Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மொழிப் பிரயோகம்’ Category

>“எனக்கு சரியான கஸ்ரிக் ரபிள் ஆக இருக்கு. சரியான கஸ்டம். ஒன்றும் செய்ய முடியுதில்லை.” என்றார் அந்தப் பெரியவர். மந்திரம் சொல்வது போன்ற சொற் சிக்கனத்தில்.

சொல்லிய வார்த்தைகளிலிருந்து அவரின் நோய் பற்றிய தெளிவு கிடைக்கவில்லை.

“அப்ப உங்களுக்கு என்ன செய்கிறது. வயிறு எரியிறதோ? வயிற்று வலி வாறதோ, நெஞ்சு புகையிறதோ…” என தெளிவான விபரம் அறியக் கேட்டேன்.

“அப்படி ஒன்றும் இல்லை. வெறும் கஸ்ரிக் புரப்ளம்.”

‘கஸ்ரிக் ரபிள்’ என்பது ‘கஸ்ரிக்’ புரப்ளம் என இப்பொழுது ஆகியது.

இன்னும் ஒருமுறை கேட்டால் ‘கஸ்ரிக் பிரச்சனை’ என விளக்குவரோ என்பதால் மீண்டும் கேட்கத் தயக்கமாக இருந்தது.

மற்றொருவரும் தனக்கு கஸ்ரிக் பிரச்னைதான் என்றார்.

இவரால் ‘இருக்க எழும்ப முடியவில்லை. திரும்பிப் படுக்கவும் முடியவில்லை.

“அது என்ன கஸ்ரிக் பிரச்சனை, சற்றுத் தெளிவாகச் சொல்லுங்கள்” எனக் கேட்டேன்.

விவரம் கெட்ட முழு மடையனைப் பார்ப்பது போல ஏளனம் பொழியும் முகத்துடன் என்னைப் பார்த்தார் ‘வாய்வு பிரச்சனைதான்’ என்றார் திடமாக.

எனக்கு ஆங்கிலம் புரியாது என்று நினைத்துவிட்டார்!

எனவே ‘கஸ்ரிக்’ என்பதை ‘வாய்வு’ என தனது அகராதிப்படி மொழி பெயர்த்துத் சொன்னார்.

தனக்கு தெரியாத சிங்களம் பிடரிக்கு மோசம் என்பார்கள். அரை குறை ஆங்கிலமும் அவ்வாறே.

முதல் நோயாளியை ‘மலவாசலால் காற்று புறு புறு என்று பறியுதோ? அல்லது ஏப்பமாக வெளியேறுகிறதோ’ எனக் கேட்டேன்.

“மலவாசலால்தான்” என்றார் சற்று வெட்கத்துடன் .

‘கஸ்ரிக்’ என்பது ஆங்கிலத்திலும் மருத்துவ மொழியிலும் Gastric ஆகும். அதாவது இரைப்பை சம்பந்தமானது எனலாம். ஆனால் ஆங்கிலத்தில் Gas என்ற சொல் வாய்வு எனப் பொருள்படும். Gas யும் Gastric ஒன்றுடன் ஒன்றாக இவர்தான் குழப்புகிறார் என்றில்லை. பல படித்த மனிதர்கள் கூட அவ்வாறுதான்.

இரண்டாவது கஸ்ரிக் பிரச்னைக்காரனை “என்ன வாய்வுப் பிடிப்போ!” என அவருக்குப் புரியும் வண்ணம் கேட்டேன்.

“இப்பவாவது உன் மரமண்டைக்குப் புரிந்ததே” என என்னைப் பார்த்து எண்ணியிருப்பார் போலும். பதில் கேட்டு அன்றலர்ந்த தாமரையாக அவர் முகம் மலர்ந்தது.

வாய்வுப் பிடிப்பு என்பது கூட சரியான அர்த்தத்தில் பிழையானதுதான்.

உண்மையில் அது தசைப் பிடிப்பு. Muscular Pain என ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

வாய்வுப் பிடிப்பு என மற்றவர்கள் சொல்வதைத்தான் அவர் சற்று ஆங்கிலம் கலந்து கஸ்ரிக் என்றார்.

வாய்வு காஸ் ஆகி பின் கஸ்ரிக் என மருவியது.

Gastritis, Gastric ulcer ஆகியன இரப்பை சம்பந்தமான நோய்களில் முக்கியமானவை.

முதலாவதான Gastritis அழற்சியினால் ஏற்படுவது. இதனை Peptic Ulcer எனவும் சொல்லலாம். தமிழில் இரப்பைப் புண் எனலாம். பலரும் குடல் புண் என்றே பேசுவார்கள். இவற்றின் முக்கிய அறிகுறிகளாக சமிபாடின்மை, ஏப்பம், வயிற்று எரிவு, வயிற்றுப் புகைச்சல், வயிற்றுப் பொருமல் போன்ற பலவாகும்.

உடலில் ஏற்படும் வலி;களை வாய்வு என வகைப்படுத்துவது சுதேச வைத்திய முறைகளில் இருக்கிறது என எண்ணுகிறேன். இதனால்தான் பலரும் தசை வலிகளையும் பிடிப்புகளையும் வாய்வுப் பிடிப்பு என்கிறார்கள். எனவே அச்சொல் பிரயோகத்திற்கு நோயாளிகளைப் பிழை சொல்ல முடியாது.



ஆனால் வாதம் என்ற பதத்தை தசைப்பிடிப்புகளுக்கு மட்டுமின்றி மூட்டுகள் வலிகள், பக்கவாதம் போன்ற பலவற்றிற்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.

தலையைப் பொத்திக் கொண்டு வந்த ஒரு அம்மா ‘எனக்கு சரியான பிரஸர். பொறுக்க முடியவில்லை. கெதியாகப் பாருங்கோ’ என்றார்

பரிசோதித்துப் பார்த்தபோது பிரஸர் அதிகமாக இல்லை. நோர்மலாக இருந்தது. மருந்துகள் தொடர்ந்து உபயோகிப்பதால் தணிந்து இருக்கிறது என நினைத்தேன்.

‘பிரஸர் மருந்து தொடர்ந்து பாவித்து வாறீங்களோ’ எனக் கேட்டேன்.

‘இல்லை இப்படி வருத்தம் வந்தால் அந்தநேரம் மருந்து எடுக்கிறதுதான். பிறகு சரியாகப் போகும் என்றார்.’



உண்மையில் அவரது தலையிடிக்கும் பிரஸருக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. கபாலக்குத்து என்று பொதுவாகச் சொல்லும் (Migraine) தலையிடி அவருக்கு இருப்பதையே கண்டறிந்தோம்.

ஆனால் அவரது நினைப்பில் தலையிடி என்றால் பிரஸர்தான். பிரஸர் என்றால் தலையிடிதான்.

ஆனால் அவ்வாறு தவறான மருத்துவப் பதங்களைச் சொல்வதால் கேட்பவர்கள் அனைவரையும் ஏன் மருத்துவர்களையும் கூட தங்கள் நோய் பற்றிய தவறான பாதையில் வழிகாட்டிவிடுவார்கள்.

நான் அல்லது எந்த மருத்துவராவது ஒரு அவசரக் குடுக்கை என்றால் இவர்கள் சொல்வதை ஆழமாக ஆராய்ந்து பார்க்காமல், சொன்ன வார்த்தைகளை மட்டும் வைத்து சிகிச்சையை ஆரம்பித்தால் என்ன நடக்கும்.

எனவே நோயாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

உங்களது உடலில் உள்ள பிரச்சனைகளைச் சொல்லுங்கள்.

உதாரணமாக வலி, வயிற்று எரிவு, தலையிடி போன்ற அறிகுறிகளை அவ்வாறே சொல்லுங்கள்.

அவ்வாறான அறிகுறிகளுக்கு பிரஸர், அல்ஸர், கஸ்ரிக், வாதம், பித்தம் போன்ற எந்த மருத்துவப் பதங்களையும் உபயோகிப்பதைத் தவிருங்கள்.

நன்றி:- வீரகேசரி

0.0.0.0.0.

Read Full Post »