>‘என்ன டொக்டர் நீங்கள் மாஸ்க் போடாமல் கிளினிக்கிலை வருத்தக்காரரைப் பார்க்கிறியள்?
டிவீ, பேப்பர் எதைப் பார்த்தாலும் முகமூடி போட்ட முகங்களைப் பார்த்துப் பயமாக இருக்கு’ என்றார் என்னைச் சந்திக்க வந்த மருத்துவ பிரதிநிதி.
பாடசாலை மாணவர்களிடையே தொற்றத் தொடங்கியதிலிருந்து பன்றிக் காய்ச்சல் பீதி இலங்கையில் அனைவரையும் பீதிக்கு ஆளாக்கியுள்ளது.
‘எப்படி எங்களைப் பாதுகாத்துக் கொள்வது’ என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனத்திலும் எழத் தொடங்கியுள்ளது.
‘பஸ்சில் போகும்போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டுமா’ என்று கேட்டார் தினமும் பஸ்சில் பிரயாணம் செய்யும் ஒருவர்.
உண்மையில் மாஸ்க் அணிவதால் தடிமன் காய்ச்சல், இன்புளுவன்ஸா மற்றும் H1N1 காய்ச்சல் தொற்றுவதைத் தடுக்க முடியுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
அமெரிக்காவின் தொற்றுநோய் தடுப்பு மையமானது வீடுகளிலோ சமூக நிகழ்வுகளின் போதோ நோய்த் தடுப்பு முகமூடி அணிய வேண்டும் எனச் சிபார்சு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகமூடிகள் பலவகை
தடுப்பு முகமூடிகளில் பலவகைகள் உண்டு.
சத்திர சிகிச்சைக்கானது,
பற் சிகிச்சைக்கானது,
தனிமைப்படுத்தலுக்கானது,
லேசர் வகை போன்றவை சில. சாதாரண முகமூடிகள் முற்று முழுதாக முகத்தை மூடிப் பாதுகாப்பவை அல்ல.
ஆயினும் Respirators என்று அழைக்கப்படுபவை மிக நுண்ணியளவு வைரசையும் தடுக்கக் கூடியவையாகும். (N95 or higher filtering face pieces) இவை முகத்தோடு இறுகப் பற்றிக் கொள்பவை. சரியான முறையில் அணிந்தால் வைரஸ் தொற்றுவதைத் தடுக்கக் கூடியவையாகும்.
ஆனால் இத்தகைள முகமூடிகள் ஊடாகச் சுவாசிப்பது கஸ்டமாகும்.
எனவே நீண்ட நேரம் தொடர்ந்து அணியக் கூடியதல்ல.
அத்துடன் குழந்தைகளும் இதை அணிய முடியாது.
முகத்தில் முடியுள்ளவர்களும் அணிய முடியாதாம்.
புளுக் காச்சல் உள்ளவர்கள் அவதானிக்க வேண்டியவை
புளுக் காய்ச்சல் அறிகுறியுள்ளவர்கள்
(தடிமன், காய்ச்சல், தும்மல், இருமல்,)
சமூக அக்கறையோடு செயற்படுவது அவசியம்.
தங்கள் நோய் மற்றவர்களுக்கு பரவாது தடுப்பது அவர்கள் பொறுப்பாகும். அவர்கள் வீசி எறியக் கூடிய ரிஸ்யூ கையோடு வைத்திருப்பது மிக அவசியமாகும்.
தும்மும்போதும் இருமும் போதும்
அவற்றை உபயோகித்துவிட்டு
உடனடியாகவே
பாதுகாப்பான குப்பை வாளிகளில்
போட்டுவிட வேண்டும்.
குடும்பத்தவர்களோடு ஒரே அறையில் இருக்கும் போது மட்டுமல்லாது
தனியாக இருக்கும் போதும் இவ்வாறு செய்ய வேண்டும்.
தும்மல் இருமல் வந்தால் உடனே மூக்கு, வாயைத் தொட்ட கைகளை சோப் போட்டுச் சுத்தம் செய்யுங்கள்.
அத்தகைய நோயுள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது நோய்த் தடுப்பு முகமூடி அணிவது நல்லது.
அவை கிடைப்பதையும், கிடைத்தாலும் அதனோடு இயங்க முடிகிறதா என்பதையும் பொறுத்தது.
ஆயினும் அவர்கள் அறிகுறிகள் தொடங்கிய நாள் முதல் ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது.
வலிவு குறைந்தவர்கள்
ஆயினும் H1N1தொற்றினால் ஆபத்தான விளைவுகள் எற்படக் கூடியவர்கள்
பஸ், மார்க்கட்,
போன்ற எந்தப் பொது இடங்களுக்குப்
போகும் போதும்
நோய்த் தடுப்பு முகமூடி அணிவதன் மூலம்
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
யாருக்கு இந்நோயினால் ஆபத்துகள் அதிகம்?
கர்ப்பணிப் பெண்கள்,
குழந்தைகள் அதிலும் முக்கியமாக 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள், இருதய நோயாளர்கள்,
HIV தொற்று உள்ளவர்கள்,
நீரிழிவு போன்ற நீண்ட கால நோயுள்ளவர்கள்,
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஆளானவர்கள்
மேலதிக அவதானம் எடுப்பது அவசியம்.
உங்களைப் பாதுகாத்துக் கொள்ள
ஆரோக்கியமான மனிதர்களைப் பொறுத்த வரையில், புளு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களிலிருந்து குறைந்தது ஆறு அடி தூரமாவது விலகி இருப்பதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
இதன் மூலம் அவரது சுவாசம், தும்மல். இருமல் ஆகியவற்றால் பரவும் கிருமிகளிலிருந்து நீங்கள் தப்பிவிடலாம்.
அத்துடன் அடிக்கடி கை கழுவுவதும் அவசியமாகும். நோயுற்றவர் இருமும் போது அல்லது தும்மும்போது பரவிய கிருமிகள் மேசை, கதிரை, கதவு கைப்பிடி, போன்றவற்றில் பட்டிருக்கும்.
அவர்கள் மூக்குச் சீறிய கை பட்டாலும் அவ்வாறு நேரும்.
உங்கள் கைகள் அதில் பட்டால்,
அதிலுள்ள கிருமி உங்கள் கைகளுக்குப் பரவும்.
பின் நீங்கள் உங்கள் கண், மூக்கு வாய் போன்றவற்றை
யதேட்சையாகத் தொடும்போது
அதனூடாக உங்களுக்கும் பரவும்.
இதை கை கழுவுவதன் மூலம் தடுக்கலாம்.
இந்த வைரஸ் கிருமியானது
உருக்குக் கைபிடி போன்ற கடினமான பொருட்களில் 24 மணிநேரம் வரையும்,
துணி உடைகள் போன்றவற்றில் 12 மணிநேரம் வரையும்
உயிர்வாழக் கூடியவை என்பதால் அடிக்கடி கை கழுவுவதும்,
ஏனைய சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதும் உங்களைக் காப்பாற்றும்.
முகமூடி அணிவது போலியான பாதுகாப்பு உணர்வு தருவதால் பலரும் மேற் கூறிய சுகாதாரப் பழக்கங்களை அம்போ எனக் கை வி்ட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
முகமூடி அணிவது அவசியமா என்பதையிட்டு CDC (Centres forDisese Control and Prevention) உத்தியோக பூர்வ அறிக்கை படிக்க
இங்கே சொடுக்கவும்
இந் நோய் பற்றி விபரமாகப் படிக்க
இங்கே சொடுக்கவும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.