Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘விக்கல்’ Category

>

எமது ஊரில் ஒரு மூதாட்டி இருந்தார். களையான முகம். பொக்கு வாய். சிரிக்கும் கண்கள். பண்பான குணம். குழந்தைகளான எங்களில் அவருக்கு நல்ல பட்சம்.

ஒரு நாள் அந்த வீட்டுப் பக்கம் இருந்து பறைமேளம் கேட்டது.

அந்தப் பாட்டி இறந்துவிட்டதாக அம்மா சொன்னா.

இடியப்பம் சாப்பிடும்போது விக்கி இறந்துவிட்டாவாம்.

அதிலிருந்து விக்கல் என்றாலே மனத்தில் ஒரு பயம்.

நான் மாத்திரமல்ல விக்கல் என்றாலே மரணத்தின் வாசல்படி எனப் பலரும் கலங்குகிறார்கள்.

ஆனால் மருத்துவம் படிக்க ஆரம்பித்து விடயங்கள் தெளிவடையத் தொடங்கியதும் அப் பயம் சூரியனைக் கண்ட பனிபோல கரைந்தோடிவிட்டது.



விக்கல் எப்படி ஏற்படுகிறது?



விக்கல் என்றால் என்ன? எமது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது.

அதன் தசைநார்கள் திடீரெனவும் தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயற்படும்போதே விக்கல் ஏற்படுகிறது.

தன்னிச்சையாக என்றால் என்ன? உங்கள் விரும்பமோ, தேவையோ இன்றி உங்கள் கட்டுப்பாட்டை மீறி தானகவே இன்றி நடக்கும் செயற்பாடு எனலாம்.

விக்கல் எமது உடலுக்கு தேவையான பயனுள்ள செயற்பாடா எனக் கேட்டால், இல்லை எனத் துணிந்து சொல்லலாம்.

பெரும்பாலான விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் மறைந்தும் போகின்றன. சில நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது மிகக் குறைவே.

அவ்வாறு ஏற்படும் போது பொதுவாக நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் ஒருவர் விக்கக் கூடும்.

குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவமும் தேவைப்படாது.



குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும் சாதாரண பிரச்னையாயினும் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் சிரமத்தையும் மன உளைச்சலையும், மற்றவர்கள் மத்தியில் அவமான உணர்வையும் ஏற்படுத்தலாம்.



வீட்டுச் சிகிச்சை


அவ்வாறான நிலையில் சில முதலுதவிகள் நிவாரணம் அளிக்கக் கூடும்.

உதாரணமாக சுத்தமான பொலிதீன் அல்லது பேப்பர் பையை எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்துச் சற்று நேரம் தொடர்ந்து அதனுள்ளே சுவாசிப்பது. அதாவது சுவாசிக்கும் காற்றை வெளியே விடாது அதனையே திரும்பத் திரும்ப சற்றுநேரம் சுவாசிக்க விக்கல் நின்றுவிடும்.

அதேபோல விக்கும் போது ஐஸ்வாட்டர் போன்ற குளிர்ந்த நீரைக் குடிப்பதும் விக்கலை நிறுத்த உதவலாம்.

சில தருணங்களில் மருத்துவரிடம் சென்று குறுகிய கால மருந்துகள் எடுக்கவும் நேரிடலாம். (Gaviscon) போன்ற மருந்துகளும் உதவலாம்.

Chlorpromazine, Haloperidol, Gabapentin, Metoclopramide போன்ற பல மருந்துகள் உதவும். ஆயினும் இவை எவற்றையம் மருத்துவ ஆலோசனையின்றி தாங்களாகவே வாங்கி உபயோகிக்கக் கூடாது

மேற் கூறியவாறு விக்கல்கள் குறுகிய நேரப் பிரச்சனையாக இருக்க சில வேளைகளில் மட்டுமே விக்கல்கள் நீண்ட நேரம் தொடர்வதுண்டு.

குறுகிய நேர விக்கல்கள் பொதுவாக Phrenic Nerve போன்ற நரம்பு மற்றும் பிரிமென்தகடு உறுத்தப்படுவதாலேயே ஏற்படுகின்றன.

நீண்ட நாட்களுக்கு தொடரும் விக்கல்

ஆனால் நீண்ட நாட்களுக்குத் தொடரும் விக்கல்களுக்கு அடிப்படைக் காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். சில வேளைகளில் சற்று பாரதூரமான நோய்களாலும் ஏற்படுவதுண்டு.

மண்டை ஓட்டுக்குள் அழுத்தம் (Intra cranial Pressure) அதிகரிப்பது,

மற்றும் சிறுநீரக நோய்களால் குருதியில் யூறியா (Blood Urea) அதிகரிப்பது ஆகியன காரணமாகலாம்.

எனவே நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் விக்கல் தொடர்ந்தால் மருத்துவரிடம் காட்டி முழுமையான பரிசோதனை செய்வது அவசியமாகும். காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை வழங்குவார்.

மேலதிக தகவல்களக்கு இங்கே கிளிக் பண்ணவும்

விக்கல் ஆண் பெண் எனப் பேதம் பாரப்பதில்லை. நீண்ட காலம் தொடரும் விக்கல்கள் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக்கிறதாம்.

நீண்ட நேரம் விக்கல் எடுப்பது நோயாளியைக் களைப்படையச் செய்வதுடன், உணவு உண்பதையும், நீராகாரம் உள் எடுப்பதையும் பாதிக்கக் கூடும். அவ்வாறாயின் நாளம் ஊடாக சேலைன் ஏற்றுவது உதவலாம்.

எவ்வாறாயினும் விக்கல் என்பது மரணத்தின் வாசல்படி அல்ல.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »