Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வரட்சியான சருமம்’ Category

>வரட்சியான சருமம் ஏன் ஏற்படுகிறது, அது மோசமடைவதற்குக் காரணங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன? இவை போன்ற விடயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

சருமத்தைப் பராமரிப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை பற்றி இன்று பார்க்கலாம்.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

ஏற்கனவே கடுமையாக வரட்சியடைந்த சருமத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான போதும் உங்கள் சருமத்தை நலமுடன் பாதுகாக்க நிறையவே நீங்கள் செய்யக் கூடியவை பல.
சருமத்தை ஈரலிப்பாக வைத்திருங்கள்.

சருமத்தின் ஈரலிப்பைப் பேணுவதற்கான பல வகை கிறீம்களும், லோசன்களும் இப்பொழுது கிடைக்கின்றன.

இவை மென்படையாக பரவி சருமத்திலிருந்து நீர் வெளியேறுவதைத் தடுக்கின்றன. இவற்றைக் குளித்த உடன் போடுவது நல்லது.

மிகக் கடுமையான தோல் வரட்சியெனில் பேபி ஓயில் போன்ற எண்ணெய் வகைகள் கூடிய பலனளிக்கும். இது கூடிய நேரத்திற்கு உங்கள் சருமத்தை ஈரலிப்பாக வைத்திருக்க உதவும்.

அளவான குளிப்பு

முன்னரே குறிப்பிட்டது போல அதிக நேரம் நீரில் ஊறுவது சருமத்திற்கு கூடாது. எனவே குளிப்பதற்கு அதிக நேரம் எடுக்க வேண்டாம். சாதாரண நீரில் குளிக்கலாம். சுடுநீர் தேவையெனில் கடுமையான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டாம். நகச் சூடு போதுமானது.

சோப்

  • சருமத்திற்கு ஆதரவளிக்கும் மென்மையான சோப் வகைகளைப் பாவிப்பது நல்லது. 
  • கிருமி நீக்கி (antibacterial) மற்றும் காரமான சோப் வகைகள் அறவே கூடாது. 
  • அதே போல மணம் நீக்கிகளும் (deodorant) நல்லதல்ல. 
  • எண்ணெய் மற்றும் கொழுப்புகளை அதிகம் கொண்ட சோப் வகைகள் நல்லது. Neutrogena, Dove போன்றவை அத்தகையவையாகும்.

ஆனால் அதற்கு மேலாக சோப் அற்ற சுத்தமாக்கிகள் கிடைக்கின்றன. Cetaphil, Dermovive Soap Free wash போன்றவை அத்தகையன.

ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வகை ஒத்து வரலாம். அதைக் கொண்டு சுத்தமாக்கிய பின் உங்களது சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருப்பதாக உணர்கிறீர்களோ அதுவே நல்லதெனலாம். மூலிகைகள் அடங்கிய சோப் வகைகள் நல்லதெனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அவற்றிலும் சோப் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்

  • குளித்து அல்லது சுத்தமாக்கிய பின் உங்கள் சருமத்தை மென்மையான டவலினால் ஒத்தியெடுத்து நீரை அகற்றுங்கள். தடிப்பான டவல்கள் சருமத்திற்கு ஊறு விளைவிக்கலாம். 
  • அதே போல அழுத்தித் தேய்த்து துடைப்பதும் சருமத்திற்கு உவப்பானதல்ல. 
  • துடைத்த பின் உடனடியாகவே ஈரலிப்பூட்டும் கிறீம், ஓயின்மென்ட் அல்லது லோசனைப் பூசுங்கள். இதனால் குளிக்கும் போது உங்கள் சருமத்தின் கலங்கள் பிடித்து வைத்திருக்கும் நிர்த் துளிகள் ஆவியாகி வெளியேறாது தடுக்கலாம்.

‘குளித்த பின் குளிர் பிடிப்பதைத் தடுக்கும்’ என சிலர் ஓடிக்கோலோன் போடுவது வழக்கம். இதில் எதனோலும் மணமூட்டிகளும் உள்ளன. இவையும் சருமத்தை அழற்சியடையச் செய்யக் கூடும். சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. எனவே இவற்றையும் வரட்சியான சருமம் உள்ளவர்களும் அது வருவதற்கான சாத்தியம் உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது.

உடைகள்

  • சருமத்திற்கு ஏற்றவை பெரும்பாலும் பருத்தி உடைகளே. அவை உங்கள் சருமத்திற்கான காற்றோட்டத்தைத் தடுப்பதில்லை. நைலோன், கம்பளி போன்றவை சருமத்திற்கு ஏற்றவையல்ல. 
  • உடைகளைக் கழுவும் போது கடுமையான அழுக்கு நீக்கிகள், கடும் வாசனை மற்றும் நிறமூட்டிகள் கொண்ட சோப், சோப் பவுடர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவையும் சருமத்திற்கு எரிச்சலூட்டி வரட்;சியாக்கலாம்.

வரட்சியான சருமத்தடன் அரிப்பும் ஏற்பட்டால் சாதாரண கிறீம் வகைகள் போதுமானதல்ல. ஹைரோகோட்டிசோன் கிறீம் வகைகள் தேவைப்படலாம்.

ஆயினும் மருத்துவ ஆலோசனையுடன் உபயோகிப்பது நல்லது. சருமம் சிவந்திருந்தால், தூக்கத்தையும் கெடுக்கக் கூடிய அரிப்பு இருந்தால், சருமத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால், அவ்விடங்களில் வலியிருந்தால் அல்லது கடுமையாக தோல் உரிந்து கொண்டிருந்தால் மருத்துவரைக் காண்பது மிகவும் அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>அம்மம்மா தினமும் தனது கால்களுக்கு நல்லெண்ணய் பூசுவது நினைவில் இருக்கிறது.

“ஏன் பூசுகிறீர்கள்” என்று கேட்டபோது ‘பனிக்குக் கால் தோல் வெடிச்சுப் போகும். எண்ணெய் பூசினால் குளிர்மையாக இருக்கும்’ என்பார்.

அன்று அவ்வாறு கூறியது எவ்வளவு அனுபவ பூர்வமானது என்பது இப்பொழுது புரிகிறது.

இருந்தபோதும் எம்மவர் மத்தியில் தமது சருமத்தைப் பேணுவதின் அவசியம் பற்றி அக்கறை இன்றும் கூட பரவலாக இல்லை.

அழகு சாதனங்களை முகத்தில் பூசுவது மட்டுமே போதுமானது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. அவை உடனடியாக அழகு படுத்துமே அல்லாமல் சருமத்தை பேணுமா என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

சருமம் என்பது முகத்தில் மட்டுமல்ல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ளது. அதனைப் பேணுவது அழகுக்காக மட்டுமல்ல எமது உடல் நலத்திற்கும் அவசியமானதாகும்.

எம்மவர்கள் பலர் குளிர் மூடிய மேலைத் தேசங்களில் வாழ்வதால் அவர்களுக்கு Dry Skin பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது. அவர்கள் தமது உறவுகளுக்கு குளிர்ச்சியூட்டும் களிம்புகளை (moisturizing cream)அனுப்புவதால் இப்பொழுது இங்கும் அவற்றின் பாவனையும் விற்பனையும் சற்று அதிகமாகிறது.

வரட்சியான சருமங்கள் ஒரே விதமானவை அல்ல

சாதாரணமான வரட்சிச் சருமம் என்பது பிரச்சனையான விடயம் அல்ல. தாங்களாகவே சமாளிக்கக் கூடியது.

ஆனால் சற்று மோசமானால் தோல் தடித்து, சுருக்கங்கள் விழுந்து ஓணான் தோல் போல பார்ப்பதற்கு அசிங்கமாகிவிடும். ஆனால் பிறவியிலேயே சுருக்கமான சருமத்துடன் சிலர் இருப்பதுண்டு. இக்தியோசிஸ் (Ichthyosis) என்பார்கள். 

அழகைக் கெடுப்பது மாத்திரமின்றி உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் இவர்கள் தமது சருமத்தைப் பேண வேண்டியிருக்கும்.

பெரும்பாலானவர்களுக்கு வரட்சியான சருமம் என்பது காலத்திற்குக் காலம் வந்து மறையும் பிரச்சனையாகவே இருப்பதுண்டு.
சிலருக்கு எந்நாளும் தொடர்வதுண்டு.

நீரிழிவு நோயாளர்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதுண்டு. பனிகாலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கால்கள், முன்னங்கை, வயிற்றின் பக்கங்கள் பொதுவாக வரட்சியாவது அதிகம்.

வரட்சியான சருமம் உள்ளவர்கள் தமது தோல் சற்று இறுக்கமாக இருப்பதாக உணர்வர். இந்த இறுக்கமானது குளித்த பின் அதிகமாகத் தோற்றும்.

வழமையில் அது தனது ஈரலிப்பையும் மிருதுவான தன்மையையும் இழந்து சற்று சொரசொரப்பாக இருக்கும்.

காலகதியில் நுண்ணிய கோடுகள் விழுவதுடன் பின்னர் சருமத்தில் வெடிப்புகளும் வரலாம். மேலும் அதிகரித்தால் சிவத்து ஆழமாக வெடித்து இரத்தம் கசியவும் கூடும். அக்கறை எடுக்காவிடில் வெடித்த சருமத்தில் கிருமி தொற்றி சீழ் பிடிக்கவும் கூடும்.

ஏன் ஏற்படுகிறது

மிக முக்கிய காரணம் சீதோட்சண நிலைதான். குளிர் காலத்தில் சுற்றாடல் உஷ்ண நிலையும், ஈரலிப்புத் தன்மையும் தாழ்ந்திருக்கையில் சருமம் மிகவும் வரட்சியடைகிறது. ஏற்கனவே இப் பிரச்சனை இருந்தால் மேலும் மோசமடையும்.

சிலருக்கு உலகில் உள்ள அழுக்கு முழுவதும் தங்கள் உடலில் பட்டிருப்பதாக நினைப்பு. நீண்ட நேரம் குளிப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் ‘கிணறு வற்றப் போகுது’ அல்லது ‘வோட்டர் பில் ஏறுது’ எனச் சொன்னாலும் காதில் விழுத்தாது குளிப்பர்.

நீண்ட நேரம் தண்ணீரில் ஊறிக்கொண்டு இருந்தால் தோலுக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கும் கொழுப்பு பாதுகாப்புக் கவசம் அகன்றுவிடும். தோல் வரட்சியடையும். அதே போல நீண்ட நேரம் நீச்சலடித்தாலும் நடக்கும்.

எனவே அழுக்கை அகற்றக் குளியுங்கள். அதற்காக எருமை போல தண்ணிரில் ஊற வேண்டாம்.

சோப் போடுவது அவசியம்தான். ஆனால் காரச் சோப்புகளும் கிருமி நீக்கி சோப்புகளும் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பிடிப்பையும், நீர்த்தன்மையையும் அகற்றிவிடும். வழமையாக நாம் பாவிக்கும் பல பிரபல சோப்புகளும் இதில் அடங்கும்.

எனவே தோல் வரட்சியுள்ளவர்களுக்கு என சோப் அல்லாத அழுக்கு நீக்கிகள் (Soap free Wash) கிடைக்கின்றன. சற்று விலை அதிகமாயினும் மிகுந்த வரட்சியான சருமம் உள்ளவர்களுக்கு நிறையவே உதவும். பெரும்பாலான சம்பூ வகைகளும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன.

கடும் குளிர் கூடாது என்பது போலவே கடுமையான சூரிய ஒளியும் வெப்பமும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன. அதற்கு மேலாக சூரிய ஒளியில் உள்ள அல்ரா வயலட் கதிர்களாவன (UV Radiation)  மேல் தோலைக் கடந்து உட் தோலையும் பாதிக்கிறது. இதனால் ஆழமான சுருக்கங்கள் மட்டுமின்றி தோல் தொய்வடையவும் செய்கிறது.

சொரசிஸ் (Psoriasis) என்ற தோல் நோயும், தைரொயிட் சுரப்பிக் குறைபாட்டு நோய்களும் (Hypothyroidism) இதற்குக் காரணமாகின்றன.

பின்விளைவுகள்

வரட்சியான தோலானது எக்ஸிமா எனப்படும் தோல் அழற்சிக்கு முக்கிய காரணமாகிறது. அதன் போது தோல் அழற்சியுற்று, சிவந்து வெடிப்புகளும் தோன்றலாம். அரிப்புடன், நீர் கசியவும் கூடும்.

சிறிய சிறிய சீழ் கட்டிகள் (Folliculitis) தோன்றுவதற்கும் இதுவே காரணமாகிறது.

கிருமி தொற்றி அது உட்தோலுக்கும் அதற்குக் கீழ் உள்ள திசுக்களுக்கும் பரவுவது மிகவும் ஆபத்தானது. செலுலைட்டிஸ் (Cellulitis) எனப்படும் இதன் விளைவாக கிருமிகள் இரத்தத்திற்கும் நிணநீர்த் தொகுதிக்கும் பரவி முழு உடலையுமே பாதிக்கலாம்.

அடிக்கடி இவ்வாறு செலுலைட்டிஸ் (Cellelitis) வந்தால் தோலும் அதன் உட்புறமும் பாதிப்புற்று யானைக் கால் போல நிரந்தர வீக்கமாகிவிடுவதும் உண்டு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »