Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘விற்றமின் E’ Category

>

விற்றமின் E மாத்திரைகள் உட்கொள்வது பலருக்கு தினசரி காலைத் தேநீர் அருந்துவது போல நித்திய கடமையாகிவிட்டது. விற்றமின் E மாத்திரைகள் மிகவும் பிரபல்யமாக வந்ததற்குக் காரணம், ஒட்சிசன் எதிரியான (Antioxidant) இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கக் கூடும் என சில ஆரம்பநிலை ஆய்வுகள் தெரிவித்தமையே ஆகும். எனவே மருத்துவர்களும் ஒரு காலத்தில் அமோகமாக சிபார்சு செய்தார்கள்.
 

ஆயினும் இப்பொழுது அதன் பயன் பற்றிய புதிய எண்ணக் கருக்கள் காரணமாக சிபார்சு செய்வது குறைந்துவிட்டது.

இருந்த போதும், பல நோயாளர்கள் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு முறை டொக்டர் மருந்துச் சிட்டையை எழுதினால் எக் காலத்திற்கும் பொருந்தும் உறுதி போன்றதாக பலர் கருதுவதே இதற்குக் காரணம். அமெரிக்காவில் கூட 13 சதவிகிதமானவர்கள் விற்றமின் E மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிப்பதாகத் தெரிகிறது.

முடி வளரும், தோல் மிருதுவாகும், முகப் பரு நீங்கும், நகம் அழகாகும் என்பது போன்ற விளம்பரங்களை அச்சு மற்றும்  இலக்ரோனிக் மீடியாக்களில் பார்த்து விற்றமின் E மாத்திரைகளை கண்டபடி உபயோகிக்கும் அப்பாவிக் கூட்டங்களுக்கு குறைவில்லை. விளம்பரங்களுக்கு செலவழிக்கும் பணம் இலகுவாக மீளக் கிடைத்துவிடுகிறது.

ஏற்கனவே சொல்லப்பட்டது போல இது ஒரு ஒட்சிசன் எதிரி (Antioxidant) ஆகும். பிறீ றடிக்கலஸ் என்று சொல்லப்படும் நச்சுப் பொருள்களால் உடல் கலங்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்களை இது தடுக்கிறது. இதனால் வயதாவதால் ஏற்படக் கூடிய சில மாற்றங்களை இது தடுக்கலாம் என நம்பப்பட்டது. செங்குருதி உற்பத்திக்கும் இது அவசியமானது. இருதய நலத்திற்கு உதவக் கூடும்.

இருதயநோய்கள், புற்றுநோய்கள், ஈரல்நோய்கள், மூளை மங்குதல், பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது எனச் சிலர் சொன்னபோதும் அதற்கான திடமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை.

எதிர்மாறாக அதிகளவில் விற்றமின் E உட்கொள்வது ஆபத்தாக முடியக் கூடும். உதாரணமாக பக்கவாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு வகைகள் உண்டு மூளையினுள் குருதி பெருகுவதால் (Haemorrhagic strokes) ஏற்படுவது ஒரு வகை. 

மற்றது இரத்தக் குழாய் அடைபட்டு மூளையின் சில பகுதிகளுக்கு இரத்தம் தடைப்படுவதால் (Ischaemic strokes) ஏற்படுவதாகும். 

அதில் முதலாவதான குருதிப் பெருக்கு பக்கவாதமானது ஏனையவர்களை விட விற்றமின் E மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு சற்று அதிகமாகும் என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதே நேரம் இம் மாத்திரைகள் இரத்தக் குழாய் அடைபடுவதால் ஏற்படும் பக்கவாதத்தை மிகக் குறைந்தளவில் தடுக்கும் என்றும் கூறுகிறது.

பக்கவாதத்தைத் தடுப்பதை விட அது வருவதற்குக் காரணமாக இருப்பது அதிகம் என்பதால் தான்தோன்றித்தனமாக விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

அத்துடன் கொலஸ்டரோலைக் கட்டுப்படுத்தும் சிம்வஸ்ரரின், நியாசின், குருதி உறைதலைத் தடுக்கும் வோரபரின் போன்றவற்றை உபயோகிப்பவர்கள் விற்றமின் E மாத்திரைகளை உட்கொண்டால் மருந்துகளிடையே தாக்கம் ஏற்பட்டு பாதகவிளைவுகள் ஏற்படுத்தலாம்.

புற்றுநோய்க்கு கதிர்ச்சிகிச்சை, மருந்துச் சிகிச்சை அளிக்கும்போதும் விற்றமின் E மாத்திரைகளை உட்கொண்டால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும் எனத் தெரிகிறது. எனவே விற்றமின் E மாத்திரை பாவனையில் அவதானம் தேவைப்படுகிறது.

கர்ப்பணிகள் அதிக விற்றமின் E யை உட்கொண்டால் கருவில் உள்ள குழந்தைக்கு இருதயததில் குறைபாடுகள் ஏற்படலாம் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

மேலும் அறிய கீழே கிளிக் பண்ணுங்கள்

Babies at risk from vitamin E?

எமது உடலின் இயக்கத்திற்கு தினசரி மிகக் குறைந்தளவு விற்றமின் E மட்டுமே தேவை. வளர்ந்தவர்களுக்கு 15 மிகி, பாலகர்களுக்கு சுமார் 5மிகி என்ற அளவில் மட்டுமே. ஆயினும் பிரித்தானிய தேசிய சுகாதார சேவை 4மிகி மட்டுமெ போதுமென இப்பொழு அறிவித்துள்ளது.

இதனை எமது நாளாந்த உணவிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். வழமையான சமபல வலுவுள்ள உணவுகள் போதுமானதாகும்.

விற்றமின் E அதிகமுள்ள உணவுகள் என எவற்றைச் சொல்லலாம்?

சோளம், விதைகள், கீரை வகைகள், மற்றும் சோளம், சோயா, சூரியகாந்தி, பருத்தி ஆகிய எண்ணெய் வகைகள், மாம்பழம், தக்காளி, ஸ்பினச் போன்ற பல பழவகைகளிலும் இருக்கிறது.

பொதுவாக ஆசியநாட்டவர்களாகிய நாம் தினசரி காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை உட்கொள்வது வழக்கம். இதனால் விற்றமின் E குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. எனவே மேலதிக விற்றமின் E மாத்திரைகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆயினும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலருக்கு விற்றமின் E குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் அவர்கள் உட்கொள்ளும் மல்ரிவிற்றமின் மாத்திரைகளில் சுமார் 30மிகி விற்றமின் E சேர்க்கிறார்கள். அது தாராளமாகப் போதும்.

இங்கு கிடைக்கும் பல மல்ரிவிற்றமின் மாத்திரைகளிலும் கிட்டத்தட்ட அதேபோல குறைந்தளவு விற்றமின் E இருக்கிறது. இது ஆபத்தானது அல்ல.

ஆனால் விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளும் பலர் 400 -600 மிகி அல்லது அதற்கு அதிகமான வலுவிலும் எடுக்கிறார்கள். இது நல்லதல்ல. இது பக்கவிளைவுகளைக் கொண்டு வரலாம்.

எனவே விற்றமின் E மாத்திரைகளை

  • மருத்துவரின் சிபார்சு இன்றி எடுக்க வேண்டாம். 
  • மருத்துவர் ஏதாவது காரணத்திற்காகச் சிபார்சு செய்திருந்தால் அந்த அளவை மட்டுமே உட்கொள்ளுங்கள். 
  • உங்கள் விருப்பத்தின்படி தேவையற்று உட்கொள்ளாதீர்கள்.
  • விளம்பரங்களைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »