>விழிப்புலன் அற்றோருக்காக ப்ரெய்ல் பதிப்பில் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’
தமிழ் ஆர்வலர்களுக்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பற்றித் தெரியாதிருக்க முடியாது. நூற்றாண்டு கால நவீன தமிழ் அகராதி வரலாற்றில் திடீர்ப் பாய்ச்சலான பாரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது அது.
இது வெறும் அகராதியாக இருக்கவில்லை. சொல்லின் பொருளை மட்டும் கொடுப்பதுதான் அகராதி என்ற எண்ணத்திற்கு இது நிரந்தர விடை கொடுத்துவிட்டது. அதற்கு அப்பாலும் அதன் பணி நீட்சியுறுகிறது. பெயர்ச் சொல்லாக, வினைச்சொல்லாக, துணைவினையாக, சொல்லின் பொருள் என்ன? அதன் இலக்கண வகை என்ன எனவும் பதிவு செய்கிறது.
அத்துடன் நின்று விடாது பொருத்தமான ஒரு வாக்கியம் மூலம் அதன் பொருளை உணர்த்தவும் செய்கிறது. இதனால் பன்முகம் கொண்ட மனித வாழ்வின் வாழ்வியல் கோலங்கள் ஆங்காங்கே தரிசனமாகிறது. இலக்கியப் படைப்பிற்குள் மூழ்குவது போன்ற மகிழ்வுடன் நடைபோட முடிகிறது.
21,000 சொற்களை உள்ளடக்கும் இந்நூலில் இலங்கைத் தமிழுக்கு கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அதாவது 1700 இடம் ஒதுக்கியிருப்பது நிச்சயம் பெருமை அடையக் கூடியதே.
உலகெங்கெணும் தமிழ் பேசப்படும் இடங்களில் எல்லாம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பரவியிருக்கிறது.
சிங்கப்பூர் அரசினால் இது அங்குள் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்று நூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில் இதன் முக்கியத்துவம் பற்றி விளக்க வேறு ஆதாரங்கள் தேவையில்லை. சிங்கப்பூர் மாணவர்களுக்கென வெளியிடப்பட்ட விசேட பதிப்பில் தமிழ் சொற்களுக்கான ஆங்கில விளக்கங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இப்பொழுது விழிப்புலன் அற்றோருக்கு உதவும் வண்ணம் ப்ரெய்ல் பதிப்பு வெளிவர இருக்கிறது. க்ரியாவின் முன் முயற்சி காரணமாக Cognizant Foundation அறக்கட்டளை நிதி உதவி செய்ததன் மூலம் Indian Association for the Blind Madurai (IAB) க்ரியா அகராதி ப்ரெய்ல் பதிப்பை வெளியிடுகிறது.
தமிழ் அகராதியின் உள்ளடக்கத்தை ப்ரெய்ல் எழுத்திற்கு மாற்றுவதற்காக அதன் மின்வடிவப் பிரதி ஒன்றை க்ரியா அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. எந்தக் கொடுப்பனவுகளும் இன்றி இலவசமாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரெய்ல் வடிவில் வர இருக்கும் அவ் அகராதி பொதுவாக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கே உரியன. தனிநபர் பாவனைக்கு சாதாரணமாக கட்டுபடியாகாது. பிரதி ஒன்றைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ப்ரதி ஒன்றிற்கு ரூபா நாலு இலட்சம் செலுத்த வேண்டியுள்ளது.
பதிப்புக்கான ஆரம்ப வேலைகள் துவங்கிவிட்டதாக க்ரியாவிலிருந்து அறிய முடிகிறது. இவ்வருட இறுதியில் முதல் ப்ரெய்ல் பிரதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண அச்சில் ஒரு பக்கம் வரும் எழுத்துக்கள் ப்ரெய்ல் எழுத்தில் கொண்டுவர 6 பக்கங்கள் தேவைப்படும். எனவே இது ப்ரெய்ல் எழுத்தில் சுமார் 8400 பக்கங்களாகும். ஒரு நூலாகக் கொண்டு வருவது சாத்தியமற்றது. எனவே 70 தொகுப்புகளாக கொண்டு வர இருக்கிறார்கள்.
ஆரம்ப கட்டத்தில் 40 பிரதிகள் தயாரிக்க இருக்கிறார்கள். இதற்கு 11 இலட்சம் இந்திய ரூபாக்கள் செலவாகும். இப் பணத்தை Cognizant Foundation மானியமாக Indian Association for the Blind Madurai (IAB) நிறுவனத்திற்குத் தந்திருக்கிறது.
தமிழ் நாட்டில் பார்வையற்றோருக்காக இயங்கும் 20 பள்ளிகளுக்கும் 11 கல்லூரிகளுக்கும் ப்ரெய்ல் பிரதி மேற்சொன்ன பணத்தின் உதவியுடன் இலவசமாகக் கிட்ட இருக்கிறது.
இலங்கையிலும் விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலைகள் உள்ளன. அங்கு கல்வி கற்கும் மாணவர்களும் இந்த ப்ரெய்ல் பதிப்பின் மூலம் பலன் பெற முடியும். பிரதிகள் தேவைப்படுவோர் க்ர்யாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
இத்தகைய அரிய நூலின் பயனை இலங்கையில் உள்ள விழிப்புலன் அற்றோரும் பெறுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்க முன்வருவது அவசியமாகும்.
தமிழ் மொழியானது இன்று உலகின் மூலை முடுக்கெங்கும் பேசப்படுகிறது. அதன் சொற்கள் விசாலித்த பயணங்களை அங்கெல்லாம் மேற்கொள்கிறது. புதிய பண்பாட்டுச் சூழல்களுக்கு எமது மொழி வசப்படுகிறது. சொற்கள் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.
அவற்றின் சூட்சுமங்களை உலகின் ஏனைய பகுதியினரும் விளங்கிக் கொள்ள க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி தோழமையுடன் கை கொடுக்கிறது.
இலங்கைத் தமிழ் இவ் அகராதியில் செழுமையாக இடம் பெறுவதற்கு காரணமாக இருந்தவர் திரு.குலசிங்கம் ஆவார்.
என க்ரியா ராமகிருஸ்ணன் சொல்வதிலிருந்து அவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
மொழியியல் சார்ந்த சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்து உதவியிருப்பவர் ஞ.ஜெயசீலன் ஆகும். அதே போல இதன் முதற் பதிப்பிற்கு (1991) உதவியவர் பேராசிரியர் நுஃமான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளுக்கு :-
<!–[if !mso]> st1\:*{behavior:url(#ieooui) } <![endif]–>