Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வலி’ Category

வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால்
நாட்பட்ட வலிகள் பாதிப்புறலாம்
வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.

chronic-joint-pain11

குடும்பத்தில் ஒருவருக்கு வலி

வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?

உங்களை ஒரு பெண் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சில காலமாகவே இடுப்பு வலி தொடர்ந்து வருகிறது. அதனோடு கூட்டவும், துப்பரவு செய்யவும், சமைக்கவும் சிரமமப்படுகிறீர்கள். சிரமப்பட்டேனும் உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்து வருவதைத் தவிர்க்கவில்லை.

household-chores

இருந்தபோதும் நீங்கள் உங்கள் வலியைப் பற்றி எப்பொழுது பிரஸ்தாபித்தாலும் கணவர் அதை அக்கறையோடு செவிமடுப்பதில்லை என வைத்துக் கொள்வோம்.

images

அவர் அலட்சியமாக பனடோலைப் போட வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். அக்கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும். கோபம் வரலாம், எரிச்சல் ஏற்படலாம், கவலையும் அழுகையும் கைகோத்து வரலாம்.

இவை எதுவும் இல்லையேல் ‘இந்த மனிசனுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை’ என்ற வெறுப்பில் அவரோடு மனம்விட்டுப் பேசும் எண்ணமே விட்டுப் போய்விடலாம்.
இது அனுபவத்தில் நாம் நிதம் காண்பதுதானே! ஆனால் அண்மையில் இதனை ஒரு ஆய்வாகச் செய்திருக்கிறார்கள்.

நாட்பட்ட வலியானது தம்பதிகளிடையே தொடர்பாடலை குறைக்கிறது. கலந்துரையாடுவது விட்டுப் போகிறது. இதனால் அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து போகிறது. இவற்றின் பலனாக பாதிக்கப்பட்டவரின் வலியைச் சமாளிக்கும் திறன் குறைந்து போகிறது என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

முன்னைய ஆய்வுகள்

குடும்ப உறவில் ஒருவர் மற்றவரது உணர்வுளைப் புரிந்து, அதற்கு மதிப்பளித்து, ஆறுதலிப்பதானது நன்மை பயக்கும் என முன்னைய ஆய்வுகள் உறுதி செய்திருந்தன். இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது. நம்பிக்கை இறுக்கமாகிறது. உணர்வுகள் தம்மை அலைக்களிக்க விடாது அவற்றை அடக்கியாளும் வல்லமையைக் கொடுக்கிறது.

மாறாக துணைவர் மற்றவர்களின் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, உதாசீனப்படுத்தினால் அல்லது சினங்கொண்டு விரோதமாக நோக்குனால் அவர்களின் குடும்ப உணர்வில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது. விட்டுக் கொடுப்புகள் குறைந்து குடும்ப உறவைப் பாதிக்கும். மன விரக்தியும் ஏற்படலாம் என்பதும் முன்னைய ஆய்வுகளில் தெளிவாகியிருந்தது.

இந்த ஆய்வு

நாரி உழைவு, இடுப்பு வலி, தசைப்பிடிப்புகள் பல்வேறு வலிகளால் பாதிக்கப்பட்டவர்களிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்த விடயம் ஆய்வாளர்களை மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிறிய ஆய்வுதான் 58 பெண்களையும் 20ஆண்களையும் கொண்டது.

உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்த ஆய்வின் பிரகாரம் வலியால் துன்பப்படும் ஆண்கள் தங்கள் மனைவிமாரின் எதிர்மiறாயன உணர்வுப் பிரதிலிப்பால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிந்தது. வலி இருந்தால் மட்டுமின்றி ஏனைய பொழுதுகளிலும் மனைவியின் பாராமுகம் கணவர்களின் மனத்தை அதிகமாகச் சஞ்சலப்படுத்தியிருந்தது.

indian-lady

பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனது பூப்போன்றது. அவர்கள் வலி, வேதனை, இடர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே வலிகளை மோசமாக உணர்வர், பாராமுகத்தால் வாடுவர்  என்பன நம்பிக்கை. மாறாக, வலிமையுள்ளவர்கள் என நம்பப்படும் ஆண்கள் தாம் இவ் ஆய்வில் வலிகளால் பாதிப்புற்றது ஏன்?

‘பாரம்பரிய எண்ணங்களின் அடிப்படையில் ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள். ஆனால் வலியானது அதனைச் சரியான முறையில் ஆற்ற முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது என ஆண்கள் கருவதால் இந் நிலை ஏற்பட்டிருக்கலாம்’ என இந்த ஆய்வைச் செய்த Wayne State University in Detroit and the Norwegian Center for Addiction Research   குழுவினர் சார்பில் Laura Leong  கருத்து கூறியுள்ளார்.

உங்களுக்கான செய்தி என்ன?

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு எப்படிப் பயன்படும். நீங்களா உங்கள் துணைவரா அதிக அக்கறை காட்டுபவர் எனக் கண்டு பிடித்து மகிழவா, அல்லது யார் உதாசீனப்படுத்துகிறார் எனக் கண்டு பிடித்து குற்றம் சாட்டி வாழ்க்கையை மேலும் நரகமாக்கவா?

நிச்சமாக இல்லை. மற்றவரின் வலியை மதித்து அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுதாபத்துடன் நோக்க வேண்டும். பரிவு காட்ட வேண்டும். ஆறுதல் சொல்ல வேண்டும். ஒத்தாசை செய்ய வேண்டும்.

hospicejpg

அது மட்டுமல்ல! தொடர்ச்சியாக வலிப் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போகும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து செல்லுங்கள்.

இது நோயைக் கணிக்க மட்டுமல்ல வேறு விதத்திலும் மருத்துவருக்கு உதவும். மருந்துகளும் ஆலோசனைகளும் ஒருவருக்கு மட்டும் போதுமானதா அல்லது மற்றவருக்கும் ஏதாவது தேவைப்படுமா எனத் தீர்மானிக்கவும் உதவும்.

SOURCE: American Pain Society, news release, December 2011

எனது ‘ஹாய் நலமா’ புளக்கில் சென்ற வருடம் வெளியான கட்டுரையின் மீள் இணையேற்றம்

நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?

Read Full Post »

>
முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம்.

இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம்.

எப்படி ஆனதோ?

நாரிப்பிடிப்பு ஏன் வருகிறது?

இவ்வாறு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்பிடிப்புக் காரணமான ஏற்படலாம். சவ்வுகளில் சுளுக்குக் வந்ததன் காரணமாக இது ஏற்படலாம். அல்லது எலும்பு மூட்டுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் தோன்றலாம். முள்ளந் தண்டின் இடைத்தட்டம் விலகுவதாலும் ஏற்படலாம்.


இதில் கடைசியாகக் கூறிய இடைத்தட்டம் விலகுவது என்பது சற்று பாரதூரமான பிரச்சனையாகும். விளக்கப் படத்தைப் பாருங்கள் முள்ளந்தண்டு எலும்புகளினிடையே (Vertebra) இருப்பது இடைத்தட்டம் (Disc) ஆகும். சிமென்டு கற்களை முள்ளந்தண்டு எலும்புகளாக கற்பனை பண்ணினால் அவற்றை இணைக்கும் சாந்து போன்றது இடைத்தட்டம். இந்த இடைத்தட்டம் ஊடாக முண்நாணிலிருந்து நரம்பு (Nerve) வெளிவருகிறது தெரிகிறது அல்லவா?


நீங்கள் வழமைக்கு மாறாக குனிந்து வேலை செய்யும்போது அல்லது உங்களுக்குப் பழக்கமற்ற பார வேலை செய்யும்போது எலும்புகளிடையே இருக்கும் இடைத்தட்டம் சற்றுப் பிதுங்கி வெளியே வரக் கூடும். அப்பொழுது அது அருகிலிருக்கும் நரம்பை அழுத்தலாம். பொதுவாக முதுகை வளைத்துத் தூக்கும் போதே இது நிகழ்வதுண்டு. இது திடீரென நிகழும். அந்நேரத்தில் சடுதியான கடுமையான வலி ஏற்படும். எந்தக் கணத்தில் இது நிகழ்ந்தது என்பதை பாதிக்கப்பட்ட நபர் துல்லியமாகக் கூறக்.கூடியதாக இருக்கும்.

ஆனால் இது எப்பொழுதுமே இவ்வாறுதான் நிகழும் என்பதில்லை.

பெரும்பாலனவர்களுக்கு என்ன செய்யும் போது அல்லது எந் நேரத்தில் இது நிகழ்ந்தது என்பது தெரிவதில்லை. படிப்படியாகவும் நாரிப்பிடிப்பு வரலாம். ஆயினும் வலியின் கடுமை எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. பரசிட்டமோல் போட்டு சமாளிக்கக் கூடியளவு லேசாக இருக்கலாம். அல்லது வலியின் உபாதை தாங்க முடியாத அளவிற்கு கடுமையாக இருக்கலாம். உங்களது நாளாந்தக் கடமைகளைச் செய்ய முடியாது படுக்கையில் சில நாட்களுக்குக் கிடத்தவும் கூடும்.

இருந்த போதும் சில இலகுவான நடைமுறைப் பயிற்சிகள் செய்தால் அதிலிருந்து நீங்கள் சுலபமாக விடுபட முடியூம்.

நிற்பதுவூம் நடப்பதுவும்

இவ்வாறான பிடிப்பு ஏற்படும்போது நீங்கள் எவ்வாறு நிற்கிறீர்கள், படுக்கிறீர்கள், உட்காருகிறீர்கள் என்பன யாவும் முக்கியமானவைதான். படுக்கும்போது உங்கள் பாரத்தை முள்ளந்தண்டில் சுமக்க விடாது பாதுகாப்பது அவசியமாகும்.

இதனை எவ்வாறு செய்வது?

படுக்கும்போது, நேராக நிமிர்ந்து படுங்கள். இப்பொழுது உங்கள் முழங்கால்களுக்கு கீழே, விளக்கப் படத்தில் காட்டியவாறு, ஒரு தலையணையை வையுங்கள். இவ்வாறு முழங்கால்களைச் சற்று மடித்துப் படுப்பது சுகத்தைக் கொடுக்கும்.


தலையணை கிடைக்காவிட்டால் முழங்கால்களைக் குத்தென நிமித்தியபடி மடித்துப் படுங்களேன்.

அதுவும் முடியாவிட்டால் தரையில் படுத்தபடி உங்கள் கால்மாட்டில் ஒரு நாற்காலியை வையுங்கள். இப்பொழுது உங்கள் தொடைகள் நிமிர்ந்திருக்க கீழ்கால்களை உயர்த்தி நாற்காலயில் வையுங்கள். இடுப்பும் முழங்கால்களும் இப்பொழுது மடிந்திருப்பதால் முள்ளெலும்பின் பழுக் குறைந்து வலி தணியும். ஓரிரு நாட்களுக்கு இவ்வாறு ஆறுதல் எடுக்க குணமாகும்.

ஆனால் நாரிப்பிடிப்பு எனக் கூறி நீண்ட நாட்களுக்கு படுக்கையிலிருந்து ஆறுதல் எடுப்பது அறவே கூடாது. ஏனெனில் நீண்ட ஆறுதல் எடுத்தல் உங்கள் தசைகளைப் பலவீனப்படுத்திவிடும். அதனால் குணமடைவதும் தாமதமாகும். வலியிருந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு சற்று உலாவுவது நல்லது. மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது எழுந்து அவ்வாறு நடப்பது அவசியம்.

சுடுதண்ணி ஒத்தடம் கொடுப்பது அல்லது சிவப்பு லைட் (Infra Red Light) பிடிப்பதும் வலியைத் தணிக்க உதவும். மாறாக ஐஸ் பை வைப்பதுவும் உதவாலாம். வலி கடுமையாக இருந்தால் அஸ்பிரின், பரசிட்டமோல் அல்லது இபூபுறுவன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை எடுக்க நேரிடலாம்.

நாரிப்பிடிப்புக்கு டொக்டரிடம் செல்ல வேண்டுமா?

நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன போன்ற விடயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் நாரிப் பிடிப்புகள் அனைத்துமே இவ்வாறு உங்கள் சுயமுயற்சியால் குணமாக்கக் கூடியவை அல்ல!

வலி தாங்க முடியாததாக இருக்கலாம்.
அல்லது உங்கள் நாரிப்பிடிப்பிற்கு வேறு பாரதூரமான அடிப்படைக் காரணங்கள் இருக்கலாம். அவ்வாறான தருணங்களில் ஹலோ டொக்டர் என அழைத்து உங்கள் வைத்தியரை நாட வேண்டியதுதான். வேறு வழியில்லை.

அவ்வாறு வைத்திய ஆலோசனை பெற வேண்டிய தருணங்கள் எவை?

உங்கள் நாரிப்பிடிப்பின் வலியானது பிடித்த இடத்தில் மட்டும், மட்டுப்பட்டு நிற்காமல் கால்களுக்கு, அதிலும் முக்கியமாக முழங்கால்களுக்கு கீழும் பரவுமானால் நரம்புகள் முள்ளெலும்புகளிடையே அழுத்தபடுவது காரணமாகலாம். அவ்வாறெனில் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

 உங்கள் கால், பாதம், பிறப்புறுப்புப் பகுதி அல்லது மலவாயிலை அண்டிய பகுதிகளில் உணர்வு குறைந்து மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படுமாயின் அது நரம்புகள் பாதிப்புற்றதால் இருக்கலாம். நீங்கள் நிச்சயம் வைத்தியரை அணுகவேண்டும்.

 அதேபோல உங்களை அறியாது, அதாவது உங்கள் கட்டுப்பாடின்றி மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது மிக பாரதூரமான அறிகுறியாகும். அதாவது மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பது நரம்புகள் பாதிக்கக்பட்டதின் அறிகுறியாகும். கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றே தீரவேண்டும்.

 காய்ச்சல், ஓங்காளம், வாந்தி, வயிற்று வலி, உடற் பலயீனம், கடுமையான வியர்வை போன்ற அறிகுறிகள் நாரிப்பிடிப்புடன் சேர்ந்து வருமாயின் அது தொற்று நோய், சிறுநீரகக் குத்து, சதைய நோய் போன்ற எதாவது ஒன்றின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதால் வைத்திய ஆலோசனை அவசியம் தேவை.

 வீட்டிற்குள்ளேயே நடமாடித் திரிய முடியாதபடி வலி மிகக் கடுமையாக இருந்தாலும் நீங்கள் வைத்தியரைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

 பெரும்பாலான முதுகு, நாரி வலிகள் மேற் கூறிய நடைமுறைச் சிகிச்சைகளுடன் ஓரிரு வாரங்களுக்குள் குணமாகிவிடும். அவ்வாறு குணமடையாவிட்டாலும் வைத்தியரைக் காண்பது அவசியம்.

மாத்திரைகள், வெளிப் பூச்சு மருந்துகள், பயிற்சிகள் முதல் சத்திர சிகிச்சை வரை பல விதமான சிகிச்சைகள் உண்டு. உங்கள் நோயின் நிலைக்கு ஏற்ற சிகிச்சையை வைத்தியர் தீர்மானிப்பார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி

Read Full Post »

>
`விசரன், பைத்தியகாரன் போலைதான் என்னை எல்லோரும் பாக்கினம். ஒருதருக்கும் என்ரை பிரச்சனை விளங்குவதில்லை’ என்று சொன்னவர் ஒரு இளம் குடும்பஸ்தர். வயது முப்பது இருக்கும். `மனிசி கூட நான் சும்மா சின்ன விடயத்தைத் தூக்கிப் பிடிக்கிறன் எண்டுதான் நினைக்கிறா’.

அவருக்குள்ளது ஒரு தலையிடி. அதுவும் ஒரு பக்கத் தலையிடி. வந்தால் தாங்க முடியாது. தலை வெடிக்குமாப்போலை இருக்குமாம். தலையிடி வரேக்க முதல் சில நேரம் கண் மங்குமாப்போலவும் இருக்குமாம். சத்தி எடுத்தால் சிலவேளை நிண்டு விடுமாம். இது கபாலக் குத்து(Migraine)என்பது உங்களுக்கும் புரிந்திருக்கும்.

`அது பிரச்சினை இல்லை. சமாளிச்சுப் போடலாம். ஆனால், அதோடை கூட மேலிலை ஒரு வலி. அது தான் முக்கியப் பிரச்சனை’. அதைத்தான் மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்பதுதான் அவருடைய ஆதங்கம்.

`நின்றால் பயம், நடந்தால் பயம், படுத்தால் பயம்’ என்று தெனாலி படத்தில் கமல் பட்ட துன்பமும் ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களுக்கு அது கேலியாகப்பட்டதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இவருக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். இவரது துன்பமும் மற்றவர்களுக்கு அசட்டுத்தனமாகவும், கேலிக்குரியதாகவும் இருக்கிறது. ஆனால் இவருக்கு உள்ளது பயம் அல்ல, வலி. வலியானது எவருக்கும் வேதனை கொடுக்கும்தானே.அது ஏன் கேலிகுரியதாகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதா?

காரணம் இவரது வலி அசாதாரணமானது மற்றவர்களுக்கு வருவது போன்றதல்ல. சொறிந்தால் வலி, சீப்பு போட்டு தலைமுடியைச் சீவினால் அவ்விடத்தில் கடுமையாக வலிக்கும். ஏதாவது யோசித்தபடி நெற்றியைத் தடவினால் அவ்விடத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். மணிக்கூடு கட்டிய இடத்தில் வலிக்கும் சேட் போடும் போது துணி தேய்த்த இடமும் வலிக்கும். குழந்தை சந்தோசத்தில் செல்லமாக மூக்கைக் கடித்தால் வலி தாங்காது அழுதே விடுவார்.

ஆனால், மற்றவர்கள் நினைப்பது போல இவரது வலியானது பாசாங்கோ போலியோ அல்ல. அது நிஜமானது. அத்தோடு இது இவருக்கு மட்டுமேயான விசித்திர பிரச்சனையும் இல்லை. இவ்வாறு சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் தோற் பகுதியில் கடுமையான சகிக்க முடியாத வலி ஏற்படுவதை மருத்துவத்தில் அலோடைனியா(Allodynia)என்பார்கள். வலியை உணரும் இவர்களது சருமத்தினது உணர்திறன் அதீதமானது என்பதாலேயே அசட்டை செய்யக் கூடிய சிறு செயல்களும் கடுமையான வலியை உண்டாக்குகின்றன.

அவ்வாறு தோற்பகுதியில் கடுமையான வலி எவருக்குமே ஏற்படக் கூடுமேயாயினும் கபால வலி உள்ளவர்களுக்கு அது வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என அல்பேர்ட் ஐன்ஸ்டைன் மருத்துவ கல்லூரியில் (Albert Einstein college of medicine) செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. தலையிடியுள்ள 16573 பேர் இவ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களில் தினமும் தலைவலி வருபவர்களில் 68 சதவீதமானவர்களுக்கும் இடையிடையே தலைவலி வருபவர்களில் 63 சதவீதமானவர்களுக்கும் இத்தகைய தோல் வலி வருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது கபாலவலி உள்ளவர்களுக்கு அத்தகைய `அதிவலி உணர்திறன்’ வருவதாகக் கூறுகிறார்கள்.


அத்துடன் கபாலவலியுள்ள பெண்களுக்கும்,கபாலவலியுடன் அதீத எடை மற்றும் மனச்சோர்வு நோய் உள்ள ஏனையவர்களுக்கும் இத்தகைய அதீத வலி உணர்வு அதிகம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மேலும் இத்தகைய `அதி வலி உணர்திறன்’ கொண்ட நோயாளர்களுக்கு சற்று தீவிரமான சிகிச்சை மூலமே தலைவலியையும் உடல்வலியையும் குணப்படுத்த வேண்டும் என்றார்கள்.

விசரன், பைத்தியக்காரன் என மற்றவர்கள் நினைத்த அவருக்கும் அத்தகைய சிகிச்சையே தேவைப்பட்டது.

டொக்டர்.எம்.கே. முருகானந்தன்

நன்றி:- தினக்குரல் 12.05.2008

Read Full Post »