Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மறதி’ Category

என்ன நடக்கிறது இவர்களுக்கு? எதனால் தமது முடியைப் பிசைந்து கவலையுறுகிறார்கள்.

 • பிள்ளை படித்த பாடம் மறந்துவிட்டது என்கிறது.
 • அம்மாவிற்கு உப்புப் போட்டேனா இல்லையா என்பது சந்தேகமாக இருக்கிறது.
 • வேலையால் திரும்ப வரும்போது வாங்கி வரச் சொன்ன பால்மாவை வாங்க மறந்து தலையைச் சொறிகிறார் கணவன்.
 • மேலதிகாரி செய்யச் சொன்ன முக்கிய பணியை மறந்ததால் தொழிலை இழக்கிறார் பணியாளர்.
 • ரீ குடிச்சேனா இல்லையா என்பது மறந்துவிட்டது தாத்தாவிற்கு.

எவரைப் பார்த்தாலும் மறதி கூடிவிட்டது என்கிறார்கள்.

மறதியை மழுங்கடிக்க

இது நியதியா? நோயா?

எமது மூளையின் வளர்த்தி குழந்தைப் பருவத்திலேயே நிறைவுறுகிறது.

போதாக் குறைக்கு வயது போகப் போக மூளையின் கலங்கள் படிப்படியாகச் செயலிழந்து போகின்றன. எனவே வயதாகிக் கொண்டு செல்லும்போது ஞாபக சக்தியை சிறிது இழப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஆனால் எல்லா மறதிகளும் அவ்வாறு தவிர்க்க முடியாதவை அல்ல. எமது அக்கறையின்மையாலும், முயற்சிக் குறைவாலும்தான் பல விடயங்கள் எங்கள் நினைவை விட்டு அகலுகின்றன.

“நான் மறதிக்காரன். என்னால் எதனையும் நினைத்து வைத்திருக்க முடியவில்லை” என அவநம்பிக்கையீனம் அடைவது கூடாது. என்னால் நினைவு வைத்திருக்க முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்.  திடமான மனதுடன் அதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள்.

ஹார்வட் மருத்துவக் கல்லூரியினர் உங்கள் ஞாபக சக்திக்கு ஊக்கம் கொடுத்து, மறதியை தவிர்பதற்கான சில உத்திகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

 • வாழ்க்கையைஒழுங்கான முறையில் கொண்டு செல்லுங்கள். கலண்டர்களை உபயோகியுங்கள். செய்ய வேண்டிய காரியங்களுக்கான லிஸ்ட்டுகளைப் பேணுங்கள். அட்ரஸ், டெலிபோன் நம்பர் போன்றவற்றை குறித்து வையுங்கள். இன்றைய காலத்தில் நல்ல ஒரு செல்பேசி இவை யாவற்றையும் உங்களுக்காக பேண உதவும்.
 • புதிய விடங்களை எதிர் கொள்ளும் போது அவற்றை பகுதி பகுதியாக உங்களால் புரிந்து ஜீரணிக்கக் கூடிய அளவுகளில் கற்றுப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
 • புதிய விடயங்களை கற்க நேர்கையில் கண், செவிப்புலன், மணம், சுவை, தொடுகை போன்ற எல்லாப் புலன்களையும் பயன்படுத்தி நினைபடுத்த முயற்சியுங்கள்.
 • அதே போல குறித்து வைப்பதும், அதனைப் பற்றிய சித்திரம் அல்லது வரை படத்தை வரைவதும் புதிய விடயங்களை நினைவில் நிறுத்த உதவும். இல்லையேல் வாய்விட்டு உரக்கச் சொல்வதும் மறக்கவே விடாது.
 • விடயத்தை மீள நினைவு கூருங்கள். ஆரம்பத்தில் அடிக்கடி, பின்பு சற்று நீண்ட இடைவெளிகளில். தொடர்ந்து செய்து வர மறதியை மறந்து விடுவீர்கள்.
 • டயறியில் அல்லது கணனியில் செய்ய வேண்டிய காரியங்களை பதிந்து வைப்பதில் ஆரம்பிப்பது காலம் செல்ல உங்கள் மனதில் ஆழப் பதிய ஆரம்பிக்கும்.

எனது ‘ஹாய் நலமா’புளக்கில் இவ் வருட ஆரம்பத்தில் வெளியான பதிவு.. மறதியை மழுங்கடிக்க சில வழிகள் .

0.0.0.0.0.0.0.0.0

Read Full Post »

>காயம்பட்ட நோயாளிக்குத் தையல் போட்டு மருந்து கட்டிவிட்டு, அடுத்த நோயாளியைப் பார்க்கத் தயாரானபோது,

எனது ஸ்ரெதஸ் கோப்பைக் காணவில்லை!

மேசை மேலும் காணவில்லை,

மேசை லாச்சிக்குள் எழந்து போய்ப் பார்த்தால் அங்கும் காணவில்லை!

தையல் போட்ட கட்டிலில் இருக்கலாம், என எழுந்து போய்ப்பார்த்தால் அங்கும் காணவில்லை!


டாக்டரைத் தவிர மற்றவர்களுக்குப் பிரயோசனப்படாத பொருள் என்றபடியால் களவு போயிருக்காது என்பது நிச்சயம்.

யாராவது வம்புக்கு எடுத்து ஒழித்திருப்பார்களோ?

‘ரீ’ குடிக்கப் போனபோது பக்கத்து அறையில் வைத்து விட்டேனோ’ எனப் போய்ப் பார்த்தேன்.
அங்கும் இல்லை!

‘எங்கே போயிருக்கும்?’

‘என்ன டொக்டர் தேடுறியள்?’ அருகில் நின்ற நோயாளி விசாரித்தார்.

‘என்ரை ஸ்ரெதஸ் கோப்பைக் காணவில்லை’

அவர் முகத்திலை ஓர் ஏளனமும், பரிதாபமும் கலந்த சிரிப்பு!

விநோதமாக என்னைப் பார்த்தார்!!

‘என்ன டொக்டர்… கழுத்திலை தொங்குது …. நீங்கள் உலகமெல்லாம் தேடுறியள்’


அசடு வழியச் சிரித்தேன்.

எனது ஸ்ரெதஸ்கோப் கொஞ்சம் நீளம் கூட.

நானும் உயரம் குறைவு.

எனவே அது நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும்.

இது ஊசி போடுதல்,
தையல் போடுதல்
போன்ற நின்று வேலை செய்யும் வேலைகளின் போது
இடைஞ்சலாக இருக்கும்.

அதனால் அதன் தொங்கும் முனையை களிசான் பொக்கற்றுக்குள் வைப்பது வழக்கம்.

இன்று அப்பிடித்தான்.

தையல் போடும் போது ஸ்ரெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி அதன் தொங்கும் முனையைப் பொக்கற்றுக்குள் வைத்திருந்தேன்.

மறந்து விட்டேன்.

முதலில் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியாகி,
பின்பு ‘டொக்டரின் டயறியிலிருந்து’ என்ற மல்லிகைப் பிரசுர நூலிலும் வெளியான
‘மறதி மறதி மறதி…..’
கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

Read Full Post »

>கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே வந்த அந்த நடுத்தர வயது மாது அருகில் அமர்ந்தபடி சொன்னாள்.

“இந்தக் காது கொஞ்சம் கொஞ்சமா அடைச்சு இப்ப ஒண்டுமெ கேக்குதில்லை…”

“கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு நாள் காதுக்குத்து வந்திது. கைவைத்தியம் செஞ்சன். மாறிப் போச்சு. அதுக்குப் பிறகு தான் இந்த அடைப்பு.”

மருமகள் மகனுக்கு சொல்லும் இரகசியம் காதில் விளவில்லை என்ற கவலையோ என இடக்கு முடக்காக யோசித்தாலும் கடமையில் கண்ணாக இருந்தேன்.

காதினுள் கட்டுக் கட்டி செவிப்பறையை உடைத்ததால் தான் காது கேட்காமல் விட்டு விட்டதோ என்ற எண்ணம் வந்தது.

“காதாலை சீழ் வடியிறதே அம்மா”

“இல்லை ஐயா, வெறும் அடைப்புத்தான்”

நீர் அல்லது சீழ் வடியவில்லை என்பதால் செவிப்பறை தப்பி விட்டது என எண்ணிக் கொண்டேன்.

காதுக்குடுமி இறுகி அடைத்திருக்கக் கூடும்.

காது சோதிக்கும் கருவியின் ஒளியில் காதைப் பார்த்தபோது, எண்ணெய் வடிந்த காதினுள் கறுப்பாக ஏதோ தெரிந்தது.

இது காதுக் குடுமியல்ல, ஏதோ அந்நியப் பொருள்!

“காதுக்கை என்ன விட்டனியள்?”

“பரியாரியார் தந்த எண்ணைதான், விட்டும் சுகமில்லை.”

காதுக்குள்ளை இருக்கும் அப்பொருளை எடுக்க முயற்சித்தேன்.

காதுக்குள் இருக்கும் அந்நியப் பொருளை நோயாளிகளோ, அல்லது உறவினர்களோ எடுக்க முயல்வது ஆபத்தானது. தற்செயலாக செவிப்பறையை புண்படுத்திவிட்டால் நிரந்தரமாகச் செவிப்புலனை இழந்து விடலாம்.

எனவே பயிற்சி பெற்ற டாக்டரே இதைச் செய்வது உசிதமானது. பல சந்தர்ப்பங்களில் நோயாளியை மயக்க வைத்தே இதை எடுக்க நேரிடலாம்.

அந்தப் பொருள் காதினுள் அவ்வளவு ஆழத்தில் இல்லாததாலும், அந்தப் பெண்மணி ஒத்தாசையாக இருந்ததாலும் சுலபமாக எடுக்க முடிந்தது.

எடுத்துப் பார்த்தபோது அது காதுக் குடுமி அல்ல உள்ளி! எண்ணெய்க்குள் விழுந்த எலிபோல், ஊறி உப்பிக் கிடந்தது.

உள்ளிக்கு இத்தனை பயன்களா? வியந்தேன்!

“என்னம்மா, காதுக்குள்ளை உள்ளி. சாப்பிட எடுத்ததை மறந்து காதுக்குள்ளை வச்சிட்டியளோ?


“ஐயையோ…” நாணினாள்.

“.. காதுக்குத்துக்கு எண்டு உள்ளி சுட்டு வச்சனான் எடுக்க மறந்து போனேன்|”என்றாள்.

“நல்ல காலம் இப்பெண்டாலும் எடுத்தது, இல்லையெண்டால் காது அவிஞ்சு அழுகியிருக்கும்” என அழுத்தமாகச் சொன்னேன்.

காதுக்குள்ளை முளைத்து வளர்ந்திருக்கும் என்று சொல்லியிருக்கலாமோ?

காது பொரியல் சட்டியல்ல எண்ணெயும் உள்ளியும் விடுவதற்கு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>
“சரியான வருத்தம் மேனை…

வெளியிலை சொல்லச் சங்கயீனப்பட்டு இவ்வளவு நாளும் இருந்திட்டன்… இனித் தாங்கேலாது”

என்று சொல்லிய அவள் முகத்தைச் சற்று நெருங்கக் கொண்டு வந்தாள்.

“சரியா வெள்ளை படுகுது மேனை, ஒரே வெடுக்கு, சில நேரத்திலை செங்கல் மங்கலாயும் படுகுது”.

மெல்லிய, அடங்கிய குரலில் இரகசியம் சொல்வது போல.

செங்கல் மங்கலாகவும் படுகிறது என்று சொன்னதைக் கேட்டதும் மனது சங்கடப்பட்டது. மாசவிடாய் நின்ற பின் அவ்வாறு படுவது நல்ல அறிகுறி அல்ல. கர்ப்பப்பை கழுத்து புற்று நோய் (Carcinoma of Cervix) என்பதே முதற் சந்தேகக் கொள்ள வேண்டும். பாவம் ஆச்சி! அவ்வாறாக இருக்கக் கூடாது என மனம் வேண்டிக் கொண்டது.

“ஆச்சிக்கு வயசு எத்தினை? பிள்ளையள் எத்தனை? மாசச் சுகயீனம் நிண்டு எவ்வளவு காலம்?”

நோய்க்கான காரணத்தைக் கண்டறியக் கேள்விகளை அடுக்கினேன்.

“வயசு அறுபது அறுபத்தைஞ்சு வரும், ஆறு பொடியள். இளையவனுக்கே வயசு 25 வரும் மனுசனும் போயிட்டார். மாசச் சுகயீனம் நிண்டு 15-20 வருஷம் வரும்”.

ஆறு பிள்ளைகளா!

அதிக மகப் பேறுகளும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாகும்.

“மாசச் சுகயினம் நிண்ட பிறகு செங்கல் மங்கலாகப் படுகிறதோ, ரத்தம் படுகிறதோ அவ்வளவு நல்லதில்லை. சும்மா சின்னச் சுகயீனத்துக்கும் படலாம். ஆனால் கடும் வருத்தங்களுக்கும் படலாம். எண்டபடியால் நான் ஒருக்கால் கர்ப்பப்பையை சோதிச்சுப் பார்க்க வேணும்” என்று விளக்கினேன்.

‘கான்சர் போலை’ என்று சொல்வதைத் தவிர்த்து விளக்கினேன்.

அவள் இந்த வயதிலும் மிகவும் நாணினாள். வேண்டாம் என மறுத்தாள். ஆயினும் பின்பு எனது விளக்கங்களை ஏற்றுக் கொண்டாள்.

மிகுந்த வெட்கத்திற்கும், வெட்கத்துடன் கூடிய எதிர்ப்பிற்கும் மத்தியில் நர்சுடைய உதவியுடன் அவளது உள்ளுறுப்பைப் பார்த்த போது கான்ஸர் நோயிற்கான அறிகுறி தென்படாதது நிம்மதியளித்தது.

என்னவாயிருக்கும்?

பரிசோதிக்க வேண்டும். ஆனால்….

மாதவிடாய் நின்ற பின்னர் பெண்ணுறுப்பின் சுரப்பிகள் சுரப்பது குறைந்து விடுவதால் ஈரலிப்புக் குறைந்து விடும். அத்தகைய நிலையில் இணக்கமான உறவு கூட சிலருக்கு வலி ஏற்படுத்திவிடும். அப்படியான நிலையில் வயதான ஆச்சிக்கு பரிசோதனை வேதனை அளிக்கக் கூடும் என்பதால்தான் மிகுந்த அவதானம் தேவைப்பட்டது.

கையுறை அணிந்த கையினால் வலி ஏற்படாது மிக நிதானமாகவும் மென்மையாகவும் சோதித்தேன்.

யோசித்தபடி பரிசோதித்த போது அந்த நூல் விரல் நுனியில் தட்டுப்பட்டது.

ஓ| லூப் போட்டிருக்கிறாள்.

லூப் என்பது கர்ப்பம் தங்காமல் இருப்பதற்காகப் போடப்படும். பழக்கப்பட்ட, பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறை. ஒரு முறை போட்டுவிட்டால் பல வருடங்களுக்கு கர்ப்பம் தங்கும் எனற் பயம் தேவையில்லை.

(IUCD- Intra Uterine Contraceptive Device) என மருத்துவத்தில் சொல்வோம்.

ஆனால் ஆச்சிக்கு ஏன் லூப்?

நீண்டகாலமாகக் கிடந்தால் இறுகிப் போயிருந்த அதை மிகுந்த பிரயாசையின் பின் எடுத்து அவளுக்குக் காட்டினேன்.

“ஓம் மேனை, கடைசி மேன் பிறக்கையுக்கை பெரியாஸ்பத்திரி டாக்குத்தர் வைச்சு விட்டவர். மறந்து போனன்.”

அடுத்த வாரம் மகிழ்ச்சியுடன் வந்த ஆச்சி “இப்ப எல்லாம் நல்ல சுகம்: ஐயாட்டைச் சொல்லிப் போட்டு போக வந்தனான்” என்றாள்.

பலரையும் மறந்துவிடும் எனக்கு அவள் முகம் இன்னமும் மறக்கவே இல்லை.

எம்.கே.முருகானந்தன்.

சிரித்திரனில் 1986 களில் வெளியானது சிறிய மாற்றங்களுடன்

Read Full Post »

>மனிதர்களுடன் கூடவே பிறப்பது மறதி!

பச்சிளம் பாலகன் முதல், பல்விழுந்த பாட்டாக்கள் வரை எவருமே மறதிக்கு ஆளாகாமல் தப்ப முடிவதில்லை.

தாலியைச் செய்ய மறந்து விட்டு, மணவறை ஏறிய மணவாளன் பற்றியும்,

புது மனைவியை மறந்து போய் விட்டுவிட்டுத் தன்னந்தனியே, இன்பக் கனவுகளுடன், தேன் நிலவைக் கொண்டாடச் சென்ற புதுமாப் பிள்ளை பற்றியும்,

சவரக்கத்தியை மறந்து விட்டு ஷஷேவ்| எடுக்கச் சென்ற சவரத் தொழிலாளி பற்றியும்,

பூவையும் கற்பூரத்தையும், மறந்து விட்டுப் பூசை செய்யக் கோயிலு க்குப் போன ஐயர் பற்றியும்,

பாஸ் போட்டையும், விஸாவையும் வீட்டில் பத்திரமாகப் பூட்டி வைத்துவிட்டு, வெளிநாடு பறப்பதற்காக விமானநிலையம் சென்ற நவயுக மறதி நாயகர்கள் பற்றியும்,


பல நகைச்சுவைக் கதைகளையும், சிரிப்புத் துணுக்குகளையும் அடிக்கடி படித்து ரசிக்கிறோம்.

இவை எல்லாமே கற்பனைச் சம்பவங்கள் என்று லேசாக ஒதுக்கி விட முடியாது. நாளாந்த வாழ்க்கையில் இப்படியான பல சுவையான மறதிச் சம்பவங்களையும், ‘மறதி மகாலிங்கங்களையும்’,
‘அறணை மறதிக்காரர்களையும்’
அடிக்கடி சந்திக்கவே செய்கிறோம்.

விஞ்ஞானிகளும் மறதிக்குப் பெயர் போனவர்கள். அவர்கள் பலரது நடவடிக்கைகளும், செயல்களும் பல சந்தர்ப்பங்களில் கிறுக்குத்தனமாக அமைவதுண்டு.

பிரபல விஞ்ஞானி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்த கொண்டிருந்த போது, ரிக்கற் பரிசோதகர் வந்து, அவரிடம் ரிக்கற்றைக் கேட்டார். சேட்பொக்கற், களிசான் பொக்கற், பர்ஸ், கைப்பை எல்லாம் தேடினார். காணவில்லை!
இதற்கிடையில் அந்த விஞ்ஞானியை அடையாளம் கண்டுவிட்ட ரிக்கற் பரிசோதகர்,

“பரவாயில்லை ஐயா, தேடி மினக்கெட வேண்டாம், எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கோ. வேறு ரிக்கற் தருவதற்கு ஒழுங்கு செய்கிறேன்” என்றார்.

அதைக் காதில் விழுத்தாமல் தொடர்ந்தும் மும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தார்.

“எங்கு போக வேண்டும் என்பதை மறந்து விட்டேன். ரிக்கற்றைப் பார்த்துத்தான் அதை நான் அறிந்து கொள்ள வேண்டும்” என்பது அவர் கவலை.

இந்த மறதிகள் பல காரணங்களால் ஏற்படலாம்.

சிறு குழந்தைகளுக்கும், சில பெரியவர்களுக்கும் கவலையீனத்தினா லோ, அசட்டையினாலோ, அல்லது விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று அக்கறையின்மையாலோ மறதி ஏற்படுகிறது.

சிலர் விஷயங்களைக் கவனத்திற்கு எடுத்தாலும் வேலைப்பளுவால் பலவற்றை மறந்து விடுவார்கள்.

சுயநல காரணங்களுக்காகச் சில விஷயங்களை ஷமறப்பவர்கள்| சிலர், மறந்து விட்டதாகப் பாவனை பண்ணுவர்கள் இவர்களிற் பலர்!

கடன் வாங்கிய பணத்தைச் ‘சுலபமாக’ மறந்து விட்டு, கடன் கொடுத்தவர் விசாரித்தால், “நான் சரியான மறதிக்காரன்”

என்று அசட்டுச் சிரிப்புடன் தலையைச் சொறிவார்கள்.

வேறு சில காரியக்காரரான மறதிக்காரர்கள், அரிய புத்தகங்களை இரவல் வாங்கிவிட்டு, அவற்றைத் திருப்பிக் கொடுப்பதை ‘வசதியாக’ மறந்துவிட்டு, சொந்த நூலகத்தையே உண்டாக்கி விடுவார்கள்.

வயதானவர்களின் மறதி வித்தியாசமானது.

காலையில் அவர்களுடன் சாப்பிட்ட சாப்பாடு பற்றியோ, அல்லது அவர்களது பேரப்பிள்ளையின் பெயர் என்ன என்றோ விசாரித்தால் ‘திரு திருவென’ முழிப்பார்கள்!

ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த சிறு விஷயங்களைப் பற்றிக்கூட திகதி, கிழமை, நேரம் போன்ற விபரங்களுடன் விஸ்தாரமாக உற்சாகத்துடன் விளக்குவார்கள்.

தலையில் அடிபட்டவர்களுக்குச் சில வேளைகளில் ஒரு புதுமையான மறதி ஏற்படுவதுண்டு. அடிபட்ட அந்தச் சம்பவம் பற்றியும், அதற்குமுன் நடந்த சம்பவம் பற்றியும் மாத்திரம் எதுவும் நினைவில்லாமல் ‘பேய் அடித்தவன்’ போல விழிப்பார்கள்.

‘டாக்டரின் டயறி| பகுதிக்கு இம்முறை எழுதுவதற்கான குறிப்புக்கள் எழுதி வைத்திருந்த டயறியை மறதியில் எங்கோ தவற விட்டுவிட்டதால், மறதியைப் பற்றித் ‘திடீர் ஞானோதயம்’ வந்தது.

எனவே வைத்தியத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட சில மறதிச் சம்பவங்கள் பற்றி – மறக்காமல் இருப்பவற்றை எழுதி உங்களைக் கொஞ்சம் அறுக்கலாம் என்றிருக்கின்றேன்.

மறதி 1

ஆறுவயது மதிக்கத்தக்க சிறுவனைக் கூட்டிக் கொண்டு, அந்த இளம் தம்பதிகள் எனது அறைக்குள் நுழைந்ததும், குப்பென ஓர் துர்நாற் றம் அறையெங்கும் பரவியது. மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்த மின்சார விசிறியை, விசையாகச் சுழல விட்டுவிட்டு அவர்களை விசாரித்தேன்.

சென்ற மூன்று மாதகாலமாக அவர்களின் பிள்ளையின் மூக்கிலிருந்து சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் சளி வடிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வேலை செய்யும் அந்த வெளி மாகாணப் பிரதான நகரின் பிரபல டாக்டரிடம் காட்டித் தொடர்ந்து வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பக்ரிம், அம்பிசிலின், எரிதிரோமைசீன், கெப்போரெக்ஸ், என்று எல்லாக் காரமான நுண்ணுயிர் கொல்லி மருந்துகளையும் பாவித்து விட்டார்கள். ஆனால் ஒரு வித பிரயோசனமுமில்லை! மணம் அடங்க வில்லை!

மருந்து கொடுத்துப் பெற்றோர்களும், மருந்து குடித்து பிள்ளையும் அலுத்துக் களைத்து விட்டார்கள்.

தொடர்ந்து வைத்தியம் செய்த டாக்டரும் களைத்துப் போய் “பிள்ளையைக் கொழும்புக்குக் கொண்டுபோய் ENT ஸ்பெசலிஸ்டிடம் காட்ட வேணும்” என்று சொல்லிக் கடிதமும் கொடுத்து விட்டார்.

கொழும்புக்குப் போய் நின்று வைத்தியம் செய்விப்பதற்கான ஆயத்தங்கள் செய்வதற்காக ஊர் வந்திருந்த அவர்கள் கடைசி முயற்சியாக என்னிடமும் வந்திருந்தார்கள்.

இவ்வளவு மருந்து கொடுத்தும் மாறவில்லை என்பதால் ஏதோ ஒரு முக்கிய விசயம் கவனிக்கப்படாமல் தப்ப விடப்பட்டு விட்டது என மனதுக்குப்பட்டது.

ஓடிக்கொண்டிருந்த துர்நாற்றச் சளியைப் பஞ்சினால் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு, கூரிய ஒளியின் உதவியுடன் மூக்கை ஆராய்ந்தேன். இடது மூக்குத் துவாரத்தின் ஆழத்தில் ஏதோ இருப்பதுபோலத் தோன்றியது.

பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டு சிறு மருத்துவ உபகரணங்களுடன் அதை எடுக்க முயன்ற போது, துள்ளி வெளியே விழுந்து சளியால் மூடப்பட்ட பொருளொன்று!

எடுத்துத் துடைத்துப் பார்த்தபொழுது – அது ஒரு ரப்பர்த்துண்டு – இரேசர்!!

எப்பொழுதோ அந்தப் பிள்ளை மூக்கினுள் விளையாட்டாக வைத்து மறந்துவிட்ட அந்த ரப்பர் துண்டு எவ்வளவோ வீண் அலைச்சல்களுக்கும், சஞ்சலத்திற்கும், பணச் செலவிற்கும் பிறகு அப்பாவி போல் அமைதியாகக் கிடந்தது.

Read Full Post »