Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மாரடைப்பு’ Category

‘எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

‘பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்’ எனச் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவீர்கள்.

Heart attack in Younger people

மாறாக ‘அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக் வந்து விடும்’ என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால் என்ன நடக்கும். ‘இவர் சும்மா வெருட்டுகிறார்’ எனச் சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும்.

ஆனால் உண்மை என்ன? மாரடைப்பு வருவதற்கான மாற்றங்கள் இளவயதிலேயே தோன்றுகின்றன என்பதுதான்.

மாரடைப்பு எவ்வாறு?

மாரடைப்பு வருவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதுதான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில் atherosclerosis என்கிறார்கள்.

  • தமிழில் இதைத் தமனித் தடிப்பு (தமிழ்நாட்டில்),
  • அல்லது நாடித் தடிப்பு (இலங்கையில்) எனலாம்.

காலக் கிரமத்தில் கொழுப்பு படிவது மோசமாகி இருதயத்திற்கு இரத்தத்தைப் பாச்சும் நாடிகளில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வரும். மூளைக்கான இரத்தக் குழாய்களில் அவ்வாறு நடந்தால் பக்கவாதம் வரும்.

Atherosclerosis

அத்திவாரம் இளவயதிலேயே

இந்தக் கொழுப்புப் படிவது இள வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

அண்மையில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிடையே ஒரு ஆய்வு செய்யப்பட்டபோது அவர்களது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்திருப்பது தெளிவாகக் காணப்பட்டது.

முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்கள் நல்ல ஆரோக்கியமானவர்கள். குருதிக் குழாய்களில் கொழுப்புப் படிவதற்கான இடர்; காரணிகள் (Risk factors) எதுவும் இல்லாதவர்கள் ஆவார்.

அதாவது அவர்களுக்கு கீழ்காணும் ஆபத்தான அடிப்படை இடர்  காரணிகள் எதுவும் கிடையாது என்பதுதான்.

  • நீரிழிவு
  • உயர் இரத்த அழுத்தம்
  • புகைத்தல் பழக்கம்
  • இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பு
  • பரம்பரையில் இளவயதிலேயே மாரமடைப்பு வருவது

நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான இடர் காரணிகள் என இதுவரை காலமும் நம்பியிருந்தவை எதுவும் இல்லாதபோதும் ஏன் அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிந்தது?

காரணம் என்ன?

காரணம் இவர்களில் நலக்கேட்டிற்கான வேறு விடயங்கள் காரணிகளாக இருந்தன. இவைதான் நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான புதிய காரணிகள். அவை என்ன?

  • அவர்களின் வயிற்றறையின் சுற்றளவு அதிகமாக இருந்தது. வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகமாகப் படிந்தமைதான் வயிறு பருத்ததற்குக் காரணமாகும்.
  • அதேபோல நெஞ்சறையின் உள்ளுறுப்புளிலும் கொழுப்புப் படியலாம்.

visceral Fat

இந்த ஆய்வு கனடாவின் Heart and Stroke Foundation னால் செய்யப்பட்டது.

யுத்தத்திலும், விபத்துகளிலும் இறந்த இளவயதினரிடையே செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 80 சதவிகிதமானோருக்கு நாடித் துடிப்பு இருந்ததை முன்பு ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியது. எனவே அவர்கள் வெளிப்படையாக ஆரோக்கியமானவர்களாக இருந்தபோதும் எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான அத்திவாரம் போடப்பட்டமை உறுதியாகியது.

ஆபத்தைக் கணிப்பது எப்படி?

ஒருவரின் ஆரோக்கியத்தை அறிவதற்காக உயரம் (Height)> எடை (Weight), உடற்திணிவுக் குறியீடு ஆகியவற்றை மட்டும் அளந்து பார்ப்பது போதுமானதல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வயிற்றறையின் சுற்றளவை அளப்பது முக்கியமானது.

  • ஆண்களில் இது 102 செ.மி ஆகவும்,
  • பெண்களில் 88 செ.மி ஆகவும் இருக்க வேண்டும்.

abd circumferance

வயிற்றின் சுற்றளவை விட, வயிற்று சுற்றளவிற்கும், இடுப்புச் சுற்றளவிற்கும் இடையோயன சதவிகிதம் முக்கியமானது என நம்பப்படுகிறது.

  • இது பெண்களில் 0.8ற்று குறைவானவும்,
  • ஆண்களில் 0.9 க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

செய்ய வேண்டியது என்ன?

எனவே இளவயதிருக்கான செய்தி என்ன?

‘எங்களுக்கு நல்ல உணவு கிடைக்க்pறது. நன்றாகச் சாப்பிடுகிறோம். களைப்புக் கிடையாது. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் அதியுயர் மனிதர்கள்’ என்ற மாயையில் மூழ்கியிருக்காதீர்கள்.

How-to-lose-belly-fat-for-kids

எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் போன்றவை வருவதற்கான அடித்தளம் ஏற்கனவே உங்களுக்கும் போடப்பட்டிருக்கலாம்.

ஆயினும் காலம் கடந்துவிடவில்லை. உங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரக் கூடிய இடர் காரணிகளைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பருத்த வயிறு முக்கியமான பிரச்சனை என்பதை மறக்காதீர்கள்.

0204running

ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.
இவற்றைச் செய்ய வேண்டிய வயது எனக்கு ஆகவில்லை என ஒருபோதும் எண்ண வேண்டாம். இப்பொழுதே ஆரம்பியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஆதாரம்:- Heart and Stroke Foundation of Canada, news release, Oct. 25, 2011

ஹாய்நலமா புளக்கில்  ஜனவரி 2012. ல் வெளியானது

0.0.0.0.0.0.0.0.0

Read Full Post »

சிநேகதி ஏப்ரல் மாத இதழில் எனது இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவை இங்கே தரப்படுகின்றன.

சிநேகதியில் வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது

1. மனப்பதற்றம் மாரடைப்பை வரவழைக்கும்.

இது எனது ஹாய் நலமா வலைப்பூவில் நான் முன்பு எழுதிய கட்டுரையாகும். தொடுப்பிற்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

மனப்பதற்றமும் மாரடைப்பும்

2.பொய் சொன்னால் முகம் காட்டிக் கொடுத்துவிடும்- அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும்.

இதுவும் எனது ஹாய் நலமா வலைப்பூவில் நான் முன்பு எழுதிய கட்டுரையாகும். தொடுப்பிற்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும்

எனது கட்டுரைகளை சிநேகிதி இதழில் வெளியிட ஆவன செய்த மஞ்சுளா ரமேஸ் அவர்களுக்கு நன்றி

0.0.0.0.0.0

Read Full Post »

>இன்று 26.09.2010 திகதி உலக இருதய தினமாகும். பத்தாவது தடவையாக இத் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஓவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத இறுதி ஞாயிறு தினத்தில் இது அனுஷ்டிக்கப்படுகிறது.

உங்கள் இருதயத்தைக் காப்பாற்றுங்கள்

உலக இருதய சங்கத்தின் தூண்டுதலினால் முதன் முதலாக 2000 வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் இத் தினம் கொண்டாடப்பட்டது.

இருதய நோய்களாலும் பக்கவாதத்தாலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு இவ்வருடமும் முயலுமாறு அரசாங்கங்களையும் உடல்நலத்துறை சார்ந்த அறிஞர்களையும், சகல தொழில் வழங்குனர்களையும், தனிப்பட்ட மனிதர்களையும் உலக இருதய சங்கம்; அழைத்திருக்கிறது.

இருதயத்திற்காக வீட்டில் மட்டுமின்றி தொழில் புரியும் இடங்களிலும் முயற்சியுங்கள்

இருதயத்திற்கு நல்ல செய்தி

இருதயத்திற்கு நல்ல செய்தியை வழங்கும் இடமாக இவ் வருடம் தொழில் புரியும் இடங்களை முன்னிலைப்படுத்துகிறது உலக இருதய சங்கம். தொழில் வழங்குவோர், தொழில் புரிவோர் மற்றும் சமூகத்தினருக்கு நன்மை செய்யும் விதத்தில் நீண்ட கால அடிப்படையில் வாழ்க்கை முறை மாற்றங்களை தொழிலகங்களிலும் ஏற்படுத்துவதே இவ்வருடத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த உலக இருதய நாளிலே ஒவ்வொருவரும் தனது இருதயத்தின் நலனுக்கான பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டு, ‘நான் எனது இருதயத்துடன் வேலை செய்வேன்’ என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காப்போம்

வழமையான வைத்திய முறைகள் இன்று கேள்விக்குரியதாகிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். வைத்தியர் சிகிச்சை முறைகளைச் சொல்லுவதும் நோயாளிகள் அவற்றைக் கேட்டு நடப்பதுமான வழமையான முறை வெற்றியளிக்கவில்லை. இது நோயாளர் இறப்பு விகிதத்தை போதியளவு குறைக்கவில்லை.

  • நோய் வராமல் தடுப்பதும், 
  • நோயை நேர காலத்துடன் இனங்காண்பதும், 
  • ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பிப்பதும் அவசியமாகும். 

இதனை நோயாளரின் முழுமையான ஒத்துழைப்புடனும் பங்களிப்பினோடுமே செயற்படுத்த முடியும். நோயாளிகள் தமது முக்கிய பங்களிப்பை உணர்ந்து, ஏற்று மருத்துவ உதவியுடன் செயற்பட்டால் தமது ஆரோக்கியத்தை நன்கு பேண முடியும் என்பது இப்பொழுது நன்கு உணரப்படுகிறது.
எனவே உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பும் முக்கியமானது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இதய நோயையும் பக்க வாதத்தையும் தடுப்பதில் இத்தகைய அணுகுமுறையே நல்ல பலனை அளிக்க முடியும்.

மனிதனைப் பாதிக்கின்ற பல்வேறு நோய்களில் இதயநோய் மிகவும் முக்கியமான இடத்தைப் ஏன் பிடிக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.  காரணங்கள் பல உள்ளன.

இருதய நோய்கள் ஏன் முக்கியமானது

  •  மனிதர்களின் மரணத்திற்கான முதற்காரணியாக இருக்கிறது
  • எதிர்பாராது திடிரென தாக்கும் நோயாகவும் இருக்கிறது.
  • அதிகம் பயமுறுத்தும் நோயாக இருக்கிறது.
  • மனிதர்கள் தமது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றுவதற்குத் தூண்டக் கூடிய காரணியாகவும் இருக்கிறது.

இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் முதலாவதாக இருப்பது இருதய நோயாகும். இலங்கையில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் இன்று இதுவே முதற் காரணியாக இருக்கிறது.

வீட்டில்

நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குச் செய்ய வேண்டியவை யாவை?

உணவு- உடல் நலத்திற்கு ஏதுவான உணவுகளை உட்கொள்ளுங்கள். தினமும் 5 பரிமாறலுக்கு குறையாதளவு பழவகைகளையும் காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிரம்பிய கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதிக உப்புள்ள உணவுகளையும் தவிருங்கள். முக்கிய கடையுணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அத்தகையவையே.

உடல் உழைப்பு:- உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயற்படுங்கள். அதில் உங்கள் இருதயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கும் பணிகளில் அல்லது உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுங்கள்.

எடை:- உங்கள் எடையைக் கவனத்தில் எடுங்கள். அதீத எடை உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுவரும். அதே நேரம் ஒருவர் தனது அதீத எடையைக் குறைத்தால் இரத்த அழுத்தம் குறையும்.

புகைத்தல்:- புகைத்தலைக் கைவிடுங்கள். நீங்கள் அதனைச் செய்தால் ஒருவருட காலத்திற்குள்ளேயே மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் உங்களுக்கு அரைமடங்கு குறைந்துவிடும்.

மது:- மது அருந்துவராயின் அதைக் கைவிடுங்கள் அல்லது அதன் அளவை நன்கு குறையுங்கள். அதிகமாக உட்கொள்ளும் மது உங்கள் எடையை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்தை கொண்டு வருவதற்கான முதற் காரணி என்பதுடன் மாரடைப்பைக் கொண்டுவருவதற்கு ஏதுவான காரணி என்பதை அறிவீர்கள்.

மருத்துவரை சந்தியுங்கள்:- “எனக்கு எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லை” என எண்ணி வாழாதிருக்க வேண்டாம். மனிதர்களுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு போன்றவை நோய் முற்றும் வரை வெளிப்படையான அறிகுறிகள் எவற்றையும் காட்டுவதில்லை.

எனவே ஒழுங்கு ரீதியில் உங்கள் மருத்துவரை அணுகி

  • பிரஷர், கொலஸ்டரோல் மற்றும் சீனி அளவை அறிந்து கொள்ளுங்கள். 
  • அத்துடன் உங்கள் எடையையும், வயிற்றின் சுற்றளவையும் அவர் அளந்து பார்த்து உங்களுக்கு இருதயநோய் வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவார். 
  • இவை அதிகமாக இருந்தால் அவற்றைச் சரியான அளவில் குறைப்பதற்கு முயல வேண்டும்.

தொழில் தளத்தில்

இருதய நலத்தைப் பேணும் நடவடிக்கைகளை வீட்டில் எடுத்தால் மட்டும்போதாது, உங்கள் வேலைத்தளத்திற்கும் விஸ்தரியுங்கள்.

புகைக்காத வேலைத்தளம்:- உங்கள் வேலைத்தளம் புகைத்தலுக்கு தடைவிதித்திருக்கிறதா எனப் பாருங்கள். இல்லையேல் அது புகைத்தில் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்குவதற்கு முழு முயற்சி எடுங்கள்.

உடலுக்கு வேலை:- உங்கள் தொழில் உடல் உழைப்பு அற்றதாயின் அங்கு உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கக்  கூடிய வழிமுறைகளை கண்டுபிடியுங்கள்.

  • லிப்டைத் தவிர்த்து படிகளைப் பயன்படுத்துங்கள். 
  • மதிய உணவை மேசையில் உட்கார்ந்தபடி உண்ணாமல், வெளியே நடந்து சென்று பெற முடியுமானால் அதைச் செய்யுங்கள். 
  • வேலைக்குப் போவதற்கு பஸ், கார் போன்றவற்றுக்குப் பதிலாக சைக்கிளைப் பயன்படுத்த முடியுமானால் சிறந்தது.

உணவு:- உங்கள் உணவு உள்ளக கன்ரீனில் பெறப்படுகிறது என்றால் அங்கு ஆராக்கியமான உணவு கிடைக்க வழிசெய்ய வேண்டுங்கள். முடியாவிட்டால் நல்லாரோக்கிய உணவை கொடுக்கும் நல்ல உணவகத்தைத் தேடுங்கள். அதன் மூலம் உடலாரோக்கியத்திற்கான நடையும், நல்ல காற்றும் கிடைக்கும் அல்லவா?

ஓய்வு:- தொடர்ந்து ஒரே விதமான வேலையெனில் இடையில் இரண்டு தடவைகளாவது 5 நிமிடங்கள் ஓய்வு பெற்று உங்கள் அங்கங்களை நீட்டி நிமிர்த்தி அவற்றைச் சுறுசுறுப்பாக்குங்கள்.

உங்கள் இருதயம் உங்கள் பொறுப்பில் உள்ளது. அதனைச் சுறுசுறுப்பாக நீண்ட காலத்திற்கு செயற்பட வைப்பதோ, அன்றி அதன் செயற்பாட்டிற்கு ஊறு விழைவித்து நோயில் ஆழ்த்துவதோ உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

 உளநெருக்கீடு
உங்கள் வேலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்யுங்கள். மனப்பதற்றத்திற்கும், நெருக்கீட்டிற்கும் (Stress) மாரடைப்புடன் தொடர்பு இருப்பதாக சிலஆய்வுகள் கூறுகின்றன. வேலைத்தளத்தில் நெருக்கீடுகள் இருக்குமாயின் நீக்க முயலுங்கள்.

மாரடைப்பு பற்றிய எனது முன்னைய பதிவுகளுக்கு.. 

மனப்பதற்றமும் மாரடைப்பும்

மாரடைப்பும் மாரடைப்பலாத நெஞ்சு வரிகளும்
மாரடைப்பும் பெண்களும்
ஈ.சீ.ஜீ பரிசோதனை தேவையா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>நெஞ்சு வலி என்றால் பயப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஏனெனில் எந்த நெஞ்சுவலியானாலும் அதனை மாரடைப்பு என்றே பலரும் கருதுகிறார்கள்.

இதயத்தின் அறைகளுக்குள் எந்த நேரமும் இரத்தம் நிறைந்திருக்கிறது ஆனாலும் அதனை இயக்கும் தசைநார்களுக்கு அந்த இரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை.

இரண்டு சிறிய இரத்தக் குழாய்கள் – கொரனரி நாடிகள் (Coronary arteries) மூலமே கிடைக்கின்றன. இவை முடியுரு நாடிகள் எனப்படுகின்றன.

இவற்றில் ஒன்றில் அல்லது அவற்றின் கிளைகளில் இரத்தம் செல்வது தடைப்பட்டால் அப் பகுதியில் உள்ள இருதயத்தின் தசை நார்களுக்கு இரத்தம் போதிய அளவு கிடைக்காது.

அந்நிலையில் தசை நார்களுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது போய்விடும்.
இது நெஞ்சுவலியாக வெளிப்படும்.

அல்லது தசை நார்களுக்கு இரத்த ஓட்டம் அடியோடு தடைப்படலாம்.

அந் நிலையில் இப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடவும் கூடும்.

இதுதான் Myocardial Infarction)  எனப்படுகிறது. இதயத் தாக்குகை எனவும் சொல்லலாம். ஆனால் மாரடைப்பைத் தவிர வேறு காரணங்களாலும் நெஞ்சுவலி ஏற்படுகிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்

  • கடுமையான வலி திடீரென உங்கள் மார்பில் ஏற்பட்டால் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்.

நெஞ்சை இறுக்குவதுபோல
அமுக்குவது போல,
பிழிவதுபோல,
அல்லது பாரம் ஏற்றியது போல இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம்.

  • வலியானது பொறுக்க முடியாத கடுமையானதாக இருக்கும்.
  • இவ்வலி பெரும்பாலும் 20 நிமிடங்கள் அல்லது அதற்கு அதிகமாக நீடிக்கும்.
  • இவ்வலி பெரும்பாலும் நடுமார்பின் உட்புறத்தே ஏற்படும்.
  • வலி அவ்விடத்தில் மட்டும் மட்டுப்பட்டு நிற்காமல்

இடது தோள்மூட்டு,
இடதுகை, தொண்டை,
கழுத்து,
நாடி,
முதுகு போன்ற இடங்களுக்கும் பரவக் கூடும்.

  • வலி ஏற்பட்டபோது செய்து கொண்டிருந்த கடுமையான வேலையை நிறுத்தினாலோ ஓய்வு எடுத்தாலோ கூட மாரடைப்பின் வலி தணியாது.
  • வலியுடன் கடும் வியர்வை, மயக்கம், களைப்பு, இளைப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றலாம். 
  • வலி இல்லாமல் கூட ஒரு சிலருக்கு மாரடைப்பு வருவதுண்டு.

நெஞ்சுவலிக்கு வேறு காரணங்கள்

  • நெஞ்சு வலி ஏற்படுவதற்கு எமது நெஞ்சறையில் உள்ள இருதயம் மட்டுமின்றி, அதிலிருந்து வரும் நாளங்கள், நுரையீரல், களம் போன்ற உறுப்புகளும் காரணமாகலாம்.
  • அத்துடன் நெஞ்சுச் சுவரில் உள்ள தசைநார்கள், சவ்வுகள், எலும்புகளிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.
  • நெஞ்சுக்குக் கீழே உள்ள வயிற்றறையில் உள்ள இரைப்பை, ஈரல் போன்றவற்றிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.
பரிசோதனைகள்

  • நெஞ்சுவலிக் காரணம் மாரடைப்பா அல்லது வேறு காரணமா என்பதை சில தருணங்களில் மருத்துவர்களால் கூட கண்டறிய முடியாது. நிச்சமாகக் கண்டறிய ஈசீஜி (ECG) பரிசோதனை உதவும். 
  • ஆனால் ஈசீஜியில் தெளிவாகத் தெரிய முன்னரே இருதய நொதியங்களைப் பரிசோதிக்கும் இரத்தப் பரிசோதனைகள் உதவும். 

காரணம் எதுவானாலும் உங்களால் தீர்மானிக்க முடியாது.
மருத்துவ ஆலோசனை பெறுவதே ஒரே வழி.

இதய நோய்களுக்கு வாய்ப்பளிக்கும் காரணிகள்

இருதய நோய்கள் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் சில மனிதர்களால் கட்டுப்படுத்தக் கூடியவை. ஏனையவை கட்டுப்படுத்த முடியாதவை.

1.கட்டுப்படுத்தக் கூடிய காரணிகள்

  • உயர் இரத்தஅழுத்தம், 
  • நீரிழிவு, 
  • புகைத்தல், 
  • இரத்தத்தில் அதிக கொழுப்பு (கொலஸ்டரோல்), 
  • தவறான உணவு முறைகள், 
  • அதீத உடற் பருமன், 
  • மதுபானம், 
  • உடலுழைப்பின்மை 

ஆகியவற்றைக் கூறலாம். இவை யாவும் உங்களால் கட்டுப்படுத்த அல்லது மாற்றக் கூடியவையாகும்.

2. கட்டுப்படுத்த முடியாத காரணிகள்

  • வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். 
  • பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாகும். 
  • ஆனால் மாதவிடாய் முற்றாக நின்ற பின் அவர்களுக்கும் அதிகரிக்கும்.  
  • பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம். 

இவை மட்டுமே .

எனவே மாரடைப்பு வராமல் தடுப்பது பெருமளவு உங்கள் கைகளிலேயே தங்கியிருக்கிறது.

மாரடைப்பு தொடர்பான எனது ஏனைய கட்டுரைகளுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் 
‘நெஞ்சு வலிகள் எல்லாம் மாரடைப்பல்ல’ 
என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

‘களைக்குது களைக்குது என்று காலையிலிருந்து வருத்தம் பாடிக் கொண்டிருக்கிறா. என்னெண்டு ஒருக்கால் பாருங்கோ…’ என்றார் உள்ளே நுழைந்தவர்;.

தொடர்ந்து ‘இண்டைக்கு கடைச் சாப்பாடுதான் போல கிடக்கு’ என்றும் சலித்துக் கொண்டார்.

வந்தவர் கதிரையில் உட்காரும் மட்டும் நோயாளியின் தலை கண்ணில் படவேயில்லை.
மெதுவாக அடியெடுத்து பின்தொடர்ந்து வந்த பெண்மணியின் முகமெங்கும் ஆயாசம் பரவிக் கிடந்தது.
சற்று இளைப்பதும் தெரிந்தது.
நோயுற்றதால் களைப்படைந்திருந்தாள்.

நோயில் துன்பப்படும் மனைவியை அக்கறையோடு கைபிடித்துக் கூட்டி வராது, அவளால் சமைத்துப் போட முடியாத அடுத்த நேரச் சாப்பாடு பற்றி மட்டுமே கவலைப்படும் இத்தகைய மனிதர்களைப் பற்றிச் சொல்வது என்ன?

அவளுக்கு நெஞ்சை அடைக்கவில்லை. நடு நெஞ்சில் வலிக்கவும் இல்லை. வலி இடது தோளுக்கோ கையுக்கோ  வலி பரவவில்லை. வியர்த்து ஒழுகவில்லை.

நான் விபரமாகக் கேட்டபோதுதான்
காலையிலிருந்து முதுகுப்புறமாக சற்று வலிக்கிறதாகச் சொன்னாள்.

பரிசோதித்தபோது,
இருதயம் சற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
பிரஷர் சற்றுக் குறைந்திருந்தது.
ஈ.சி.ஜி யில் சிறிய மாற்றமே இருந்தது.
ஆனால் கார்டியக் ரோபனின் இரத்தப் பரிசோதனை
மாரடைப்புத்தான் என்பதை உறுதிப்படுத்தியது.

மாரடைப்பைக் கையாளக் கூடிய வசதியுள்ள மருத்துவ மனைக்கு உடனடியாக அனுப்பி வைத்ததால் அவருக்கு எதிர்காலத்தில் சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை.

ஒரு வேளை அவள் மரணித்திருந்தால்?

பின்னர்தான் அவளின் அருமை புலப்பட்டிருக்கும்.

‘அவள் இருக்கு மட்டும் எனக்கு என்ன குறை’
என நினைந்து ஒழுகுவது மட்டுமே மிஞ்சியிருக்கும்.

மாரடைப்பினால் பாதிப்பு பெண்களுக்கு அதிகம்

கடுமையான மாரடைப்பினால் அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண்கள் அங்கேயே இறப்பதற்கான சாத்தியம்
ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்
என இரு வருடங்களுக்கு முன்னர்
Circulation Dec 08, 2008
சஞ்சிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை கூறியது.

காரணங்கள் எவை?

பெண்கள் அதிகமாக மரணமடைவது ஏன் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பிரதான காரணம் நோய் வந்தாலும் பெண்கள் மருத்துவமனைக்கு உடனடியாக வருவதில்லை.
ஆண்களைவிட அதிக காலதாமதமாகிறது எனக் கண்டறியப்பட்டது.
இது ஏன்?

பெண்களில் மாரடைப்பின் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை

பெண்கள் தங்கள் நோய் அறிகுறிகளுக்கான காரணம் மாரடைப்புத்தான் என உடனடியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் பெண்கள் பலருக்கும் வரும் மாரடைப்பு நோயின் வலி கடுமையாகவும் மருத்துவப் புத்தகங்களில் வருவது போல (typical) வியர்வையுடன் கூடிய கடுமையான நடுநெஞ்சு வலியாக இருப்பதில்லை.

தலை அம்மல்
முதுகு உளைவாகவோ,
களைப்பாகவோ,
நெஞ்செரிப்புப் போலவோ
வெளிப்படுவதுண்டு.

இதனால் பெரும்பாலும் வாய்வுத் தொல்லை என்றோ, சமிபாடின்மை என்றோ அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.

அமெரிக்காவின் தேசிய உடல்நலத்திற்கான திணைக்களம் (NIH) செய்த ஆய்வு ஒன்றின் பிரகாரம்,

95% சதவிகிதமான பெண்களில் வழமைக்கு மாறான கடுமையான களைப்பு, மூச்செடுப்பதில் சிரமம், தூக்கக் குழம்பம் ஆகியனவே முக்கிய அறிகுறிகளாக இருந்தனவாம்.
30% சதவிகிதத்திற்கு குறைவானவர்களுக்கே நெஞ்சு வலி இருந்ததாம்.
45% சதவிகிதமானவர்களுக்கு நெஞ்சு வலியே இருக்கவில்லையாம்.

இதனால்தான் நோயாளிகள் கவனிப்பை ஈர்ப்பதில்லை.

மேலதிக தகவல்களுக்கு:-கிளிக் பண்ணுங்கள்

தாமதித்த மருத்துவ உதவி

பெண்கள் அதிகமாக மரணமடைவதுதற்கு இரண்டாவது முக்கிய காரணம் மருத்துவர்கள் எனலாம். பெரும்பாலான மருத்துவர்களும் நெஞ்சுவலி இருந்தால்தான் மாரடைப்பு பற்றிச் சிந்திக்கிறார்கள். இதனால் பெண்கள் பிரத்தியேகமற்ற சாதாரண அறிகுறிகளுடன் வந்தால் உடனடியாக துரித செயற்பாட்டில் இறங்கத் தவறிவிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் கூறிய ஆய்வின் பிரகாரம்,
உடனடியாக அஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,
ஒன்றரை மணிநேரத்திற்குள் சத்திர சிகிச்சைக்கு எடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,

சேதமடைந்த இருதய தசைகளுக்கு இரத்த ஓட்டததை மீளவைக்கும் சிகிச்சைகள் (Reperfusion therapy) 25சதவிகிதமும்
பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே கொடுக்கப்பட்டதாம்.

ஆண் முதன்மைச் சமுதாயம்

போதாக்குறைக்கு ஆண்களை முதன்மைப்படுத்தும் எமது சமுதாய வழக்கில் ஆண்களுக்கு வருத்தம் வந்தால் அள்ளிப் பிடித்துக் கொண்டு ஓடுவதுபோல, பெண்களது நோய்களுக்கு அக்கறைபடுவது குறைவு எனலாம்.

மாரடைப்பு நோயுடன் மருத்துவ மனைக்கு வரும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் மரணமடைவதற்கு இவையே காரணம் எனலாம்.

பெண்களே நீங்கள் செய்யக் கூடியது என்ன?

பிழை எங்கிருந்தாலும், மற்றவர்கள் மீது குறையைப் போடுவதற்கு முதல் உங்களில் நீங்கள் அக்கறை எடுங்கள்.

நீரிழிவு, அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பது போன்றவையே மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.
உங்களுக்கு அவை இருக்கிறதா என்பதை இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் கண்டறியுங்கள்.

அவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள் போன்ற முயற்சிகளை உடனடியாகவே ஆரம்பியுங்கள்.

பெண்களுக்கு மாரடைப்பு நெஞ்சுவலியுடன் மட்டும் வருவதில்லை என்ற தெளிவுடன் இருந்து, அதற்கான ஏனைய அறிகுறிகளையும் அறிந்து வைத்திருங்கள்.

உங்களுக்கு திடீரென ஏற்பட்ட ஏதாவது நோயின் அறிகுறி மாரடைப்பாயிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால்
உடனடியாக இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளைக் கரைத்துக் குடித்துவிட்டு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

விரைந்து செயற்பட்டால் மாரடைப்பிலிருந்து மாத்திரமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும் தப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

இருக்கிறம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின்  மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

`நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறினாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறிய பின்தான் தொடர்ந்து ஏற முடிகிறது. பாரம் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியுதில்லை’ என்றாள் அவள்.

அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ்ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்’ என்றேன்.

‘ஈ.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்’ என்றாள் கோபமாக. `ஏன்?’ என்று கேட்டேன்.

`ஈ.சி.ஜி செய்வதில் பிரயோசனமில்லை’ என்றவளது குரல் திடீரென மிகுந்த விரக்தியில் ஆழ்ந்தது. `எங்கட சொந்தக்காரர் ஒருத்தர் சும்மா `செக்அப்’ எண்டு ஈ.சி.ஜி செய்து பார்த்தவர். ஒண்டும் இல்லை எண்டிட்டாங்கள். மற்ற நாள் திடீரெண்டு ஹாட் அட்டாக்கிலை போட்டார். உந்த ஈ.சி.ஜி பிரயோசனம் இல்லாத வேலை’ என்றாள்.

இன்னொரு வயதான மாது. `சரியான களயாகக் கிடக்கு, தலையையும் சுத்துது’ என்றாள். பரிசோதித்துப் பார்த்தபோது உடல் வியர்த்து, பிரஸர் தளர்ந்திருந்தது. மாரடைப்பு என்பதாக உணர்ந்தேன்.

‘ஈ.சி.ஜி எடுத்துப்பார்க்க வேண்டும்’ என்றேன்.

`நெஞ்சு வலி இல்லைத்தானே, ஏன் வீணாக ஈ.சி.ஜி’ என்றாள். கூட வந்தவரும் அதையே வலியுறுத்தினார்.

இவர்களுக்கு மாறாக இருதய நோய்களோடு எந்தவித தொடர்புமற்ற சிலர் ஈ.சி.ஜி எடுத்தே தீர வேண்டும் என அடம் பிடிப்பார்கள்.

இவர்கள் அனைவரும் ஈ.சி.ஜி.யின் பயன்பாடு பற்றிய தெளிவு இல்லாமையால் தான் தவறான முடிவுகளுக்கு வந்தார்கள். முதலாமவர் முதல் நாள் ஈ.சி.ஜி எடுத்தபோதும் அடுத்தநாள் இறந்தது ஈ.சி.ஜி.யின் தவறு அல்ல. வரப் போகிற மாரடைப்பை முதலிலேயே கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படுவதல்ல வழமையான ஈ.சி.ஜி.ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், ஏற்கனவே இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைக் காட்டும்.

பயிற்சி ஈ.சி.ஜி. ( Excercise ECG), அன்ஜியோகிராம் ( Angiogram) போன்ற பரிசோதனைகள் மட்டும் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தும். எனவே எடுத்த ஈ.சி.ஜி.யில் எந்த மாற்றமும் இல்லை, சாதாரணமானது என்ற போதும் அஞ்சைனா, மாரடைப்பு ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லக்கூடிய இருதயநாடி நோய்கள் ( Coronary Artery Disease) இல்லையென முடிவுகட்ட முடியாது. ஆனால் ஈ.சி.ஜி.யில் மாற்றமிருப்பது நோயிருப்பதை உறுதி செய்யும்.

இரண்டாமவர் நெஞ்சுவலி இல்லையென்பதால் ஈ.சி.ஜி வேண்டாம் என்றார். ஆனால் நெஞ்சுவலி இல்லாமல் கூட மாரடைப்பு வருவதுண்டு. வேண்டாம் என்ற அவருக்கு மாரடைப்பு வந்திருந்ததை ஈ.சி.ஜி. தெளிவுபடுத்தியது.

எனவே ஈ.சி.ஜி. தேவையா இல்லையா என்பதை ஒருவருக்கு உள்ள அறிகுறிகளைக் கொண்டு வைத்தியரே தீர்மானிக்க வேண்டும். இருந்தபோதும் ஈ.சி.ஜி. மட்டுமே மாரடைப்பைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை அல்ல. Troponins T போன்ற சில இரத்த பரிசோதனைகள் ஈ.சி.ஜி.யை விட விரைவாகவே மாரடைப்பை கண்டு பிடிக்க உதவுகிறது.

ஆனால் ஈ.சி.ஜி. என்பது வெறுமனே மாரடைப்பைக் கண்டு பிடிப்பதற்கான பரிசோதனை அல்ல. இருதயத்தோடு சம்பந்தப்பட்ட பல நோய்களை வைத்தியர்களுக்குச் சுட்டிக்காட்ட அது உதவுகிறது. இருதயத் துடிப்பின் வேகம், அதன் ஒழுங்கு, இருதய துடிப்பின் சீரின்மை, அதன் தசைகளின் வீக்கம், இருதய வால்வுகளின் நோய்கள் போன்ற பலவற்றை இனங்காண உதவுகிறது. டிஜொக்சின் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவுகளைக்கூட ஈ.சி.ஜி மூலம் அறியலாம்.

இரத்தப் பரிசோதனைகள் போல வழமையாகச் செய்யப்படும் ஒரு சாதாரண உடல்நலப் பரிசோதனையே இதுவாகும். ஈ.சி.ஜி என்பது எந்தவித பாதிப்பும் அற்ற இலகுவான பரி சோதனையாகும். இதன்போது மின்சாரம் உடலுக்குள் பாய்ச்சப்படுவதில்லை. மாறாக இருதயத்திலிருந்து இயல்பாக எழும் மின் தூண்டுதலையே அது அளவிடுகிறது.

ஐந்தோவன் Einthoven என்பவரால் இது 1893 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக அவர் 1924 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல் 06.05.2008

Read Full Post »

>மனப்பதற்றமும் மாரடைப்பும்

அவருக்கு சென்ற ஒரு வருடத்திற்குள் எத்தனை தடவை ஈ.சீ.ஜி. எடுக்க நேர்ந்திருக்குமோ தெரியாது. கடவுளுக்குத்தான் வெளிச்சம்! சற்று நெஞ்சு வலி இருந்தால் உடனடியாக வைத்தியரிடம் ஓடுவார்.மாரடைப்பா என அறிய; ஈ.சீ.ஜி. எடுத்துப் பார்ப்பார்.

எதுவும் இருக்காது .
நெஞ்சு வலி இருக்க வேண்டும் என்று கூட இல்லை நெஞ்சு நோவாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட வைத்தியரிடம் ஓடுவார்.

மாறிமாறி வெவ்வேறு டாக்டர்களிடம் ஓடுவார். அவ்வளவு மனப் பதற்றம்! தனக்கு மாரடைப்பாக இருக்குமோ என்று சதா சஞ்சலம்.

இத்தகைய கடுமையான மனப்பதற்றம் (Anxiety) உள்ள நோயாளிகளுக்கு , மாரடைப்பு வருவதற்கு அல்லது அதனால் மரணமடைவதற்கான சாத்தியம் ஏனையவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம் என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகின்றது.

இது பற்றிய விபரம் American College of Cardiology யின் மே 22, 2007 இதழில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருதய நோயுள்ள 516 பேரிடையே மூன்று வருடங்களுக்கு மேல் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு அது.

இன்னுமொரு முக்கிய விடயமும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. ஆரம்பத்தில் எந்தளவு மனப்பதற்றம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, காலப்போக்கில் எந்தளவு கூடுகிறது அல்லது குறைகிறது என்பதும் முக்கியமானது.

ஆரம்பத்தை விட காலப் போக்கில் மனப் பதற்றம் அதிகமானால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் பத்து சதவீதத்தினால் அதிகரிக்கிறது.
மாறாக மனப்பதற்றம் குறைந்தால் மாரடைப்பிற்கான சாத்தியப்பாடு குறைகிறது.

நீங்கள் மனப்பதற்றம் உள்ள இருதய நோயாளி எனில் செய்ய வேண்டியது என்ன?

மாரடைப்பைக் கொண்டுவரக் கூடிய ஏனைய பிரச்சினைகளான புகைத்தல், பிரஸர் , நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்றவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துங்கள்.

அத்துடன் மன அமைதியைக் கொண்டுவரக் கூடிய உடற்பயிற்சி, தியானம், யோகாசனம், இறைவழிபாடு போன்றவற்றில் மனதார ஈடுபடுங்கள்.

உங்களுடன் ஆதரவாகவும் புரிந்துணர்வுடனும் பேசக்கூடிய இருதய வைத்திய நிபுணருடன் உங்கள் நோய் பற்றியும் அதனால் ஆபத்துகள் வராமலிருக்க நீங்கள் செய்யக்கூடிய நாளாந்த நடைமுறைகள் பற்றியும் தெளிவாக கலந்துரையாடுங்கள்.

இது நோய் பற்றிய உங்களது தேவையற்ற பயத்தை நீக்கி மன அமைதியை உண்டாக்கி உங்கள் வாழ்க்கையை நீடிக்கும்.

நோய் பற்றிய வீண் பீதியைக் கிளறிவிடும் நண்பர்களையும் உறவினர்களையும் தவிருங்கள்.

” திறமையான கவனிப்புக்கு உள்ளாகும் இருதய நோயாளிகள் மகிழ்வுடன் நீடுழிவாழ முடியும்” என இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் சார்ள்ஸ் பிளட் கூறியது உங்களையும் சேர்த்துத்தான். அவர் ஹவாட் மருத்துவக் கல்லூரியின் இருதய நோய் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரும் பேராசிரியரும் ஆவார்.

பின் இணைப்பு June 2010.

மன அழுத்தத்திற்கும் (Stress) மாரடைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அண்மைய ஆய்வுகள் சுட்டுகின்றன. பிரித்தானிய சுகாதார சேவைகளின் NHS இணைய தளத்தில் இந்த வருட ஆரம்பத்தில் வந்த தகவலை படியுங்கள்.

மன அழுததத்தின் போது அதற்கான ஹோர்மோனான கோர்ட்டிசோல் (Cortisol) இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிவதை அதிகரிப்பதால் இது நடக்கிறது எனச் சொல்கிறார்கள்.

கடுமையான மன அழுத்தத்தின்போது இருதயத்திற்கு குருதியை வழங்கும் Coronary artery களில் திடீரென தற்காலிக இறுக்கம் ஏற்படுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாகக் கருதுவோரும் உண்டு

Read Full Post »