Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மருந்துப் பாவனை’ Category

>நண்பன் எழுத்தாள நண்பர் தெணியான் ஒரு பகிடி சொல்லுவார்.

இவர் ஒரு மருத்துவரிடம் சென்றபோது மருந்துகள் உறையில் போட்டுக் கொடுக்கப்பட்டன.

அதில் மருந்துகள் தினமும் எத்தனை தடவை போட வேண்டும், ஒரு வேளைக்கு எத்தனை மாத்திரைகள் போன்ற குறிப்புகள் காணப்பட்டன.

அதற்கு மேலதிகமாக காணப்பட்ட குறிப்புத்தான் இவரை அசர வைத்தன.

“சாமுன் மருந்துகளைச் சாப்பிடலாம், ஆனால் சாவின் பின் எப்படிச் சாப்பிடுவது” என்று மருத்துவரைக் கேட்டாராம்.

இதைக் கேட்ட டொக்டர் மயங்காத குறை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்கு பின் என்பதை மருத்துவமனை உதவியாளர் சுருக்கமாக சா.முன், சா.பின் என எழுதியதால் வந்த வினை.

இப்பொழுது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள்.
எல்லோருமே மருந்துகள் சாப்பிடுகிறார்கள்.
பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள்.

அவற்றைச் சா.முன், சா.பின் !!!  சாப்பாட்டுவதா என்ற சந்தேகம்.
பல மருத்துவர்கள் இது பற்றி எதுவுமே தங்கள் நோயாளிகளுக்குத் தெளிவாகச் சொல்லாததால் பலரும் சாப்பாட்டிற்கு பின்தான் எடுக்கிறார்கள்.

சா பின் அல்ல!!

நீரிழிவு மாத்திரைகள் இரண்டு முக்கியமான முறைகளில் செயற்படுகின்றன.

1.    சதையியைத் தூண்டி அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்து அதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கொஸ் அளவைக் கட்டுப்படுத்துவன.
2.    மேலதிக இன்சுலினை சுரக்கச் செய்யாது, ஏற்கனவே உள்ளதை கூடிய வினைத்திறனுடன் செயற்படச் செய்வது.

சாப்பாடிற்கு முன்

முதலாவது வகையான, இன்சுலினைக் கூடியளவு சுரக்கச் செய்யும் நீரிழிவு மாத்திரைகளை சாப்பாட்டிற்கு முன்னர் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் உணவானது உண்டதும் சமிபாடடைந்து, உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன.

அவ்வாறு அதிகரிக்கும்போது அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இன்சுலின் அதிகளவில் தேவை. எனவே இன்சுலினைக் கூடுதலாகச் சுரக்கச் செய்யும் மாத்திரைகளை உணவுக்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னராகவே உட்கொண்டால், உணவின் பின் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவைச் சரிசெய்யத் தயார் நிலையில் இருக்கும்.

ஆயினும் இவற்றை உணவுக்கு நீண்ட நேரம் (சுமார் 1 மணி நேரம்) முன்னபதாக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால் இரத்தில் குளுக்கோஸ் குறைந்து களைப்பு, தலைச் சுற்று, வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் எடுப்பதே நல்லது. சல்பனையில்யூரியா (Sulphanylureas) வகை Glibenclamide, Glipizide, Glimepride, Gliclazide போன்ற மருந்துகள் இந்த ரகத்தில் அடங்கும்.

சாப்பாடிற்கு பின்

இரண்டாவது வகையானவை இன்சுலின் சுரக்கச் செய்வதை அதிகரிக்காது அதன் செயற்திறனை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துபவை. இதில் மெட்போமின் மற்றும் தயசொலினிடயோன்ஸ் என இருவகை மருந்துகள் அடங்கும்.

பெரும்பாலான நோயாளிகள் உபயோகிப்பது மெட்போமின் மாத்திரை (Metformin) ஆகும். இது குருதியில் உள்ள குளுக்கோசை கலங்களுக்கள் கூடிய திறனுடன் உட்செலுத்துவதன் மூலம் குரதியின் குளுக்கோஸ் அளவைக் குறைத்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துகின்றது.

அதேபோல தயசொலினிடயோன்ஸ் (Thiazolidinediones) நோயாளிகளின் உடலின் இன்சுலின் எதிர்ப்பை (Insulin Rsistance) முறியடித்து, இன்சுலினை கூடிய வினைத்திறனுடன் செயற்பட வைக்கும். அத்துடன் ஈரலில் இருந்து குளுக்கோஸ் வெளியேறுவதையும் தடுக்கிறது.

தயசொலினிடயோன்ஸ் ரகத்தைச் சேர்ந்த   பயோகிளிடசோன் (Pioglitazone) மருந்து இங்கு இலங்கையில் Pioglit, Pionorm, Glizone, போன்ற பல வியாபாரப் பெயர்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்த இரண்டு வகை மருந்துகளும், இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்யாது. இதனால் இரத்தில் குளுக்கோஸ் அளவை சரியான அளவிற்குக் கீழ் குறைக்கமாட்டாது. எனவே இவற்றை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு போன்ற விளைவுகள் வராமல் தடுக்கும் வண்ணம் உணவுக்கப் பின்னர் எடுப்பது நல்லது.

சாப்பாடுடன்

இதனைத் தவிர அக்கரபொஸ் Acarbose மற்றொரு வகை நீரிழிவு மாத்திரை உண்டு. இது நாம் உண்ணும் உணவில் உள்ள காபோஹைரேட் அதாவது மாப்பொருள் பதார்த்தங்கள் சமிபாடு அடைவதைக் குறைத்து அதன் மூலம் இரத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.

உணவுச் சமிபாட்டுடன் தொடர்புடைய மருந்து ஆதலால் இதனை உணவு உட்கொள்ளும் அதே நேரத்தில் உட்கொள்ள வேண்டும். முதல் வாய் உணவுடன் சப்பிச் சாப்பிடுவது சிறந்தது. சப்பிச் சாப்பிடப் பிரியமில்லாவிட்டால் சாப்பிட ஆரம்பிக்கும்போது சிறிதளவு நீருடன் விழுங்க வேண்டும்.

சா.முன், சா.பின் விடயம் இப்பொழுது உங்களுக்கும் தெளிவாகியிருக்கும் என நம்புகிறேன். சா.முன், சா.பின் என்பதை உ.முன், உ.பின் (உணவின் முன், உணவின் பின்) என எழுதினால் பிரச்சனை ஏற்படாது என நீங்கள் சொன்னால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஆனால் கீழே இருப்பவரின் கவலையிலும் நியாயம் இருக்கலாம்.

இவ்வளவு காலமும் அவளின் சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு  சாப்பாடே வெறுத்துப் போனவர் அவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நான் எழுதி ‘தினக்குரல்’ பத்திரிகையிலும் ‘பதிவுகள்’ இணைய இதழிலும் வெளிவந்த கட்டுரையின் மீள்பிரசுரம்.

Read Full Post »

>
“தம்பி இந்த மருந்தைச் சுருக்கா தாங்கோ. வலியிலை துடிச்சுக் கொண்டு கிடக்கிறாள். கெதியிலை கொண்டு போய்க் கொடுக்க வேண்டும்.” அம்மா துடித்தாள்.

வேறு வேலையாக நின்ற கடைக்காரப் பொடியன் சற்று இளகிய மனம் படைத்தவன். அருகே வந்து அம்மா கையிலிருந்த மருந்துச் சிட்டையை
வாங்கினான்.

மேலும் படிக்க

Read Full Post »