>சூரியகாந்தியாக இல்லை
வாக்களித்தவர் வதனம்.
பூரண கிரகண
மதிமுகம்போல்
மம்மலாக …
மலர்ச்சியின் சுவடழிந்து,
தடம் புரியாத பாதையில்
கையறு நிலையாக…
‘நல்லதை நினைத்து
ஏமாறுவது எம்மினம்;
நானும் அதிலொரு துளி.
ஏன்தான் எங்களுக்கு
என்றும் இவ்வாறு
மீண்டும் மீண்டும் …
இம்முறையும் எனது வாக்கு
அப்படியாகத்தான் போய்விடுமோ.’
வாக்களித்து,
வெளியே வந்த நண்பனை
‘யாருக்கு வோட் போட்டாய்’
எனக் கேட்ட போது
நிலைய வாசலில்
கிடைத்த பதில்.
எட்ட முடியா இலக்குகளா
இலக்கு மங்கிய பயணங்களா
எட்ட முயல்கையில்
விலகி ஏய்க்கும் இலக்குகளா
நிஜ வாழ்வின் பரிமாணங்கள்
புரியாது வெற்று வானில்
மணல் கோட்டை கட்டும்
யதார்த்தமற்ற இலட்சியங்களா?
ஏன் இந்தக் கவலை?
எப்பொழுதும் ஏமாறுவதேன்
ஏமாற்றம் இவருக்கு மட்டுமா?
முழுச் சமூகத்திற்குமா?
குண்டு மழை பொழிகையில்
ஈர்க்கு இடைவெளியிடை
வழுகி மறைந்து
உயிர் பிழைத்த
எம்மவருக்கு
வாக்கு மழையிடை
நீந்திப் பிழைத்து
கரை சேர்வது பெரும்பாடா?
இவன் வென்றால் என்ன
அவன் வென்றால் என்ன
கையோங்குபவன் கையிணைந்து
பிழைக்கும் ரகசியம்
தெரிந்திருந்தால்
கலக்கம் ஏதுமில்லை
காலத்தை வென்றுவிடலாம்
காலனையும் தள்ளிவிடலாம்.
கையுடைந்து காலிழந்து
வீடிழந்து பொருளிழந்து
உறவுகளையும் தொலைத்துவிட்டு
மிஞ்சியிருக்கும்
உறவுகளையாவது நிமிர்த்திவிடலாம்.
அழகு சந்தோஸ்