கொதிநீர் பட்டு சருமம் கொப்பளமாகிக் கிடந்தது.
அவசரமாகச் சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.
தாதியிடம் போனைக் கொடுத்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார் மருத்துவர்.
சிகிச்சை முடிந்து சில நிமிடங்களுக்குள் உலகளாவிய ரீதியில் பலர் அந்தப் புகைப்படம் சொல்லிய செய்தியைத் தெரிந்து கொண்டனர்
ஆம் தீக்காயங்களுக்கான முதல் உதவி சிகிச்சை பற்றி புகைப்படத்துடன் சொல்லியிருந்தார்.
இன்று இது இல்லாவிட்டால் உலகமே அஸ்த்தமித்து விட்டதாகப்படும்
பேசவும் செய்தி பெறவும் என்றிருந்த சாதனம் காற்றும் உணவிற்கும் அடுத்தபடியாக அத்தியாவசியமாகிவிட்டது.
ஆனால் கடந்து வந்த பாதையும் அனுபவங்களும் எத்தனை
0.0.0.0.0
(இது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது)
“இதன் பயன்பாடு அதிகம் தான். எங்கிருந்தாலும் முழு உலகத்தை யும் உள்ளங் கைக்குள் கொண்டு வரக்கூடிய சாதனம் அல்லவா? ஆனால் அதற்கு மேலாக அந்தஸ்தின் அடையாளச் சின்னமாகவும் மாறி விட்டதுபோல தெரிகிறது.
வாங்கும் போது “ஆக எட்டாயிரம்தானே” என எண்ணத் தூண்டும். “வசதி அதிகம். இணைப்பும் உடனடியாகவே கிடைக்கும். தொழிலுக்கும் உதவியாயிருக்கும்” என எண்ணிப் பூரிக்கும்.
பெரும்பாலானவருக்கு இந்த உற்சாகம் பூரிப்பு எல்லாம் சில மாதங்களுக்கு நீடிக்கும். பில் வர கண்கள் பிதுங்கும். வாற கோல், போற கோல் எல்லாவற்றிற்கும் காசு. நாள் போகப்போக அழைப்பு எடுக்கவும் மனம் வராது, அழைப்பு வந்தாலும் மனம் கலங்கும். வரப்போகும் பில்லை நினைத்து உடல் சோரும்.
ஆனால் கையில் இருக்கும் மட்டும் ஷோ காட்டாமல் விடவும் மனம் விடாது. இதை எங்கு கொண்டு போகலாம். எங்கு கொண்டு போகக் கூடாது எப்போது கதைப்பது என்பவற்றில் எந்தவித சுயகட்டுப்பாடு களும் கட்டுப் போட்டாலும் வராது.
வேகமாக கார் பறக்கும் போது ஒரு கையில் ஸ்டயிரிங் மறுகையில் செல்லுர் போன் பேசும். பாதசாரியின் உயிர்தான் அம்பேலாகும்.
காதலியுடன் தனிமையில் இருக்கும் போது திரைப்படங்களில் வருவது போன்று “இச்” என்ற சப்தத்துடன் முத்தம் வரும் என காதலி ஆசையுடன் அணைப்பாள்.
இச்சுக்குப் பதில் கிணீர்தான் வரும்.
கோவிலில் அமைதியாகத் தியானம் பண்ணும்போது அருகில் இருப்பவரின் செல் போன் இறைவனுக்காக அருள்பாலிக்கும்!
ஒரு நாள் இப்பிடித்தான், ஒரு நோயாளியின் வேதனைகளுக்கு செவிமடுத்துக் கொண்டிருந்தேன். மணியடித்தது. அந்த நோயாளி சொல்வ தைக் கேட்டுக் கொண்டே ரிசீவரை எடுத்து “ஹலோ” என்றேன்.
மறுமொழி போனுக்குள் இருந்து வரவில்லை!
எதிர்ப்புறத்திலிருந்து வந்தது!
“அது எனக்கு வந்த கோல்” நோயாளியுடன் வந்தவர் பெருமையடித் தார்.
போனைக் கீழே வைத்தேன்.
முகத்திலிருந்து வழிந்த அசடை கைக்குட்டை துடைத்தேன்.
எங்கேயிருக்கிறோம்
என்ன செய்கிறோம்
யார் யாருக்கு இடைஞ்சல் கொடுக்கிறோம்
போன்ற எதுவித யோசனைகள் இல்லாமல் போனுக்குள் அலட்டத் தொடங்கினார்.
மற்றொருநாள்.
சளி காய்ச்சலுடன் ஒரு பெண் நோயாளி வந்திருந் தார்.
நோய் பற்றி விசாரித்து முடிந்தபின், நெஞ்சில் சளி எப்படி இருக்கிறது என அறிவதற்காக குனிந்து ஸ்டெதஸ்கோப்பினால் மார்பைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.
போன் மணி அடித்தது. சூடு கண்ட பூனையல்லவா?
போனை எடுக்கக் கையை நீட்டுமுன் நிதானித்தேன்.
ஒலித்தது எனது போன் அல்ல.
நோயாளியுடன் கூட வந்திருந்த கணவரினது.
இவர் போனில் வளவளா எனக் கதைத்துக் கொண்டிருந்தால் நான் நோயாளியைப் பரிசோதிப்பது எப்படி என்ற கவலை முளைத்தது.
“ஹலோ|”
அவரது உரத்த குரல்
மனைவியில் முட்டி மோதி
அவளையும் ஊடுருவி,
கடூரம் தணிந்து
ஸ்டெதஸ்கோப் ஊடாக இதமாக காதில் விழுந்தது.
மனிசன் மனேர்ஸ் தெரிந்தவர் போலும். கதையைக் கட் பண்ணிவிட்டார் என அமைதியடைந்தேன்.
திடீரென கடாமுடாவென வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போன்ற சப்தம் …..
ஸ்டெத் குழாயைக் கிழித்துக் கொண்டு வந்து
செவிப்பறை யை உடைத்தது.
பொறுக்கமுடியாமல் பிடுங்கி மேசையில் எறிந்தேன்.
கணவன் தனது போனை மனைவியின் வாய்க்கு நேரே பிடித்துக் கொண்டு நிற்க அவள் தனது சினேகிதியுடன் அரட்டையை ஆரம்பித்து விட்டாள்.
இது சுமார் 15 வருடங்களுக்கு முன்னர். இன்னுமொரு தொல்லை இப்படி வந்தது!
உள்ளே வந்தவரின் குட்மோர்னிங் முகமன்கள் வழமையான விசாரிப்புகள் யாவும் முடிய ஆரம்பித்தார்.
“டொக்டர் நீங்கள் ஒரு முக்கியமான நபர். உங்களோடு தொடர்பு கொள்ள ஒவ்வொரு நிமிடமும் பலர் ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது…”
‘நான் அவ்வளவு முக்கியமான நபரா?’
கோடை வெயிலில் தலையில் ஐஸ்கட்டியைத் தூக்கி வைத்தது போல இளகினேன்.
ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதும் எனக்குத் தெரியும். வந்தவரைப் பார்வையால் குடைந்தேன்.
வாலிபர், வயது இருபத்தைந்து இருக்கும்.
விலையுயர்ந்த கவர்ச்சியான நீளக்கை சேட் அணிந்திருந்தார்.
அதற்கேற்ற ஆடம்பர டை,
நேர்த்தியான ட்றவுசர்.
பளபளக்கும் சப்பாத்து.
வசீகரமான பேச்சு.
மெடிக்கல் ரெப்!
மருந்துக் கொம்பனிகள் தமது மருந்துகளை வைத்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை நோயாளிகள் தலையில் கட்டுவதற் காக அனுப்பப்படுபவர்கள்.
எமது வேலை கடுமையாக இருக்கும் நேரங்களில்கூட தமது பிரசாரத்திற்குத் தயங்காதவர்கள்.
பொறுமையைச் சோதிப்பவர்கள்.
ஆனால் பேனை, எழுதும் நோட் புக், சாம்பிள் என ஷலஞ்சம் கொடுத்தாவது வைத்தியர்களை அடக்கிவிடுவதில் வல்லவர்கள்.
“…அவர்களுக்கு உங்கள் தொடர்பு கிடைக்காவிட்டால் மிகுந்த மனக்கஷ்டம். அதே நேரத்தில் உங்களுக்கும் தொழில் ரீதியான இழப்பு. எனவே உங்களுக்கு ஒரு செலுலர் போன் அவசியம்|” விடயத்துக்கு வந்தார் மிக நிதானமாக.
மெடிக்கல் ரெப் அல்ல ரெலிபோன் கொம்பனியிலிருந்து வந்திருக்கிறார்.
தான் பிரதிநிதித்துவம் வகிக்கும் கொம்பனியின் பெருமை,
அவர்களது தொலைபேசிச் சேவையின் சிறப்பம்சங்கள், பாவனையாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்,
வைத்தியர்களுக்கான விசேட விலை கழிப்பு
என அடுக்கிக் கொண்டே போனார்.
கொட்டாவிகளைக் கஷ்டப்பட்டு அடக்கவேண்டியதாயிற்று.
“நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனாலும் எனக்கு இப்பொழுது செல்லுலர் போன் தேவையில்லை” என்றேன்.
“நீங்கள் எங்கிருந்தாலும் எவரும் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த வசதியைக் குறைந்த விலையில் தருகிறோம்.
கூட்டத்தில், தியேட்டரில், கோயிலில் எங்கிருந்தாலும் நோயாளர்கள் மாத்திரமன்றி ஏனையவர்களும் உங்களை உடனடியாக நாடலாம் அல்லவா?”
“அதே காரணத்தால்தான் எனக்கு வேண்டாம் என்கிறேன்|”.
வீட்டிலும் வைத்தியசாலையிலும் இருக்கிற போன்களால் வருகின்ற தொல்லைகளே போதும். எனக்கென்று சில நிமிடங்களாவது தனிமை தேவை. அமைதி தேவை. சில கணங்களாவது இசையில் மூழ்க வேண்டும். இலக்கியத்தில் அமிழ வெண்டும். சிரித்து மகிழ்ந்து நண்பர்ளோடு அளவளாவ வேண்டும். வெளியே செல்கின்ற சில தருணங்களில் தான் இது எப்போதாவது கிடைக்கிறது. அதை இழக்க நான் தயாராக இல்லை. சொறி சென்று வாருங்கள்”
என விடையளித்தேன்.
“சரி உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் முயற்சிக்கிறேன்”
நம்பிக்கையைக் கை விடாமல் ஆனால் தொங்கிய முகத்துடன் வெளியேறினார்.
அடுத்த நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அது பார்வையில் விழுந்தது. தனது சிறுகைப்பையை அருகிலுள்ள மேசையில் மறந்துபோய் விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார்.
பாவம். ஏதாவது முக்கிய ஆவணங்களை கைப்பையில் விட்டுவிட்டு அவசரத்தில் சென்றிருப்பார். இப்பொழுது அவசிய தேவைக்காகத் தேடிக் கொண்டிருக்கக்கூடும் என எண்ணினேன்.
நல்லவேளையாக கைப்பையின் வெளிப்புறத்தே அவரது பெயரும் தொலைபேசி இலக்கமும் கிடைத்தன. தாமதிக்காது அவரது இலக்கத்தை டயல் பண்ணினேன்.
அவரது கைப்பை கிணுகிணுத்தது.
0.0.0.0