>அண்மையில் யாழ் சென்ற போது சுப்பிரமணியம் பூங்காவிற்கும் செல்ல முடிந்தது.
இந்த வரண்ட பூமியில் இந்த அழகான செழிப்பான பூங்காவா என மூக்கில் விரலை வைக்க வைத்தது அது.
மிக அற்புதமாகப் பராமரிப்புச் செய்கிறார்கள்.
அங்கு ஒரு மூலையில் இந்த மரம் பூ விரித்து சுகந்த மணம் வீச கம்பீரமாக நிற்கிறது. எனது சிறு வயது வியாபாரிமூலை வீட்டில் நான் நீர் ஊற்றி வளர்த்தது இது போன்றதொன்று பெருமரமாக வளர்ந்து நின்றது.
ஆயினும் அது பூத்து மணங்கமழ முன்னர் நாங்கள் குடும்பமாக கொழும்பிற்கு எனது மருத்துவப் படிப்பிற்காக செல்ல நேர்ந்தது.
பி்ன்னொரு நாளில் வீடு திரும்பிய போது மரம் நின்ற சுவட்டையே காணவில்லை. ஆழ் மனத்தில் ரணவடுவாக இருந்த வலி தீரும் வண்ணம் சில படங்களைக் கிளிக் பண்ணிக் கொண்டேன்
இது நாகலிங்க மரம் (Couroupita guianensis) அல்லது நாகலிங்கப்பூ மரம் என அழைக்கப்படுகிறது. தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.
![]() |
நாகலிங்கப்பூ மரம் |
இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது பிங்க் நிற இதழ்கள் விரியும்.
உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக காட்சியளிக்கும்..
![]() |
நாகலிங்கப்பூ |
மொட்டுக்கள் காயாகும் போது பெரிய உருண்டை போல் இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது.
![]() |
சுப்பிரமணியம் பூங்காவின் சிமெந்து இருக்கை பின்புலத்தில் |
அம் மரம் பற்றி விக்கிபீடியாவில் மேலும் அறியுங்கள்
நான் இந்தப் படங்களை முகப்புத்தகத்தில் போட்ட போது நண்பர் மார்க் அன்ரனி ஆழமும் விரிவும் கொண்ட நீண்ட கருத்துரைக்கு வழங்கியிருந்தார்.
Mark Antony அளித்த கருத்துரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இவற்றை மூடநம்பிக்கை என ஒதுக்காமல், மருத்துவ,அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்தால், முன்னோர்களின் அறிவியல் பூர்வ நம்பிக்கையின் வெளிப்பாடே கோயில்கள் என நிரூபிக்க முடியும். இந்த அபூர்வ மூலிகை இனங்கள் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. அதுபோன்ற மூலிகைகளில் மருத்துவ குணங்களுடன், தோல் நோய், மலேரியா சுரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலுடையதுடன் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம்.
இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.
இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.
இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.