் இந்த நூலுக்கூடாகக் கண்டுகொள்ள முடிகின்றது.

நலவியற்துறை சார்ந்த டாக்டராக இருக்கும் முருகானந்தனிடத்தில் ஆளுமை மிக்க ஆக்க இலக்கியகர்த்தா கரந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். டாக்டர் முருகானந்தன் எழுதியிருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினேழு கட்டுரைகள் அவரது பல அனுபவங்களைச் சொல்லுகின்றவைகளாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் பன்னிரண்டு கட்டுரைகள் முருகானந்தனின் ~யாழ் வடமராட்சி டயரியில் இருந்து 1986 – 1987 வரை சிரித்திரன் சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கின்றன. ஏனைய ஐந்து கட்டுரைகள் பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னர், முருகானந்தனும் மல்லிகையும் யாழ்குடா நாட்டிலிருந்து கொழும்புக்கு இடம் பெயர்ந்த பிறகு, ‘கொமும்பு டயரி’ இல் இருந்து 1997 – 1999 வரை மல்லிகை மாசிகையிற் பிரசுரமாகியிருக்கின்றன. இந்த இரண்டு டயரிகளையும் முருகானந்தன் எழுதியிருக்கும் காலம், பிரதேசம், சூழல், சஞ்சிகைகள் என்பன வேறுபடுகின்றன. குறிப்பிடப்பட்ட இந்த வேறுபாடுகளுக்கமைய, இந்த இரண்டு டயரிகளுலும் இடம்பெற்றுள்ள அனுபவங்களும் வேறுபடுகின்றன.

வடபிரதேசத்தின் போர்க்காலச் சூழலிற் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடக முதற் பன்னிரண்டு கட்டுரைகளும் காணப்படுகின்றன. டாக்டரும் ஒரு மனிதன். அவர் வாழும் சூழல் அவரையும் பாதிக்கச் செய்கின்றது. டாக்டர் முருகானந்தன் என்னும் மனிதனின் இதயமும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் அவரது முதற் பன்னிரண்டு கட்டுரைகளிலும் வெகுதீவிரத்தன்மையுடன் வெளிப்படுகின்றன.

பல்வேறு குணவியல்புகள் கொண்ட மனிதர்களைத் தினமும் சந்திக்க, அவர்கள் சொல்லும் கருத்துக்களைப் பொறுமையாகச் செவிமடுக்க, டாக்டர்களாக இருக்கின்றவர்களுக்கு வாய்ப்புக் கிட்டுகின்றது. இவர்கள் தினந்தினம் சந்திக்கும் இந்த மனிதர்கள் எப்படியானவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை டாக்டர் முருகானந்தன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “கோபக்காரர்கள், சாந்தசொரூபிகள், அவசரக்காரர்கள், அழுதுவடிபவர்கள், நிதானமானவர்கள், துள்ளிக்கு (கொ)திப்பவர்கள் என எத்தனையோ வகையினரை வைத்தியர்களாகிய நாம் தினமும் காண்கின்றோம்” இத்தனை வகையான மனிதர்களின் தினசரிச் சந்திப்புக்கள் புதியபுதிய அனுபவங்களையே டாக்டர்களுக்கு எப்பொழுதும் வழங்குகின்றன. அறிவீனம், சுயநலம், சேவையை மதிக்காது அவமதிக்கும் குணம், பொய்மை, அடுத்தவர் பற்றிய அக்கறை இன்மை, பெற்றோரைப் பேணாது ஒதுக்கிவைக்கும் மிருகத்தனம், எல்லாம் அறிந்தவர் போன்ற அகம்பாவம், சமூக, கலாசரச் சீரழிவு, பொறுப்பின்மை, போலித்தனம், இலாபம் ஒன்றே நோக்கமாக கொண்ட கொலைச் செயல்கள் என்பனவற்றை தமது நடத்தைக் கோலங்களாகக் கொண்டு வாழும் மனிதர்களின் சந்திப்புக்கள் டாக்டர் முருகானந்தனுக்கு நிகழ்ந்திருக்கின்றன. அந்தச் சந்திப்புக்கள் அவர் பெற்ற அனுபவங்களாக இந்த நூலில் வெளிப்படுகின்றன.

இவைகள் இந்த நூலில் வெறும் செய்திகளாளக இடம் பெற்றிருக்கவில்லை. இந்த அனுபவங்களின் பாதிப்பினால் மேலெழும் மனிதநேயம் மிக்க குரலாக இவைகள் ஒலிக்கின்றன. வடபுலத்துப் போர்க்காலச் சூழல் அவரைக் கொதித்தெழச் செய்கின்றன. இந்த நூலில் இடம் பெற்றுள்ள பல கட்டுரைகளில் டாக்டரின் பேனா கொதிநிலையில் பொங்கி வழிந்திருப்பதைக் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இலாபம் ஒன்றினை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு கொஞ்சமும் மனிதாபிமானமற்ற வெறும் வியாபாரிகளாகப், பணம் பண்ணிக் கொண்டிருக்கும் கொலைகார மருந்து விற்பனையாளர்களை அடங்காத கோபத்துடன் சாடும் இடத்தில் முருகானந்தனின் உள்ளத்தில் பொங்கி எழும் சீற்றம் முழுவிச்சுடன் இவ்வாறு வெளிப்படுகின்றது. “ஆனால் …. இன்று…. எவருமே மருந்துக்கடை போட்டு விடலாம். வெறெந்தத் தொழிலிற்கும் லாயக்கற்றவர்கள் கூட, பசப்பு வார்த்தை பேசி விற்கத் தெரிந்தால் போதும். இன்று மண்ணெண்ணைக் கடைகளில் கூட மருந்துகள் விற்பனையாகின்றன. அமோகமாக கூவிக் கூவி விற்பனை செய்கிறார்கள் ஏனென்றால் மண்ணெண்ணை வியாபாரத்தை விட மருந்து வியாபாரம் லாபகரமானதாகிவிட்டது. எனவே தான் கேட்கிறேன்… மருந்து வியபாரிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற கடவுளாலும் முடியுமா? “

இன்னோரிடத்திற் சமூக சிந்தனை அற்ற கல்விமானின் சந்திப்பின் வெளிப்பாடாக, “இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள்… மக்கள்படும் இன்னல்களை… அவலங்களை… இழப்புக்களைப் புரியாமல் தந்தக் கோபுரத்தில் தங்களுக்குத் தாங்களாகவே தனி வாழ்க்கை வாழ்கின்றார்களா? ” என மனம் குமுறுகின்றார். டாக்டர் முருகானந்தனின் ‘கொழும்பு டயரி’ இல் இருந்து (மல்லிகைக் கட்டுரைகள்) தொகுக்கப் பெற்ற கட்டுரைகள் காலமாற்றம், சூழல் மாற்றம், வாழ்க்கைமாற்றம் என்பவற்றால் முன்னைய நிலையிலிருந்து சற்றுச் சூடு தணிந்த அனுபவ வெளிப்பாடுகளாகப் பதிவாகி இருக்கின்றன. ஆயினும் நகையும் எள்ளலுமாக பழைமை பேண் மூடச் சமூகத்தை வேறு யாரும் குத்திக்காட்டாத அளவுக்கு விமர்சிக்கின்றன.

பசுமலம் புனிதமானது. ஆறுமுகநாவலர் சொல்லி வைத்திருக்கும் அத்தனை கருத்துக்களும் தேவவாக்குகள் என மூடத்தனமான மதநம்பிக்கையுடன் வாழும் தமிழ் இந்து மக்களுக்கு தான் பட்ட அருவெறுப்பான அனுபவம் ஒன்றினைத் தமக்கே இயல்பான சுவைபடச் சொல்லுகின்றார். “நாவலர் பெருமான் அருளிய சைவவினாவிடையின் தாக்கம் தமிழ் நாட்டிலும் பரவியிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தபோதும், அவர் சொற்படி காலைக் கடன் கழிப்பது கண்டு பெருமையடைந்தேன்”

முருகானந்தனின் இந்த நூலானது பல பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. வாசகனிடத்தில் பல்வேறு உணர்வு நிலைகளைத் தொற்றவைக்கும் பாங்கினைக் கொண்டுள்ளது. இதனை ஆழ்ந்து படிக்கும் ஒருவாசகனுக்கு உடல் புல்லரிக்கும். வேதனை தோன்றும், வெறுப்புண்டாகும். அருவெருப்புத் தோன்றும், கோபம் கொப்பளிக்கும். சுகானுபவம் கொடுக்கும். முருகானந்தன் தான் பெற்ற வேறுபட்ட உணர்வு நிலைகள் அனைத்தையும் தேர்ந்த கலை நுட்பத்துடன் தந்திருக்கின்றார். அந்த வழங்கல் வாசகனைப் போய்த் தொற்றிக் கொள்ளும் வனப்பு அவர் எழுத்தில் கைவந்திருக்கின்றது.

தான் அனுபவப்பட்ட சம்பவங்களை நேர்த்தியாக விளக்குவதற்கு இடையிடையே சில குட்டிக்கதைகள், கருத்தைக் கவரும் பொருத்தமான புத்தம் புதிய உவமைகள் என வேண்டிய இடங்களில் இவ்வாறு தருகின்றார். (டாக்டர்) ~~’முறுக்கி விடப்பட்ட மெஷின்’ ~~’ஈரல் அழற்சிக்காரன் போல் உப்பி ஊதிய முகம்’ ~~’காற்றைக் குடித்து உப்பி ஊதிக் குடல் வெடித்துச் செத்த தவளை போல்’, “உள்ளி, எண்ணெய்க்குள் விழுந்த எலிபோல், ஊறி உப்பிக்கிடந்தது” இந்தகைய நயமான உவமைகள் வாசகன் நெஞ்சைத் தொடுகின்றன.

இவைகள் மாத்திரமல்லாது கவனத்தைப் பட்டென்று ஈர்க்கும் நவீன சொற்றொடர்களும், சுவார்சியமாகச் சொல்லி இதயத்தில் சுருக்கென்று குத்தி நிறுத்தும் உரையாடல் பாங்கான எழுத்தும் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன.
01. “பத்தியம் என்ன டொக்டர்?” “பத்தியம் எண்டு ஒண்டும் உங்களுக்கு இல்லை. உங்களைக் கவனிக்கிறதைவிட உங்களைக் கடிச்ச அந்த நாயைத்தான் கவனமாகப் பராமரிக்க வேணும்.”
02. “இரவு உடையுடன் புன்னகை போர்த்துக் கொண்டு நின்றிருந்தாள்”
03. “எப்போழுதோ அந்தப் பிள்ளை மூக்கினுள் விளையாட்டாக வைத்து மறந்துவிட்ட அந்த ரப்பர் துண்டு எவ்வளவோ வீண் அலைச்சல்களுக்கும் சஞ்சலத்திற்குப், பணச்செலசிற்கும் பிறகு அப்பாவி போல் அமைதியாகக் கிடந்தது”
04. “தமது மருத்துவ அறிவைக் கறள்கட்ட விடாமல் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் இன்றைய டாக்டர்கள்”
05. “சுய வைத்தியம் ஜீவநாசினி”
06. “இராட்சத அலுமீனியக் கழுகுகள்”
07. “வேதனைச் சாறாக டெலிபோன் சிந்தியது”

முருகானந்தனின் எழுத்துக்களில் ஒரு டாக்டருக்குரிய அவதானிப்பு மாத்திரமல்லாது ஒரு கலைஞனுக்குரிய நேர்த்தியான கூர்ந்த பார்வை இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் தெற்றெனப் புலப்படுகின்றது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமா உலகில் ஒர் உந்தக் கலைஞன். சிறந்த சுய சிந்தனையாளன். மனிதர்களை இனங்காண்பதற்கு, அவர்கள் சிரிக்கும் பாணி எப்படி இருக்கும் என அவர் வகைப்படுத்திக் காட்டியுள்ளார். சினிமாப்பாடல் ஒன்றின் மூலம் அதனைப் பதிவு செய்து வைத்துள்ளார். டாக்டர் முருகானந்தன் எச்சில் துப்பும் முறைகள் எவையெவையென வகைப்படுத்திக் காட்டுவது ஒரு தனி அழகு. “கொர் என்ற சத்தத்துடன் தொண்டைக்குள் இருப்பதைக் காறியெடுத்து நூனி நாக்குக்கு கொண்டு வந்து ஆரவாரமாகத் துப்புவது ஒருவகை. துப் துப்பென அடுக்கடுக்கான தொடர் செய்கைகளாக அலட்டாமல் துப்புவது இன்னுமொருவகை. அசிங்கத்தைப் பார்த்ததும், அசிங்கத்தைப் போல் வெறுக்கும் ஒருவரைக் கண்டு முகம் கோணி வன்மத்துடன் துப்புவது விசேடரகம். ரஜனியின் சிகரட் ஸ்டைல்போல ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் உதடுகளின் நடுவே வைத்து இடைவெளிக் குள்ளால் நசுக்கிடாமல் துப்புவது மன்மதரகம்”

தமிழர் சமுதாயத்தின் பாரம்பரியங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் என்பன பற்றி இந்த நூலில் இடம் பெற்றுள்ள சில கட்டுரைகள் எடுத்துச் சொல்லுகின்றன. வாழ்வின் உயிர் முச்சாகக் சிக்கனம் பேணி வாழ்ந்து வந்து யாழ்பாணத்தார் ஒரு புதுமணப் பெண்ணைத் தோ்ந்தெடுக்கும் போது, எத்தகைய பரிசோதனைகளை நடத்தினார்கள் என்பதனை முருகானந்தன் விவரமாக எடுத்துச் சொல்லிருக்கின்றார், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தழிழ்ச் சமூகத்தின் அவலமான சமூக பொருளாதார நிலைகள் மிகக் குறுகிய இரண்டொரு வாக்கியங்களினால் மிகத் துல்லியமாகப் புலப்படுத்தப்படுகின்றன. இதற்கு நல்லதொரு உதாரணமாக ஷெல் அடிபட்டு இறந்து போன ஒரே தம்பி பற்றிய குறிப்பு, “என்ன பரிதாபம் ஐந்து மணமாகாத பெண்களுக்கு ஓரே தம்பி. குடும்பத்தின் நிரந்தர ‘வைப்புப்பணம்’ என நம்பினார்கள்” என்று மிக ஆழமாக நெஞ்சை தொட்டு கண்கலங்க வைப்பதுடன் யாழ்ப்பாணத்து வாழ்வியல் நிலையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றார்.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள பல கட்டுரைகள் நல்ல சிறுகதைகளாகப் படைக்கப்படத் தகுந்தவை. கட்டுரைகள் சிலவற்றின் முடிவு சிறுகதையை நிறைவு செய்வது போல நெஞ்சிற்பதிகின்றன. சம்பவச் சித்திரிப்புகள் சிறுகதைகளாக ஒளிருகின்றன. உண்மையில் இதுவொரு கட்டுரை நூல்தானா? என்னும் ஐயம் நெஞ்சில் எழுதுகின்றது.

டாக்டர் முருகானந்தன் தரமான சிறுகதைகளைப் படைக்கும் ஆற்றல் மிகுந்த எழுத்தாளர். ஆயினும் தமது நேரடி அனுபவங்களைக் கட்டுரைகள் என்ற பெயரில் ஆக்கித் தந்திடுக்கின்றார். கட்டுரைகள் என்றால் அவை இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் பழைய வாய்பாட்டு மரபிலிருந்து விடுபட்டு, சிறுகதை இயல்புகளை உள்வாங்கி, உரைநடை கலந்து இலக்கிய நயத்துடன் சுவைபட வழங்கி இருக்கின்றார்.

டாக்டர் முருகாநந்தன் தாம் பெற்ற அனுபவங்களை மாத்திரம் இனிக்கச் சொல்லி வைத்து சமூக அவலங்களில் இருந்து மெல்ல விலகிப் போய்விடவில்லை. தனக்குக் கிடைத்துள்ள சம்பவ அனுபவங்கள் சார்ந்து சமூக நிலைப்பட்ட கருத்துக்களையும், சமூக விமர்சனங்களையும் பொறுப்புடன் முன்வைக்கின்றார். ஆக்கிரோசம் மிக்க ஒர் ஆக்க இலக்கிய கர்த்தாபோல் ஒரு சமூகப் போராளியாகத் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

கட்டுரை அனைத்தும் சொந்த அனுபவங்கள் என்பதால் தவிர்க்க இயலாது தற்சார்புக் கட்டுரைகளாக இருப்பது இவற்றின் பொதுத்தன்மையாக காணப்படுகின்றது. ஆனால், “கொள்ளையர்கள் + கொலைஞர்கள் = ?”என்னும் கட்டுரை குறிப்பிட்ட அந்தத் தற்சார்புத் தன்மை அற்றதாக அமைந்து விடுகின்றது. சொந்த அனுபவம் என்னும் முத்திரையை அது பெறத் தவறி விடுகின்றது. “நடுநிசி அழைப்பார்கள்” என்னும் கட்டுரைத் தலைப்பு கருத்துத் தெளிவைக் கொடுக்கவில்லை என்றே சொல்லாம். நடுநிசியில் அமைப்பார்கள், நடுநிசி அழைப்பாளர்கள், நடுநிசி, அழைப்பார்கள் என ஏதோவொருவகையில் தெளிவாக இத்தலைப்பினை இட்டிருக்கலாம் போலத் தோன்றுகின்றது.

மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூல், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளுள் வித்தியாசமான ஒன்றாக விளங்குகின்றது. இந்நூலின் அட்டைப்படத்தினைத் தமிழ்நாட்டு முன்னணி ஓவியர் அமுதோன் சிறப்பாக, கவர்ச்சியாக வரைந்துள்ளார். அதனால் Doctor என்னும் ஆங்கிலச் சொல் தமிழ்நாட்டு வழக்குப்போல “டாக்டர்” என அட்டையில் இடம் பெற்றுள்ளது. நூலின் உள்ளே நுழைந்தால் “டாக்டர்” எனவும் “டொக்டர்” எனவும் குழப்பமாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழப்பத்துக்கெல்லாம் ஓவியர் அமுதோன் வழிசமைத்து விட்டார் போலத் தோன்றுகின்றது.

நெஞ்சைத் தொட்டு வாசகனுடன் நேரிற்பேசும் இந்த நூல் உடல்நலவியல், அகநலவியல், மனித நடத்தைகள் பற்றியெல்லாம் சமூக அக்கறையுடன், கலைநயம் ததும்பப் பேசுகின்றது. இதனைப் படிப்பதே பயனுள்ள நல்ல சுபானுபவந்தான்.

– தெணியான் –

நன்றி:- மல்லிகை

பெப்பிரவரி 2004ல் இந் நூல் வெளியானபோது எழுதப்பட்ட விமரிசனம்

கிடைக்குமிடம் :-
டொமினிக் ஜீவா
மல்லிகை
201-1/1, சிறி கதிரேசன் வீதி
கொழும்பு 11.
இலங்கை

Read Full Post »