Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘முதுகு வலி’ Category

>‘சரியான நாரி வலி (கீழ் முதுகு வலி). திரும்பிப் பார்க்க, சரிஞ்சு படுக்க ஒண்டுமே முடியுதில்லை’ என்று வேதனையுடன் சொன்னவர் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

அவருடைய பிரச்சனையை விபரமாகக் கேட்டு அறிந்ததிலும், முழுமையாகப் பரிசோதித்துப் பார்த்ததிலும் அவரது வலிக்கு அடிப்படைக் காரணம் கடுமையான நோய் அல்ல எனத் தெளிவாகத் தெரிந்தது. வெறும் தசைப் பிடிப்புத்தான்.எனவே சில இலகுவான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்து, மருந்துகளும் எழுதிக் கொடுத்தேன்.

இருந்தபோதும் அவர் கதிரையிலிருந்து எழவில்லை. முகத்தைப் பார்த்தால் அதில் திருப்தியைக் காணவில்லை.

‘வேறையும் ஏதாவது பிரச்சனையும் இருக்கோ’ எனக் கேட்டேன்.

பரிசோதனைப் பயிற்சி படங்கள் நன்றி:- www.netterimages.com/image/1705.htm

‘இல்லை ….’ என்றவர், தயக்கத்துடன் ‘..ஒரு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால் நல்லதுதானே’ எனக் கேள்வியாக தனது விருப்பை மறைமுகமாகத் தெரிவித்தார்.நாரிப்பிடிப்பிற்கு (Low Backache)பல காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்படிப்பு (Muscular Pain), எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலி(Arthritis), முள்ளத்தண்டு இடைத்தட்டம் விலகல் (Prolapsed Disc), அதனால் நரம்புகள் அழுத்தப்பட்டு வலி (Sciatica) மோசமாகி கால்களுக்கு பரவுதல் எனப் பல.

நோயின் அறிகுறிகளை தெளிவாகக் கேட்டு அறிவதாலும், உடலைப் பரிசோதித்துப் பார்ப்பதாலும் வலிக்கான அடிப்படைக் காரணத்தை மருத்துவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அதற்கு ஏற்பவே சிகிச்சைகளையும் வழங்குவார்கள். இது போதுமானது.

தேவை ஏற்பட்டால் மட்டுமே இரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகளையும், எக்ஸ் ரேயையும் நாடுவார்கள்.

இப்பொழுது மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. சாதாரண எக்ஸ் ரே, சிடி ஸ்கான் (CT) , எம்ஆர்.ஐ (MRI)போன்ற பரிசோதனைகள் இலகுவாகச் கிடைக்கின்றன.

இப் பரிசோதனைகள் பற்றி நோயாளர்களும் நிறையவே அறிந்துள்ளார்கள். பண வசதி இருந்தால் உடனடியாகச் செய்யக் கூடியதாகவும் உள்ளது. அதனால் நோயளர்களதும் உறவினர்களதும் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. இவற்றைச் செய்துவிட்டால் உடனடியாக நோயைத்தெளிவாகக் கண்டுபிடித்து விடலாம், விரைவில் குணமாக்கி விடும் என நம்புகிறார்கள். எனவே இவற்றைச் செய்யும்படி மருத்துவர்களையும் நெருக்குகிறார்கள்.ஒரு ஒரு ஆய்வின் முடிவு இதனைத் உறுதியாக வெளிப்படுத்துகிறது. அதாவது, எக்ஸ் ரே பரிசோதனையால் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிந்த போதும் 80 சதவிகிதமான நோயாளிகள் அதனைச் செய்ய வேண்டும் என்றே விரும்பியதாக தெரிய வந்தது.

இதன் மூலம் நோயாளிகளின் விருப்பத்திற்கும் மருத்துவ ரீதியான உண்மைகளுக்கும் இடையே பாரிய இடைவெளி இருப்பது தெளிவாகிறது.

மருத்துவர் கடுமையான நோய் இருக்கிறது என உணர்ந்து அதைக் கண்டுபிடிக்க, அல்லது உறுதிப்படுத்த மேற்கூறிய பரிசோதனைகள் தேவை எனக் கருதினால் ஒழிய இப் பரிசோதனைகளால் நோயாளர்களால் எதிர்பார்க்கப்படும் பலன் கிட்டப் போவதில்லை. இதனை 1800 நோயாளிகளைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு 6 ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரபல மருத்துவ சஞ்சிகையான The Lancet அண்மையில் (February 7, 2009) ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தது.

ஆயினும் நோயாளர்களின் தேர்வுகளினதும் விருப்பங்களினதும் அடிப்படையில் தேவையற்ற பல எக்ஸ் ரே பரிசேதனைகள் செய்யப்படுவதை மறுக்க முடியாது. இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேசியரீதியான மருத்துவச் செலவில் வீண்விரயத்தை குறைக்க முடியும்.

நோயாளிகளைப் பொறுத்தவரையில் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணம் உண்டு. அவசியமற்ற ரேடியம் கதர்வீச்சிற்கு ஆளாவதால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்தான பின்வளைவுகளைத் தடுப்பதற்காக அவியமற்ற எக்ஸ் ரேகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே அது. இது மிக முக்கியமானதல்லவா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:-

ஹாய் நலமா? தினக்குரல்

Reblog this post [with Zemanta]

Read Full Post »

>நாரிப்பிடிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன? வைத்தியரிடம் செல்ல வேண்டிய தருணங்கள் போன்ற விடயங்களை முன்னொரு தடவை பார்த்தோம்.

இனி அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

உங்கள் நாளாந்த வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு பொருளைத் தூக்க வேண்டுமாயின், தூக்க இருக்கும் பொருளின் பாரம் உங்கள் சக்திக்கு மேற்பட்டதெனில் அதனை நீங்களே தனியே தூக்க முற்பட வேண்டாம். உதவிக்கு ஒருவரை அழையுங்கள்.

தரையிலிருந்து ஏதாவது பொருளை எடுக்க வேண்டுமாயின் அதனைக் குனிந்து எடுக்க வேண்டாம். பாரமான பொருட்களை என்றல்ல, பாரமற்ற பென்சில் போன்ற சிறிய பொருட்களாக இருந்தாலும் கூட முதலாவது படத்தில் காட்டியவாறு முதுகை வளைத்துக் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள்.

மாறாக இரண்டாவது படத்தில் காட்டியவாறு கால்களைச் சற்று அகட்டி வைத்து, பாதங்கள் தரையில் பொறுத்திருக்குமாறு நின்ற பின், முதுகு வளையாதவாறு, முழங்கால்களை மடித்து உட்கார்ந்து எடுங்கள்.

அவ்வாறு எடுக்கும்போது அல்லது தூக்கும்போது முதுகை வளைக்காது இருப்பதுடன் பொருளை நெஞ்சுக்கு அருகே வைத்துத் தூக்குங்கள். இவ்வாறு தூக்கும்போது முதுகை பக்கவாட்டிற்கு ஆட்டி அசைந்து திருப்பாமல் இருப்பதும் முக்கியமாகும்.

ஒரு பாரமான பொருளை, உதாரணத்திற்கு அலுமாரியை நகர்த்த வேண்டிய அவசியம் நேர்ந்தால் அதனை கைகளால் இழுப்பதைத் தவிர்த்து முதுகுப் புறத்தால் தள்ளி நகர்த்த முயற்சியுங்கள்.

இருப்பதுவும் …

உட்காரும்போது உயரம் குறைந்த கதிரைகளில் உட்காருவதைத் தவிருங்கள். சாப்பாட்டு மேசைக் கதிரைகள் போன்றவை பொதுவாக சரியான உயரம் கொண்டவையாகும். உட்காரும்போது உங்கள் முதுகு எவ்வாறு இருக்க வேண்டும். ‘வளைந்து உட்காராதே முதுகை செங்குத்தாக நிமிர்த்தியபடி உட்காரு’ என்றே பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை ஆலோசனை கூறுகிறார்கள்.

ஆனால் இப்பொழுது அபர்டீனிலுள்ள வூட்என்ட் வைத்தியசாலையில் (Woodend Hospital in Aberdeen) எம்.ஆர்.ஐ ஸ்கான் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வு அதனை மறுதலிக்கிறது. மேசையை நோக்கி முன்பக்கமாக வளைந்து உட்கார்வதானது முள்ளந்தண்டின் கீழ்ப்புறத்தில் தேய்மானத்தை ஏற்படுத்தும். ஆனால் நடுவில் உள்ள படத்தைப்போல நிமிர்ந்து உட்காருவது முள்ளெலும்புகளில் கூடிய அழுத்தத்தை கொடுத்து அவற்றின் நேர் ஒழுங்கையே குறைத்து விடுவதாகக் கூறுகிறார்கள்.

மாறாக மூன்றாவது படத்தில் காட்டியவாறு இடைப்பட்ட நிலையில் உட்காருவதே முள்ளெலும்புகளுக்கு குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மனித உடலானது நீண்டநேரம் நிமிர்ந்து உட்காருவதற்காக அமைக்கப்பட்டது அல்ல. ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை அதையே செய்ய வைக்கிறது. எனவே நாம் நீண்ட நேரம் உட்காருவதால் முள்ளெலும்புகளுகான பதிப்பை குறைக்க வேண்டுமாயின், சற்று சாய்ந்த நிலையில் அதாவது 135 பாகை பின்புறம் சாய்ந்து உட்காருவதே சிறந்தது.

வேலை செய்யும்போதோ அல்லது பிரயாணம் பண்ணும்போதோ நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே நிலையில் உட்கார்வது முதுகெலும்பிற்கு அதீத அழுத்தத்தைக் கொடுக்கும். அந்நேரங்களில் மணித்தியாலயத்திற்கு ஒரு முறையாவது சற்று எழுந்து நின்று தசைகளை நீட்டி நிமிர்த்தி அவற்றிற்கு ஓய்வு கொடுங்கள்.

அதேபோல கார் ஓட்டும்போது உங்கள் ஓட்டுனர் ஆசனத்தின் முதுகு சாய்க்கும் பகுதியானது பதினைந்து பாகையளவு பிற்புறம் சாய்ந்திருக்கும் படி ஒழுங்கு படுத்த வேண்டும். கைகள் தளர்வாக இருப்பதுடன் ஸ்டியரிங்கை இறுகப் பற்றுவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் டிரைவிங் சீட்டை சற்று முன்னுக்கு நகர்தினால் இது சாத்தியமாகும்.

முதுகை முற்புறம் வளைந்து, ஸ்டியரிங்கை நோக்கிக கூனிக் கொண்டிருப்பது போல அமர்ந்து கார் ஓட்டுவதைத் தவிருங்கள்.


மேசையருகே உட்கார்ந்து எழுதும்போது முதுகை முன்பக்கமாக வளைந்து சரிந்திருப்பது கூடாது. கதிரையை மேசைக்கு அருகில் நகர்த்தி வைத்தால் முதுகு வளையாது. உட்காருவது பற்றிக் கூறியதற்கு இணங்க நிமிர்ந்திருந்து அல்லது சற்று பின்புறம் சாய்ந்திருந்து எழுதுங்கள்.

பொதுவாக குதி உயர்ந்த காலணிகளை அணிவதைத் தவிருங்கள். ஒரு அங்குலத்திற்கு குறைவான உயரமுள்ள குதிப்பகுதியுள்ள காலணிகள் நாரிப்பிடிப்பைத் தடுப்பதற்கு நல்லதென கூறுகிறார்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்வதும், எடையை அதிகரிக்காது பேணுவதும் நாரி வலி ஏற்படாது தடுப்பதில் பங்களிக்கும்.

நீங்கள் மரக்கறி வெட்டும்போது, தேங்காய் துருவும்போது அல்லது உடைகளை அழுத்தும்போது (Ironing) ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்க நேரிடும். இது முள்ளதண்டிற்கு கூடிய வேலைப்பளுவைக் கொடுக்கும். இதைத் தடுப்பதற்கு ஒரு காலை அரை அடியுள்ள பலகையில் உயர்த்தி வையுங்கள். ஒரே காலை தொடர்ந்து உயர்த்தி வைக்க வேண்டாம். 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கால்களை மாற்றி உயர்த்தி வைக்கவும். இதனால் முள்ளதண்டிற்கான கூடிய வேலைப்பளு குறையும்.

சாதாரண நேரங்களில் நிற்கும் போது உங்கள் உடலானது நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதாவது காது, தோள் மூட்டு, இடுப்பு மூட்டு ஆகியன ஒரு நேர்கோட்டில் அமைய வேண்டும். தொந்தியை முற்புறம் தொங்கவிட்டு, முதுகை வளைக்காது வயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால் முதுகும் நிமிர்ந்து சரியான தோற்றத்தில் நிற்க உதவும்.

படுப்பதுவும் …

நாம் தினமும் தொடர்ந்து ஒரே இடத்தில், ஒரே நிலையில் தொடர்ந்திருப்பது தூங்கும் போதுதான். சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் படுக்கையில் செலவழிக்கிறோம். எனவே அந்தளவு நேரமும் எமது முள்ளந்தண்டானது அழுத்தம் இன்றி தளர்ச்சியாக இருப்பது அவசியம். அதாவது பகல் வேளையில் நிமிர்ந்து நிற்கும்போது எவ்வாறு முள்ளந்தண்டின் இயல்பான வளைவுகள் பேணப்படுகின்றனவோ அவ்வாறே படுக்கையிலும் பேணப்பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் படுக்கையும் தலையணையும் அமைய வேண்டும்.

சரியான படுக்கையானது வெறும் தரையோ, வெறும் பலகையோ அல்ல. அதே போல தளர்ச்சியான ஸ்பிரிங் உள்ள கட்டில்களோ சாக்குக் கட்டில்கள் போன்றவையும் அல்ல. எமது உடலின் இயற்கையான வளைவுகளை பேணத்தக்களவு மிருதுவான படுக்கையே ஏற்றது. உதாரணமாக பலகை மேல் சற்று இறுக்கமான மெத்தை போட்ட படுக்கை பொருத்தமாக இருக்கும்

தலையானது உங்கள் தலைக்கும் படுக்கைக்கும் இடையிலான இடத்தை சரியான அளவில் நிரப்புதற்கு ஏற்ற பருமனுடையதாக இருக்க வேண்டும். முதற் படத்தில் முள்ளந் தண்டானது இடுப்பு முதல் தலை வரை ஒரே நேராக இருக்கின்றன. மெத்தையும் தலையணையும் அதற்கேற்ற பருமனும் அடர்த்தியும் கொண்டிருக்கின்றன. இரண்டாவது படத்திலுள்ள கட்டில் மிகவும் தளர்ச்சியானதாக இருப்பதால் உங்கள் உடற்பாரத்தால் முள்ளந்தண்டு வளைந்து கோணும்படி செய்துவிடுகின்றன. இது ஆரோக்கியமானதல்ல

மூன்றாவது படத்தில் உள்ளது போன்ற கடுமையான சற்றும் இசைந்து கொடுக்காத தரை அல்லது பலகை வாங்கு போன்ற படுக்கை ஏற்றதல்ல என்பது புரிந்திருக்கும். காரணம் இதுவும் உங்கள் முள்ளந்தண்டின் இயல்பான வளைவுகளை பேணுவதில்லை.

ஒரு பக்கம் சரிந்து, முழங்கால்களை சற்று மடித்துப் படுப்பதுதான் தூங்குவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிலையாகும். முழங்கால்களுக்கு இடையே ஒரு சிறிய தலையணையை வைப்பது மேலும் சொகுசாக அமையும். குப்புற முகம் புதைத்து வயிற்றில் அழுத்துமாறு ஒருபோதும் படுக்க வேண்டாம். மாறாக நிமிர்ந்து படுப்பதாயின் முழங்கால்களுக்கு கீழே ஒரு தலையணை வையுங்கள். இவ்வாறு தூங்கும்போது அடிநாரிக்கு கீழே ஒரு சிறிய தலையணை வைப்பதும் நல்லது.

பயிற்சிப்பதுவும் …

முள்ளத் தண்டை அண்டியுள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்பதனால் வலி குறைவதுடன் மீண்டும் மீண்டும் பிடிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். இரண்டு முழங்கால்களையும் குத்தென மடித்துப் படுங்கள். இப்பொழுது உங்கள் இடது முழங்காலை மெதுவாக நெஞ்சைத் தொடுவது போல உயர்த்துங்கள். இவ்வாறு செய்யும்போது உங்கள் நாரியின் அடிப்புறம் அடியிலுள்ள கட்டிலோடு அல்லது தரையோடு நன்கு அழுத்துப்பட வேண்டும். இவ்வாறு 5 செகண்ட் செய்த பின்னர் கால்களைப் பழைய நிலைக்கு கொண்டு சென்று தளரவிடுங்கள். இனி வலது காலுக்கும் இதே பயிற்சியைச் செய்யுங்கள். மாறி மாறி ஒவ்வொரு காலுக்கும் பத்துத் தடவை மீளச் செய்யுங்கள்.

மேற் கூறியது முதுகுப்புற தசைகளுக்கான பயிற்சி. இதைத் தவிர நீந்துவது, விரைவு நடை போன்ற ஏனைய பயிற்சிகளையும் செய்து வாருங்கள். இவை நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெற மட்டுமின்றி, உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தையும் பேண உதவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்

Read Full Post »

>
முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம்.

இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம்.

எப்படி ஆனதோ?

நாரிப்பிடிப்பு ஏன் வருகிறது?

இவ்வாறு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்பிடிப்புக் காரணமான ஏற்படலாம். சவ்வுகளில் சுளுக்குக் வந்ததன் காரணமாக இது ஏற்படலாம். அல்லது எலும்பு மூட்டுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் தோன்றலாம். முள்ளந் தண்டின் இடைத்தட்டம் விலகுவதாலும் ஏற்படலாம்.


இதில் கடைசியாகக் கூறிய இடைத்தட்டம் விலகுவது என்பது சற்று பாரதூரமான பிரச்சனையாகும். விளக்கப் படத்தைப் பாருங்கள் முள்ளந்தண்டு எலும்புகளினிடையே (Vertebra) இருப்பது இடைத்தட்டம் (Disc) ஆகும். சிமென்டு கற்களை முள்ளந்தண்டு எலும்புகளாக கற்பனை பண்ணினால் அவற்றை இணைக்கும் சாந்து போன்றது இடைத்தட்டம். இந்த இடைத்தட்டம் ஊடாக முண்நாணிலிருந்து நரம்பு (Nerve) வெளிவருகிறது தெரிகிறது அல்லவா?


நீங்கள் வழமைக்கு மாறாக குனிந்து வேலை செய்யும்போது அல்லது உங்களுக்குப் பழக்கமற்ற பார வேலை செய்யும்போது எலும்புகளிடையே இருக்கும் இடைத்தட்டம் சற்றுப் பிதுங்கி வெளியே வரக் கூடும். அப்பொழுது அது அருகிலிருக்கும் நரம்பை அழுத்தலாம். பொதுவாக முதுகை வளைத்துத் தூக்கும் போதே இது நிகழ்வதுண்டு. இது திடீரென நிகழும். அந்நேரத்தில் சடுதியான கடுமையான வலி ஏற்படும். எந்தக் கணத்தில் இது நிகழ்ந்தது என்பதை பாதிக்கப்பட்ட நபர் துல்லியமாகக் கூறக்.கூடியதாக இருக்கும்.

ஆனால் இது எப்பொழுதுமே இவ்வாறுதான் நிகழும் என்பதில்லை.

பெரும்பாலனவர்களுக்கு என்ன செய்யும் போது அல்லது எந் நேரத்தில் இது நிகழ்ந்தது என்பது தெரிவதில்லை. படிப்படியாகவும் நாரிப்பிடிப்பு வரலாம். ஆயினும் வலியின் கடுமை எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. பரசிட்டமோல் போட்டு சமாளிக்கக் கூடியளவு லேசாக இருக்கலாம். அல்லது வலியின் உபாதை தாங்க முடியாத அளவிற்கு கடுமையாக இருக்கலாம். உங்களது நாளாந்தக் கடமைகளைச் செய்ய முடியாது படுக்கையில் சில நாட்களுக்குக் கிடத்தவும் கூடும்.

இருந்த போதும் சில இலகுவான நடைமுறைப் பயிற்சிகள் செய்தால் அதிலிருந்து நீங்கள் சுலபமாக விடுபட முடியூம்.

நிற்பதுவூம் நடப்பதுவும்

இவ்வாறான பிடிப்பு ஏற்படும்போது நீங்கள் எவ்வாறு நிற்கிறீர்கள், படுக்கிறீர்கள், உட்காருகிறீர்கள் என்பன யாவும் முக்கியமானவைதான். படுக்கும்போது உங்கள் பாரத்தை முள்ளந்தண்டில் சுமக்க விடாது பாதுகாப்பது அவசியமாகும்.

இதனை எவ்வாறு செய்வது?

படுக்கும்போது, நேராக நிமிர்ந்து படுங்கள். இப்பொழுது உங்கள் முழங்கால்களுக்கு கீழே, விளக்கப் படத்தில் காட்டியவாறு, ஒரு தலையணையை வையுங்கள். இவ்வாறு முழங்கால்களைச் சற்று மடித்துப் படுப்பது சுகத்தைக் கொடுக்கும்.


தலையணை கிடைக்காவிட்டால் முழங்கால்களைக் குத்தென நிமித்தியபடி மடித்துப் படுங்களேன்.

அதுவும் முடியாவிட்டால் தரையில் படுத்தபடி உங்கள் கால்மாட்டில் ஒரு நாற்காலியை வையுங்கள். இப்பொழுது உங்கள் தொடைகள் நிமிர்ந்திருக்க கீழ்கால்களை உயர்த்தி நாற்காலயில் வையுங்கள். இடுப்பும் முழங்கால்களும் இப்பொழுது மடிந்திருப்பதால் முள்ளெலும்பின் பழுக் குறைந்து வலி தணியும். ஓரிரு நாட்களுக்கு இவ்வாறு ஆறுதல் எடுக்க குணமாகும்.

ஆனால் நாரிப்பிடிப்பு எனக் கூறி நீண்ட நாட்களுக்கு படுக்கையிலிருந்து ஆறுதல் எடுப்பது அறவே கூடாது. ஏனெனில் நீண்ட ஆறுதல் எடுத்தல் உங்கள் தசைகளைப் பலவீனப்படுத்திவிடும். அதனால் குணமடைவதும் தாமதமாகும். வலியிருந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு சற்று உலாவுவது நல்லது. மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது எழுந்து அவ்வாறு நடப்பது அவசியம்.

சுடுதண்ணி ஒத்தடம் கொடுப்பது அல்லது சிவப்பு லைட் (Infra Red Light) பிடிப்பதும் வலியைத் தணிக்க உதவும். மாறாக ஐஸ் பை வைப்பதுவும் உதவாலாம். வலி கடுமையாக இருந்தால் அஸ்பிரின், பரசிட்டமோல் அல்லது இபூபுறுவன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை எடுக்க நேரிடலாம்.

நாரிப்பிடிப்புக்கு டொக்டரிடம் செல்ல வேண்டுமா?

நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன போன்ற விடயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் நாரிப் பிடிப்புகள் அனைத்துமே இவ்வாறு உங்கள் சுயமுயற்சியால் குணமாக்கக் கூடியவை அல்ல!

வலி தாங்க முடியாததாக இருக்கலாம்.
அல்லது உங்கள் நாரிப்பிடிப்பிற்கு வேறு பாரதூரமான அடிப்படைக் காரணங்கள் இருக்கலாம். அவ்வாறான தருணங்களில் ஹலோ டொக்டர் என அழைத்து உங்கள் வைத்தியரை நாட வேண்டியதுதான். வேறு வழியில்லை.

அவ்வாறு வைத்திய ஆலோசனை பெற வேண்டிய தருணங்கள் எவை?

உங்கள் நாரிப்பிடிப்பின் வலியானது பிடித்த இடத்தில் மட்டும், மட்டுப்பட்டு நிற்காமல் கால்களுக்கு, அதிலும் முக்கியமாக முழங்கால்களுக்கு கீழும் பரவுமானால் நரம்புகள் முள்ளெலும்புகளிடையே அழுத்தபடுவது காரணமாகலாம். அவ்வாறெனில் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

 உங்கள் கால், பாதம், பிறப்புறுப்புப் பகுதி அல்லது மலவாயிலை அண்டிய பகுதிகளில் உணர்வு குறைந்து மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படுமாயின் அது நரம்புகள் பாதிப்புற்றதால் இருக்கலாம். நீங்கள் நிச்சயம் வைத்தியரை அணுகவேண்டும்.

 அதேபோல உங்களை அறியாது, அதாவது உங்கள் கட்டுப்பாடின்றி மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது மிக பாரதூரமான அறிகுறியாகும். அதாவது மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பது நரம்புகள் பாதிக்கக்பட்டதின் அறிகுறியாகும். கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றே தீரவேண்டும்.

 காய்ச்சல், ஓங்காளம், வாந்தி, வயிற்று வலி, உடற் பலயீனம், கடுமையான வியர்வை போன்ற அறிகுறிகள் நாரிப்பிடிப்புடன் சேர்ந்து வருமாயின் அது தொற்று நோய், சிறுநீரகக் குத்து, சதைய நோய் போன்ற எதாவது ஒன்றின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதால் வைத்திய ஆலோசனை அவசியம் தேவை.

 வீட்டிற்குள்ளேயே நடமாடித் திரிய முடியாதபடி வலி மிகக் கடுமையாக இருந்தாலும் நீங்கள் வைத்தியரைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

 பெரும்பாலான முதுகு, நாரி வலிகள் மேற் கூறிய நடைமுறைச் சிகிச்சைகளுடன் ஓரிரு வாரங்களுக்குள் குணமாகிவிடும். அவ்வாறு குணமடையாவிட்டாலும் வைத்தியரைக் காண்பது அவசியம்.

மாத்திரைகள், வெளிப் பூச்சு மருந்துகள், பயிற்சிகள் முதல் சத்திர சிகிச்சை வரை பல விதமான சிகிச்சைகள் உண்டு. உங்கள் நோயின் நிலைக்கு ஏற்ற சிகிச்சையை வைத்தியர் தீர்மானிப்பார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி

Read Full Post »