Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘முதுமை’ Category

உடல் தளர்ந்து, கண்கள் மூடியும், திறவாமலும் சோர்ந்திருந்ததன. அவரது முக்கிய பிரச்சனை ‘நித்திரை வருகுதில்லை’ என்பதுதான்.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன.

“பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்” என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள்.

இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான்.

 • பகலெல்லாம் தூங்கி விழுவது,
 • நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும்,
 • அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும்

பல வயதானவர்ளைப் பாதிக்கும் பிரச்சனைகள் தான்.

இதற்குக் காரணம் வயதாகும் போது எமது உடலியக்கத்தின் ஒழுங்கு லயத்தில் ஏற்படும் குழப்பங்களே ஆகும். இதனை முன்நகர்ந்த நித்திரை (Advanced Sleep Phace) என்பார்கள்.

அதாவது தூக்க நேரம் முன்னகர்கிறது. உண்மையில் இது தூக்கக் குழப்பமே அன்றித் தூக்கக் குறைபாடு அல்ல. அத்தோடு தூக்கக் குறைபாடும் இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

முன்நகர்ந்த நித்திரை

பொதுவாக மனிதர்களுக்கு 6 முதல் 7 மணிநேர நித்திரை தினசரி தேவை.அவ்வாறு தூங்கினால்தான் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். தூக்கம் குறைந்தால் அல்லது குழப்பமான தூக்கமாக இருந்தால் உடல் சோர்வடையும், மனத்தை ஒருமுகப்படுத்த முடியாது. சிந்தனைத் திறனும் குறையும்.

மேற் கூறிய முன்நகர்ந்த நித்திரையைத் தவிர வேறு பல காரணங்களாலும் வயதானவர்களின் தூக்கம் குறையலாம்.

நோய்கள் காரணமாகலாம்

 • மூட்டு வாதம்,
 • பார்க்கின்சன் நோய்,
 • ஆஸ்த்மா,
 • இருதய நோய்கள்,
 • உணவுக் கால்வாய் நோய்கள்,
 • பக்கவாதம்,
 • மனச் சோர்வு

போன்ற இன்னும் பல்வேறு மூப்புக் கால நோய்களும் அவர்களது தூக்கததைக் குறைக்கும்.

மருந்துகளும் காரணமாகலாம்

வயதாகும் போது பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கக் கூடும் அல்லவா? ஆஸ்தமா, பிரஜர், தைரொயிட் சுரப்பி நோய்கள், மனச் சஞசலம் போன்ற பல்வேறு நோய்களுக்கு தினசரி உபயோகிக்கும் மருந்துகளும் தூக்கக் குழப்பத்திற்குக் காரணமாகிறது.

எனவே தூக்கக் குழப்பம் உங்களைத் துன்பப்படுத்துகிறதாயின் உங்கள் வைத்தியருடன் வெளிப்படையாகக் கதையுங்கள்.

 • அவரது ஆலோசனைகள் உங்கள் பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டு பிடிக்கவும்,
 • பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் உதவும்.
 • வேறு நோய்களுக்கு எடுக்கும் மருந்துகள்தான் காரணம் என அவர் கருதினால் அம் மருந்துகள் உட்கொள்ளும் நேரத்தை மாற்றக் கூடும் அல்லது மருந்தையே மாற்றவும் கூடும்.

நீங்களும் முயற்சியுங்கள்

உங்கள் தூக்கக் குழப்பத்தை தீர்க்க நீங்களும் சில முயற்சிகள் செய்யலாம்.

 • உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் எந்தச் செய்கையிலும் படுக்கைக்குப் போவதற்கு முன்னரான ஒரு மணி நேரத்திற்குள் ஈடுபட வேண்டாம்.
 • உதாரணமாக விறுவிறுப்பான தொடர் நாடகங்களை ரீவியில் பார்ப்பது, ஆர்வமூட்டும் நூல்களைப் படிப்பது, சுவார்ஸமான விவாதங்களில் ஈடுபடுவது, உணர்ச்சி மயப்படுவது போன்ற செய்கைகளை படுக்கைக்குச் செல்லும் தருணங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
 • கடுமையான வெளிச்சமும், இரைச்சலான சூழலும் உங்களைத் தூங்கவிடாது. எனவே ஆரவரமற்ற, ஒளி குறைந்த சூழலில் படுக்கைக்குப் போவதற்கு முந்திய சில நிமிடங்களைக் கழியுங்கள்.
 • படுக்குமிடமும் அத்தகையதாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே தெரியும்தானே.

 • நரம்புகளைத் தூண்டும் பானங்களான கோப்பி, மது, கோக் போன்றவற்றை மதியத்திற்குப் பின் அருந்த வேண்டாம்.
 • மதியத்திற்குப் பின் அதிக நீராகாரம் அருந்த வேண்டாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ நேர்ந்தால் தூக்கம் குழம்பும் அல்லவா?
 • தூங்கப் போவதற்கான நேரத்தை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள். உதாரணமாக இரவு 10 மணிக்குப் படுத்து காலை 5 மணிக்கு எழுவது போன்ற உங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு ஒழுங்கான நேர அட்டவணையை தினசரி தவறாமல் கடைப்பிடியுங்கள்.
 • மதிய உணவிற்குப் பின் தினசரி தூங்குபவராயின் அதனை 15 முதல் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்துங்கள்.
 • மாலை நேரத்தில் சற்று உலாவச் செல்லுங்கள். தினசரி கை கால்களைச சற்று நீட்டி மடக்கி சிறிது உடற் பயிற்சி செய்யுங்கள்.

இவற்கைக் கடைப்பிடித்துப் பாருங்கள் உங்கள் தூக்கத் தொல்லை தீரும்.

ஹாய் நலமா வலைப்பூவில் எழுதிய கட்டுரையின் மீள் பதிவு

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

இல்லம் கழிவறை போலாவதைத் தடுக்கும் சிறுநீர் அகற்றும் குழாய்

ஒரு வீட்டினுள் நுழைகிறீர்கள். கழிவறை போல நாற்றம் விரட்ட முனைகிறது. உங்களையறியாது கை மூக்கைப் பொத்துகிறது. “ஐயாவிற்கு (அல்லது அம்மாவிற்கு) பாத்ரூம் போவதற்கிடையில் சிந்திவிடுகிறது. கொன்ரோல் இல்லை” என்கிறார் வீட்டுக்காரர் மிகுந்த சங்கோசத்துடன். அவமானம் மட்டுமல்ல சுகாதரக் கேடும் கூட.

இதற்கான தீர்வு சிறுநீர் அகற்றும் குழாய்தான் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. மாறாக தெளிவாகப் புரிந்து, சரியாகப் பயன்படுத்தி மற்றவர் மதிக்கும் வண்ணம் உயர் தொழிலைத் தொடரும் வெற்றியாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆம்! சிறுநீர் அகற்றும் குழாய் இன்று பல முதியவர்களுக்கு இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. அவர்களின் உற்ற துணையாக வாழ்வின் பங்காளியாகி விட்டது.

கழிப்பதின் சுகமும் அதைக் கெடுப்பவர்களும் பற்றி  கழிப்பறையில் அழைப்பு

இரண்டு உதாரணங்கள்.

நான் வேலையாக இருந்தபோது திடீரெனக் கழிவறை நாற்றம் பொறுக்க முடியாதளவு வீச ஆரம்பித்தது. மருத்துமனையின் பின்புறத்தில்தான் கழிவறை. எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பார்கள். இன்று ஏன் இத்தனை நாற்றம் என எண்ணிக் கொண்டிருக்கையில் ‘நிறுத்து உன் சிந்தனையை’ எனச் சொல்வது போல நுழைந்தார் அந்த முதியவர். நாற்றம் அவரது ஆடைகளிலிருந்துதான்  அபரித விளைச்சல் கொண்டிருந்தது.

அவரால் சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மருந்துகள் கொடுத்தும் முடியவில்லை. உடைகள், படுக்கை, உற்காரும் நாற்காலி யாவும் புனித நீராபிசேகம் பெற்றதால் சிறுநீர் அகற்றும் குழாய் போட வேண்டியதாயிற்று.

மற்றவரும் முதியவர்தான். “மூத்திரம் சரியாகப் போகுதில்லை” என்ற இவர் சொன்ன பிரச்சனையைச் சரியாகப் புரியாத சுதேச மருத்துவர் தனது கல்வி சாராத மருந்தைக் கொடுத்த போது பிரச்சனை மோசமாகியது.

சிறுநீரை அதிகம் உற்பத்தி செய்யும் (Lasix) மருந்து அது. உள்ளே உள்ளதே வெளியேற முடியாதிருக்கையில் மேலும் சிறுநீரை உற்பத்தியாக்கும் மருந்தைக் குடித்ததால் வயிறு முட்டி வேதனை மோசமடைந்தது. எந்நேரமும் சிறுநீர்கழிக்க வேண்டும் போன்ற உணர்வு. ஆனால் சிறுநீர் ஒரு சில சொட்டுகள் தவிர முழுமையாக வெளியேற மறுத்தது.

பரிசோதனைக்காகப் படுக்கையில் போடு முன்னரே அவரது அறிகுறிகளிருந்து அவருக்குள்ளது புரஸ்ரேட் பிரச்சனை என்பது தெளிவாகத் தெரிந்தது. அவருக்கும் சிறுநீர் அகற்றும் குழாய் ஒன்றே தீர்வாயிற்று.

இது சிறுநீர்த் துவராம் ஊடாகச் செலுத்தப்படும் ஒரு குழாயாகும். அதன் ஒரு முனை சிறு நீர்ப்பையினுள் செலுத்தப்பட்டு இருக்கும். வெளியே உள்ள முனை ஒரு பிளாஸ்டிக் பையுடன் இணைந்திருக்கும். சலப்பையினுள் உள்ள சிறுநீரை தொடர்ச்சியாக அகற்றி, வெளியிலுள்ள அப் பையினுள் சேர வைக்கிறது.

சேரும் சிறுநீரை பை நிறைந்ததும் அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பையி;ன் மறுமுனையில் உள்ள மூடியைத் திறந்து அகற்ற வேண்டும். குழாயைக் கதீட்டர் (Catheter) என்பார்கள். தொடர்ந்து அணிந்திருப்பதால் உள்ளுறையும் Indwelling Catheter என்பர்.

சிறுநீர் அகற்றும் குழாய் போடுவதற்கான காரணங்கள் அவை இரண்டும்தான்.

 • கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறல்
 • சிறுநீர் தானாக வெளியேற முடியாமல் தடைப்படுதல்

இவை பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைதான். அத்தகைய நோயாளிகள் வீட்டிலேயே இருக்க நேர்வதால் அதனைச் சரியான முறையில் கையாள வீட்டில் உள்ளவர்களுக்கு தெளிவு தேவை. நடமாடக் கூடிய நோயாளர்கள் எனில் நோயாளிகளே அக்கறை எடுக்க வேண்டும்.

 • குழாய் சரியான முறையில் செற்;பட்டு சிறுநீர் ஒழுங்காக வெனியேறுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
 • அந்தக் குழாயும் அதனைச் சுற்றியுள்ள சருமமும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் குழாய் ஊடாக கிருமிகள் சிறுநீர்ப்பைக்குள் சென்றுவிடக் கூடிய ஆபத்து உண்டு. அத்துடன் சருமத்தில் அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.

குழாய் பராபரிப்பு

குழாய் எப்பொழும் உங்கள் இடுப்புப் பகுதிக்கு கீழே இருப்பதை உறுதிப்படுத்துங்கள். உயரத்திலிருந்து பதிவான இடத்தை நோக்கி சிறுநீர் இலகுவாக வெளியேறும். குழாயில் மடிப்புகள் சுருக்கங்கள் இல்லாதிருப்பதும் சிறுநீர் சுலபமாக வெளியேறுவதை உறுதி செய்யும். போதியளவு நீராகாரம் அருந்துவது அவசியம்.

வெளியேறும் சிறுநீரில் படிவுகள் இருக்கிறதா, இரத்தம் கலந்திருக்கிறதா, அதன் மணம் மற்றும் நிறத்தில் மாற்றம் இருக்கிறதா போன்றவற்றை அவதானிக்க வேண்டும்.

சருமத்தை சுத்தம் செய்தல்

சிறுநீர்க் குழாயை அண்டியுள்ள சருமம் சுத்தமாக இருக்க வேண்டும்.
அதைச் சுத்தப்படுத்துவதற்கு முதல் உங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் கையிலுள்ள கிருமி அங்கு பரவிவிடும்.

முதலில் உங்கள் கைகளுக்கு சோப் போட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். முக்கியமாக விரல் இடுக்கள், நகக் கண்கள் ஆகியவற்றை அக்கறை எடுத்து நன்கு கழுவவேண்டும். நகக்கண் சூடுள்ள நீர் நல்லது.

சுத்தமான துணியை எடுத்து நீரில் நனைத்து அதில் சோப்பை போடுங்கள். குழாய் உங்கள் சிறுநீர்த் துவாரத்திற்குள் புகும் இடத்தை சுற்றிவர அத்துணியால் துடையுங்கள். ஆண்கள் ஆண்குறி நுனியிலிருந்து பின்புறமாகத் துடைக்க வேண்டும். பெண்கள் சலவாயில் பக்கமாக ஆரம்பித்து பிற்புறமாகத் மலவாயிலை நோக்கித் துடைக்க வேண்டும்.

அடுத்து துணியில் உள்ள சோப்பை நிறைய நீரினால் கழுவி சோப்பை அகற்றுங்கள். மீண்டும் புதிதாகச் சோப் இட்டு உங்கள் தொடைகளையும் குண்டிப் பகுதியையும் அதனால் சுத்தப்படுத்துங்கள். மீண்டும் துணியில் உள்ள சோப்பை நன்கு கழுவி அகற்றிய பின் அதனைப் பிழிந்து நீரையும் அகற்றுங்கள். அத்துணியால் ஈரங்களை ஒற்றி எடுங்கள். குழாயைச் சுற்றியுள்ள இடத்திற்கு கிறீம், பவுடர், ஸ்பிரோ போன்றவற்றைப் பாவிப்பது நல்லதல்ல.

இவ்வாறு தினமும் ஒரு தடவையாவது செய்ய வேண்டும். தேவை ஏற்படின் திரும்பவும் செய்யலாம்.

குழாயைச் சுத்தம் செய்தல்

சருமத்தைப் பேணுவது போல அல்லது அதைவிட அதிக கவனத்துடன் இதனைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே தினமும் இரண்டு தடவைகளாவது இதனைச் சுத்தம் செய்வது நல்லது. முதலில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல உங்கள் கைகளுக்கு சோப் போட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.

வேறொரு துணியை எடுத்து அதை வெந்நீரில் நனைத்து சோப் போடுங்கள். உங்கள் சிறுநீர்த் துவாரத்தை அண்டிய பகுதியிலிருந்து கீழ் நோக்கி சிறுநீர் அகற்றும் குழாயை இத் துணியால் சுத்தப்படுத்துங்கள். அவசரப்பட்டு வேகமாக குழாயை இழுப்பது போலச் சுத்தம் செய்யலாகாது. உங்கள் சிறுநீர்த் துவாரத்தையோ அல்லது சிறுநீர்ப் பையையோ உறுத்தாதவாறு மென்மையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

மேலிருந்து கீழ் நோக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.

ஒருபோதும் கீழிருந்து மேலாக அதாவது சிறுநீர்த் துவாரத்தை நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. மற்றொரு துணியால் குழாயின் மேல் படர்ந்துள்ள ஈரத்தை துடைத்துவிடுவதுடன் இப்பணி நிறைவு பெறும்.

வேறு ஆலோசனைகள்

புதிதாகக் குழாய் போட்டால் அல்லது பழையதை அகற்றிப் புதுக் குழாய் பொருத்தினால் கடுமையான வேலைகளில் ஈடுபடுவதை 10 நாட்களுக்காவது தவிருங்கள்.

சற்றுக் கூடுதலாக நீர் அருந்துவது குழாய் தடையின்றி நன்கு செயற்பட உதவும். தினமும் 8-10 கிளாஸ் தண்ணீராவது அருந்துவது நல்லது.

குழாய் உங்கள் உறுப்பில் பொருந்தும் இடத்தில் வலி ஏற்பட்டால், அல்லது குழாயிலிருந்து அல்லது உறுப்பிலிருந்து சிறுநீர் சிந்தினால், அல்லது சிறுநீர் சரியான  முறையில் குழாயூடாக வெளியேறவில்லை என்றால் மருத்துவரை நாடுவது அவசியம்.

வெளியேறும் சிறுநீரில் இரத்தம் கலந்திருந்தாலும் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். பெரும்பாலும் குழாய் பொருத்திய ஆரம்ப நாட்களில் இது நேரலாம்.

சிறுநீரின் நிறம் மங்கலாதல், படிவுகள் ஏற்படல், சிறுநீர் கடுமையாக மணத்தல் போன்றவை சிறுநீரில் கிருமித்தொற்று ஏற்பட்டதால் இருக்கலாம். குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டாலும் அதே காரணமாயிருக்கலாம். கட்டாயம் மருத்துவ ஆலோசனை அவசியம்.

இவற்றைக் கவனம் எடுத்தால் சிறுநீர்த் தடை மற்றும் கட்டுப்பாடின்றிக் கழிதல் ஆகியவற்றால் நோயாளி தனக்கும் மற்றவர்களுக்கும் இடைஞ்சலின்றி வாழ முடியும்.

பிரச்சனைகளைக் கண்டு மனம் சோராமல் அவற்றை உறுதியோடு வெற்றி கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொண்டால் மகிழ்ச்சி என்றும் அவர் பக்கமே.

நான் வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் எழுதிய கட்டுரை 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0

Read Full Post »

>

“உள்ளை வாங்கோ டாக்டர்”

அவரது மகன் மரியாதையுடன் அழைத்தார்.

ஆடம்பர மார்பிள் பதித்த நீண்ட விசாலமான தரை, அலங்கார ஷோபாக்கள், உயர்ந்த பரந்த ஷோகேஸ்கள், அதி அலங்கார மின்சார லையிட்டுக்கள், வீடியோ, ஓடியோ நிறைந்த வரவேற்பறையைத் தாண்டி ஆடம்பர அறைகளைத் தாண்டி, நவீன சமையலறை, ஸ்ரோர்ஸ் அறைகளையும் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தோம்.

கடைசியாக வீட்டின் பிற்பகுதியை அடைந்தோம்.

விசாலமான வீட்டின், ஒதுக்குப் புறமான பின் வராந்தையை அரைச் சுவராலும், இரும்புக்கம்பி வலைகளாலும் அவசரமாக அடைத்துத் தயாராக்கிய அறை அது.

நாயை அடைத்து வைக்கும் அறைக்கு என்னை அழைத்து வருகிறாரா?

மூத்திர நாற்றம், மூக்கினைத் தாக்க தயங்கியே அடியெடுத்து வைத்தேன்.

அது முதியவர் அறை!!

பழைய பலகைக் கட்டிலில் குறண்டியபடி கிடந்தார் அவர்.

தலையணையைத் தவிர படுக்கை விரிப்புகளோ மெத்தையோ எதுவும் இல்லை. கட்டிலின் கீழே ஊறித் தெப்பிக் கிடந்த சாக்கு,மூத்திர நாற்றத்தை வஞ்சகமின்றிப் திசையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது!

அறை நிறைய இலையான்கள். அவரையும், கீழே கிடந்த சாக்கையும் மாறி மாறிச் சுவைத்து, மகிழ்ந்து பறந்து திரிந்தன.

கொசுக்கள் உற்சாகமாகக் கலைந்து கலைந்து மொய்த்தன!

அறைக்குள் நுழையவே கால்கூசியது!

மனம் தயங்கியது.

ஆயினும் கடமை உணர்வுடன் அவரருகில் சென்றேன்.

நோயின் வேதனையிலும் பறக்கணிப்பின் மனத் துயரிலும் மூழ்கிக் கிடந்த முகத்தில், என்னைக் கண்டதும் சோகம் கலந்த புன்னகை!

“கோடி கோடியாகச் சம்பாதித்த நான், இப்போ ஒதுக்கித் தள்ளப்பட்டுக் கிடக்கும் நிலையைப் பாருங்கள்” என்று சொல்வது போலிருந்தது. அந்த முன்னைய நாள் மதிப்புக்குரிய பெரிய மனிதர்!

கனத்த மனதுடன் அவரைப் பரிசோதித்து மருந்துகைளக் கொடுத்து, ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்ட நான், மகனிடம் அவரை ஒதுக்குப்புறமாக, ஒதுக்கி விட்டதற்கான காரணத்தை விசாரித்தேன்.

“ஐயாவுக்கு சலம், மலம் போறது தெரியாது.
பெரிய மனிசர் வந்து பிழங்கிற இடத்திலை அவரை எப்படி வைச்சிருக்கிறது. வெக்கந்தானே.

பின் விறாந்தை என்டால் ஆக்களின்ரை கண்ணிலை படாது. சலம் மலம் போனாலும் அப்படியே வெளியிலை கழுவி விட்டிடலாம்” என்றார்.

பெத்து வளத்து ஆளாக்கி, உயர்ந்த நிலையில் உங்களை வைச்சிருக்கிற ஐயாவை வீட்டுக்கை வைச்சிருக்கிறது வெக்கமோ?|எனக் கேட்க வேண்டும் போலிருந்தது.

தமிழர்களாகிய நாம் நீண்ட கலாச்சார பாரம்பரியத்தில் வந்தவர்கள். பெற்றோரையும், முதியவர்களையும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களை அன்புடன் பேணிப் பாதுகாப்பவர்கள் என்று பெருமைப்படுகிறோம்.

காசியப்பனைப் போல் பெற்ற தந்தையையே சுயலாபத்திற்காக, சுற்றவரச் சுவர் எழுப்பி, உயிரோடு மூடிக் கட்டி மூச்சடைக்கக் கொன்றவர்கள் எமது பரம்பரையில் கிடையாது என்று சரித்திரச் சான்றுகளில் சமாதானம் அடைகிறோம்.

ஆனால் பெற்றோர்களைச் சரியாகப் பேணிப் பாதுகாக்காமல் விடுவதாலோ, அல்லது உரிய காலத்தில் உரிய வைத்திய வசதிகளைக் கொடுக்காமல் விடுவதாலோ, அநியாயமாகச் சாகவிடுபவர்களை பற்றி என்ன சொவ்வது?
 

Geoffrey Madan  ஒரு கருத்துச் சொன்னார்.
“ஆம் அவர் உயிருடன் இருக்கிறார். அவரைச் சட்டபூர்வமாகப் புதைக்க முடியாது என்ற அளவில் மாத்திரம்”.
இத்தகைய மனநிலையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

கனவாகிப் போன வாழ்வு
 80களில் சிரித்திரனில் எழுதி 90 களில் மல்லிகை வெளியீடாக வந்த ‘டொக்டரின் டயறி’ என்ற எனது நூலில் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

Read Full Post »

>

“”எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ”   எனக் கேட்டார் ஒரு முதியவர். 
ஏன் என நினைகிறீர்கள்? 
பல முதியவர்கள் இவ்வாறு கேட்கும் நிலையில் தான் அவர்களை எமது சமூகம் வைத்திருக்கிறது.

“””””  வயசு போட்டுது, நடப்பு ஒண்டும் விளங்காது சும்மா பழங் கதைகளையே வழவழக்கினம்”


“உங்கடை பழங்கால மோட்டு நம்பிக்கைகளை இந்தக் காலத்திலை ஆர் கேட்டு நடக்கிறது”

“வயசு போனால் பேசாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறதுக்கு ஏன் எழும்பித் திரிஞ்சு, விழுந்து முறியிறியள்”   

வயசானவர்களை இவ்வாறெல்லாம் எடுத்தெறிந்து இழக்கமாகப் பேசுவதைக் கேட்கிறோம்.

பெற்றோர்களையும் முதியோர்களையும் தெய்வமாக மதித்த எமது சமூகத்தில் இன்று இவ்வாறு பேசுவதைக் காண்பது சகஜமாகிவிட்டது..

வயதிற்கும் அனுபவத்திற்கும் மதிப்புக் கொடுக்காது  வயதானவர்களை அவமதிப்பமதுடன், உதாசீனப்படுத்தவும் செய்கிறார்கள்.

இதனை நீங்களும் பல் வேறு சந்தர்ப்பங்களில்ம் கண்டிருக்கக் கூடும்.

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்றும்,
‘தாயிற் சிறந்த ஒரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’

என்றும் பெற்றோர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்த தமிழ் சமுதாயம் இன்று அதே மரியாதையை மூத்தோர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டதா?

வயது முதிர்ந்தவர்களைப் பார்த்துக் காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல நடந்து கொள்கிறார்கள். குருத்தோலைகள் காவோலைகளாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

சில வேளைகளில் நிர்த்தாட்சண்யமாகக், கொடூர மனோபாவத்துடன் நடப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

“வயது போனால் செத்துத் துலையிறதுக்கு ஏன் இன்னும் இருந்து கழுத்தறுக்கிறியள்..”

என்று தமது பெற்றோரைப் பேசுவதைக்கூட என் காதால் கேட்டு மனம் வெதும்பியிருக்கிறேன்.

வயது போனவர்கள் வெறும் மரக்கட்டைகள் அல்ல!

அவர்களுக்கு ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். உணர்வுகளும் உணர்ச்சிகளும் மரத்துவிடுவதில்லை என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் வந்த முதியவரொருவர் சோகம் தோய்ந்த முகத்துடன் இருந்தார்.

“தலைச்சுத்து, எழும்பி நடக்க முடியாமல் விழுத்தப் பாக்குது, கை, கால் உழைவு, நடந்தால்  இளைப்புக் களைப்பு…”

வயோதிபத்தின் காரணமாக ஏற்படும் இயலாமைகள் பற்றி விரிவாகக் கூறிக்கொண்டிருந்தார்.

திடீரெனக் கூட வந்த மகள் பக்கம் திரும்பி,

“பிள்ளை பேர்சை பையோடை வெளியிலை விட்டிட்டின், ஒருக்கால் போய்ப் பார் மேனை” 
என்றார்.

அவளை வெளியில் அனுப்பி என்னுடன் தனிமையில் பேசும் ஆதங்கம்.

மருத்துவனால் செய்ய முடியாததைதக் கோரினார்.

மகள் வெளியேறிய மறுகணமே, – 

“எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ” 

என்று பரிதாபமாகக் கேட்டார். கேட்கவே மனது துடிக்கிறது.
உள்ளத்தில் துயரம்  மூடியிருந்தால் மட்டுமே இத்தகைய வாரத்தைகள் எழுந்திருக்கும்.

“ஏன் அப்பு ?”

“என்னாலை ஒரு வேலையும் செய்ய முடியுதில்லை. 
எல்லாத்துக்கும் மற்றவையளின்ரை உதவி தேவையாக கிடக்கு, 
கிணத்திலை அள்ள ஏலாது… 
மகள் தான் குளிக்க தண்ணி அள்ளித் தாறவா. 
அவவுக்கும் சரியான வேலை…
… நான் குளிச்சுப் பத்து நாளாய்ப் போச்சுதெண்டால் பாருங்களேன்… 
செத்துப் போனால் எனக்கும் கஷ்டம் இல்லை, 
மற்றவையளுக்கும் கரைச்சல் இல்லை”
என்றார்.

தனக்கு குளிக்க உதவுவதுகூட மகளுக்கு அவசியமான, அக்கறைக்குரிய விஷயமாக இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா?
மகளில் குற்றம் சாட்டாது, அவளது வேலைப் பொறுப்புகளையும் உணர்ந்த அதே நேரம் தன் பிரச்சனையையும் முன் வைத்தார்.

இருந்தபோதும்  இன்னும் பல விடயங்கள் அவர் மனத்தை அழுத்தியிருக்கும். இல்லையேல் இத்தகைய வார்த்தைகள் வந்திராது.
வெளியாரான எனக்குச் சொல்வதில் உள்ள தயக்கம் வாயைக் கட்டிப் போட்டிருக்கும்.

மனதிற்குள் அழுது கொண்டேன்.

வயதானவர்களுக்கும் நேரத்திற்கு நேரம் பசிக்கும்.
தூக்கம் வரும்.
குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.
அவர்களும் ஆசாபாசங்கள் நிறைந்த மனித ஜன்மங்கள் தானே!

எமக்குத் ‘தலைநிறைய வேலை’ இருக்கிறது என்பதற்காக அவர்களைக் கவனியாமல் விடுவது எந்த வகையில் நியாயம்?

முடியாவிட்டால் வயோதிபர் இல்லத்தில் விட்டுவிடுங்கள் எனச் சொல்லலாம்.
ஆனால் அப்படி விட்டால் ஊர் என்ன சொல்லும் என்ற போலிக் கௌரவம் பலருக்கு.

எவ்வாறு உரைப்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய இந்தச் சமூகத்தின் பெருமையை?

0.0.0.0.0.

Read Full Post »

>திருமதி கோகிலா மகேந்திரன் தினக்குரல் பத்திரிகையில் எழுதிய இக் கட்டுரையை பயன் கருதி இணையத்தில் பதிவிடுகிறேன்

குழந்தைகளா ? அவர்கள் புதிதாய் மலர்ந்த புஷ்பங்கள், சிறுவர்களா? அவர்கள் தான் சமூகத்தின் எதிர்கால முத்துக்கள் ஆயிற்றே! இளைஞர்களா? அவர்கள்தான் ஒரு நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். மத்திய வயதினரா? இளையோரையும் முதியோரையும் தாங்கி வழி நடத்தும் தலைவர்கள் அவர்கள்.

முதியவர்களா? அவர்களால் இனி என்ன பயன் ?

மேலே சொல்லப்பட்டது போன்ற ஒரு சிந்தனை ஓட்டம் உலகமயமாதலோடு சேர்ந்து உலகெங்கும் வேகமாகப் பரவி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவும் முதியோருக்கான பல சலுகைகளை அறிமுகம் செய்திருக்கிற அதே சமயம் பிள்ளைகள் அவர்களோடு சேர்ந்து வாழும் மனப்பாங்கு மிக வேகமாகச் சரிந்து வருவதனால் அவர்கள் தனித்து விடப்பட்ட உணர்வைப் பெறுவதும் மனச்சோர்வுக்கு உட்படுவதும் மிகப் பரவலாக காணப்படும் ஒரு நிலையாக இருக்கிறது.

எமது நாட்டில் 60 வயதுடைய ஒருவர் தனது வேலையில் இருந்து ஓய்வுபெறும் வயது. முதுமையின் ஆரம்பம் எனக் கருதப்படலாம். சில உளவியலாளர்கள் முதுமையை இளமுதுமை என்றும் முதிர்முதுமை என்றும் இரண்டாகப் பிரித்து நோக்குகின்றனர்.

75 வயதுக்கு உட்பட்டவர்களை இள முதுமையில் இருப்பவர்கள் எனக் கருதலாம். வேலையில் இருந்து ஓய்வுபெற்றவுடன் அதிக அளவு ஓய்வு நேரம் இருக்கும். மனமும் அறிக்கைத் தொழிற்பாடுகளைத் திறம்படச் செய்யக்கூடிய நிலையில் இருக்கும். ஏதாவது ஒரு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகமாக இருந்தாலும் அது அவர்களின் தொழிற்பாடுகளை நிறுத்தி விடுவதில்லை. வயது ஏற ஏறத் தொழிற்படு தன்மை குறைந்து வரலாம்.

ஆயினும் எண்பது வயதுக்கு மேற்பட்டோரில் மூன்றில் ஒரு பகுதியினர் தொடர்ந்து தொழிற்பட்டுக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முதுமையும் கலாசாரப் பண்புகளும்

ஒருவரது முதுமை அநுபவத்தில் அவர் வாழும் சமூகக் கலாசாரம் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகிறது. முதுமை என்ற எண்ணக் கருவை உள்வாங்கும் தன்மை முதுமையில் தமது பாத்திரம் பற்றிய உணர்வு,

முதியவர்களின் கடமைகளும் பொறுப்புகளும், தம்மைப்பற்றிய சுயகவனம், ஆதரவு வலைப்பின்னல் போன்ற பல விடயங்களிலும் கலாசாரத்தின் செல்வாக்கு முக்கியமாகின்றது. ஜப்பானில் 75% ஆன முதியவர்கள் தமது பிள்ளைகளுடனேயே வாழ்கின்றனர். ஜப்பானிய கலாசாரத்தில் வயது முதிர்ந்த பெற்றோரைக் கவனிப்பது பிள்ளைகளின் முக்கிய கடமை. அவர்களைத் தவிக்கவிடுவது குடும்பத்திற்கு பெரிய அவமானம். குடும்பத்தினரிடையே உடைகள் பங்கிடப்படும் போது மிகச் சிறந்த உடைகள் முதியவர்களுக்கு வழங்கப்படுதல், மிக மதிப்பான வார்த்தைகளால் அவர்கள் அழைக்கப்படுதல், ஆழ்ந்த வணக்கத்துக்குரியவர்களாக அவர்கள் கருதப்படுதல், குடும்பம் ஒன்றாக நீராடும் சந்தர்ப்பங்களில் முதலில் நீராடுபவர்களாக முதியவர் இருத்தல் போன்ற பழக்க வழக்கங்கள் ஜப்பானில் இன்னும் பேணப்படுகின்றன. குடும்பத்தின் முக்கிய முடிவுகளில் எல்லாம் முதியவர்களின் ஆலோசனை பெறப்படும். எமது நாடு உள்ளிட்ட கீழைத்தேய நாடுகள் பலவற்றிலும் இந்தப் போக்கு இருந்தாயினும் இப்போது மெல்ல மாறி வருகிறது.

அமெரிக்கா போன்ற விருத்தியடைந்த மேலைத்தேய நாடுகள் இன்று முற்று முழுவதாக இளைஞர் மையநாடுகளாக மாறிவிட்டன. ஆகவே அங்கு முதுமை என்பது அழகு, வேகம், வலிமை, வருமானம், மதிப்பு எல்லாமே மெல்ல மெல்ல அற்றுப் போகும் காலம் என்றே பார்க்கப்படுகிறது. இந்த மனப்பாங்கு காரணமாக அமெரிக்காவில் முதியவர்களின் தற்கொலை நூற்றுவீதம் மிக அதிகமாக இருக்கிறது. முதுமையில் வரும் உடற்தொழிலியல் மாற்றங்கள் காரணமாகவும் மனம் தாழ்ந்து போகலாமாயினும் கலாசாரம் செலுத்தும் செல்வாக்கு மிகப் பிரதானமானது. என்றே கருதப்படுகிறது.

எமது நாட்டின் அனர்த்தங்கள் மிக ஏராளமான மக்களைப் புலம்பெயர வைத்துள்ளது. புலம்பெயர்ந்து செல்பவர்கள் பெரும்பாலும் பெரும்பாலும் இளைஞர்கள். மேலைத்தேய வாழ்வு அவர்களின் மனப்பாங்கில் மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. இங்கு தனித்துவிடப்படும் முதியோருக்குப் பணம் அனுப்புவது மட்டும் போதுமானது என்றே அவர்களில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். முதியவர்கள் புலம்பெயர்வதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்வது கடினமாக இருக்கிறது. இத்தகைய பின்னணியில் எமது நாட்டின் முதியவர்கள் பலரும் கூட மனதளவில் தனித்துவிடப்படும் மனச்சோர்வுக்கு உள்ளாகும் சூழல் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

முதுமையின் சவால்கள்

முதுமையில் பார்த்தல், கேட்டல், சுவைத்தல் போன்ற புலன் சார் தொழிற்பாடுகளில் குறை ஏற்படலாம். இதனால் புலன்கள் சிறப்பாகத் தொழிற்படுகிறவர்களுடனான தொடர்பாடல் திறன் குறையலாம். இது அவர்களின் சுய கணிப்பை பாதிப்பதால் மற்றவர்களிடமிருந்து ஒதுங்க முயற்சி செய்யலாம்.

ஆயினும் பல முதியவர்கள் ஒரு புலன் உணர்வில் குறை ஏற்படுகிறபோது ஏனைய புலன்களில் அதிகம் தங்கி இருந்து அந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் இயக்கம் தொடர்பான வேகம் முதுமையில் குறையத்தான் செய்யும். அதே நேரம் புலன் இயக்கக் குறைபாடுகளும் தசை இயக்க வேகத்தைக் குறைக்கலாம். உதாரணமாக கண்பார்வை குறையும் போது நடக்கும் வேகம் குறைவது தவிர்க்க முடியாததாகும். ஆயினும் பல முதியவர்கள் பொருத்தமான உடற் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் இயக்கம் சார் குறைபாடுகளைப் பெருமளவு குறைத்துக்கொள்கின்றனர்.

முதியவர்களில் பெரும்பான்மையினருடைய நுண்மதி ஈவு குறையாதிருப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். சிலரிடத்தில் இது தொடர்ந்து அதிகரித்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. முதுமையில் நுண்மதி ஈவு குறைந்து வருமாயின் அது உடல் நலக் குறைவு, இயங்காதிருத்தல் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டதாகவே அமையும் சிறந்த கல்வி அறிவைப் பெற்ற ஒருவர் தொடர்ந்து வருவாய் ஈட்டக்கூடியவராயும் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் அவரது நுண்மதி குறையும் வாய்ப்பு மிக அரிது.

இத்தகைய முதியவர்கள் தமது மனதுக்கான பயிற்சியைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தனது மூளையை ஒருவர் தொடர்ந்து பாவித்து வருகின்றபோது அவரது அறிவாற்றல் செயற்பாடுகள் குறைந்துபோவது அபூர்வம். இதற்கு மறுதலையாக முதியவர் ஒருவரின் அறிக்கைசார் தொழிற்பாடுகளில் திடீர் வீழ்ச்சி அவதானிக்கப்படுமாயின் அவர் ஒரு பாரிய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதன் விளைவு அது என்றே கொள்ளலாம்.

ஆயினும் அறிக்கைத் தொழிற்பாடு சம்பந்தப்பட்ட விடயங்களில் வேகம் குறையும் தன்மை முதுமையில் மிகச் சாதாரணமாக அவதானிக்கப்படலாம். இது நரம்புத் தொகுதியில் ஏற்படுகின்ற சில மாற்றங்களோடு சம்பந்தப்பட்டது.
பல இயக்கங்களின் இணைவும் இசைவாக்கமும் தேவைப்படுகின்ற தொழிற்பாடுகளில் வினைத்திறன் குறைவு எதிர்பார்க்கப்படலாம். உதாரணமாக ஒரு சிக்கலான புதிரை விடுவிப்பது கடினமாகலாம். அதே போல ஏறத்தாழ ஒரே நேரத்தில் பல விடயங்களைக் கையாளுவதிலும் கஷ்டங்கள் இருக்கலாம்.

முதுமை வரும்போது நீண்டகால ஞாபகத்தில் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இந்தப் பாதிப்பிற்கும் கல்வித் தகைமைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. புதிய விடயங்களைக் கற்று ஞாபகம் வைத்துக்கொள்வதிலும் ஒப்பீட்டளவில் குறை காணப்படவே செய்யும். முன்பு தெரிந்து வைத்திருந்த விடயங்களை மூளையில் இருந்து மீட்டெடுப்பதும் பல சமயங்களில் கடினமாக இருக்கலாம். சில விடயங்கள் முற்றாகவே மறக்கப்பட்டுப் போகலாம். ஒரு காலத்தில் நன்றாகத் தெரிந்த பெயர்களும் முகங்களும் கூட எழுபது வயதில் மறக்கப்பட்டுப் போவதை மிகச் சாதாரணமாக அவதானிக்க முடியும்.

குறுங்கால ஞாபகத்திலும் பாதிப்புகள் இருக்கும். ஒரு சினிமாப் படத்தில் இறுதிக் காட்சியில் கதாநாயகி அணிந்திருந்த உடையின் நிறம் என்னவென்பது பெரும்பாலும் படம் முடிந்த கையோடு இவர்களுக்கு மறந்து போய்விடும்.

முதுமையின் வரப்பிரசாதங்கள்

ஒருவர் பெற்றிருந்த மொழி அறிவும், கணித அறிவும் முதுமையிலும் குறைந்து போவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே முதியவர்கள் பலர் எழுதும் நூல்கள் மிகச் சிறப்பாகவே அமைவதைப் பார்க்கலாம்.

அதேபோல ஒருவரின் வாழ்நாளில் இயல்பாகப் பெற்றுக்கொள்ளும் திறன்கள் முதுமையில் குறைந்து போவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நன்றாகச் சமையல் செய்யக்கூடிய அம்மா, முதுமையிலும் ருசியாகச் சமைப்பார். அழகாக ஓவியம் செய்யக்கூடியவரின் திறன் முதுமையில் சரிந்து போவதில்லை.

புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வது முதுமையிலும் சாத்தியமானதாகவே இருக்கிறது. எண்பது வயதிலும் புதிய பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவோரை இன்று முன்னரை விட அதிகமாகவே காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, அவர்களுக்கு மிக ஆர்வமான ஒரு துறையில் கற்கிறபோது கற்றலில் அவர்கள் சங்கடப்படுவதில்லை.

ஆக்கத்திறனுடன் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை முதுமை காரணமாக எவ்வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. இதனால், குடும்பப் பிரச்சினைகள், நிறுவனப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பதில் முதியவர்கள் மிகக் கணிசமான பங்களிப்பை நல்கக்கூடியவர்கள். ஆலோசனை வழங்கும் தொழில்களில் அவர்கள் உன்னதம் பெறுவதற்கு இந்த விளக்கம் போதுமானது.

ஒருவருடைய கற்பனைத் திறனும், கலையாக்கத் திறனும் முதுமையில் குறைவதில்லை. அதனால் தான் கலைஞர்கள் முதுமையிலும் போற்றப்படத்தக்கவர்களாகவே இருக்கிறார்கள்.

செய்யத்தக்கவை எவை?

முதியவர்கள் ஒரு சமூகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது ஒரு சமூகத்தின் கட்டாய தேவை.

முதியவர்கள் தமது பிள்ளைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழும் சமூக அமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். அவர்களைத் தனித்து வாழ அனுமதிப்பது நல்லதில்லை.

முதியவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வாழ்வு முறைச் சட்டத்திற்குள் தம்மை அடைத்துக் கொள்வதால் அவர்களுக்கு எல்லா நாளும் ஒரேநாள் போலத் தோன்றலாம். வெளியே நின்று பார்ப்பவர்களுக்கும் அங்கே வளர்ச்சி எதுவும் நடைபெறாத ஒரு தோற்றமே தெரியும். ஆனால், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளரத்தக்க ஒரு இடத்தில் தான் அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் என்ற விழிப்புணர்வு அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.

வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மனச்சோர்வு ஏற்படுவதில்லை.

தங்களுடைய நீண்டகால அனுபவத்தின் ஊடாக ஒரு முதிர்ச்சியும் நிறைவும் கொண்ட ஆளுமையை அவர்கள் பெற்றிருப்பர். இந்த ஆளுமையோடும் அவர்களிடமுள்ள ஆற்றல்களோடும் அவர்கள் தொடர்ந்து பயனுள்ள பணிகளைச் செய்து கொண்டிருப்பதைச் சமூகம் உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு சும்மா இருப்பதற்கு அவர்கள் விடப்படக்கூடாது. பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்வது கூட ஒரு பயனுள்ள, மிகப் பயனுள்ள பணி என்பதை நாம் மறந்துவிடலாகாது.

நியண்டத்தால் மனிதன் காலத்தில் மனிதனது சராசரி வாழ்வுக் காலம் 33 வருடங்களாக இருந்தது. விஞ்ஞான, கல்வி, மருத்துவ வளர்ச்சியுடன் இன்று சராசரியாக 75 வருடங்களுக்கு மனிதன் வாழ்கிறான்.

சில சமூகங்களில் குறிப்பாக இந்த வாழ்வுக் காலம் அதிகமாக இருக்கிறது. அங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மன நெருக்கீடுகள் குறைவான கிராமிய வாழ்வு முறையும். மொத்தக் கலோரி அளவும் விலங்குக் கொழுப்பும் குறைந்த உணவுப்பழக்கமும், மாசடையாத சூழலும், வயது முதிர்ந்தோருக்கு மரியாதை கொடுக்கும் கலாசாரம் அங்கு இருப்பதை வரையறை செய்துள்ளன. ஆகவே, எமது நாட்டிலும் அத்தகைய ஒரு சூழலில் முதியோரை வாழச் செய்தல் நன்று.

மறுதலையாக, புகைத்தல், மது பாவனைப் பழக்கம், போதைப் பொருள் பாவனைப் பழக்கம், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளல், அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொள்ளல் அல்லது மருத்துவரின் அறிவுறுத்தல் இன்றித் தாமாக மருந்துகளைப் பெற்றுக் குடித்தல், பதற்றம் நிறைந்த சூழலில் வாழ்தல் போன்றன முதியோருக்குக் கேடு விளைவிக்கும். அவர்களின் வாழ்வுக் காலத்தைக் குறைக்கும் என்ற விழிப்புணர்வு சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

முதுமையின் பெரிய வளமாக இருக்கக் கூடியது நல்ல மனித உறவுகளைச் சேர்த்துக்கொள்வதாகும். குடும்பத்திலும் சரி, நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் சரி நிறைந்த அன்பைக் கொடுத்து நல்ல உறவுகளைக் கட்டி வளர்த்துக் கொள்வது முதுமையின் சலிப்பைப் போக்க உதவும் சிறந்த மருந்தாகும். அதனால், ஏற்படும் பயன்களும் எண்ணற்கரியவை.

எதிர்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்வுக் காலம் இன்னும் அதிகரிக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது. உடலின் ஒவ்வொரு கலத்தையும் நல்ல நிலையில் வைத்திருந்து அதனைச் சிறப்புற செயற்பட வைக்கும் வளர்ச்சி ஓமோனை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்கும் போது அவர்கள் இளமையூட்டப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இப்போதே அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஓமோன் வியாபார ஸ்தலங்களில் விற்பனைக்கு உள்ளது. ரெக்சாஸ் நகரில் உள்ள நல மையத்தின் பேராசிரியர் ஜான் விக் (Jan Vig) என்பவர் முதுமையைத் தடுப்பது என்பது வெறும் கற்பனை நிலையில் இருந்து இப்போது யதார்த்த நிலைக்கு வந்துவிட்டது என்று கூறுகிறார். ஆகவே, எதிர்காலத்தில் ஒரு நாட்டின் மொத்தச் சனத்தொகையில் முதியவர்கள் கணிசமான நூற்று வீதத்தைப் பிடிக்கப் போகிறார்கள். அவர்களின் நலன் பற்றி அக்கறை கொள்வது நாட்டின் மொத்த நலனுக்கு மிக அவசியம் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது.

கோகிலா மகேந்திரன்

நன்றி:- தினக்குரல் 22.1.2009, 23.01.2009

Read Full Post »

>வயதாகி அறளை பெயர்ந்த வாழ்வு பரிதாபத்திற்குரியது. நினைவு மங்கி, மறதி நிலையாகி செய்வது என்னவென்று புரியாது தடுமாறும் வாழ்வு கவலைக்குரியது. மற்றவர்களில் தங்கியிருக்க நேர்வதும் மற்றவர்களை தொல்லைக்கு உள்ளாக்குவதும் அவ்வாறு தொல்லை கொடுப்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதும் மனித உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தும். இது எவ்வளவு சிக்கலானது என்பது வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.

அவ்வாறு அறளை பெயர்ந்தவர்கள் அதற்குப் பின் நோயோடு எவ்வளவு காலம் வாழ்வார்கள். அல்லது வாழக் கூடும்? அவர்களின் வாழ்வுக் காலத்தை எவை நிர்ணயிக்கின்றன. வயதா? ஆண் அல்லது பெண் என்ற பால் வித்தியாசமா? மணமானவரா என்பதுடன் துணைவர் வாழ்கிறாரா என்பதா? கல்வித் தரம், சமூக ஏற்றத்தாழ்வு, வாழுமிடம், வேறு நோய்கள், வலதுகுறைதல் போன்ற காரணிகளும் அத்தகையோரது உயிர் வாழும் காலத்தை நிர்ணயிக்கின்றனவா என அறிதல் முக்கியமானது. இது பற்றிய ஆய்வு ஒன்றை http://www.bmj.com அண்மையில் வெளியிட்டிருந்தது.

அறளை பெயர்ந்தல் என்பது ஒரு முக்கிய பிரசினையாக உருவெடுத்து வருகிறது. 60 வயதிற்குள் மிக அரிதாகவே காணப்படும் இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே 5 சதவீதமாகவும் 80 வயதிற்கு மேல் 20 சதவீதமாகவும் உயர்கிறது. இத்தகையோராது தொகை 20 வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன. 2040 ஆம் ஆண்டளவில் அவர்களது எண்ணிக்கை 81 மில்லியனைத் தாண்டிவிடும் என்பதை அறியும் போது அது வீட்டிலும் சமூகத்திலும் தேசிய மட்டத்திலும் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை கற்பனை பண்ண முடியாதுள்ளது.

இவர்கள் நோயுற்ற பின் எவ்வளவு காலம் வாழ்வார்கள் என அறிந்தால் உறவினர்கள் பலவற்றைத் திட்டமிடக் கூடும்அல்லவா. உறவினர்கள் மட்டுமல்ல, வைத்தியர்கள், சமூக சேவையாளர் மற்றும் அரசாங்கங்களுக்கும் கூட அத் தகவல் உதவும். ஒருவருக்கு அறளை பெயர்தல் நோயுள்ளது என நோய் நிர்ணயம் செய்தபின் ஏறத்தாழ நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் உயிர் வாழ்வார்கள் என ஆய்வு கூறுகிறது. 65 வயதிற்கு மேற்பட்ட 13000 பேரை 1991 முதல் 2005 வரையான 14 வருடகாலத்தில் உள்ளடக்கிச் செய்யப்பட்ட முக்கிய ஆய்வு இது.

அறளை பெயர்ந்தவர்களில் பலவீனமான, மெல்லிய உடலுள்ளவர்கள் மிக விரைவாக மரணத்தைத் தழுவினார்கள். சராசரியாகப் பார்க்கும்போது பெண்கள் ஆண்களைவிட ஆறு மாதங்கள் கூடுதலாக வாழ்ந்தார்கள். வயது குறைந்த அறளை பெயர்ந்தவர்கள் கூடிய காலமும் வயது கூடிய அறளை பெயர்ந்தவர்கள் குறைந்த காலமும் வாழ்ந்தார்கள். குறிப்பாகச் சொல்வதானால் 65 முதல் 69 வயதிற்கிடையே அந்நோய்க்கு ஆளானவர்கள் 10.7 வருடங்கள் உயிர்வாழ 90 வயதிற்குமேல் நோய்க்கு ஆளாகும் போது 3.8 வருடங்களே வாழ்ந்தார்கள்.

மாறாக, மணமானவரா, துணைவர் வாழ்கிறாரா என்பது கல்வித் தரம், சமூக ஏற்றத்தாழ்வு, வாழுமிடம் ஆகியவற்றிற்கும் அவர்கள் மரணத்தைத் தழுவும் காலத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையாம்.

மரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தமது மரணம் எப்போது வரும் என்பதைப் பற்றி யோசிக்காதிருக்கையில் மற்றவர்கள் அதில் அக்கறை காட்டுவது கேவலமானதாகத் தோன்றினாலும் நிஜ வாழ்விலும் மருத்துவ காரணங்களுக்காகவும் அதை தெரிந்திருப்பது அவசியமானதே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி: தினக்குரல்

Read Full Post »

>‘ஐயா ராத்திரி பாத்ரூம் போகையுக்கை விழுந்து போனார். பிரஸர் கூடிப்போச்சோ எண்டு பாருங்கோ’ என்றாள் தள்ளாடிக்கொண்டு வந்த தனது எண்பது வயது தாண்டிய தகப்பனைக் கூட்டிக் கொண்டு வந்த மகள். ‘ஏன் இவருக்கு பிரஸர் இருக்கோ’ என நான் கேட்கவும் ‘ஹய் பிரஸர் இருந்தது. HCT பாதி காலையிலும், எனலாபிரில் (Enalapril) மருந்து இரவிலும் வழக்கமாகப் போடுகிறவர்’.

சோர்வாக இருந்தபோதும் ஐயாவின் நாடித்துடிப்பு சீராக இருந்தது. உடல் ஆரோக்கியமும் பொதுவாக நல்லாக இருந்தது. பிரஸரையும் அளந்து பார்த்தேன். ‘காலையிலை போடுற ர்ஊவு மருந்தை நிப்பாட்டுங்கோ. இரவிலை போடுற எனலாபிரில் (Enalapril) மருந்தை காலை பாதி இரவு பாதியாகக் குறையுங்கோ’ என்று மகளிடம் சொன்னேன்.

‘ஐயாவுக்கு பிரஸர் கூடித்தான்; தலைச்சுத்து வந்து விழுந்திட்டார் எண்டு நினைச்சம். நீங்கள் பிரஸர் மருந்தைக் குறைக்கச் சொல்லுறியள்.’ அவளது உரையாடலில் ஐயம் தொனிப்பட்டது. ‘அவருக்கு பிரஸர் 120/80லை இருக்கு’ என்று நான் சொல்லியதும், ‘அது நோர்மல்தானே? ஏன் குளிசையைக் குறைப்பான்’ எனக் கேட்டாள். ஒரளவு விபரம் தெரிந்த பெண் என்பது புரிந்தது. எனவே விளக்கமாகச் சொல்ல முனைந்தேன்.

வயதானவர்களின் பிரஸர் அதிலும் முக்கியமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது பற்றி பல வாதப்பிரதிவாதங்கள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தொருமைப்பாடு இருக்கவில்லை.

இவர்களது பிரஸரை மிகவும் குறைத்தால் அவர்கள் விழுவது அதிகரிக்கக் கூடும். அத்தோடு பக்கவாதம், மனக்குழப்பம், மனச்சோர்வு போன்றனவும் ஏற்படக் கூடும். அதனால்; ஓரளவுக்கு மேல் குறைக்கக் கூடாது என்பதும் முக்கியமானது. அத்துடன் பிரஸர் சற்று அதிகமாக இருப்பது அவர்களது சராசரி சீவிய காலத்தையும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் அவர்களது பிரஸர் குறைவாக இருப்பது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கின்றன என வேறு சில ஆய்வுகள் கூறின.

அப்படியாயின் அவர்களது பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும்?

டாக்டர் ஓட்ஸ் குழவினர் 80 வயதிற்கு மேற்பட்ட பிரஸர் நோயுள்ள 4071 பேரின் சீவிய காலத்தை 5 வருட காலத்திற்கு ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவர்களது ஆய்வின் பெறுபேறுகளை முழுமையாக இங்கு சொல்ல வேண்டியதில்லை என்ற போதும் அவர்கள் சிபார்சு செய்கின்ற இறுதி முடிவு முக்கியமானது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களின் பிரஸரை 140/90 க்கு மேல் குறைத்தால் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக மரணத்தை அடைவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார்கள்.

அவர்கள் விரைவில் மரணமடைவதற்கு சமநிலை தழும்புவதும், விழுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகளும், மருந்துகளின் பக்கவிளைவுகளும் காரணமாக இருக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள். மாறாக அவர்களது பிரஸர் 140/90 க்குக் கூடுதலாக இருந்தால் உடலுறுப்புகளுக்கான இரத்த ஓட்டம் குறைவின்றி இருப்பதால் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

இதைப் படித்தவுடன் உங்கள் 80 வயதிற்கு மேற்பட்ட ஐயா, அம்மா, மாமா, மாமி போன்றவர்களின் பிரஸர் மருந்தை உடனடியாக நிறுத்த வேண்டாம். சில பிரஸர் மருந்துகள் இருதய மற்றும் சிறுநீரக பாதுகாப்பு போன்ற வேறு பல காரணங்களுக்காகவும் கொடுக்கப்படுகின்றன. எனவே உங்கள் வழமையான வைத்தியரின் ஆலோசனையின்றி மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டாம்.

எம்.கே.முருகானந்தன்

Source: J Am Geriatr Soc. March 2007

Read Full Post »

« Newer Posts - Older Posts »