Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வியர்க்குரு’ Category

>

வெக்கை தாங்க முடியவில்லை. மேலெல்லாம் ஒரே கடியாக இருக்கு எனச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் அதிகம். கோடை காலம் வந்தாலே புழுக்கம், வியர்வை என ஒரே அரியண்டம்தான்.

கோடை கால நோய்களில் முக்கியமானது இந்த வியர்க்குரு. இதனை Miliaria,  Sweat Rash, prickly என்றெல்லாம் அழைப்பர்.

மெல்லிய இளம் சிவப்பு நிறத்தில் சிறுமணல் போல மேலெல்லாம் பரவிக்கிடக்கும்.

கடுமையான அரிப்பு இருக்கும். சொறிந்து சொறிந்து விரல்கள் வலியெடுக்கும்.

சொறிவதால் கீறல் காயங்கள் ஏற்படாது விட்டால் பெரிய விடயம்தான்.

இருந்தபோதும் இது ஆபத்தான நோயல்ல.

மருத்துவம் எதுவும் தேவைப்படாது. தானாகவே சில நாட்களில் மாறிவிடும். ஆயினும் இந்நோயின் போது அவதானிக்க வேண்டிய சில விடயங்களை இங்கு பார்க்கலாம்.

எவ்வாறு ஏற்படுகிறது?

வழமைக்கு அதிகமாக வியர்வை ஏற்படும்போது தோன்றுகிறது. பொதுவாக கடுமையான வெயிலால் உஷ்ணமும், வளியின் ஈரலிப்புத் தன்மையும் (Humidity) அதிகமாக இருப்பதால் வியர்வை கடுமையாக் கொட்டுவதால் இக்காலத்தில் தோன்றும். அதீதமாக வியர்க்கும்போது வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படும்.

இதனால் வியர்வை நீர் வெளியேற முடியாது சருமத்திற்கு கீழ் தடைப்படும். உதிர்ந்த சருமக் கலங்கள் அதற்குள் சேரும். பக்ரீரியா கிருமிகளும் அதில் தொற்றும். இதனால் அவ்விடத்தில் சிறிய திட்டி போன்று வியர்க்குரு தோன்றும். இது உடையும்போது அடைபட்ட வியர்வையும் ஏனையவையும் வெளியேறும். இவற்றால் தோலில் அழற்;சி ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். சற்று துர்நாற்றத்தையும் கொடுக்கும்.

இது உடலின் எப்பாகத்திலும் தோன்றலாம் பொதுவாக முதுகு, நெஞ்சு, கழுத்து, வயிறு, அக்குள், தொடை இடுக்கு போன்ற இடங்கள் பாதிப்படைவது அதிகம். இவை பெரும்பாலும் உடைகளால் மூடப்பட்ட இடங்களாகும். துணிகள் சருமத்தை உறுத்தி மேலும் வியர்க்கப் பண்ணுவதாலேயே அவ்விடங்களில் அதிகம் தோன்றுகிறது.

பருத்தித் துணிகள் வியர்வையை உறிஞ்சிவிடும் என்பதாலேயே அத்தகைய உடைகளை வியர்வை காலத்தில் அணிகிறோம். அணிய வேண்டும். செயற்கைத் துணிகள் வியர்வையை உறிஞ்சாது என்பதால் தவிர்க்க வேண்டும்.

யாருக்கு ஏற்படும்?

எவருக்குமே ஏற்படலாம். ஆயினும் குழந்தைகளில் ஏற்படுவது அதிகமாகும். இதற்குக் காரணம் அவர்களது வியர்வைச் சுரப்பிகளின் வளர்ச்சி முழுமையடையாததுதான்.

கொழுத்த உடல்வாகு உடையவர்களுக்கும் அதிகம் தோன்றலாம். சிலருக்கு இயல்பாகவே வியர்ப்பது அதிகம். அவர்களுக்கும் அதிகம் தோன்றும்.

வேறு காரணங்கள்

பொதுவாக வெக்கை அதிகமான காலங்களில் ஏற்படுகிறதாயினும் வியர்க்குரு வேறு காரணங்களாலும் ஏற்படலாம்.

  • நீண்டகாலம் படுக்கையில் கிடக்க நேர்ந்தாலும் ஏற்படலாம். நோய்கள் காரணமாகவே அவ்வாறு படுக்கையில் கிடக்க நேரிடும். அத் தருணங்களில் வியர்ப்பது அதிகம். அத்துடன் தடிப்பான படுக்கை விரிப்புகளும் உடைகளும் வியர்க்க வைப்பதுடன் அது வெளியேறாமல் தடுப்பதாலும் ஏற்படும்.
  • குளிர் காலங்களில் குளிரைத் தாங்குவதற்காக அணியும் அதிகமான உடைகள் மற்றொரு காரணமாகும்.
  • அடுப்பு, நெருப்பு போன்றவை இருக்கும் சூடான இடங்களில் வேலை செய்வோருக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

என்ன செய்யலாம்.

  • வெக்கை அதிகமுள்ள இடங்களைத் தவிருங்கள். குளிர்ச்சியான இடங்களை நாடுங்கள். மரநிழல்கள், காற்றோட்டான இடங்கள், குளிருட்டப்பட்ட அறைகள் போன்றவை வெக்கையைக் குறைத்து வியர்வையைத் தடுக்கும்.
  • வெயில் காலத்திற்கு ஏற்றவை பருத்தி ஆடைகளே. நைலோன், பொலியெஸ்டர் போன்றவை வெப்பத்தை உள்வாங்கி தேக்கி வைத்திருப்பதால் வியர்வையை அதிகமாக்கும்.
  • இறுக்கமாக அணிவதைத் தவிர்த்து தளதளப்பாக இருந்தால் காற்றை உள்வாங்கி வெக்கையைத் தணிக்கும்.
  • வெயில் காலத்தில் இரண்டு மூன்று முறைகள் குளிப்பது நல்லது. குளிப்பது சாத்தியமில்லாவிடில் உடலைக் குளிர்நீரால் கழுவுவது அல்லது நனைப்பது நல்லது.

லோஷன்,பவுடர்

  • கலமின் (Calamine lotion) லோஷன் நல்லது. அழற்சியடைந்த சருமத்தைக் குளிர்மையாக்கி சுகமளிக்கும். எண்ணெய் வஸ்லின் கலந்தவை நல்லதல்ல. 
  • வியர்க்குருப் பவுடர்களும் நல்லதல்ல. ஏனெனில் அவை அரிப்பைக் குறைக்கக் கூடுமாயினும், வியர்வைச் சுரப்பியின் துவாரங்களை அடைத்து நோயை மேலும் மோசமாக்கலாம்.

வெயில் கால ஆபத்தான நோய் டெங்கு. அது பற்றி  

டெங்கு நோய் சிகிச்சையில் புதிய அணுகுமுறை பப்பாசி உதவுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »