>மெல்லக் கற்றும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் ஆரம்பம்
வருடாந்த நிதித் தேவை:- ரூபா 40,000.00 (ரூபா நாற்பதினாயிரம்)
நிதி உதவு:- கண்டி விக்கினேஸ்வரா ஸ்டோரஸ்; உரிமையாளர்களான திரு.திருச்செல்வம் செல்வமோகன், திரு.சிவகுலசிங்கம் வசந்தன் ஆகியோர் தங்கள் தந்தையர் நினைவாக.
கற்றல் செயற்பாடானது மாணவர்களிடையே ஒரே விதமாக இருப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் மாறுபாடாக இருக்கும். விரைவில் கிரகிக்கும் மாணவர்கள் இருப்பர். எதிர்மறையாக மிக ஆறுதலாகவே கிரகிப்பவர்களும் இருப்பர். கற்றதை விரைவில் மறந்து விடுபவர்களும், மீள மீள நினைத்து நினைவாற்றலை அதிகரிப்பவர்களும் இருப்பர்.
இவர்கள் அனைவரும் ஒரே வகுப்பில் சேர்ந்தே கற்க வேண்டியுள்ளது. இவ்வாறு பல்வேறு தரத்தினரும் சேர்ந்திருபதால் கற்பித்தல் செயற்பாடானது சிரமமானதாகும். ஏனெனில் சாதாரணமாகக் கற்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வேகத்தில் மெல்லக் கற்கும் மாணவர்களால் கிரகிக்க முடியாததாக இருக்கும்.
கற்றலில் சற்று பின்தங்கி நிற்கும் மாணவர்களை மெல்லக் கற்கும் மாணவர்கள் என அழைப்பார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி அவர்களையும் சமுதாயத்திற்கு பிரயோசனமான பிரசைகளாக மாற்றுவதற்கு உதவுவது மிகப் பெரிய சேவையாகும். எமது பாடசாலையில் உள்ள அத்தகையவர்களுக்கு வழமையான பாடங்களுக்கு மேலதிகமாக விசேடமாகக் கற்பித்தல் அவசியம் எனக் கருதி எமது அதிபர் திரு.மு.கனகலிங்கம் அதற்கென ஒரு திட்டத்தையும் முன் வைத்தார்.
அத் திட்டத்தை நாம் எமது பழைய மாணவர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்ற வருடம் திரு.ராசநாயகம் சுவாமிநாதன் இதற்கென ரூபா 5000.00 கொடுத்து ஆரம்பித்து வைத்தார்; ஆயினும் நிதிப் பற்றாக் குறையால் அதனைத் தொடர முடியவில்லை.
இப்பொழுது இதற்கான நிதியை வருடா வருடம் தருவதற்கு கண்டி விக்கினேஸ்வரா ஸ்டோரஸ் முன்வந்துள்ளது. அதன் உரிமையாளர்களான திரு.திருச்செல்வம் செல்வமோகன், திரு.சிவகுலசிங்கம் வசந்தன் ஆகியோர் தங்கள் தந்தையர் நினைவாக வழங்குகிறார்கள்.
விசேட வகுப்புகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு தினமும் 2-3 மணிநேரம் விசேடமாக பாடம் சொல்லித் தரப்படுகிறது. இதற்கு வருடாந்தம் சுமார் 40,000.00 தேவைப்படுகிறது. இந்த நிதியை அவர்கள் மனமுவந்து அளிக்கிறார்கள்.
அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.